Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

சூது கவ்விய களக்காடு...வரவேற்பு சொன்ன தர்மபுரி !ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

சூது கவ்விய களக்காடு...வரவேற்பு சொன்ன தர்மபுரி !ஓவியம்: ஹரன்

Published:Updated:

நம்மாழ்வார்

##~##

'பணியில் இல்லாதவர்களைக் கொண்டு நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும்' என்ற முடிவு செய்யப்பட்டதால்... இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் ஒரு பெரிய பண்ணையாரும் நிர்வாகக் குழுவில் இணைக்கப்பட்டார்கள். மற்ற அனைவரும் உறுப்பினர்கள் என்று மாற்றப்பட்டதால்... அனைவரும் செயலிழந்து நின்றார்கள். அதில், ஊராட்சித் தலைவர் பெருமாள், வடகரை இளைஞர் சுப்பையா ஆகியோரும் அடக்கம். சங்கம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப்போய் விடாதபடி விதிமுறைகளைத் தயாரித்துக் கொண்டார்கள், அந்த வழக்கறிஞர்கள். தலைமைப் பொறுப்பு... பெல்ஜியம் நாட்டு இயக்குநரிடமும் இருந்தது. பணியாளர்களின் பிரதிநிதியாக எனக்கு செயலாளர் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தந்தை டொமினிக் பியருடைய சிந்தனை மிகவும் உயர்வானது. 'ஒரு நாட்டில் நுழையும்போதே எப்போது வெளியேறுகிறோம் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அதன்படியே அவர்கள் வெளியேறினார்கள். ஆனால், இந்தியர்களே நாட்டு மக்களுக்கு அந்நியமாகிப் போனது வருத்தத்துக்குரியது.

சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த களக்காடு பகுதி தலைவர் ஒருவர், புதிய நிர்வாகத்துடன் ஒட்டிக் கொண்டு விட்டார். அனைத்து வகை ஒழுங்கீனங்களுக்கும் அவர் பெயர் போனவர்.

'அந்தத் தலைவர் உன் மீது பொறாமை கொண்டிருக்கிறார். உன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று என்னிடம் சொன்னார்.

நான் கொடுக்கும் ஊதியத்துக்கு காலை எட்டு மணியிலிருந்து மாலை 4 மணி வரை நம்மாழ்வார் வேலை செய்கிறார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனாலும், எனக்குக் கவலை இல்லை என்று சொல்லியிருக்கிறேன். அவரிடம் எச்சரிக்கையாக இரு. உனக்கு அவரால் ஆபத்து வரக்கூடும்’ என்று வான் கம்பர்ட் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அவரின் துல்லியமானப் பார்வை, எனக்கு நிம்மதியைக் கொடுத்தது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

புதிய செயற்குழு வந்த பிறகு, உள்ளூர் தலைவர் தனது சகுனித்தனத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

புதிய தலைமை, உள்ளூர் தலைவரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று முணுமுணுக்கத் தொடங்கியது. அதோடு, 'பெல்ஜியம் குழுவைப் பற்றி இனி பேசக்கூடாது. நாங்கள் படியளக்கிறோம், நாங்கள் சொன்னபடிதான் செயல்படவேண்டும்’ என்றும் சொல்லி எனக்கு எரிச்சலை மூட்டினார்கள்.

பணியாளர்களுக்கும் செயற்குழுவுக்கும் இடையில் கசப்பு வளர்ந்தது. வெளிநாட்டிலிருந்து தலைவர் வந்தபோது ஒரு நாடகத்தை நடத்தி திருப்பியனுப்பினார்கள். வெளிநாட்டிலிருந்தபடி நிர்வாகத்தை சீரமைக்க முடியாது என்று தெரிந்து கொண்ட தலைமை, சென்னை வந்து உயர் நீதிமன்ற வழக்கறிஞரைச் சந்தித்தது.

தலைமைப் பொறுப்புக்கு நெல்லையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரை அவர் பரிந்துரை செய்தார். அதுவரை தலைவருக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே நடந்து வந்த யுத்தம்... வழக்காக மாறி அம்பாசமுத்திரம் நீதிமன்றத்துக்கு அலைந்தோம். வழக்கை நடத்த விடாமல் வழக்கறிஞர்கள் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தார்கள். வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறியது. அங்கும் இதுவே தொடர்ந்தது.

இதற்கிடையில் மையத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால், பணியாளர் களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போனது. நாங்கள் கடன்பட்டோம்.

'அமைதித்தீவு'க்குச் சொந்தமான துளைக்கும் கருவிகள், தலைவர் (ஆலை முதலாளி) தோட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. 'எல்லாம் வல்லவர்' என்று பெயர் பெற்ற அவர், அமைதித்தீவு முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர முனைந்தார். 'வடகரை’ சுப்பையா பெயரில் போடப்பட்ட வழக்கு, அதைத் தடுத்து நிறுத்தியது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

பெல்ஜியம் நாட்டுத் தலைவர் அமைதித் தீவு வந்தபோது, களக்காடு ஒன்றியம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, 'ஆலை முதலாளியிடம் ஒப்படைக்க வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார்கள். ஒரு ஏழை விவசாயியான சுப்பையா எடுத்த முயற்சி காரணமாக, தான் தோற்றுப் போனதை ஆலை முதலாளியால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

என் தலைக்கும்... சுப்பையாவின் தலைக்கும் விலை வைக்கப்பட்டது. நாங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. காரணம், களக்காடு ஒன்றிய அளவில் நான் பலரும் அறிந்த பணியாளனாகியிருந்தேன். எனினும் நல்லாசிரியர் சம்பந்தம், விவசாயிகள் சங்கத் தலைவர் நடராஜன், 'சிதம்பரப்பட்டி’ கருணாகரன், இளைஞரணித் தலைவர் முத்துகிருஷ்ணன், 'மஞ்சள்பட்டி’ சண்முகவேல், காவல்துறை ஆய்வாளர் மாயாண்டி பாரதி, வனவர் மாடப்பன் மற்றும் வடகரை மக்கள் என்னை நிழல் போலத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்தார்கள்.

சிக்கல் உச்சத்தில் இருந்தபோது கல்வியாளர் பொன்னீலனை சந்திக்க நேர்ந்தது. 'நிலைமை எப்படியிருக்கிறது?' என்று விசாரித்தார்.

'நம்மைப் பற்றி நிறைய அவதூறுகளை வாரியிறைக்கிறார்கள்’ என்று சொன்னேன்.

'நமது எதிரி நம்மைப் பற்றி தவறாகப் பேசினால்... நாம் சரியாக இருக்கிறோம் என்று பொருள்’ என்று சொன்னார் பொன்னீலன்!

அடுத்ததாக எஸ்.எஸ். தியாகராஜனை சந்திக்க நேர்ந்தது. 'இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு முதலாளித்துவ தேசத்தில், ஓர் ஒன்றியத்தில் மட்டும் சோஷலிசத்தைக் கொண்டு வருவது சாத்தியமில்லைதானே!’ என்றார்.

அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரி முதல்வரைச் சந்தித்தபோது, 'என்ன நம்மாழ்வாரே! இங்கு அலைகிறீர்கள்?’ என்று கேட்டார்.

வழக்கறிஞர்கள், நீதிமன்றம் குறித்தெல்லாம் அவரிடம் பேசினேன். 'இது அவர்களது தொழில், நீங்கள் எதற்கு வாழ்நாளை வீணாக்க வேண்டும். தூக்கியெறிந்துவிட்டு வேறு வேலைகளைப் பாருங்கள்’ என்றார்!

இந்த நண்பர்கள் எல்லாம் பாளையங்கோட்டையில் நாட்டாரியல் இலக்கியத்தின் தந்தை நா. வானமாமலை தலைமையின் கீழ் செயல்பட்ட ஆராய்ச்சிக்குழு உறுப்பினர்கள். அது, தூத்துக்குடி விரிவுரையாளர் சுப்பிரமணியம், ஆழ்வார்குறிச்சி பேராசிரியர் தோத்தாத்ரி, நாகர்கோவில் பேராசிரியர் செந்தி, கடையம் எழுத்தாளர் கோடங்கால் கிருஷ்ணன், மனோன்மணியம் பல்கலைக்கழகப் பேராசிரியர் தொ.மு.பரமசிவம் என வளையம் விரிந்து பரந்து கிடந்தது.

ஆதலால், அமைதித்தீவில் ஏற்பட்ட சிக்கல்களை விளங்கிக் கொள்ளவும்... அதிலிருந்து விலகிக் கொள்ளவும் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நேரத்தில் ஸ்டான்லி முக்கட் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆக்ஸ்ஃபார்ம் (ளிஜ் யீணீக்ஷீனீ) கள இயக்குநரான அவர், அமைதித்தீவு நிலவரம் குறித்து கேட்டறிந்த பிறகு, 'என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

'ஏதாவது ஒரு வழக்கில் தீர்ப்பு வரும்போது நிலைமை சீரடையலாம்’ என்றேன்.

'கீழ் கோர்ட்டில் தோற்றவர், மேல் கோர்ட் போவார்தானே. அங்கே தோற்றவர் அதற்கும் மேல் கோர்ட் போவார்தானே. ஆதலால், நீதிமன்றம் தீர்வு தரமுடியாதுதானே’ என்று யோசிக்க வைத்தார்.

'என்ன செய்யலாம்..?’ என்றேன்.

'மற்றவர்கள் உங்கள் மேல் தேவையில்லாமல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் இந்த இடத்தைவிட்டு நகர்ந்தால்... பிரச்னையை பிரச்னையே பார்த்துக் கொள்ளும்’ என்று புதுமையான கருத்தொன்றைச் சொன்னார்.

'எங்கு நகர்வது?’ என்றேன்.

'தர்மபுரி மலையில் மிகவும் துன்பப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அங்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது’ என்றார்.

ஸ்டான்லி முக்கட் யோசனைப்படி யாருக்கும் தெரிவிக்காமல்... தர்மபுரி மலைக்கு (தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம்) நகர்வது என்று முடிவு செய்தேன்!

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism