Published:Updated:

4 சென்டில் மாதம் ரூ.4,000...

சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை !

 என்.சுவாமிநாதன்

 பளிச்... பளிச்...

வண்டல் மண் ஏற்றது.
நாத்துக்கு 25 நாள், அறுவடைக்கு 25 நாள்.
இயற்கைக் கீரைக்கு தனி மவுசு.

ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் சரி, பாரம்பர்ய மருத்துவமாக இருந்தாலும் சரி... ஆரோக்ய வாழ்வுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலில் முதலில் இருப்பது கீரைகள்தான். அதனால்தான் சாப்பிடும் சமயத்தில், 'கீரை வேண்டாம்’ என்று சொல்லும் குழந்தைகளிடம் 'மருந்துனு நினைச்சுக்கிட்டு கொஞ்சமா சாப்பிட்டுக்கோ’ என்று சொல்லி ஊட்டி விடுவது வழக்கம். அந்தளவுக்குப் பயன்களை அளிக்கக் கூடியது கீரை!

4 சென்டில் மாதம் ரூ.4,000...

கீரைகளுக்கு நல்ல தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, தனிப்பயிராகவே சாகுபடி செய்யும் விவசாயிகளும் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில், தொடர்ந்து கீரை சாகுபடி செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம், துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர். இவர் தோவாளை தாலூகா இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.

ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு; ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி; 25 சென்டில் வாழை; இவைகளோடு நான்கு சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார் சேவியர்.

''பூதப்பாண்டி பஞ்சாயத்துல மோட்டார் இயக்குநரா வேலை பாத்துக்கிட்டிருக்கேன். எனக்கு விவசாயமெல்லாம் தெரியாது. விவசாயக் குடும்பத்தைச் சேந்தவனும் இல்ல. ஆனா, விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனால நிலம் வாங்கி விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான். இப்போ கொஞ்சம் கொஞ்சமா இயற்கைக்கு மாறிக்கிட்டிருக்கேன். அதுக்காகவேதான் இயற்கை விவசாயச் சங்கத்துல சேர்ந்தேன். இப்ப, அதுக்கு என்னையே தலைவரா ஆக்கிட்டாங்க.

4 சென்டில் மாதம் ரூ.4,000...

அஞ்சு வருஷமா இயற்கை முறையிலதான் கீரை சாகுபடி செய்யுறேன். வாழையை மட்டும்தான் முழுசா இன்னும் இயற்கைக்கு மாத்தல. கூன்வண்டு தாக்கறதால, பூச்சிக்கொல்லியைக் கொஞ்சம் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். அதுக்கு இயற்கையில என்ன தீர்வுனு விசாரிச்சுக்கிட்டிருக்கேன். சீக்கிரமே வாழையையும் முழுசா இயற்கைக்கு மாத்திடுவேன். தொழுவுரத் தேவைக்காகவும், பாலுக்காகவும் ஒரு கறவை மாட்டை வளர்க்கிறேன்'' என்று தன் கதை சொன்ன சேவியர், நான்கு சென்ட் நிலத்துக்கான கீரை சாகுபடி பாடத்தை ஆரம்பித்தார்.

50 நாளில் அறுவடை!

'சிவப்புக்கீரைக்கு வண்டல் மண் ஏற்றது. கீரைகளுக்குப் பட்டம் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அதேநேரத்தில் பெரிய பராமரிப்பும் தேவைப்படாது. கீரைகளுக்கு பெரும்பாலும் விதைகளை அப்படியே பாத்திகளில் தூவிதான் விதைப்பார்கள். ஆனால், நாற்றுப்பாவி சரியான இடைவெளியில் நாற்று நடவு செய்யும்போது, வளர்ச்சி நன்றாக இருக்கும். சீக்கிரமும் வளர்ந்து விடும். இப்படி செய்யும்போது விதைப்பிலிருந்து 50 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம்.

4 சென்டில் மாதம் ரூ.4,000...

20 சதுரடி பரப்பில் மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழுவுரம் ஆகியவற்றில் தலா

20 கிலோ அளவுக்குப் பரப்ப வேண்டும். அதில் விதைகளைத் தூவி விதைத்து, பூவாளியில் நீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 25ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.

12 அடியில் பாத்தி!

4 சென்ட் நிலத்தை நன்றாகக் கிளறி, 50 கிலோ சாம்பல், 100 கிலோ தொழுவுரம், 1 கிலோ பொடித்த கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும். பிறகு, 12 அடி நீளம் இரண்டரை அடி அகலத்துக்குப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி (வாய்க்கால்) இருக்க வேண்டும்.

ஏழு அங்குலம் இடைவெளி!

4 சென்டில் மாதம் ரூ.4,000...

ஒவ்வொரு பாத்தியிலும் கீரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி ஏழு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். கீரைக்குத் தண்ணீர் மிகவும் அவசியம் என்பதால், செழும்பாக தண்ணீர் கட்ட வேண்டும். நடவு செய்த 7- ம் நாள் 250 மில்லி மீன் அமிலக்கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மீன் கழுவியத் தண்ணீரை ஒரு நாள் அப்படியே வைத்திருந்து, மறுநாள் சரி பங்கு தண்ணீர் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும் (கன்னியாகுமரி பகுதியில் மீன் பிரதானமான உணவு என்பதால், மீன்களைக் கழுவிய தண்ணீரை இவர் இடுபொருளாகப் பயன்படுத்துகிறார். அனைவருக்கும் இது சாத்தியமில்லாத விஷயம் என்பதால், பதினைந்து நாட்களுக்கொரு முறை மீன் அமிலத்தைத் தெளித்துக் கொள்ளலாம்).

நடவு செய்த 15-ம் நாள் மூலிகைப் பூச்சிவிரட்டி (பார்க்க, பெட்டிச் செய்தி) தெளித்தால்... பூச்சிகள் அண்டாது. இவற்றை மட்டும் செய்தாலே போதும், நாற்று நடவு செய்த இருபத்தைந்து நாட்களில் கீரை அறுவடைக்குத் தயாராகி விடும். ’

சாகுபடிப் பாடத்தை முடித்த சேவியர் தொடர்ந்து, ''நாலு சென்ட் நிலத்துல குறைச்சு வெச்சாலும் 1,000 கட்டு கீரை கிடைக்கும். ஒரு கட்டு ஆறு ரூபாய்க்கு விற்பனையாகுது. திட்டுவிளை சந்தையிலதான் கீரையை வித்துக்கிட்டிருக்கேன். விதைச்சு நாத்து வளர்றதுக்கு 25 நாள், நாத்து நடவு செஞ்சப்பறம் கீரை அறுவடைக்கு 25 நாள்ங்கிறதால, நாத்துப்பாவுறதுக்கு தனியா இடம் ஒதுக்கி வெச்சுக்கணும். நாத்தை எடுத்து நட்ட உடனேயே அடுத்த நடவுக்கு நாத்து பாவி விட்டுட்டா தொடர்ந்து மாசா மாசம் கீரை அறுவடை பண்ணி வருமானம் பாக்க முடியும்.'' என்றார் உற்சாகமாக.

கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வாழைத் தண்டு!

 

4 சென்டில் மாதம் ரூ.4,000...

வாழையில் கூன்வண்டுக்காக ரசாயனப் பூச்சிக்கொல்லியை சேவியர் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அற்கான இயற்கைத் தீர்வையும் தேடி வருவதாகச் சொல்லியிருந்தார். கன்னியாகுமரிப் பகுதியில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் கிளாட்சன் ராபின், இந்த கூன்வண்டுகளுக்காக இயற்கைத் தீர்வைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார். அந்தத் தொழில்நுட்பத்தை, அலைபேசி மூலம் உடனடியாக சேவியருக்குத் தெரிவிக்கச் சொன்னோம். அப்படியே செய்தார் ராபின். அவர் சொன்ன தீர்வு-

''கூன்வண்டு, வாழையின் தண்டைத் துளைத்து விடுவதால், தண்டுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் காய் பெருக்காமல் போய் விடும். இவ்வண்டைக் கட்டுப்படுத்த பெரும்பாலானோர் ரசாயனப் பூச்சிக்கொல்லியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அந்த ரசாயன விஷத்தின் எச்சம், இரண்டு மாதம் வரை மரத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் கண்டிப்பாக காய்களிலும் விஷத்தன்மை இருக்கத்தான் செய்யும்.இதைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் எளிமையான தீர்வு இருக்கிறது. கூன்வண்டு பொதுவாக தோட்டம் முழுவதும் உள்ள அனைத்து மரங்களையும் ஒரே நேரத்தில் தாக்காது. அவை தாக்கிய மரங்களில் பழுப்பு நிற பிசின் வெளி வரும். அந்த மரங்களைக் கண்டறிந்து தோட்டத்தை விட்டே அப்புறப்படுத்தி விட வேண்டும்.

அடுத்து, வழக்கமாக அறுவடை செய்யும் வாழை மரத்தின் தண்டுகளை, இரண்டடி நீளத் துண்டுகளாக வெட்டி, இரண்டாகப் பிளந்து வாழைத் தோட்டத்துக்குள் ஆங்காங்கு போடவேண்டும். அவற்றின் மீது, காய்ந்த வாழை இலைகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு இரண்டு வாழை மரங்களை வெட்டிப் போட்டாலே போதுமானது. இப்படிப் போடப்படும் தண்டின் வாசனையில் ஈர்க்கப்படும் கூன்வண்டுகள், இவற்றில் வந்து தஞ்சம் புகும். அவை மொத்தமாக சேர்ந்தபிறகு, அப்படியே அவற்றை நாம் அழித்து விடலாம். இந்த வண்டுகள் விளக்குப்பொறியில் சிக்காது. ஆனால், வாழைத் தண்டுகளில் சிக்கி விடும். இது எனது அனுபவத்தில் உணர்ந்த உண்மை.''

தொடர்புக்கு, கிளாட்சன் ராபின், அலைபேசி: 9443126060.

 மூலிகைப் பூச்சிவிரட்டி!

ஆடாதொடை இலை, நொச்சி இலை, எருக்கு இலை, வேப்பிலை... போன்றவற்றை சமபங்கு எடுத்துக் கொண்டு, அவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச்சிறுநீரைச் சேர்த்து 90 நாட்கள் ஊறவைத்தால், இயற்கை மூலிகைப் பூச்சிவிரட்டி தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற அளவுக்குக் கலந்து பயன்படுத்தலாம். புகையிலை, கருந்துளசி ஆகியவற்றைச் சேர்த்தால் இன்னும் வீரியம் கூடும். 90 நாட்கள் வரை பொறுத்திருக்க முடியாது என்றால், இந்த இலைகளை வேகவைத்தோ அல்லது இடித்துச் சாறு எடுத்தோ உடனடியாகப்  பயன்படுத்தலாம்.

 தொடர்புக்கு : சேவியர், அலைபேசி: 9789637500.

அடுத்த கட்டுரைக்கு