Published:Updated:

''நாங்களும் விவசாயிங்கதான்...!''

பட்டையைக் கிளப்பும் பள்ளி மாணவர்கள் கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

தொழில்நுட்பம்

##~##

ன்றைக்கு, கல்வி நிலையங்கள் பலவும், பிஞ்சு உள்ளங்களுக்கு நஞ்சு சேர்த்துக் கொண்டிருக்கும் வேலையைத்தான் பெரிதாகச் செய்து கொண்டிருக்கின்றன. 'நவீன அறிவியல் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் மட்டும்தான் வாழ்க்கை' என்பது போல, சொகுசு வாழ்க்கைக்கு மட்டுமே மாணவர்களைப் பழக்கி, இயந்திர மனிதர்களாக உருமாற்றிக் கொண்டிருக்கின்றன.

இத்தகையச் சூழலில், இயற்கை மீதான காதலையும், விவசாயத்தின் மீதான நேசத்தையும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை சில பள்ளிகள் மேற்கொண்டிருப்பது ஆச்சர்யமே. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான பள்ளிகள்தான் என்றாலும், அவற்றின் பணிகள் எதிர்காலத்துக்கான 'நல்விதைகள்' என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கே, வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இல்லாமல், நேரடியாக களப்பயிற்சியும் கொடுத்து, அசத்திக் கொண்டிருக்கிறது தஞ்சாவூர் மாவட்டம், வாண்டையார்யிருப்பு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி!

தலைமையாசிரியர் பெரியதம்பியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ''எங்க பள்ளிகூடத்து மேல்நிலை வகுப்புல விவசாயப் பாடமும் இருக்கு. புத்தகங்கள்ல இருக்கற பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காம நேரடியா செயல் முறை விளக்கத்தோட செஞ்சு காட்டணும்னுதான் இந்த மாதிரி தோட்டத்தை உருவாக்கியிருக்கோம். மத்த விஷயங்களை எங்க விவசாயப் பிரிவு ஆசிரியர் பாலசுப்ரமணியன் சொல்வார்' என்று சொல்லிவிட்டு, தன்னுடைய அலுவல்களில் மூழ்கினார்.

''முதல்ல தோட்டத்த பார்த்துடலாம்'' என்றபடி நம்மை அழைத்துச் சென்றார் பாலசுப்ரமணியன். அங்கே... பார்களில் வரிசையாக கத்திரி, வெண்டை, கொத்தவரை, தட்டைப்பயறு, செடிமுருங்கை, பப்பாளி என வரிசை கட்டியிருந்தன. பார்களின் குறுக்கே, ஆங்காங்கே சுவர் எழுப்பியது போல்... இலை மற்றும் கொடிகளால் எழுந்து நிற்கும் பச்சை பசேல் தடுப்புகள். அதில் பீர்க்கன், குறும்புடலை, பாகல் உள்ளிட்டவை பளிச்சிட்டன. காய்களின் திரட்சியும் செழிப்பும் நம்மை வியக்க வைத்தன. சீருடையில் இருந்த மாணவர்கள், செடிகளுக்கு மண்புழு உரம் வைத்துக் கொண்டும், காய்களை அறுவடை செய்துகொண்டும் பரபரப்பாக இருந்தார்கள்.

''நாங்களும் விவசாயிங்கதான்...!''

நம்மிடம் பேசிய பாலசுரமணியன், ''40 சென்ட் பரப்புல இந்தத் தோட்டத்தை அமைச்சுருக்கோம். மாணவர்களுக்கு நேரடியா களப்பயிற்சி கொடுத்தா நல்லாயிருக்கும்னு நினைச்சு அதுக்காக நிலம் தேடிட்டு இருந்தோம். பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலயே இந்த நிலம் கிடைச்சது சந்தோஷமான விஷயம். இந்த நிலத்துக்கு சொந்தக்காரரான கலைச்செல்வி... ரோஸ்வுட், குமிழ், மகோகனினு நட்டு வெச்சிருந்தாங்க. மண் வளமில்லாம இருந்ததால, மரங்கள் வளர்ச்சியடையாமலே இருந்துச்சு. 'இயற்கை விவசாயம் செஞ்சி உங்க மண்ணை வளமாக்கி தர்றோம்’னு நாங்க கேட்டதும், தற்காலிகமா இந்த நிலத்தைக் கொடுத்திருக்காங்க. சொன்னது மாதிரியே செய்து காட்டிட்டு இருக்கோம்.

இயற்கை இடுபொருட்களை அதிகளவு கொடுத்ததால, ரெண்டு, மூணு மாசத்துலேயே மரங்கள் வேகமா வளர ஆரம்பிச்சிடுச்சு. அதேசமயம் எங்க மாணவர்கள் உற்பத்தி செஞ்ச காய்கறிகளும் அற்புதமா விளைஞ்சுட்டு இருக்கு. லாப நோக்கத்துல இதை செய்யல. இதுல கிடைக்கக்கூடிய வருமானத்தைத் திரும்பத் திரும்ப தோட்டத்துக்குள்ளேயே செலவு பண்ணிக்கிட்டு இருக்கோம். எங்க மாணவர்களின் கையாலயே ஒரு பசுமையான காய்கறித் தோட்டத்தை உருவாக்கணும்ங்கறதுதான் எங்க நோக்கம். இது வெற்றிகரமா அமைஞ்சாதான் மாணவப் பருவத்திலேயே, இயற்கை விவசாயத்து மேல உறுதியான நம்பிக்கையும், முழுமையான நேசிப்பும் உண்டாகி, அவங்களோட உள்ளத்துல இது நீண்டகாலத்துக்கு நிலைக்கும். விவசாயத் தொழில்நுட்பங்களை அனுபவப்பூர்வமா கத்துக்கவும் ஒத்தாசையா இருக்கும்.

''நாங்களும் விவசாயிங்கதான்...!''

11, 12ம் வகுப்புகள்ல படிக்குற 42 பேருக்குமே விவசாயத்துல நேரடி அனுபவம் கிடைச்சிருக்கு. தினமும் ஒன்றரை மணி நேரம் இந்தத் தோட்டத்துலதான் செயல்முறை பயிற்சி வகுப்பு நடக்குது. இதை அமைச்சு அஞ்சு மாசம் ஆகுது. செடிமுருங்கை, பப்பாளி இன்னும் அறுவடைக்கு வரல. மத்த காய்கள்ல வாரத்துக்கு 60 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்குது. போகப்போக மகசூல் அதிகரிக்கும். இதுவரைக்கும் 600 கிலோ காய் பறிச்சிருக்கோம். கிலோ 20 ரூபாய்னு விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம். மக்கள் இதை விரும்பி வாங்கிக்கிட்டுப் போறாங்க'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

இயற்கையின் மவுசே தனிதான்!

தங்களின் பணியைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேசிய மாணவர்கள், ''நாங்களே விளைய வெச்ச காய்கறிகளை சாப்பிடுறது... எங்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இயற்கை விவசாயத்துல விளையறதால, சுவையும் சூப்பரா இருக்கு. கமகமனு வாசனையாவும் இருக்கு. இதை சமைச்சுப் பார்த்துட்டு எங்க வீடுகள்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க. 'ரசாயனத்துல விளையுற காய்களுக்கும் இந்த காய்களுக்கும் நல்லாவே வித்தியாசம் தெரியுது'னு சொன்னாங்க. பறிச்சி நாலஞ்சி நாள் கழிச்சி, சமைச்சாலும் வதங்காம அப்படியே இருக்கு. ரொம்பப் பிஞ்சா இருக்குற காய்கள் கூட, அதிக எடையோட இருக்கு. இயற்கையோட மகத்துவமே தனிதான்'' என்று சிலாகித்தனர்.

எதிர்கால தலைமுறைக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்!

தொடர்புக்கு,பாலசுப்ரமணியன்,
செல்போன்: 94864-08384.

நுண்ணுயிர் தொட்டி!

இத்தோட்டத்தில் சில புதுமையானத் தொழில்நுட்பங்களையும் புகுத்தியிருக்கிறார், பாலசுப்ரமணியன். அதைப் பற்றிப் பேசியவர், ''ஒரு சிமெண்ட் தொட்டியை வெச்சு, அதை சுத்தி குச்சிகளை நட்டு பிளாஸ்டிக் நாடாவைக் கட்டி வெச்சுருக்கோம். இந்தத் தொட்டிக்குள்ள ஒரு அடி உயரத்துக்கு இலைதழைகளைப் போட்டுடுவோம். ஒரு சாக்குல சாணத்தை நிரப்பி, கட்டி தொட்டிக்குள்ள போட்டு, சாக்கு மூழ்கற அளவுக்கு தண்ணி ஊத்திடுவோம். நாலு நாள்ல இலைகள் எல்லாம் மக்கி போயிடும். அதுக்கப்பறம் போர் தண்ணியை இந்தத் தொட்டிக்குள்ள விடுவோம். உள்ள நல்லா கசடுகளை அலசிக்கிட்டு தண்ணி நிறைஞ்ச உடனே... வெளிய வழிய ஆரம்பிக்கும். பிளாஸ்டிக் நாடா இங்க வடிகட்டி மாதிரி செயல்பட்டு, கசடுகளை வெளிய விடாம தண்ணியை மட்டும் கசிய விடும். இந்தத் தண்ணிக்குள்ள நிறைய நுண்ணுயிரிகள் இருக்கும். இதைத்தான் தோட்டத்துல வாய்க்கால்ல விடுறோம்.

''நாங்களும் விவசாயிங்கதான்...!''

செடி வகை காய்களோட பந்தல் காய்கறிகளையும் சாகுபடி பண்றப்போ... செடிகளுக்கு போதிய அளவு சூரிய ஒளி கிடைக்காமப் போயிடும். அதனால, பார்களுக்கு குறுக்க வாய்க்கால் எடுத்து, ஓரங்கள்ல மூங்கில் குச்சிகளை சாரம் மாதிரி வெச்சு அதுலதான் கொடிகளைப் படர விட்டிருக்கோம். சூரிய ஒளி தடைபடாம செடி வகைகளுக்குக் கிடைக்குது'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு