Published:Updated:

தென்னந்தோப்புக்குள் மேய்ச்சல் நிலம்... தெளிப்புநீர் தந்த தெம்பான வரம்!

ஜி. பழனிச்சாமி படங்கள்: க. ரமேஷ்

தென்னையில் மகசூல் கூடும்...

தீவனப்புல் தானே பெருகும்...

கரையான், செங்குளவி, எறும்புகள் காணாமல் போகும்...

கால்நடைகளின் சாணியும், மூத்திரமும் தென்னைக்கு உரமாகும்...

உயிர்வேலியில் படரும் மருந்துச் செடிகள் கால்நடைகளைக் காக்கும்...

பறவைகள் நாடி வருவதால்... பூச்சிகள் ஓடியே போகும்!

##~##

முற்காலங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் பொதுவாக ஏக்கர் கணக்கில் மேய்ச்சல் நிலங்கள் இருக்கும். அதனால், கால்நடை வளர்ப்போர் கவலையில்லாமல் இருப்பார்கள். அதனால், விவசாயத்தில் இயற்கை ஊட்டங்களுக்கும் குறைவில்லாமல் இருந்தது. பயிர் வாரி முறையில் மாற்றம் ஏற்பட்டதால், மேய்ச்சல் நிலங்களின் பரப்பு குறையக்குறைய கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து... ரசாயன விவசாயம் காலூன்றி விட்டது. இந்நிலையில், தென்னந்தோப்பையே தனது பாசனக்கருவி மூலம் மேய்ச்சல் நிலமாக மாற்றி, கால்நடைகளை வளர்த்து வருகிறார், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பக்கமுள்ள பெருமாள்மலை கிராமத்தைச் சேர்ந்த ப.சதாசிவம்.

சுட்டெரிக்கும் பங்குனி வெயில், கருக்கி எடுக்கும் கனல் காற்று எல்லாம் வெளியில் கடுப்பேற்றிக் கொண்டிருக்க... சதாசிவத்தின் 4 ஏக்கர் தென்னந்தோப்புக்குள் கால் வைத்தால்... அத்தனைக் கடுப்பும் மாயமாகி, மனதையும் உடலையும் ஆட்கொண்டுவிடுகிறது குளுமை! வரவேற்றுப் பேசினார், சதாசிவம்.

'இந்த ஊர்லதான் நாங்க பரம்பரையா விவசாயம் பாக்குறோம். நான் அரசு பஸ்ல கண்டக்டரா வேலை செஞ்சுக்கிட்டே விவசாயமும் பாத்துக்கிட்டுருக்கேன். இந்தப்பகுதியில நல்ல செம்மண் பூமி. முன்னாடி கேழ்வரகு, கம்பு, சோளம்னு மானாவாரி வெள்ளாமைதான் பண்ணுவோம். நிலத்தை சுத்தி கிளுவையை உயிர்வேலியா போட்டிருப்போம். அதுல, கோவை, பிரண்டை படர்ந்திருக்கும்.

வெள்ளாமை இல்லாத காலங்கள்ல கொழுக்கட்டைப் புல் முளைச்சுக் கிடக்கும். அதுலதான் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவோம். அப்பறம் அவங்கவங்க வசதிக்குத் தக்குனபடி போர்வெல், கிணறுனு தோண்டி விவசாயம் பாக்க ஆரம்பிச்ச பிறகு, மேய்ச்சல் நிலமெல்லாம் குறைஞ்சு போச்சு. அவ்வளவு பேரும் தண்ணி எடுக்க எடுக்க... நிலத்தடி நீர் குறைஞ்சு... நெல் வயலெல்லாம் தென்னந்தோப்பா மாறிடுச்சு.

தென்னந்தோப்புக்குள் மேய்ச்சல் நிலம்... தெளிப்புநீர் தந்த தெம்பான வரம்!

நானும், நாலு ஏக்கர்ல 25 அடி இடைவெளியில குட்டை-நெட்டை ரக தென்னையை நடவு செஞ்சேன். 17 வருஷமாயிடுச்சு. இன்னமும் பலன் தந்துக்கிட்டிருக்கு. ஆரம்பத்துல, வாய்க்கால் பாசனம் பண்ணிட்டு இருந்தேன். அப்போ 24 மணி நேரமும் கரன்ட் கிடைக்கும். இப்போ கரன்டும் இல்லை. கிணத்துல தண்ணியும் குறைஞ்சுடுச்சு. அப்பறம் போர்வெல் போட்டு சொட்டுநீர் அமைச்சேன்.

தென்னையை சமாளிச்சுட்டாலும், 'கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமில்லையே’ங்கிற கவலை மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு. அந்த சமயத்துல ஸ்ப்ரிங்ளர் (தெளிப்புநீர்ப் பாசனம்) பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். இதை தென்னந்தோப்புக்குள்ள அமைச்சுட்டா... மேய்ச்சலுக்கு புல் முளைக்கும்னு தோணுச்சு'' என்ற சதாசிவம், அதை உடனடியாக நிறைவேற்றியும் இருக்கிறார்.

''நாலு ஏக்கர்லயும் ஸ்ப்ரிங்ளர் போட்டுட்டு தோப்பை ரெண்டாப் பிரிச்சுட்டேன். அதுல 2 ஏக்கர்ல மட்டும் கோ-3 தீவனபுல்லைப் போட்டுட்டு இன்னொரு 2 ஏக்கரை அப்படியே விட்டுட்டேன். தண்ணி பாய்ச்ச ஆரம்பிச்சதும் இந்த நிலத்துல தானாவே புல், மத்த செடிங்கள்லாம் முளைக்க ஆரம்பிச்சுது. மேல் மழை மாதிரி தண்ணி கிடைக்கிறதால, பசுந்தீவனமும் நல்லா வளருது. தென்னைக்கும் தனியா தண்ணி விட வேண்டிய அவசியமில்லை.

தென்னந்தோப்புக்குள் மேய்ச்சல் நிலம்... தெளிப்புநீர் தந்த தெம்பான வரம்!

ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளியில 25 குழாய்கள் இருக்கு. ரெண்டு மணி நேரம் ஓட்டுனா... ஒரு ஏக்கருக்கு செழிம்பா தண்ணி கிடைச்சுடுது. ஒரு குழாய்ல இருந்து, 30 அடி தூரத்துக்கு தண்ணி பீய்ச்சி அடிக்குது. அதனால், நாலு ஏக்கர்லயும் ஒரு இடம் பாக்கி இல்லாம நனைஞ்சுடுது.

நான் போட்டப்போ ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு ஆச்சு. இப்போ தென்னையில மகசூல் கூடியிருக்கு. தீவனத்துக்கும் பஞ்சமில்லாம போயிடுச்சு'' என்று பெருமிதமாகச் சொன்ன சதாசிவம், அடுத்து எடுத்து வைத்த தகவல்கள்... ஆச்சரியமூட்டும் 'ஜீரோ பட்ஜெட்' சங்கதிகளே!

''மரங்கள்ல பாதி உயரத்துக்கு தண்ணி அடிக்கிறதால, கரையான், செங்குளவி, எறும்பு மாதிரியான பூச்சிகளும் மரத்துல ஏற முடியறதில்ல. இத்தனைக் கடுமையான கோடையிலயும் என் மாடுகளுக்கு தீவனத்துக்கும் பஞ்சமில்லை. மேய்ச்சலுக்கும் பஞ்சமில்லை. மேயும்போதே சாணியும், மூத்திரமும் மண்ல விழுந்து மண்ணும் வளமாகிடுது. அதனால, தென்னைக்கு உரமே வைக்கறதில்லை.

தோப்பைச் சுத்தி இருக்குற உயிர்வேலிக்கும் தண்ணி கிடைச்சுடறதால அதுலயும் பலவிதமான செடிகொடிகள் படருது. அதுல மருத்துவ குணம் இருக்குற செடிகள் இருக்கறதால, அதைச் சாப்பிடற கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைச்சுடுது.

இந்தச் செடிகள்ல பலவித பறவைகள் வந்து உட்கார்றதால தோப்புக்குள்ள பூச்சித்தொல்லையும் இருக்கறதில்லை'' என்று அழகாக அடுக்கிய சதாசிவம்,

''இப்போதைக்கு இந்த ஸ்ப்ரிங்ளர் இருக்கறதாலதான் என்னோட கண்டக்டர் வேலையையும் பாத்துக்கிட்டு... விவசாயத்தையும் வெற்றிகரமா பார்க்க முடியுது'' என்று சொல்ல...

தெளிப்புநீரின் வேகத்தில் ஆடிய தீவனப்புற்கள், அதை தலையசைத்து ஆமோதித்தன!

அடுத்த கட்டுரைக்கு