Published:Updated:

புரிகிறது... அந்தப் 'புதிய தத்துவம்'!

புரிகிறது... அந்தப் 'புதிய தத்துவம்'!

பிரீமியம் ஸ்டோரி

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

##~##
'
கடன்
இல்லையேல்... விவசாயம் இல்லை' என்கிற 'புதிய தத்துவ'த்தின்படி செயல்பட்டு வரும் நம் அரசியல்வாதிகள்... ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கி வரும் கடன்களின் அளவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

'கடன்கள் ஒருபோதும் வாழ வைக்காது. விவசாயிகளை தற்சார்பு அடைய வைப்பதன் மூலமும்... உற்பத்திப் பொருளுக்கு உரிய விலையைக் கொடுப்பதன் மூலமுமேதான் அவர்களைக் காப்பாற்ற முடியும்' என்று நீண்டகாலமாகவே விவசாயப் பிரதிநிதிகள் முழங்கிக் கொண்டுள்ளனர்.

இதையெல்லாம் எள்ளி நகையாடும் 'வாக்கு வங்கி' அரசியல்வாதிகள், கடன்களை அள்ளி வழங்குவதோடு... அவ்வப்போது 'கடன் தள்ளுபடி' என்று இன்ப அதிர்ச்சி அளிப்பதும் உண்டு. ஆனால், இந்த தள்ளுபடி கூத்தில்... கூட்டத்தோடு கூட்டமாக கொள்ளையும் நடப்பதுதான் வேதனை!

கடந்த நான்கு ஆண்டுகளில் 3 லட்சத்து 69 ஆயிரம் சிறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் பிற விவசாயிகளுக்கு... 52 ஆயிரத்து 516 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, 'தகுதியுள்ள விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. தகுதியற்ற பலரும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடு விவசாயி என்கிற பெயரில் சலுகையை அனுபவிக்கின்றனர்' என்கிற குற்றச்சாட்டு பரவிக் கிடக்கிறது!

இத்தனை நாட்களாக, 'அதெல்லாம் பொய்' என்றே சொல்லிக் கொண்டிருந்தது மத்திய அரசு. ஆனால், 'அத்தனையும் மெய்' என்று தற்போது போட்டு உடைத்திருக்கிறது மத்திய கணக்குத் தணிக்கைத் துறை!

'விவசாயக் கடன் திட்டத்தின் கீழ், விவசாயம் அல்லாத பிற உபயோகத்துக்காக பலருக்கும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, கடன் தள்ளுபடி சலுகையின் கீழ், தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 20 கோடியே 50 லட்ச ரூபாய்’ என்று கூறியிருக்கிறது மத்திய கணக்குத் தணிக்கைத் துறை. வழக்கம்போலவே, பிரதமரும் நழுவல் அறிக்கையை வெளியிட்டு, தன் 'கடமை'யை செவ்வனே செய்திருக்கிறார்.

ம்... இப்போது நன்றாகவே புரிகிறது, 'கடன்தான் விவசாயிகளை வாழ வைக்கும்' என்கிற அந்தப் 'புதிய தத்துவம்'!

நேசத்துடன்,
ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு