Published:Updated:

கசக்கும் கரும்பு... இழுத்தடிக்கும் ஆலை... வீதிக்கு வரும் விவசாயிகள்..!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: எஸ். சிவபாலன்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

##~##

'கரும்பு அரவை செய்த 14 நாட்களுக்குள் அதற்கான பணத்தை முழுமையாக விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும்’ என்கிறது, கரும்பு கட்டுப்பாட்டு ஆணை. ஆனால், ''பல நாட்கள் ஆகியும், எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறது தஞ்சாவூர் திருஆருரான் சர்க்கரை ஆலை'' என்று குமுறுகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்!

இப்பிரச்னை பற்றி நம்மிடம் பேசிய திருவைக்காவூர் மோகன், ''மின் வெட்டுப் பிரச்னையால, டீசல் இன்ஜின் முலமா தண்ணி பாய்ச்சி, கஷ்டப்பட்டு கரும்பை விளைவிச்சுக் கொடுத்தோம். இரண்டு மாசத்துக்கு மேல ஆகியும், பணம் தரல. பேங்க்ல வாங்கின கடனை ஒரு வருஷத்துக்குள்ள அடைச்சுட்டா வட்டி கிடையாது. இப்ப தேவையில்லாம வட்டி கட்ட வேண்டிய நிலை. அடுத்த போகத்துக்கும் கடன் கிடைக்கல. தினசரி செலவுக்கே திண்டாட்டமா இருக்கு' என்றார், மனம் நொந்தவராக.

''சுமார் 36 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. 14 நாட்களுக்கு மேல் காலதாமதம் செய்தால், 15 சதவிகித வட்டியோடு பணத்தைத் தர வேன்டும் என்று 1966-ம் ஆண்டு கரும்பு கட்டுப்பாட்டு ஆணை சொல்கிறது. நெல்லிக்குப்பத்தில் உள்ள பாரி சர்க்கரை ஆலை, 2007-2008-ம் ஆண்டில் இதேபோல இழுத்தடித்தபோது, விவசாயிகள் உயர் நீதிமன்றப் படியேற... ஆலை சார்பில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி கொடுக்கப்பட்டது. நாங்களும் இப்போது நீதிமன்றப் படியேறத் தயாராகிவிட்டோம்'' என்று கொதிக்கிறார் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் 'சுவாமிமலை’ சுந்தர விமலநாதன்.

கசக்கும் கரும்பு... இழுத்தடிக்கும் ஆலை... வீதிக்கு வரும் விவசாயிகள்..!

ஆலையின் துணைப் பொதுமேலாளர் ரங்கநாதனிடம் இதுபற்றி கேட்டபோது, ''எதிர்பார்த்த அளவுக்கு சர்க்கரை விற்பனை ஆகல. விற்பனை ஆகுற தொகையும் உற்பத்திச் செலவுக்குத்தான் சரியா இருக்கு. பேங்க்குல சர்க்கரையை அடமானம் வெச்சு, விவசாயிகளுக்கு பணம் கொடுத்துடலாம்னு முயற்சி செஞ்சோம். 'மொத்த விலையில 50 சதவிகிதம்தான் கடன் தருவோம்’னு சொல்லிட்டாங்க. இதுதான் தாமதத்துக்கு காரணம். இதுவரைக்கும் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் வரைக்கும் பட்டுவாடா செஞ்சுட்டோம். சீக்கிரமே எல்லாருக்கும் பணத்தைக் கொடுத்துடுவோம்'' என்று சொன்னார்.

ரோட்டோர வியாபாரிகளே... மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டுதான், விவசாயிகளிடம் பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால், இத்தனை பெரிய நிறுவனம், 'விலைபோகல... பணமில்ல' என்று காலம் தாழ்த்துவதை என்னவென்று சொல்வது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு