லாபத்தைப் பெருக்கும் லட்டு தொடர்!

##~##

'திண்ணையில் வீற்றிருக்க, தெய்வம் படி அளக்குமோ’ என்கிற சொல்லாடல் இன்றளவும் நம் கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. விவசாயிகள் வளமாக வாழ, நிலத்தில் மட்டும் உழைத்தால் போதாது. அறுவடைக்குப் பிறகும் உழைக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள், கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். அதற்குக் காரணம், விவசாயிகளைவிட, வியாபாரிகள் மிகவும் திறமையாகவும் கவனமாகவும் விளைபொருட்களைக் கையாள்வதுதான். நகரங்களில் நிறுவப்பட்டிருக்கும் பழ விற்பனையகங்களில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் பளபளப்பாகவும் செழிப்பாகவும் இருப்பதால்தான், அவற்றை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  

விவசாயிகளும் வியாபாரிகளாக மாறினால்தான் உழைப்பின் பலனை முழுமையான ருசிக்க முடியும். பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள்... தனியாகவோ அல்லது கூட்டுமுயற்சியாகவோ பழ விற்பனையகங்களை நடத்த வேண்டும். நவீன முறையில் அழகுபடுத்தப்பட்ட கடைகளில் விற்பனை செய்யும்போது நிச்சயம் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்கள், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ஏற்ற வகையிலான விற்பனை நிலையங்களை ஏற்படுத்தலாம்.

'இதெல்லாம் சாத்தியம்தானா... லாபகரமாக நடத்த முடியுமா..?’ என்கிற அவநம்பிக்கைகள் மனதில் எழக்கூடாது. மற்ற தொழில்களைவிட, பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையில் ஈடுபடக்கூடியவர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே செல்வந்தர்களாகி விடுவதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.

மதிப்புக்கூட்டும் மந்திரம்!

இதற்கு, அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்; விவசாயிகளைச் சுரண்டுகிறார்கள் என்பதல்ல பொருள். அவர்கள் தீவிரமாக பின்பற்றக்கூடிய, ஓர் அடிப்படையான கோட்பாடுதான் அவர்களுக்கு வெற்றியைத் தேடி தருகிறது. தங்களிடம் உள்ள சரக்கை சிறு அளவுகூட விரயமாகாமல், லாபகரமான விலைக்கு விற்பனை செய்துவிட வேண்டும் என்பதுதான் அந்தக் கோட்பாடு. இதற்காக, பல்வேறு தொழில்நுட்பங்களை அவர்கள் கடைபிடிக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய தொழில் ரகசியம்.

வெப்பத்தால் சேதம்!

'அப்படி என்னென்ன தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கிறார்கள்?' என்கிற கேள்வி உடனே உங்கள் மனதில் எழக்கூடும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் வாழ்நாளை அதிகப்படுத்தவும், சந்தை மதிப்பை உயர்த்தவும் உதவக்கூடிய யோசனைகள் சிலவற்றை சொல்கிறேன். அறுவடை செய்யப்பட்ட பிறகும்கூட, காய்கறிகள் பழங்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. மனிதர்களைப் போலவே சுவாசிக்கின்றன. ஆனால், நம் நாட்டில்... குறிப்பாக, தமிழ்நாட்டில் நிலவும் அதிகபட்ச வெப்பத்தினால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிவிரைவு சுவாசம் ஏற்பட்டு, மிக சீக்கிரமாகவே முதிர்ச்சி அடைந்து சேதமடைகின்றன.

வெப்பம் குறைந்தால் ஆயுள் கூடும்!

சேதம் அடையும் தன்மையை வைத்து, அதிவேகத்தில் சேதமடையக் கூடியவை; மெதுவாக சேதமடையக் கூடியவை என காய்கறி மற்றும் பழங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தக்காளி, மாம்பழம், புடலங்காய், கத்திரிக்காய் உள்ளிட்டவை அதிவேகமாக சேதமடையக் கூடியவை. இவை, 3 நாட்கள் முதல் 5 நாட்களில் சேதமடைந்து விடுகின்றன.

வெங்காயம், உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு உள்ளிட்டவை மெதுவாக சேதமடையக் கூடியவை. இவை 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை தாக்குப் பிடித்து, அதன் பிறகுதான் சேதமடைகின்றன.

காற்றின் ஈரப்பதம் குறையும்போது... அதாவது வெயில் நேரங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவை தன் ஈரப்பதத்தை அதிகளவில் இழந்து வாடி விடுகின்றன. ஒவ்வொரு 10 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு வெப்பம் குறைக்கப்படும் போதும், இவற்றின் பாதுகாப்புத்திறன் இரு மடங்கு உயர்கிறது.

உதாரணமாக, 30 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில், 3 நாட்கள் தாக்குப் பிடிக்கக் கூடிய தக்காளி, 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 10 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும்.  

கழுவும் கருவி!

காய்கறி, பழங்களை சூரிய உதயத்துக்கு முன்பே அறுவடை செய்து, உடனடியாக நிழலான இடத்தில், குளிர்ச்சியான சூழலில் பரப்பி வைக்க வேண்டும். இவற்றின் மேற்பரப்பில், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களின் தாக்கமும், சேதம் விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்களும் படர்ந்திருக்கும். இவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

அதனால், பழங்கள், காய்கறிகளை குளிர்ந்த நீரில் சுத்தமாகக் கழுவி நிழலில் உலர்த்த வேண்டும். இப்படிச் செய்தால்... பார்ப்பதற்கு செழிப்பாக இருப்பதோடு, தற்காப்புத்திறனும் அதிகரிக்கும். இவற்றை சுத்தமாக கழுவ, இந்தியப் பயிர் பதன தொழில்நுட்பக் கழகம், பிரத்யேகமான கருவியை வடிவமைத்துள்ளது.

இக்கருவியைப் பயன்படுத்தி, ஐந்தே நிமிடத்தில் 50 கிலோ அளவிலான காய்கறி மற்றும் பழங்களைக் கழுவலாம். இதனுடைய விலை பதினைந்தாயிரம் ரூபாய். சிறு-குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

மதிப்புக்கூட்டும் மந்திரம்!

குளிர்ந்த நீரில் கழுவி நிழலில் உலர்த்தப்பட்ட பழங்கள், காய்கறிகளை அதன் தன்மைக்கு ஏற்பவும், வடிவத்துக்கு ஏற்பவும், பல நிலைகளில் தரம் பிரிக்க வேண்டும்.

நன்கு பழுத்தவற்றை உடனடியாகவும், லேசாக பழுத்தவற்றை 2-3 நாட்கள் கழித்தும் விற்பனை செய்ய வேண்டும். பழுக்காதவற்றை இன்னும் சில நாட்கள் வைத்திருந்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம்.

வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அனைத்து நிலையிலுள்ளவற்றையும் கொடுத்து திருப்தி அடையச் செய்யலாம்.

தரம் பிரிக்கும் கருவி!

சிறியது, நடுத்தரமானது, பெரியது என வடிவங்களுக்கு ஏற்ப காய்கறி, பழங்களை தரம் பிரிக்க வேண்டும். இதற்கான பிரத்யேகமான கருவியும் உண்டு. இதன் விலை 40 ஆயிரம் ரூபாய். இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 2 டன் முதல் 3 டன் அளவுக்கு காய்கறி, பழங்களைத் தரம் பிரிக்க முடியும்.

வீடு மற்றும் பண்ணைகளிலேயே மிக எளிய முறையில் காய்கறி, பழங்களின் வாழ்நாளை அதிகப்படுத்தும் முறைகள், போக்குவரத்தின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், குளிர்பதனக்கிடங்குகள் ஆகியவற்றைப் பற்றி அடுத்த இதழில் பேசுவோம்.

ஆண்டுக்கு

மதிப்புக்கூட்டும் மந்திரம்!

63 ஆயிரம் கோடி வீண்!

பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் இந்தியா உலக அளவில், இரண்டாம் இடம் வகிக்கிறது. நம்நாட்டில் ஆண்டுக்கு

8 கோடி டன் காய்கறிகளும், 5.5 கோடி டன் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இவை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். மொத்த உற்பத்தியில் 25% முதல் 40% வரை சேதமடைந்து, வீணாகின்றன. இவற்றின் மதிப்பு ஆண்டுக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய்.

-மதிப்புக் கூடும்...