Published:Updated:

''அரசாங்கம் என்னை ஏமாத்திடுச்சு...''

'பூங்கா பொன்னி'யைக் கண்டுபிடித்த, விவசாயியின் 20 ஆண்டுகால போராட்டம்..! காசி. வேம்பையன்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

##~##

பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, ஆய்வுக்கூடங்களில் உருவாக்கும் கருவிகள், பயிர் ரகங்கள் என்பவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு... சாமானிய விவசாயிகள் உருவாக்கும் விஷயங்கள்... பெரும்பாலும், ஒருபொருட்டாக இருப்பதே இல்லை. அவற்றை அங்கீகரிப்பது என்றால்... அவர்களுக்கு வேப்பங்காய்தான்! இப்படிப்பட்ட குற்றச்சாட்டு காலகாலமாகத் தொடர்கிறது.

இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, 20 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்... திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவாம்பாடி  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூங்காவனம். இவர் உருவாக்கியுள்ள 'பூங்கா பொன்னி’ என்ற நெல் ரகத்துக்கு அங்கீகாரம் பெறத்தான் இப்போராட்டம்!

இதுபற்றிப் பேசிய பூங்காவனம், ''சொந்தமா ரெண்டரை ஏக்கர் நிலமிருக்கு. வழக்கமா நெல் விவசாயம்தான். விளைஞ்ச நெல்லை, சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துலதான் விப்பேன். அப்படி விக்கப்போறப்போ நிறைய நேரம் காத்திருக்க வேண்டி வரும்.

அந்தமாதிரி சமயங்கள்ல விவசாயிகளெல்லாம் பேசிகிட்டிருப்போம். அப்போ, 'குண்டு நெல் அளவுக்கு விளைச்சல் கொடுக்குற, சன்ன ரகம் இல்ல’னு ஒரு பேச்சு வந்துச்சு. உடனே, எனக்கு 'மகரந்தச் சேர்க்கை மூலமா அந்த மாதிரி ஒரு ரகத்தை நாமளே உருவாக்கினா என்னா’னு தோணுச்சு. உடனே அதுக்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பிச்சேன்.

வெள்ளைப் பொன்னியோட மகரந்தத்தூளை, ஐ.ஆர்.-50 மகரந்தக் கதிர் மீது தூவி, அதுல கிடைச்ச 25 மணிகளை மட்டும் தனியா எடுத்து திரும்பத் திரும்ப பயிர் செஞ்சு ஒரு ரகத்தை உருவாக்கினேன்.

''அரசாங்கம் என்னை ஏமாத்திடுச்சு...''

அதை விதைக்கிறப்போ சம்பா பட்டத்துல ஒரு ஏக்கருக்கு 30 மூட்டையும் (75 கிலோ), கார் பட்டத்துல 40 மூட்டையும் நெல் மகசூல் கிடைச்சது. அந்த ரகத்துக்கு, 'பூங்கா பொன்னி’னு என்னோட பேரையே வெச்சு... அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு விக்க ஆரம்பிச்சேன். நல்ல மகசூல் கிடைச்சதால, சீக்கிரமே பிரபலமாயிடுச்சு.

என்னோட நெல்லுக்கு காப்புரிமை வாங்கறதுக்காக, வேளாண்மைத்துறை அதிகாரிங்க, எம்.எல்.ஏ., மந்திரினு ஒவ்வொருத்தர்கிட்டயா அலைஞ்சதுல ஒரு வழியா... 1995-ம் வருஷம், திருவூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் வைரவன், உதவிப் பேராசிரியர் நீலகண்டப் பிள்ளை, துணை இயக்குநர் ராபர்ட் ராஜசேகரன் மூணு பேரும் என் வயலுக்கு வந்து, என்னோட நெல் ரகத்தைப் பத்தி விசாரிச்சு, சாம்பிள் எடுத்துக்கிட்டு போனாங்க.

''அரசாங்கம் என்னை ஏமாத்திடுச்சு...''

கொஞ்ச நாள் கழிச்சு, 'பூங்கா பொன்னி, கிட்டத்தட்ட வெள்ளைப் பொன்னி மாதிரிதான் இருக்கு. ரெண்டுக்கும் 5 முதல் 10 சதவிகிதம்தான் வித்தியாசம் இருக்கு. அதனால இதை தனி ரகமா அங்கீகரிக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. ஆனா, என்னோட ரகம் வெள்ளைப் பொன்னியைவிட அதிகமான மகசூல் கொடுக்கும். அதைவிட, 10 நாட்கள் வயது குறைவு.

நெல் மணிகள் அந்த ரகத்தைவிட சிறியதாவும் இருக்கும். இதுமாதிரி நிறைய வித்தியாசம் இருந்தும், வேணும்னே இப்படி சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகும் ரெண்டு ரகங்களை உருவாக்கிஇருக்கேன். ஆனா, பழைய கசப்பு மனசுல இருக்கறதால... காப்புரிமை கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை'' என்று சோகமாகச் சொன்ன பூங்காவனம் தொடர்ந்தார்.

''ஒரு கட்டத்துல குடும்பச் சூழ்நிலை காரணமா நான் உரக்கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அங்க என்னோட பூங்கா பொன்னி ரகத்தை, 'மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி’ங்குற பேர்ல விக்கிறதைப் பார்த்து அதிர்ந்துட்டேன். உடனே, திருவண்ணாமலை கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன்.

வேளாண்மைத்துறை மூலமா கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு நெல்லை எடுத்துட்டுப் போக சொன்னாங்க. அங்க கொண்டு போய் கொடுத்து கொஞ்ச நாள் கழிச்சு, 'மேம்படுத்தப்பட்ட

''அரசாங்கம் என்னை ஏமாத்திடுச்சு...''

வெள்ளைப் பொன்னி 89-ம் வருஷத்துலேயே வெளியிடப்பட்ட ரகம்.

பூங்காவனம் கொடுத்த ரகம், மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி நெல்லோட குணத்தைப் போலதான் இருக்கு. பெரிய அளவுல மாற்றம் இல்லை'னு சொல்லிட்டாங்க. என்னோட ரகத்தைப் பத்தி சுத்துவட்டாரத்துல எல்லாருக்கும் தெரியும். என்னை அரசாங்கம் ஏமாத்திடுச்சு'' என்று புலம்பினார்.

பூங்கா பொன்னி ரகத்தை விதைத்து வருபவர்களில் கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் (இவர் இன்னொரு பூங்காவனம்) என்பவரும் ஒருவர்.

அவரிடம் பேசியபோது, ''எனக்கு ஆறு ஏக்கரா நிலமிருக்கு. போன ஆறு வருஷமா, சம்பா பட்டத்துல பூங்கா பொன்னிதான் சாகுபடி செய்றேன். அதிகமான விளைச்சலைப் பாத்துட்டுதான் இதை வாங்க ஆரம்பிச்சேன். ஒரு ஏக்கர்ல 28 மூட்டை கிடைக்குது. நானே, பல விவசாயிகளுக்கு இந்த விதையைக் கொடுத்திருக்கேன்'' என்று சொன்னார்.

விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர், சந்திரசேகரன், ''92-ம் வருஷத்துல எல்லாம் இந்தப் பகுதியில ஐ.ஆர்-50 நெல் ரகத்தைத்தான் பயிர் பண்ணுவாங்க. பொன்னி ரகம் பெரிய அளவுல பிரபலமாகல.

பூங்காவனம் உருவாக்கின 'பூங்கா பொன்னி’ சன்ன ரகமா இருந்து... விளைச்சலும் அதிகமா கிடைச்சதால, சுத்துவட்டாரத்துல நல்லா பரவிடுச்சு. நல்ல விலையும் இதுக்கு கிடைக்குது. இவர், வேற மாதிரி முயற்சிகள் எடுக்காம அரசாங்கத்தை மட்டுமே நம்பி சுத்தினதாலதான், காப்புரிமை வாங்க முடியாமப் போயிடுச்சு'' என்று வருத்தத்துடன் சொன்னார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மரபியல் துறை இயக்குநர் தியாகராஜனிடம் இவ்விவகாரம் பற்றிக் கேட்டபோது, ''பூங்கா பொன்னி என்று  சொல்லப்படும் ரகம், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட 'மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி' ரகத்தை ஒத்திருக்கு.

''அரசாங்கம் என்னை ஏமாத்திடுச்சு...''

1986-ம் ஆண்டு முதல் ஆய்வு செய்யப்பட்டு, 89-ம் ஆண்டு இது வெளியிடப்பட்டது. இவர் அதற்குப் பிறகுதான் 'பூங்கா பொன்னி' ரகத்தைக் கண்டுபிடித்ததாக சொல்கிறார். வேளாண்மைத்துறை மூலமாக எங்களுக்குத் தரப்பட்ட விதை மாதிரியை வைத்து, முழுமையான ஆய்வு முடிவுகளை அவருக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

மேலும், அவருக்குச் சந்தேகம் இருந்தால், மீண்டும் நெல் ரகத்தின் விதை மாதிரியைக் கொடுத்தால், சரியான பட்டத்தில் ஆய்வு செய்து, இரண்டு ரகங்களுக்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கும்பட்சத்தில், நிச்சயம் அவருடைய நெல்லுக்கான அங்கீகாரத்தை நாங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

இன்றைக்கு இங்கே இருக்கும் பாரம்பரிய ரகங்களும் சரி.... காணாமல் அடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரகங்களும் சரி. அனைத்துமே பரம்பரையாக நம்முடைய விவசாயிகளால், அனுபவப்பூர்வ ஆராய்ச்சிகளின் விளைவாக கண்டறியப்பட்டவையே! ஆனால், அவர்களெல்லாம்... காப்புரிமை, ஆராய்ச்சி நிலைய அங்கீகாரம், அதை வைத்து பணம் பார்க்க வேண்டும் என்பது போன்ற எவ்வித உள்நோக்கங்களும் இல்லாமல், எதிர்கால சந்திதிகளுக்கு பயன்பட வேண்டும் என்கிற ஒரே உயரிய நோக்கத்துடன் உருவாக்கியவைதான் அத்தனை ரகங்களுமே!

இன்றைக்கு கால ஓட்டத்தால் 'அறிவியல்' என்கிற பெயரில் அனைத்துமே வியாபாரமாகிவிட்டச் சூழலில்... இத்தகைய 'உயரிய நோக்க'ங்களும்... விலை போக ஆரம்பித்துவிட்டன என்பதுதான் உண்மை.

எனவே, அத்தகையக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகாமல், இந்த விவசாயியின் கண்டுபிடிப்பு 100 சதவிகிதம் அவருடையதாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டு காலங்களுக்கும்... வயல்வெளிக் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும். இல்லையேல்... ஒட்டுமொத்தமாக 'கம்பெனி' ராஜ்யம் விஸ்வரூபமெடுப்பதைத் தவிர்க்கவே முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு