Published:Updated:

கடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..!

பல்கலைக்கழகத்தின் அற்புதக் கண்டுபிடிப்பு..!பி. செந்தில்நாயகம், கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ர. அருண்பாண்டியன்

பிரீமியம் ஸ்டோரி

 கண்டுபிடிப்பு

##~##

'மெத்தைலோ பாக்டீரியா...'

பெயரைக் கேட்டு மிரண்டு போகத் தேவையில்லை. இது விவசாயிகளை வாழ வைக்க வந்திருக்கும் ஒரு பாக்டீரியா. அதுவும் இன்றையக் காலகட்டத்துக்கு நூற்றுக்கு நூறு கைகொடுக்கும் ஒரு பாக்டீரியா என்றால்... அதில் மிகையில்லை!

தண்ணீர் இன்றி, வறட்சியால் வாடும் பயிர்களின் உயிரைத் தக்க வைத்து, அவற்றைக் காப்பாற்றி, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கக்கூடியது இந்த பாக்டீரியா என்றால்... அது அதிசயம்தானே! இப்படியரு பாக்டீரியாவைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்குக் கைகொடுத்திருப்பது... கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் என்பது பாராட்டுக்குரிய விஷயமே!

'மெத்தைலோ பாக்டீரியா' (Methylo Bacteria) என்றழைக்கப்படும் இத்திரவ நுண்ணுயிரி, கடந்த சம்பா பருவத்தின்போது, கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் சோதனை முயற்சியாகப் பயன்படுத்திப் பார்க்கப்பட்டதில், பலன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பலனை நேரடியாகவே அனுபவித்து அசந்து போயிருக்கிறார், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, திருவலஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோகன்.

''நான் பத்து ஏக்கர்ல ஏ.டீ.டி.-49 ரக நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். இது, 135 நாள்ல இருந்து, 140 நாள்ல அறுவடைக்கு வரும். நான் விதைச்சு, 60 நாள் வரைதான் தண்ணீர் பாய்ச்ச முடிஞ்சுது. அதுக்கே படாதபாடு. இது கடைமடைப் பகுதிங்கிறதால சரியா தண்ணி கிடைக்கல. ஆத்துல கொஞ்சமா தேங்கிக் கிடந்த தண்ணியைத்தான் மோட்டார் வெச்சு இறைச்சு, பயன்படுத்தினோம்.

கடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..!

15 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணி கொடுக்க முடிஞ்சுது. கிட்டத்தட்ட ஒரு மாசம் வரை தண்ணி கொடுக்க முடியாம, பயிர்கள் வாடத் தொடங்கின சமயத்துல... நீடாமங்கலம், வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள், மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் எல்லாம் வந்து, 'மெத்தைலோ பாக்டீரியா'ங்கிற திரவ நுண்ணுயிரியை தண்ணியில கலந்து, பயிர்கள்ல தெளிச்சாங்க. அடுத்த நாலஞ்சு நாள்லயே, பயிர்கள் பழையபடி பசுமையா மாறிடுச்சு.

12 நாளைக்கு அதேமாதிரி பசுமையாவே இருந்துச்சு. அதுக்குப் பிறகுதான் லேசா பயிர் கருகத் தொடங்குச்சு.

பிறகு, வாடகை லாரி மூலமா தண்ணீர் கொடுத்ததுல, அடுத்த பத்து நாளைக்குத் தாங்குச்சு. இப்படி பாக்டீரியாவைத் தெளிச்சும்... லாரி தண்ணியைக் கொடுத்துமே அறுவடை வரைக்கும் பயிரை வளர்த்தெடுத்து கொண்டு வந்துட்டேன். ஆனா, அறுவடைதான் 5 நாள் தள்ளிப் போயிடுச்சு.

ஏக்கருக்கு 24 மூட்டை மகசூல் கிடைச்சுது. வழக்கமா, 30 மூட்டை மகசூல் கிடைக்கும். கடும்வறட்சியா இருந்தும்கூட, 6 மூட்டைதான் மகசூல் குறைஞ்சது. 'ஒண்ணுமே கிடைக்காது'னு தலையில துண்டுபோடற அளவுக்குக் கலங்கிப் போயிருந்த சமயத்துல... 24 மூட்டைங்கறதே ரொம்ப ஆச்சரியமான விஷயம்'' என்று 'மெத்தைலோ பாக்டீரியா'வுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பாராட்டுப் பத்திரம் வாசித்தார், அசோகன்!

கடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..!

''இதைத் தெளிக்கிறப்போ, இருபது நாளைக்கு ஒரு தடவை தண்ணி கொடுத்தாகூட பயிர் தாங்குது. கடுமையான வறட்சி சமயத்துல... இது எங்கள மாதிரி விவசாயிகளுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்'' என்கிறார்கள், டெல்டா மாவட்டங்களில் இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்திப் பார்த்திருக்கும் மற்ற மற்ற விவசாயிகள்!

இந்த விஷயம் பற்றி பெருமையோடு பேசிய நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவருமான சோழன், ''இதை, 'இலை மேற்பரப்பு பாக்டீரியா' என்று சொல்வோம். ஆங்கிலத்தில் 'பி.பி.எஃப்.எம்.' (PPFM-Pink Pigmented Facultative Methylotroph) என்போம். இந்த பாக்டீரியா, இலைகளில் உள்ள பச்சையத்தைத் தக்க வைக்கும். பச்சையம் நீடித்தாலே, ஒளிச்சேர்க்கை முறையாக நடந்து, பயிர்கள் இயல்பாக உயிர் வாழும்.

சம்பா சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ், இந்த 'பாக்டீரியா’வை வயல்களில், பயன்படுத்திப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதை, அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பாக்டீரியாவைக் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் திரவ வடிவிலான பாக்டீரியாவின் விலை, 300 ரூபாய்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் துறையில் இந்த பாக்டீரியா கிடைக்கும். அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை அணுகினாலும், இந்த பாக்டீரியாவை வாங்கிக் கொடுப்பார்கள்'’ என்று சொன்னார்.

இதைப் பற்றி தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. ராமசாமியைச் சந்தித்துக் கேட்டோம். அப்போது அவர், '' இது எங்களுடைய மைக்ரோபயாலஜி துறையின் கண்டுபிடிப்பு.

இது குறைந்தபட்சம் ஒரு வாரம் வரைக்கும் பச்சையத்தை வாடவிடாமல், பாதுகாக்கும். இந்த விஷயத்தை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொன்னதுமே... 'செலவைப் பற்றி கவலைப்படாமல், இந்த பாக்டீரியாவைத் தெளித்து டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் பயிர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைளை உடனடியாக எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்கள்.

கடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..!

இதையடுத்து, ஒரு லட்சம் ஏக்கரில் உள்ள பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, போதுமான அளவுக்கு நவீனத் தெளிப்பான்களை வாங்கவும் சொன்னார்கள். இதையடுத்து, மைக்ரோ பயாலஜி துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மிகவேகமாகப் பணியாற்றி, தேவையான அளவு பாக்டீரியாவைத் தயாரித்தார்கள்.

இந்த பாக்டீரியாவைப் போர்க்கால அடிப்படையில் பயிர்களுக்குத் தெளிக்கும் ஏற்பாடுகளைச் செய்தோம். இதன் மூலமாக, வாடிப்போன பயிர்களில் சுமார் 75% பயிர்களை மேலும் கருகிப் போகாமல் காப்பாற்ற முடிந்தது. செலவைப் பற்றிக் கவலைப்படாமல், உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்ட முதல்வருக்கு, உண்மையிலேயே பல்கலைக்கழகமும் விவசாயிகளும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்'' என்று சொன்ன துணைவேந்தர், இந்த பாக்டீரியா பற்றி மேலும் சில செய்திகளையும் பகிர்ந்தார்.

கடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..!

''எங்கள் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான இந்த பாக்டீரியா... ஒரு வார காலத்துக்கு தண்ணீர் இன்றி தாக்குப் பிடிக்கச் செய்வதால், ஒரு வாரம் தண்ணீர்... ஒருவாரம் இந்த பாக்டீரியா என்று பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள இடங்களில் விவசாயத்தை மேற்கொள்ளலாம்.

தானியப் பயிர்களில் இது நல்ல பலன் தருகிறது என்பதை, நாங்கள் ஆய்வு மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டுதான் களத்துக்கு இதை கொண்டு சென்றோம். அங்கே, நெல், கடலை, கரும்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தியதில், பலன் நன்றாக இருப்பதாக விவசாயிகளே எங்களுக்குத் தகவல் தந்துள்ளனர்.

நம்முடைய பல்கலைக்கழகத்தின் இந்தக் கண்டுபிடிப்பு... விவசாயக் கண்டுபிடிப்புகளில் முக்கியமான மைல்கல் என்றே கூறவேண்டும். நூறு சதவிகிதம் இயற்கையைச் சார்ந்த பாக்டீரியா மூலமாகவே இது உருவாக்கப்பட்டிருப்பதால், இதனால் எந்த எதிர்விளைவுகளும் ஏற்படாது.

முழுக்க முழுக்க இது ஒரு 'இயற்கைப் பயிர் ஊக்கி’ என்றுகூட சொல்லாம். இந்த பாக்டீரியா வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கும் விஷயம் அறிந்து, இந்திய அளவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறையினர் ஆர்வத்துடன் எங்களிடம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் வறட்சி பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் இதைப் பயன்படுத்த உதவவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் தகவல்களைத் தந்திருக்கிறோம்'' என்று பெருமையோடு சொன்னார் துணைவேந்தர்!

காலத்தினாற் செய்த உதவி!

தொடர்புக்கு:

1. நுண்ணுயிரியல் துறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-6611394.

2. பேராசிரியர் மற்றும் தலைவர், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையம்,
செல்போன்: 94438-47067.

 ''வறட்சியை விரட்டும்.... இளநீர், காட்டாமணக்கு....!''

கடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..!

வறட்சியில் இருந்து பயிர்களைக் காக்க, மெத்தைலோ பாக்டீரியா போன்று வேறு சில எளியத் தொழில்நுட்பங்களும் ஆங்காங்கே பயன்பாட்டில் உள்ளன. அவற்றைப் பற்றி 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் சொல்லும்போது, ''ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு, 5 லிட்டர் இளநீரை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதன்காரணமாக ஒரு வாரத்துக்கு மேல் பயிர் காயாமல், செழிப்பாக இருக்கும். நெய்வேலி காட்டாமணக்கு இலைகளை, பயிர்களுக்கு இடையே உள்ள வெற்றிடங்களில் போட்டு வைக்க வேண்டும். சூரியஒளி நேரடியாக நிலத்தில் விழவில்லை என்றால், மண் வெடிக்காது... மண் வெடிக்கவில்லை என்றால், வேர் கருகாது... வேர் கருகவில்லையென்றால்... பயிரும் கருகாது. இவையெல்லாம் சிக்கனமான மாற்று வழிகள்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு