Published:Updated:

விளைநிலங்களுக்கு வேட்டு வைக்கும் உப்பளங்கள்...

கதறும் விவசாயிகள்... கண்டுகொள்ளாத கலெக்டர்... இ.கார்த்திகேயன் படங்கள் : ஏ.சிதம்பரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றான் பாரதி. ஆனால், நமது நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும், நாட்டை நிர்வாகம் செய்யும் அதிகாரிகளும்... 'தொழிலுக்கு மட்டுமே வந்தனை செய்வோம்... விவசாயத்தைக் கண்டு கொள்ள மாட்டோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். அவர்களின் இந்த ஆணவப் போக்குக்கு சமீபத்திய சாட்சி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு உலை வைத்துக் கொண்டிருக்கும் உப்பளங்கள்தான்!

''விளைநிலங்களுக்கு அருகில் உப்பளங்களை அமைப்பதால், விவசாயம் அடியோடு அழிந்து போகும். நிலத்தடி நீரும் உவர் நீராக மாறி விடும்'' என்று உப்பளங்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள், பழையக்காயல் அருகே உள்ள கோவங்காடு கிராம விவசாயிகள்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய ராஜகோபால், ''கோவங்காடு, திரவியபுரம், குலையன்கரிசல், கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், செபத்தையாபுரம்னு சுத்துப்பட்டுல கிட்டத்தட்ட முப்பது ஊர்கள் இருக்கு. பேய்குளத்திலிருந்து வர்ற கால்வாய்த் தண்ணியை வெச்சு இந்த ஊர்கள்ல ரெண்டாயிரம் ஏக்கருக்கும் மேலான நெலத்துல நெல்லும், வாழையும் போட்டிருக்கோம். ஆனா... மூணு போகம் விளைஞ்சுட்டு இருந்த எங்க ஊர்களைச் சுத்தி ஏகப்பட்ட உப்பளங்கள் வந்ததால... இப்போ ஒரு போகம்தான் விளையுது.

கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர்ல உப்பளம் இருக்கு. உப்பள கழிவுநீரைக் குழாய்ல எடுத்துக்கிட்டுப் போய்... கால்வாயில விட்டுடறாங்க. அதனால தண்ணி உப்பா மாறி, நிலமெல்லாம் உவர் படுஞ்சுடுது. பயிரெல்லாம் வெம்பி போயிடுது. இந்த தண்ணியைக் குடிக்கிற ஆடு, மாடுகளும் செத்துப் போகுது. அதில்லாம, நாங்க தோட்டங்களுக்குப் போறதுக்கு பயன்படுத்திக்கிட்டு இருந்த வண்டிப் பாதையையும் அடைச்சுப்புட்டாங்க.

விளைநிலங்களுக்கு வேட்டு வைக்கும் உப்பளங்கள்...

 அதனால, ஒரு சாமான் கொண்டு போக முடியல. எல்லாத்தையும் தலைச்சுமையாவே எடுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு. வாழைக்குலையைக்கூட இப்படித்தான் கொண்டு வாறோம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா புஞ்சை நிலம் வெச்சுருக்குற விவசாயிகளை எல்லாம் மிரட்டியும் உப்பளத்துக்காக நிலத்தை வாங்க ஆரம்பிச்சுருக்காங்க. உப்பளத்துக்காரங்கள நாங்க தட்டிக்கேட்டா, 'ஆள் வெச்சு அடிப்போம், லாரி ஏத்திக் கொன்னுடுவோம்’னு மிரட்டுறாங்க. அவங்க மேல போலீஸ்ல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை'' என்றார், புலம்பலாக.

விளைநிலங்களுக்கு வேட்டு வைக்கும் உப்பளங்கள்...

''எங்க ஊருக்குப் பக்கத்துல வெள்ளரிக்காய் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்னு சொல்லி புஞ்சை நிலங்களை வாங்கினாங்க. ஆனா, அந்த இடத்துல உப்பளம் தொடங்கிட்டாங்க. மழை பேஞ்சா உப்பள கழிவு நீரை ஊருக்குள்ள திறந்து விட்டுடறாங்க.

அதோட, சுடுகாட்டுக்குப் போற பாதையையும் அடைச்சுப்புட்டாங்க. நஞ்சை நிலத்தைக்கூட இவங்க வாங்கி அதிகாரிகளை வெச்சு புஞ்சைனு ரெக்கார்டுல மாத்தி... உப்பளம் ஆரம்பிச்சுடறாங்க'' என்றார், தெற்கு கோவங்காட்டைச் சேர்ந்த பட்டுராஜ்.

''2009ம் வருஷத்துல இருந்தே கலெக்டர், மாசுகட்டுப்பாடு வாரியம்னு மனு கொடுத்துட்டே இருக்கோம். இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. உப்பளம் வெக்கிறதை தடுக்காட்டியும் கழிவு நீரை கால்வாய்ல கலக்காம தடுத்தாகூட போதும். கால்வாய் தண்ணியைத்தான் குடிச்சுகிட்டு இருந்தோம்.

 இப்ப அந்த தண்ணியைக் குடிக்க முடியறதில்லை. மூணு கிலோ மீட்டர் தூரம் போய் தண்ணி எடுத்துட்டு வர வேண்டியிருக்கு'' என்கிறார், அதே ஊரைச் சேர்ந்த மாடசாமி.

உப்பள அதிபர்கள் தரப்பிலோ... ''எந்த விவசாயியையும் நாங்க மிரட்டி நிலம் வாங்கல. நாங்க அதிகப்படியான விலை கொடுக்கறதால, அவங்களாத்தான் விக்கிறாங்க. மழை நேரத்தில மட்டும்தான் உப்புநீரை கால்வாயில விடுதோம். மத்த நேரத்துல விடுறதில்லை. இந்த விவசாயிகளுக்கும் எங்களுக்கும் எந்த பகையுமில்லை'' என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் ஆஷீஸ்குமாரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''உப்பளத் தண்ணீரால் விவசாய நிலமும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால்... அது மிகவும் ஆபத்தான விஷயம்தான். உடனடியாக துறை அதிகாரிகளை அனுப்பி விசாரிக்கச் சொல்கிறேன். விவசாயிகள் சொல்வதுபோல் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது உண்மையானால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

விளைநிலங்களுக்கு வேட்டு வைக்கும் உப்பளங்கள்...

ஆனால், கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேலாகியும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட ஆட்சியரின் கைகளையும் கட்டிப்போட்டு விட்டனரோ, உப்பளக்காரர்கள்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு