Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

கந்தசாமியும்... கண்துடைப்புக் குழுக்களும்!

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

கந்தசாமியும்... கண்துடைப்புக் குழுக்களும்!

Published:Updated:

நம்மாழ்வார்
ஓவியம்: ஹரன்

##~##

அது, 1970-ம் ஆண்டுகளின் முன்பகுதி. 'நிலச்சீர்திருத்தம் பற்றி கலந்தாய்வு நடத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் நாடாளுமன்றக்குழு வருகிறது, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது’ என்கிற தகவல் வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமைதித் தீவு இயக்குநர் திரு. வான்கம்பர்ட்டும் நானும் சென்றிருந்தோம். எங்கள் கருத்துக்களை முன்வைக்க அனுமதி கிடைத்தது. இருவரும், மடத்துக்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களைச் சொன்னோம்.

'பலப்பல ஆண்டுகளாக உழுது பயிரிட்டு வரும் உழவர்கள், நிலத்துக்கு உரியவர்களாக ஆக்கப்படவில்லை. உற்பத்தி பெருகுவதற்காக கிணறு அமைத்தல், கருவிகள் பொருத்துதல், குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், களம் அமைத்தல், மாடுகள் வழங்குதல்... என்று எதையும் மடம் செய்து கொடுப்பதில்லை.

நிலம் மடத்துக்கு உடைமை என்பதால், அதில் விவசாயம் செய்யும் உழவர்கள் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி நிலத்தை மேம்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதன் அடிப்படையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்தோம்.

அமைச்சர் எங்களது கருத்தை ஆமோதித்தார். அங்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் என்னுடைய அண்ணன் இளங்கோவும் இருந்தார். அவர் எங்களை வீரதீரமிக்க தோழர் 'மணலி’ கந்தசாமியிடம் அறிமுகப்படுத்தினார்.

'மணலி’ கந்தசாமி, தன் இளமைப்பருவத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ஜமீன்தார் ஒருவர் குவித்து வைத்திருந்த நெல்லை எடுத்து, பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு விநியோகம் செய்தவர். கந்தசாமியை காவல்துறை தேடத் துவங்கியதும் தலைமறைவானார். பல ஆண்டுகாலம் தலைமறைவாக இருந்து செயல்பட்டவர். 1952-ம் ஆண்டு தலைமறைவாகவே இருந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றியும் பெற்றார். இதற்கு நடுவே... இவருடைய குடும்பம் சொல்லொண்ணா சித்திரவதைகளுக்கு ஆளானது.

இந்த வரலாறு எனக்கு முன்பே தெரிந்திருந்ததால், அவருடன் மரியாதையுடன் கைகுலுக்கினேன். அவர், 'நீங்கள் சொல்வதையெல்லாம் நான் அறிவேன். நீங்கள் வந்து முன்வைத்த கருத்துக்கள் சரியே. ஆனால், விரைவில் நல்லது நடக்கும் என நம்பாதீர்கள். இந்தக் குழு நாடு சுற்றி வருவது ஒரு கண்துடைப்புக்காகத்தான்'' என்று சொன்னார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

இன்றுவரை அது சரியாகவே இருந்து வருகிறது. ஏழைகளிடம் உள்ள நிலத்தைப் பறித்து பணக்காரர்களிடம் ஒப்படைப்பது என்ற கொள்கையை மத்திய, மாநில அரசுகள் முழுமூச்சுடன் இன்றளவும் செயல்படுத்தி வருகின்றன. இதில் ஒரு முன்னேற்றம்... இப்போதெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க... 'பச்சைப் புரட்சி' உள்ளே புகுந்து விளையாடத் துவங்கியது... இன்னொரு கொடுமை. பாரம்பரிய நெல் ரகங்கள் பிற்போக்கானவை, பழமையானவை என்று புறந்தள்ளி... குள்ள ரக நெல், கம்பு, சோளம் ஆகியவை புகுத்தப்பட்டன. அதனால், தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது. மாடுகள் மந்தை மந்தையாக கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. திருநெல்வேலி - நாகர்கோவில் சாலையில் பெருமளவில் மாடுகள் செல்லப்படுவதைக் காண நேர்ந்தது.

அமைதித் தீவில் நடந்து கொண்டிருந்த வேலைகளை, சீர்தூக்கிப் பார்ப்பதற்காக, பெல்ஜியம் நாட்டிலிருந்து தலைமை இயக்குநர் டூரோசூசேப் வந்தார். அவர் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். மிடுக்கான தோற்றம் கொண்டவர்.

அருள்தந்தை டொமினிக் பியர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் நடத்திக் காட்டிய விதம் சிறப்பாக இருந்தது.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு... ஆண்டு விழா! அதன் முடிவில் இரவு உணவு பரிமாறப்பட்டது. அறையில் போதிய இடவசதியில்லை. கீழ்தட்டுப் பணியாளர்கள், 'நாங்கள் அடுத்த பந்தியில் அமர்கிறோம்’ என ஒதுங்கி நின்றார்கள்.

டூரோசூசேப் சாப்பிடுவதற்காக மத்தியில் ஓர் இலை மட்டும் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே வந்ததும், 'காவல்காரர்' சண்முகம் பக்கத்தில்தான் உட்காருவேன் என வலியுறுத்தினார். இன்னொரு இலை காலி செய்ய வேண்டி வந்தது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் இடத்தை காலி செய்து வெளியே வந்து நின்றேன். அவருடைய எளிமைக்கும் மனித உறவை உயர்த்திப் பிடிக்கும் பண்புக்கும் எடுத்துக்காட்டாக இதைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சாதாரண மக்கள் மத்தியில் என்ன கலை நிகழ்ச்சி நடக்கிறதோ, அதேபோன்ற ஒன்றை நடத்திப் பார்க்க ஆசைப்பட்டார். குழாய்சட்டை போட்டிருந்த அவருக்காக ஒரு நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டது. நாற்காலியை ஓரம் தள்ளிவிட்டு காலியாக இருந்த பூந்தொட்டியைக் கவிழ்த்து அதன்மேல் அமர்ந்து கலைநிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.

என்னை நாற்காலியில் அமர்த்திவிட்டு, ஸ்டூலில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் பண்பாளர் அவர். அவரிடம் கால்நடைகள் பற்றி குறிப்பிட்டேன்.

'நமது தலைமையிடத்தில் இருக்கும் நாற்பது ஏக்கர் நிலமும் நெடுங்காலமாக கால்நடை எருவைப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து நிறைய மாடுகள் இறைச்சிக்காக கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.

அவற்றில் முப்பது-நாற்பது கால்நடைகளை வாங்கி வந்து பண்ணையில் விட்டால், அவை புல்லைத் தின்று எருவைக் கொடுக்கும். மரப்பயிர்கள் செழித்து வளரும். நெல் பயிரில் நல்ல விளைச்சல் எடுக்கலாம். மண்ணில் ஈரப்பிடிப்பு அதிகமாகும். நீர்த்தேவை குறையும்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடைகளை கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு விநியோகிக்கலாம்’ என்று சொன்னேன். ஆனால், டூரோசூசேப் 'நீ கால்நடை மருத்துவனா..?’ என்று என்னைக் கேட்க... அந்தக்கேள்வி என்னை நிலைகுத்திப் போகச் செய்தது.

மேலைநாடுகளில் ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அது தொடர்பான பணிகளைச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் உண்டு. அதைத்தான் அவர் பிரதிபலித்திருக்கிறார் என்பதை உணர்ந்து மௌனமானேன்.

1974-ம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டது. அமைதித் தீவு உதவியுடன் வெட்டிக் கொடுக்கப்பட்டிருந்த முப்பது கிணறுகளில் தண்ணீர் இல்லை. 'காசா’ என்ற தொண்டு நிறுவனத்தை அணுகினேன். அதன் பணியாளர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்கள் ஆழப்படுத்த உதவியதில், 24 கிணறுகளில் தண்ணீர் கிடைத்தது.

1975-ம் ஆண்டு முதற்கொண்டே பெல்ஜியம் நாட்டினர் அமைதித் தீவை இந்திய நிறுவனமாக்கிவிட்டு வெளியேறுவது பற்றி சிந்தித்தார்கள். மருத்துவமனையை யாரிடம் ஒப்படைப்பது என்பது முதலில் கேள்விக்குறியானது.

புகழ்பெற்ற மருத்துவமனைகள் இதை எடுத்து நடத்த முன்வந்தார்கள். ஆனால், 'நோயாளிகளிடம் பணம் வசூலிப்போம்’ என்று சொன்னார்கள். அது டாக்டர் கேஷோவ் அம்மையாருக்கு பிடிக்கவில்லை. 'இந்த நாட்டு ஏழைகளுக்கு மருத்துவ வசதி அளிக்கவேண்டியது தேசத்தின் கடமை’ என்று அவர் வாதிட்டார்.

முடிவாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையுடன் இணைத்துக்கொள்வது என முடிவானது. மருத்துவர் கேஷோவ் பெல்ஜியத்துக்குத் திரும்பியது எல்லோர் கண்களிலும் நீரை வரவழைத்தது. அவர் திருமணமாகாதவர்.

வாரத்தில் ஐந்து நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு கிராமம் என உதவியாளருடன் சென்று நோயாளிகளுக்கு மருந்தளிப்பார். நாள்பட்ட சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவார். சனிக்கிழமைதோறும் தலைமையகத்தில் சிகிச்சையளிப்பார். எவருக்கும் முன்னுரிமை கிடையாது. எல்லோரும் வரிசையில் நின்று வரவேண்டும்.

அவர், ஒரு சம்பவத்தைச் சொல்லி வாய்விட்டுச் சிரித்தார். பணக்காரர்கள் தாம் பணக்காரர் என்பதை எல்லா இடத்திலும் காட்டிக்கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். அப்படித்தான் சிகிச்சைக்கு வரும்போதுகூட கழுத்திலும் கைகளிலும் காது மூக்கிலும் நகைகள் அணிந்து வருகிறார்கள். அதுபோல் வந்த சிலரிடம், 'நீங்கள்தான் வசதியாக இருக்கிறீர்களே மருந்தை காசு கொடுத்து வாங்கிக்கொள்ளக் கூடாதா.?’ என்று கேட்டாராம்.

அடுத்த சனிக்கிழமை அவர்கள் நகைகளையெல்லாம் வீட்டிலேயே வைத்து விட்டு வந்தார்களாம். 'இந்திய நாட்டில் பணக்காரர்கள், பிச்சைக்காரர்களாக இருப்பது வியப்பளிக்கிறது’ என்று சொல்லி சிரித்தார், கேஷோவ்.

மருத்துவமனையை அரசிடம் ஒப்படைத்தது போலவே, 'விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை அரசுத் துறையோடு இணைத்து விடுவது’ என முடிவு செய்தார்கள். அதுவும் நடந்தேறியது.

150 புதுக் கிணறுகள் வெட்டியிருந்தோம். 150 பழைய கிணறுகளை ஆழப்படுத்தி இருந்தோம்.

எல்லா கிணறுகளிலும் மின்சார மோட்டார் அல்லது டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. மொத்தத்தில் முப்பது லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அத்தனை நிலங்களுக்கும் வேளாண் ஆலோசனை இலவசமாகக் கிடைத்து வந்தது. அப்போது அரசுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் அமைதித் தீவு பொறியாளரும் சேர்ந்து கடன் வசூலுக்காக ஊர் ஊராக சென்றார்கள்.

'கடன் தவணை கட்ட முடியவில்லையென்றாலும், நாங்கள் வந்துபோன செலவுக்காவது பணம் கொடுங்கள்’ என உழவர்களை நச்சரித்தார்கள். அதனால், உழவர்களுக்கும் அமைதித் தீவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

அமைதித் தீவு நிர்வாகம், தன்னிடம் இருக்கும் வோளண் கருவிகளை, காசு கொடுப்பவர்களுக்கு மட்டும் வாடகைக்கு அனுப்பி வைத்தது.

இதன் விளைவாக 'புழுதிக்கு அடியில் இருப்பவர்களை கரையேற்றுவது’ என்ற கொள்கை காற்றில் பறக்கத் துவங்கியது. 'பணியாளர்களையும் என்னையும் இணைத்து ஒரு சங்கமாக்குங்கள்’ என்று கேட்டேன். எனது கொள்கை பெல்ஜியத்தில் உள்ள தலைமை நிலையத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

முடிவாக, 'பணியாளர்கள் தங்கள் ஊதியத்தைப் பெருக்குவதில்தான் அக்கறையாக இருப்பார்கள். ஆதலால் பணியில் இல்லாதவர்களைக் கொண்டு ஒரு நிர்வாகக் குழுவை ஏற்படுத்துவது’ என முடிவு செய்தார்கள். 'நிர்வாகக்குழுவில் யார் யாரை சேர்க்கலாம்?’ என்று வான் கம்பர்ட் தேடித்தேடி அலைந்தார். அதன் விளைவு... விபரீதமாக இருந்தது.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism