லாபத்தைப் பெருக்கும் லட்டு தொடர்!

##~##

பழங்கள் மற்றும் காய்கறிகளை சூரிய உதயத்துக்கு முன்பே அறுவடை செய்தல், நிழலில் பரப்பி வைத்தல், குளிர்ந்த நீரில் கழுவுதல், தரம் பிரித்தல் உள்ளிட்டவைகளின் அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் இதுவரை பார்த்தோம். காய்கறி, பழங்கள் மீது மெழுகு பூசுதல், வீடு மற்றும் பண்ணைகளிலேயே மிக எளிய  முறையில் இவற்றின் வாழ்நாளை அதிகப்படுத்தும் முறைகள், போக்குவரத்தின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்... உள்ளிட்ட இன்னும் சில முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே சொல்லப் போகிறேன்.

நாம் அறுவடை செய்த காய்கறி மற்றும் பழங்களில் பெரும்பாலானவை நல்ல நிலையில் இருக்கும். இவற்றோடு அடிபட்ட மற்றும் சிறு கீறல் உள்ள காய்கறி, பழங்கள் சேர்ந்திருக்கும் பட்சத்தில், அது மற்றவற்றையும் பாதிப்படையச் செய்யும். எனவே சிறு கீறல், அடிபட்டவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.

பொதுவாகவே, காய்கறி, பழங்களை தரையில் போட்டு வைக்கக் கூடாது. என்னதான் சுத்தம் செய்யப்பட்ட தரையாக இருந்தாலும், கண்டிப்பாக பாதிப்பை உண்டாக்கும். சுத்தமான துணி அல்லது சாக்குப் பைகளை விரித்து அவற்றின் மீதுதான் விளைபொருட்களைப் பரப்ப வேண்டும்.

காய்கறி, பழங்களின் சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் வாழ்நாளை அதிகப்படுத்த முடியும். இதற்கு மெழுகு பூசும் தொழில்நுட்பம் மிகவும் உறுதுணையாக இருக்கும். மெழுகு பூசுவதால் பிராண வாயுவின் நேரடித் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு... பழுக்கும் தன்மை குறைந்து நீண்ட நாட்களுக்கு அவை  தரமாகவே இருக்கும். பார்ப்பதற்கும் பளபளப்பாக இருக்கும். இதற்கென்றே பிரத்யேகமான மெழுகுகள் இருக்கின்றன. இவை ரசாயனம் அல்ல.

இவை, எண்ணெய் சுத்திகரிப்பின் மூலமாகவும் மரங்களில் இருந்தும் எடுக்கப்படக்கூடியவை. மெழுகு பூசும் தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது. செலவும் குறைவானது. உதாரணமாக, ஒரு கிலோ மாம்பழத்துக்கு மெழுகு பூச அதிகபட்சம் ஒரு ரூபாய்தான் செலவாகும். அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சந்தை மதிப்பை அதிகப்படுத்தலாம்.

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

எங்களுடைய இந்திய பயிர்பதன தொழில்நுட்பக் கழகத்தில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதிக வெப்பத்தைக் குறைத்து ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலமாகவும் காய்கறி, பழங்களின் வாழ்நாளை அதிகரிக்கலாம். இவற்றை சேமித்து வைக்கும் அறைகளில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும். அதேநேரத்தில், ஈரப்பதம் இல்லாத உலர்ந்தக் காற்று, காய்கறி, பழங்களின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜன்னல் மற்றும் கதவுகளில் ஈரமான சாக்குப் பைகள் அல்லது துணிகளைத் தொங்க விட்டு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரலாம். காற்றின் ஈரப்பதம் அதிகமாவதால், காய்கறி, பழங்களின் ஈரப்பத இழப்பு குறைந்து வாழ்நாள் அதிகமாகும்.

விளைபொருட்களை இடம் மாற்றும்போதும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சாக்குப்பைகளிலோ, துணிப்பைகளிலோ போட்டு கட்டி வைக்கக் கூடாது.

காய்கறி, பழங்கள் கொண்டு செல்வதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமுள்ள பிளாஸ்டிக் பெட்டிகள் அல்லது மரத்தாலான பெட்டிகளில்தான் வைக்க வேண்டும். ஒரு பெட்டியில் 10 கிலோ முதல் 12 கிலோ வரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்து அடுக்கினால் பாரம் தாங்காமல் கீழுள்ள பழங்கள் நசுங்கும்.

பெட்டிகள் ஒரே சீரான அளவிலும், ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கும்போது கீழ் பெட்டியில் உள்ள பழங்களை அழுத்தாதவாறும் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல,குளிர்பதனக் கிடங்குகள் விவசாயிகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். வெளிநாடுகளில் மிக அதிக அளவில் குளிர்பதனக் கிடங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் இது இன்னும் பரவலாகவில்லை.

'காய்கறி மற்றும் பழங்கள் குறைந்த வெப்பநிலையில் குறைவாக சுவாசித்து, மெதுவாக முதிர்ச்சி அடைகின்றன’, என்ற அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் குளிர்பதனக் கிடங்குகள் இயங்குகின்றன.

தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்ப சூழலில்... அறுவடை செய்யப்பட்ட காய்கறி, பழங்களில் 35 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருக்கும். ஆகையால், உடனே குளிர்பதனக் கிடங்கில் வைக்கக்கூடாது. 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிக்கப்படும் குளிர்பதனக் கிடங்கில் இவற்றை வைக்கும்போது விளைபொருட்களின் வெப்பநிலை குறைவதற்கு நீண்ட நேரம் ஆகும்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் காய்கறி மற்றும் பழங்களின் தரம் வெகுவாக குறைய வாய்ப்புண்டு. தவிர, மின்சாரமும் விரயமாகும். இதனைத் தவிர்க்க, முன் குளிர்வித்தல் முறையில் குளிர்ந்தக் காற்றை, காய்கறி மற்றும் பழங்கள் மீது செலுத்தி வெப்பத்தைக் குறைக்கவும் பிரத்யேகமான நவீனக் கருவிகள் உள்ளன. குளிர்பதனக் கிடங்குகளில் ஒவ்வொரு வகை விளைபொருளுக்கும் தேவையான வெப்பநிலை, எவ்வளவு நாட்கள் குளிர் நிலையில் பாதுகாக்க முடியும் போன்ற தகவல்களைப்பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

-மதிப்புக் கூடும்...