Published:Updated:

சந்தைக்குப் போகலாம் வாங்க...

ஓசூர்தினசரி காய்கறி சந்தை!உங்கள் பையை பலமாக்கும் தொடர்..!த. ஜெயகுமார் படங்கள்: வீ. ராஜேஷ்

பிரீமியம் ஸ்டோரி

சந்தை

##~##

தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளைப் பற்றி இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இங்கு இடம் பிடிக்கிறது, ஓசூர் தினசரி சந்தை.

பெரிய பெரிய மோட்டார் நிறுவன தொழிற்சாலைகள் வரிசை கட்டி நிற்கும் ஓசூர், பெரிய வர்த்தக நகரமாக வளர்ந்து வருகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 17 ஆயிரம். கர்நாடகாவின் எல்லைப்புறப் பகுதியில் நிலவும் மிதமான குளிர், நல்ல மழை ஆகியவை இந்தப் பகுதியிலும் நிலவுவதால்... அம்மாநிலத்தில் பயிரிடப்படும் காய்கறிகள் இங்கும் விளைவிக்கப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் இங்கேயே கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். தற்போது தக்காளி, பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், பச்சை மிளகாய், சௌசௌ போன்ற காய்களுக்கான முக்கிய உற்பத்திச் சந்தையாக ஓசூர் விளங்குகிறது.

1980-ம் ஆண்டு முதல் 'எம்.ஜி.ஆர் சந்தை’ என்கிற பெயரில் ராயக்கோட்டை செல்லும் சாலையில் இயங்கி வந்தது, 'ஓசூர் மொத்த காய்கறி வியாபாரிகள் சந்தை’. இது, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் 2002-ம் ஆண்டு முதல் கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் உள்ள பத்தளப்பள்ளி என்ற இடத்துக்கு மாற்றப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தினரால் இந்த இடம் வாங்கப்பட்டு 80 கடைகளோடு ஆரம்பிக்கப்பட்ட சந்தை, தற்போது 210 கடைகளாக வளர்ந்து நிற்கிறது.

சந்தைக்குப் போகலாம் வாங்க...

ஓசூரைச் சுற்றியுள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ஆனைக்கல், சஞ்சாபுரம், பேரிகை, ஜவளகிரி பகுதியிலிருந்து காய்கறிகள் இச்சந்தைக்கு வருகின்றன. இங்கிருந்து திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் மற்றும் கேரளா மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நாட்டுத் தக்காளி, சௌசௌ உள்ளிட்ட காய்கறிகள் சிதம்பரம், பாண்டிச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோயில் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சந்தைக்குப் போகலாம் வாங்க...
சந்தைக்குப் போகலாம் வாங்க...

விலை நிர்ணயம் பற்றி பேசிய ஒசூர் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வராஜ், ''கோலார், மைசூர் சந்தைகளை வெச்சுதான் ஓசூர் சந்தையில விலை வைக்கிறோம். அந்த சந்தைகள்ல வரத்து குறைவா இருக்கற காய்கறிகளுக்கு... இங்க விலை கூடிடும். அங்க வரத்து அதிகமா இருந்தா... இங்க விலை குறைஞ்சுடும். கேரளாவுல தேவை அதிகமா இருந்ததுனா மூணு சந்தைகள்லயும் நல்ல விலை போகும். மூணு சந்தைகள்லயும் தக்காளி, பீன்ஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் மாதிரியான காய்கறிகள் எப்பவுமே வரத்து இருந்துட்டே இருக்கும். அதனால விலை நிலவரம் மாறிக்கிட்டே இருக்கும்'' என்றார்.

விவசாயிகளுக்கு என்ன பலன்..?

சந்தைக்குப் போகலாம் வாங்க...

''இங்க, நிறைய வியாபாரிகள் இருக்கறதால, விவசாயிகளை, தங்களுக்குத் தொடர்ந்து காய்கறி கொடுக்கறதுக்காக பிடிச்சு வெச்சுக்கிறதுக்கு அவங்களுக்குள்ள பெரிய போட்டி இருக்கும். முன்பணம், நாத்து, விதைகள்னு கொடுத்து கையில வெச்சுக்கிறாங்க. சுற்றுப்பகுதியிலுள்ள

90 சதவிகித விவசாயிகள், முன்பணம் வாங்குனவங்கதான். அறுவடைக்குத் தயாராயிடுச்சுனு போன் பண்ணினா... வண்டிகள அனுப்பி ஏத்திட்டு வந்திடுவோம். தக்காளியப் போட்டு வைக்க ட்ரே (பிளாஸ்டிக் பாக்ஸ்) கொடுத்திடுவோம். முன்பணம் வாங்காத விவசாயிங்க, காய்கறிகளை அவங்களே வண்டி வெச்சு எடுத்துட்டு வந்து, நம்பிக்கையான வியாபாரிங்க கடையில போட்டுட்டு காசு வாங்கிட்டு போறாங்க. சீஸன் காலங்கள்ல நல்ல விலை இருக்கும். இந்தச் சந்தையில தேன்கனிக்கோட்டை, பாகலூர், கெலமங்கலம்னு எல்லா ஏரியாவைச் சேர்ந்த வியாபாரிங்களும் இருக்காங்க. அவங்ககிட்ட விலை நிலவரத்தை விசாரிச்சுக்கலாம்'' என்கிறார், சந்தை நிர்வாக கமிட்டி உறுப்பினர் சுவாமிநாதன்.

உழவர் சந்தை தமிழ்நாட்டில் உள்ள பெரிய உழவர் சந்தைகளில் ஓசூர் உழவர் சந்தையும் ஒன்று. தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரியும் இங்கு, காலை

5 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை சந்தை நடைபெறுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த உழவர் சந்தையில், 216 கடைகள் செயல்படுகின்றன. தவிர, நுழைவாயிலிலும் பழக் கடைகள், சிறுகடைகள் செயல்படுகின்றன.

உழவர் சந்தையில் தினமும் காய்கறிகள் வாங்க வரும் பாப்பம்மாள், ''10 வருஷமா இங்க வந்து வாங்கிட்டுப் போறேன். கடைகள்ல வாங்கிறதவிட, இங்க விலை குறைவா கிடைக்குது. நடந்தே வந்து வாங்கிட்டு போயிடுறோம். டவுனுக்கு மத்தியில இருக்கிறதால நிறைய பேரு இங்கதான் வர்றாங்க'' என்கிறார் சந்தோஷமாக!

சந்தைக்குப் போகலாம் வாங்க...

சந்தையில் காய்கறி விற்கும் வெங்கடலட்சுமி, ''சந்தை தொடங்கின காலத்திலிருந்தே இங்க பூ வியாபாரம் பண்றேன். கனகாம்பரம், சாமந்தி இதெல்லாம் எங்க தோட்டத்துலயே வெளஞ்சுடுது. கூடவே, அக்கம்பக்கத்து விவசாயிங்க கொடுக்கற பூக்களையும் கொண்டு வநது வித்துடுவேன்'' என்கிறார்.

''உழவர் சந்தையில காய்கறிகளை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், விளைநிலத்துக்கான சிட்டா-அடங்கல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் 3 புகைப்படங்களை உழவர் சந்தை அலுவலகத்தில் கொடுத்தால், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதை வைத்து, 5 ஆண்டுகள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து கொள்ள முடியும்.

பத்தளப்பள்ளி மொத்த காய்கறி வியாபாரிகள் சந்தையின் விலை, சில்லறை கடைகளில் உள்ள விலை இரண்டையும் வைத்துதான் இங்கே விலையை நிர்ணயிக்கிறோம். காலை 5 மணிக்கு அந்த விலையை பலகையில் எழுதிவிடுவோம். அந்த விலையிலதான் அன்று முழுக்க விவசாயிகள் விற்பனை செய்வார்கள்'' என்று, உழவர் சந்தையின் நடைமுறை சொல்கிறார் வேளாண் அதிகாரி மேகநாதன்.

வார நாட்களில் சராசரியாக 100 டன் அளவுக்கு காய்கறிகள் இங்கு விற்பனையாகின்றன. உழவர் சந்தைகளில் விவசாயிகளுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. காலை நேரங்களில் முக்கிய வழித்தடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிதாக காய்கறிகள் விற்பவர்களுக்கு பாகலூர் சாலையில் உள்ள ஆவலப்பள்ளி என்னுமிடத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் இடம் ஒதுக்கப்படுகிறது.  

தொடர்புக்கு,
சாமிநாதன், செல்போன்: 98430-54746
உழவர் சந்தை, தொலைபேசி: 04344-224450

 உற்பத்தி அதிகரித்தால், விலை குறையும்!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் 'எழில்சோலை இயற்கை அங்காடி’யின் திறப்பு விழா கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது. அங்காடியைத் திறந்து வைத்துப் பேசிய இயற்கை வேளாண் நிபுணர் அரு. சோலையப்பன்,

'பொதுவாகவே உலகம் வெப்பமாவது ஆட்டோமொபைல் துறையால்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், முதன்மையான காரணமாக இருப்பது, விவசாயிகள் நிலத்தில் கொட்டும் அதிகப்படியான உரங்கள்தான். இப்படி, உரங்களைக் கொட்டி உற்பத்தி செய்யப்படும் உணவு முழுவதுமே விஷமாக இருக்கிறது. அதனால்தான், இன்று பலவித புற்றுநோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன.

இதுவரை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த இயற்கை உணவு தானியங்கள், சிறிய நகரங்களிலும் கிடைக்குமாறு, கடைகளைத் துவங்குவது வரவேற்கதக்கது. இயற்கைப் பொருட்களின் விலை சற்று கூடுதலாக இருக்கலாம். உற்பத்தியும், நுகர்வோரும் அதிகரிக்க அதிகரிக்க... அனைவரும் வாங்கும் அளவுக்கு கண்டிப்பாக விலை குறையும்'' என்றார்.

 -காசி. வேம்பையன்.

 இன்னும் வாங்குவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு