Published:Updated:

வாழ்க மரம்... வளர்க பணம் !

மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !

 இரா.ராஜசேகரன்

நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!

ஒரு வருடத்தில் தோப்பாகும்!

வாழ்க மரம்... வளர்க பணம் !
##~##

மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது.

ஏக்கருக்கு 200 மரங்கள்!

சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். 

வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது. நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.

 

வாழ்க மரம்... வளர்க பணம் !

மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.

3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்!

வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்!

வாழ்க மரம்... வளர்க பணம் !

60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!

ஆண்டுக்கு ஒரு லட்சம்!

ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும்.

வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.

75 லட்ச எதிர்பார்ப்பு!

 

வாழ்க மரம்... வளர்க பணம் !

மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர்,

''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805  

 

இந்தியாவே தாயகம்!

மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.

 -தழைக்கும்
படங்கள் : வீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு