Published:Updated:

மலைக்க வைக்கும் மானாவாரி மலைவாழை...

10 ஆண்டுகளுக்கு வருமானம் தரும் பக்கக் கன்றுகள்!

ஆர்.குமரேசன்,
பு.கமலினி

பளிச்... பளிச்...

13 மாதத்தில் அறுவடை.
ஊடுபயிராக மிளகாய், பீன்ஸ்.
பராமரிப்பே இல்லாமல் விளையும் சாமை, எள்.

வானத்தை வம்புக்கு இழுக்கும் உயரமான மரங்கள், சிலுசிலுவென காற்று, சிறகடிக்கும் பறவைகள், சிற்றோடைகள், காற்றைக் காயப்படுத்தாத சூழல் என இயற்கையின் ஒப்பற்ற ஓவியமாகக் காட்சி தருகிறது... வேலூர் மாவட்டத்திலிருக்கும் ஜவ்வாது மலை. இந்தச் சூழலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது... மலைப் பகுதியில் நடக்கும் மானாவாரி இயற்கை விவசாயம்!

மலைக்க வைக்கும் மானாவாரி மலைவாழை...

புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 34 கிராமங்களில், கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, ஊடுபயிராக மிளகாய், ஓடைப் பகுதிகளில் நெல், சாமை, துவரை, மொச்சை என இயற்கை முறையில் மானாவாரி சாகுபடி சக்கை போடு போடுகிறது.

வாழையைப் பொறுத்தவரை மலைப் பகுதிக்கே உரித்தான, உதியன் ரகத்தைத்தான் பயிரிடுகிறார்கள். இதைப் பற்றி நம்மிடம் பேசிய அரும்பல்பட்டு இயற்கை உழவர் மன்ற செயலாளர் ஆண்டி, ''ரொம்ப வருஷமா பூச்சிக்கொல்லி, ரசாயனம் எதுவும் போடாம வெறும் சாணத்தை மட்டும் போட்டுத்தான் விவசாயம் செய்றோம். இயற்கை வேளாண் இயக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் வந்து எங்க பகுதி விவசாயிகளை இணைச்சு, சங்கமாக்கினாரு. இப்ப... மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சுருக்கோம். முதல்ல அரசாங்கத்துகிட்ட மானியம், உதவினு வாங்குறதுக்கு ரொம்ப போராட வேண்டி இருக்கும். சங்கமா சேர்ந்த பிறகு... அதிகாரிகளே தேடி வந்து கொடுக்குறாங்க.

வாரம் ஒரு லட்சம் காய்!

மலைக்க வைக்கும் மானாவாரி மலைவாழை...

எங்க மலையில 90 சதவிகிதம் மானாவாரிதான். வைகாசியில இருந்து தை மாசம் வரைக்கும் மழை இருக்கும். இந்த மழையை வெச்சுதான் நடக்குது எங்க மானாவாரி விவசாயம். ஒண்ணு, ரெண்டு விவசாயிங்க மட்டும் கிணறு தோண்டி விவசாயம் செய்றாங்க. உதியன் ரக வாழைப்பழம் ரொம்ப சுவையா இருக்கும். இயற்கை முறையில மட்டுமே இங்க விளைய வெக்குறதால, இந்த வாழைக்கு 'டிமாண்ட்’ அதிகம். மலையிலேயே வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை வாழைச் சந்தை கூடும். அதுல வியாபாரிங்க கலந்துகிட்டு ஏலம் எடுப்பாங்க. வாரத்துக்கு ஒரு லட்சம் காய் வரைக்கும் வெளியில போகுது'' என்ற ஆண்டி, மானாவாரியில் வாழை சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார். அதைத் தொகுத்து பாடமாக்கியிருக்கிறோம்...

பட்டம் தேவையில்லை!

'உதியன் வாழைக்குத் தனியாக பட்டம் இல்லை. தை மாதத்துக்கு மேல் எந்த மாதமும் நடலாம். நிலத்தை உழவு அடித்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். வாழைக்கு, வாழை 6 அடியும், வரிசைக்கு வரிசை 8 அடியும் இடைவெளி இருப்பது போல் ஒன்றரை அடி ஆழம், 2 அடி அகலத்தில் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழியில் 3 கிலோ தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தைக் கொட்டி, மேல் மண்ணைப் போட்டு மூடி, அதில் விதைக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். சமதளத்தில் ஏக்கருக்கு 800 கன்றுகள் வைப்பது போல, மலைப்பகுதியில் செய்ய முடியாது. நில அமைப்பு, மேடு, பள்ளம் என இடத்துக்கு ஏற்ப ஏக்கருக்கு 400 முதல் 450 கன்றுகள் வரை நடலாம். விதைக் கிழங்குகளை பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் வாங்கிக் கொள்ளலாம். ஒரு கிழங்கின் விலை 5 ரூபாய்.

மலைக்க வைக்கும் மானாவாரி மலைவாழை...

பக்கக் கன்று கொடுக்குமே...பல வருஷத்துக்கு வருமானம்!

நடவு செய்த பிறகு, களை முளைப்பதைப் பொறுத்து இரண்டு முறை களை எடுக்க வேண்டும். இடையில் மிளகாய், காராமணி, பீன்ஸ் மாதிரியான பயிர்களை நட்டு, அதிகபட்சம்

6 மாதத்துக்குள் ஒரு மகசூல் எடுக்கலாம். வாழைக்கு இடையில் உள்ள இடைவெளியில் சிறிய பாத்திகளை அமைத்து, அதில் ஊடுபயிர்களை நடலாம். மலையின் சீதோஷ்ண நிலை, இயற்கை முறை விவசாயம் ஆகிய காரணங்களால் நோய் தாக்குதல் இருக்காது. நடவு செய்த 5-ம் மாதம் நன்கு திடமாக உள்ள பக்கக் கன்றுகளில் நான்கை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கன்றுகளைக் கழித்து விடவேண்டும்.  10-ம் மாதம் தார் விடும். அந்த நேரத்தில் வயலில் தொழுவுரத்தை இறைத்துவிட வேண்டும். வாய்ப்பு இருந்தால், ஏர் மூலமாக ஒரு உழவு போடுவது நல்லது.

மலைக்க வைக்கும் மானாவாரி மலைவாழை...

13-ம் மாதம் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 தார்கள் வரை கிடைக்கும். அடுத்த நான்காவது மாதத்தில் இருந்து, பக்கக் கன்றுகள் மூலம் தார் அறுவடைக்கு வந்து விடும். முதல் அறுவடையைவிட, அடுத்தடுத்த அறுவடைகளில் தார்களின் எண்ணிக்கை அதிகமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு உழவு செய்து, தொழுவுரத்தைத் தூவி முறையாகப் பராமரித்தால்... நான்கு அல்லது ஐந்து மாதத்துக்கு ஒரு தடவை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். சுமார் 10 ஆண்டுகள் வரை இப்படி தொடர் அறுவடை செய்யலாம்’.

ஏக்கருக்கு 30 ஆயிரம்!

தொடர்ந்து பேசிய ஆண்டி, ''ஒரு தாருக்கு 50 முதல் 100 காய்கள் வரைக்கும் இருக்கும். ஒரு காய் சராசரியா ஒரு ரூபாய்க்கு விலை போகுது. ஆரம்பத்துல 100 ஏக்கர்ல நடந்த இந்த வாழை விவசாயம்... இன்னிக்கு மலையில இருக்கற 34 கிராமங்கள்லயும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல நடக்குது. உழவு, நடவு, அறுவடைனு எல்லா வேலைகளையும் பெரும்பாலும் விவசாயிகளும், அவங்க வீட்டு ஆளுங்களுமே செஞ்சிக்குவாங்க. சிலர்தான் சம்பளத்துக்கு ஆளுங்கள கூப்பிடுவாங்க. பெரும்பாலும் ஏர் உழவுதான். அதனால, எல்லா விவசாயிங்க வீடுகள்லயும் மாடு இருக்கும். அந்த மாட்டுச் சாணத்தையே உரமா போட்டுக்குவோம்.

கிட்டத்தட்ட எல்லாமே தற்சார்பா இருக்கறதால... பெருசா செலவாகாது. ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய அதிகபட்சம் 8 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதுபோக... 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். அடுத்தடுத்த வருஷங்கள்ல 50 ஆயிரம் வரைக்கும் இது அதிகரிக்கும். ஊடுபயிர் மூலமா வர்ற வருமானம் தனி. இப்ப எங்க அமைப்பு மூலமா, இயற்கை விவசாய விளைப்பொருட்களுக்கான சான்றிதழை வாங்கியிருக்கோம். இனிமே எங்க வாழைக்கு அதிக விலை கிடைக்கும்னு எதிர்பாக்குறோம்'' என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.

சத்தமில்லாத வருமானத்துக்கு சாமை!

மொழலை கிராம வேளாண் வளர்ச்சி திட்டப் பயனாளிகள் சங்கத் தலைவரான ஏகாம்பரம், 'மலை விவசாயத்தைப் பொறுத்தவரை வாழை போடாத விவசாயிக, சாமையையும், எள்ளையும் விதைப்பாங்க. இந்த ரெண்டு பயிரையும் உழவு போட்டு விதைச்சு விட்டா போதும்... அறுவடை வரைக்கும் எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது'' என்றவர் சாமை மற்றும் எள் சாகுபடி பற்றி சொல்லத் தொடங்கினார்.

சித்திரை மாதத்தில் வயலில் தொழுவுரத்தைக் கொட்டி நன்றாக உழவு போட வேண்டும். வயலை நன்றாக ஆறவிட்டு, வைகாசி மாதத்தில் ஏக்கருக்கு 10 கிலோ சாமையை விதைத்து விடவேண்டும். களை எடுக்கத் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்காது என்பதால், எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. விதைப்புக்குப் பிறகு, அறுவடை மட்டும்தான் வேலை. புரட்டாசியில் கதிர் முற்றியவுடன் அறுவடை செய்து, மாடுகளை வைத்து மிதிக்க வைத்தும், குச்சியால் அடித்தும் சாமையைப் பிரித்து எடுக்கவேண்டும். தூற்றி, சுத்தம் செய்து விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் சுமார் 2,000 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

பேய் எள்... பிரமாதம்!

சாமை அறுவடை முடிந்தவுடன் உழவு போட்டு, ஒரு வாரம் நிலத்தை காயவிட வேண்டும். நிலம் காய்ந்ததும் ஏக்கருக்கு 5 கிலோ பேய் எள் விதைத்து விடவேண்டும். இதற்கும் எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. பெய்யும் மழையை வைத்தே விளைந்து விடும். தை மாதம் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த எள்ளை அடித்து, தூற்றிச் சுத்தப்படுத்தினால்... ஏக்கருக்குத் தோராயமாக 400 கிலோ எள் கிடைக்கும். கிலோ 30 ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

எள் அறுவடை முடிந்தவுடன் நிலத்தை சும்மா போட்டு வைத்து விடவேண்டும். அடுத்து சித்திரையில் உழவு போட்டு வைகாசியில் சாமை, புரட்டாசியில் எள் என மாற்றி மாற்றி சாகுபடி செய்யலாம்'' என்றார் உற்சாகம் பொங்க!

இயற்கைக்கு மாறினால் 10 ஆயிரம் ரூபாய்!

 

மலைக்க வைக்கும் மானாவாரி மலைவாழை...

ஜவ்வாது மலைப்பகுதி விவசாயிகளைச் சங்கமாக ஒருங்கிணைத்து, அரசின் சலுகைகளையும், இயற்கை விளைபொருட்களுக்கான சான்றிதழ்களையும் வாங்கிக் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியிருப்பவர்... இயற்கை வேளாண் இயக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன். விவசாயத் துறையில் வேலை பார்த்தவரான இவர், தற்போது இயற்கை விவசாயத்தைப் பரப்பும் வேலைகளைச் செய்து வருகிறார்.

''இயற்கை விளைபொருள் சான்று வாங்கி இருக்கறதால, மலை கிராம மக்களோட வாழை, சாமை, எள் எல்லாத்துக்கும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பிருக்கு. அதுக்காக இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடிகளிடம் பேசிக்கிட்டு இருக்கோம்'' என்று சொல்லும் புருஷோத்தமன்,

''ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள், 'இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும்போது முதல் மூணு வருஷத்துக்கு மகசூல் இழப்பு ஏற்படுறது இயற்கைதான். அதை ஈடுசெய்ய அரசு உதவித் தொகை வழங்கணும்னு அரசுக்கு ரொம்ப நாளா கோரிக்கை வெச்சதன் விளைவா... முதல் மூணு வருஷத்துக்கு மட்டும் ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாயை அரசு அறிவிச்சிருக்கு. இயற்கை உரம், வேப்பம் பிண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மாதிரியான இடுபொருளா அந்த உதவியைக் கொடுக்கத் திட்டமிட்டு இருக்காங்க. இயற்கை விவசாயிகள் இதையெல்லாம் பயன்படுத்திக்கணும்'' என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 தொடர்புக்கு :
ஆண்டி, அலைபேசி: 99439-35077,
ஏகாம்பரம், அலைபேசி: 96550-38223
புருஷோத்தமன், அலைபேசி: 98947-84863

படங்கள் :ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு