Published:Updated:

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

காசி. வேம்பையன் படங்கள்: தே. சிலம்பரசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

செயற்கைச் சாயங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்திலும் ஒவியங்கள்... துணிகள் ஆகியவற்றில் பலவித வண்ணங்களைப் பயன்படுத்தி வந்தார்கள் நம்முன்னோர்கள். இதைத்தான் ஆதாரப்பூர்வமாக இன்றைக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன, சித்தன்னவாசல், தஞ்சாவூர் போன்ற வரலாற்றுச் சின்னங்களில் உள்ள மூலிகை ஓவியங்கள். அப்படி வண்ணமேற்றும் பலவித மூலிகைகளில் ஒன்றுதான் அவுரி.

வெள்ளையர்களிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்தபோது, அவர்களின் சாயத் தேவைக்காக அவுரியை சாகுபடி செய்யச் சொல்லி, நம் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள், வெள்ளையர்கள். ஒரு கட்டத்தில் அதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் பெருமளவில் வெடித்தது. இதைத்தான் 'அவுரி போராட்டம்’ என்கிறது, வரலாறு.

இப்படி வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கும் அவுரி, தற்போது இந்தியாவில் வெகு சில இடங்களில் மட்டும்தான் சாகுபடி செய்யப்படுகிறது.

குறைந்த செலவில், அதிகப் பராமரிப்புத் தேவைப்படாமல் வளர்த்தெடுக்கக் கூடிய பயிர்களில் ஒன்றான இந்த அவுரி... விழுப்புரம் மாவட்டம், பேரணி கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் வயலில் தற்போது சலசலத்துக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் வறண்டு கிடக்கும் நிலங்களுக்கு இடையில்... தேவநாதனின் தோட்டத்தில் பசுமைக் கட்டி நிற்கின்றன, அவுரிச் செடிகள்.

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

ஆடு மாடுகளால் பாதிப்பில்லை !

''பத்தாவதுவரைக்கும் படிச்சிட்டு, விவசாயம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, ஏழு ஏக்கர்ல அவுரி சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கேன். மத்த இடங்கள்ல கரும்பு, கடலை, நெல், மா, தேக்கு இருக்கு.

எங்க தாத்தா அவுரி சாகுபடி செஞ்சிருக்கார். அப்பாதான் லாபமில்லைனு சொல்லி, அவுரி சாகுபடியை விட்டுட்டாங்க. அதனால எனக்கு இது புதுசில்லை. இப்போ, ஒரு நண்பர் மூலமா உத்தரவாதமான விலை கிடைக்க ஆரம்பிச்ச பிறகு, 10 வருஷமா அவுரியை சாகுபடி செய்றேன். இதுக்குப் பெரிய அளவுல தண்ணி, உரம் தேவையில்லை. ஆடு, மாடுகளும் மேயாது. பெருசா கவனிப்பு இல்லாமயே, நல்ல வருமானம் கொடுக்குது.

நெல் அறுவடைக்குப் பிறகு கூட அவுரியைப் பயிர் செய்யலாம். எள், கரும்புக்கு ஊடுபயிராவும் செய்யலாம்'' என்று முன்னுரை கொடுத்த தேவநாதன், அவுரி சாகுபடி செய்யும் வித்தையைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஏக்கருக்கு 7 கிலோ விதை !

அவுரியின் வயது ஓராண்டு. எல்லா மண்ணுக்கும் ஏற்றது. என்றாலும், செம்மண் மற்றும் மணல் பாங்கான நிலங்களில் சிறப்பாக வளரும். கார்த்திகை மாதம் முதல் ஆடி மாதம் வரை விதைக்கலாம். கார்த்திகைப் பட்டத்தில் விதைத்தால், மூன்று முதல் நான்கு முறை அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த பட்டங்களில் விதைத்தால் இரண்டு அறுவடைகள் வரை செய்யலாம்.

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

சாகுபடி நிலத்தில் 5 டிராக்டர் எருவை கொட்டிக் களைத்துவிட்டு, மூன்று முறை உழுது, மண்ணைப் புட்டு பதத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, ஏக்கருக்கு ஏழு கிலோ அவுரி விதைகளை, உளுந்து விதைப்பது போல, உழுதுகொண்டே விதைக்க வேண்டும்.

விதைத்த 7-ம் நாளில் விதைகள் முளைப்பு எடுத்து விடும். 35-ம் நாளில் களை எடுத்துவிட்டு, 40-ம் நாளில் முதல் பாசனம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் மழை பெய்தால் பாசனம் தேவையில்லை. அதற்குப் பிறகு ஈரப்பதத்தைப் பொருத்து, 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினால் போதும். பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. தண்ணீர் கட்டுவதைத் தவிர, வேறு எந்தவித பண்டுதமும் பார்க்கத் தேவையில்லை.

120-ம் நாளில் அறுவடை!

70 முதல் 90 நாட்களில் அவுரி 2 முதல் 3 அடி உயரத்துக்கு வளர்ந்து, பூவெடுக்க ஆரம்பித்து விடும். 120-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம். தரையில் இருந்து அரையடி உயரம் விட்டு செடியை அறுவடை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு 60 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று அறுவடைகள் வரை செய்யலாம்.

மறுதாம்புவிடும் போது, கரும்புக்கு இடை உழவு செய்வது போல அவுரித் தூர்களுக்கு இடையில் இடை உழவு செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி நன்றாக இருக்கும். மறுதாம்புப் பயிருக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் மட்டும் செய்தால் போதும்.

42 ஆயிரம் வருமானம்!

சாகுபடிப் பாடம் முடித்த தேவநாதன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

''ஒரு ஏக்கர்ல இருந்து ஒரு அறுவடைக்கு ரெண்டு டன் தழை கிடைக்கும். குறைஞ்சது மூணு அறுவடைனு வெச்சுகிட்டாலும், 6 டன் தழை கிடைக்கும். ஒரு டன் தழைக்கு 5 ஆயிரம் ரூபாய்ல இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை சந்தை நிலவரத்தைப் பொருத்து விலை கிடைக்கும். சராசரியா 7 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டா... 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதில் உழவு, விதை, எரு, தண்ணி கட்டுற செலவுனு 10 ஆயிரம் ரூபாய் போனாலும் (அறுவடை, போக்குவரத்துச் செலவுகள் வியாபாரியைச் சேர்ந்தது) 32 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்'' என்றார் சந்தோஷம் மிளிர.

 தொடர்புக்கு,
தேவநாதன், செல்போன்:98426-22728.
சரவணன், செல்போன்:94432-35127
மூலிகையியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
தொலைபேசி: 0422-6611365.

 ஒரு அறுவடைக்கு

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

10 ஆயிரம்!

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

அவுரி இலைகளை ஒப்பந்த முறையில் வாங்கி, விற்பனை செய்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், கொங்கராப்பட்டைச் சேர்ந்த சரவணன். ''எங்க குடும்பத்துல அவுரி சாகுபடி, அதுல இருந்து நீலம் எடுக்குற வேலையை மூணாவது தலைமுறையா செஞ்சுக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டுல விழுப்புரம், கடலூர் மாவட்டத்துல கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர்ல அவுரி சாகுபடி நடக்குது. ஜப்பான், கொரியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்ல இயற்கையான நீல நிறத்துக்கும், தலைச்சாயத்துக்கும் அதிகத் தேவை இருக்கு. காய வெச்ச அவுரி இலைகள், அவுரிப் பவுடர், நீலச் சாயக்கட்டிகளை ஏற்றுமதி செய்றோம். விவசாயிங்ககிட்ட ஓப்பந்த முறையிலும், ஒப்பந்தம் இல்லாமலும், அவுரித் தழைகளை வாங்குறோம். வயல் விலையா ஒரு ஏக்கர் நிலத்துல இருக்கற இலைக்கு 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுப்போம். தனியா வாங்குறப்போ ஒரு டிப்பருக்கு (ஒரு டன்) 6 ஆயிரம் ரூபாயிலருந்து 10 ஆயிரம் ரூபாய்க்குள்ள சீசனைப் பொருத்து விலை வெப்போம்'' என்கிறார், சரவணன்.

 ஒப்பந்த சாகுபடியே சிறந்தது!

அவுரிச் செடிகள் பற்றி பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலிகையியல் பேராசிரியர் ராஜாமணி, ''அவுரிச் செடிக்கு அறிவியல் பெயர் இன்டிகோ ஃபேரா டிங்டோரியா (indigofera tinctoria)

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

. ஹிந்தியில் 'நீலி’ என்று சொல்வார்கள். இது, வேர் முடிச்சுகளை உடைய 'பேபேசி’ குடும்பத்தைச் சேர்ந்தது. பசுந்தாள் உரமாகவும், இயற்கை நீலம் எடுப்பதற்கும், தலைச்சாயம் மற்றும் ஹேர் ஆயில் தயாரிக்கவும், சில மருந்துகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. 1850-ம் ஆண்டு முதல் 1900-ம் ஆண்டு வரையில், உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவு அவுரி உற்பத்தி செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு அவுரி சாகுபடி குறைந்து, தற்போது இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரில் மட்டும்தான் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மிகக்குறைந்த அளவில்தான் பயிர் செய்யப்படுகிறது.

அவுரி, விதை மூலம் பரவும் செடிவகை. அறுவடை செய்த செடிகளை இரண்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு தரமான மூன்று கிலோ விதை போதுமானது. தற்போது செயற்கை முறைகளில் உருவாக்கப்படும் சாயங்கள் விலை குறைவாகக் கிடைப்பதால், அவுரிக்கு கொள்முதல் விலை குறைவாக இருக்கிறது. முறையான விற்பனை வாய்ப்புகள் இல்லாததால், இதை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சாகுபடி செய்வது மட்டுமே நல்லது. தனியாக சாகுபடி செய்தால், விற்பனையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது'' என எச்சரிக்கை செய்தார்.  

 நாமே செய்யலாம்...விதை உற்பத்தி!

விதை உற்பத்தி பற்றிப் பேசிய தேவநாதன், ''முதல் அறுவடை முடிந்த பிறகு, அடுத்த அறுவடை செய்யாமல் விட்டு விட்டால், 90-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 120-ம் நாளில் இருந்து, காய்கள் முற்ற ஆரம்பிக்கும், 180-ம் நாளில் முற்றியக் காய்களில் இருந்து, விதைகள் வெடிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில், அறுவடை செய்து, காய வைக்க வேண்டும். பிறகு துவரை மார்களை அடிப்பது போல தட்டினால்... விதையும், தூசியும் கலந்து கிடைக்கும். அவற்றைச் சுத்தப்படுத்தி, சாக்கில் கட்டி வைத்து விட வேண்டும்.

பாடில்லாத பயிர் சாகுபடி...அள்ளிக் கொடுக்கும் அவுரி...

ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து, 150 கிலோ முதல் 300 கிலோ வரை அவுரி விதை கிடைக்கும். ஒரு கிலோ 150 ருபாய் வரை விற்பனையாகிறது. சராசரியாக 200 கிலோ விதை என்றாலே, 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியும். அதில் செலவு போக,

20 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு