பிரீமியம் ஸ்டோரி

ஓவியம்: ஹரன்

 மாத்தி யோசி

##~##

உடம்புல... வெயில்படாம இருக்கறதுதான் சுகம்னு நம்பிக்கிட்டு இருக்கோம். நாம கெட்டது பத்தாதுனு, பால் கறக்குற மாடுங்களையும் நம்மள மாதிரியே கெடுத்து வெச்சுட்டோம்.

'எங்க மாடுங்கள வெயில்படாம வளர்த்துக்கிட்டு வர்றோம்ல’னு சிலர் பெருமை வேற அடிச்சுக்கறாங்க. தினமும், குறைஞ்சபட்சம் அரைமணி நேரமாவது மாடுங்க மேல சூரிய ஒளி படணும்.

சூரிய ஒளி மூலமாத்தான் வைட்டமின்-டி சத்து மாடுகளுக்குக் கிடைக்குது. சூரிய ஒளி படாம இருக்கற மாடுங்க, புஸ்புஸ்னு இருந்தாலும்... அதுங்களுக்கு சீக்கிரமா சீக்கு வந்துடும். அதுமட்டுமில்லீங்க. இப்படி வளர்க்கற மாடுங்களோட பால்ல, சத்துக்களும் குறைவா இருக்குதுனும் கண்டுபுடிச்சு சொலியிருக்காங்க! மாடோ, மனுஷனோ... தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளியை உடம்புல வாங்கிக்கிட்டாத்தான், நோய் நொடியில்லாம வாழ முடியும்.

நாம வாழறது வெப்ப மண்டலப் பகுதி. இங்க, பருவகாலத்துலதான் மழை வரும். அதனால, கோடைக் கால தண்ணீர் பிரச்னையைச் சமாளிக்கறதுக்காக மரங்களெல்லாம் தன்னோட இலை-தழைங்களை உதிர்த்துடும். இதைத்தான் 'இலையுதிர் காலம்'னு சொல்வாங்க. இந்த, இலை, தழைங்க எல்லாம் மரத்தடியில அப்படியே காய்ஞ்சு கருவாடாகிக் கிடக்கும். அடுத்தாப்ல மழை பெஞ்சதும்... இந்த இலை-தழைகள்ல நன்மை செய்யுற நுண்ணுயிரிங்க... வளர்ந்து, மரத்துக்குத் தேவையான சத்துக்கள் கிடைச்சுடும்.

இந்த மரம், மட்டைங்கயெல்லாம் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கள அடிக்குதுங்க. அதாவது, நீர்ப் பற்றாக்குறையைப் போக்கறதுக்காக இலைகளை உதிர்க்குதுங்க... அதன் மூலமா நுண்ணுயிரிகள் பெருகி, மரங்களுக்குத் தேவையான சத்துக்களைப் பெருக்குதுங்க. ஆனா நம்மாளுங்க பலபேரு... மரத்தைச் சுத்திக்கிடக்கற இலை-தழைங்களைக் கூட்டி அள்ளிக் கொளுத்திவிட்டுட்டு... காசைப் போட்டு உரத்தை வாங்கி வந்து அடிப்பாங்க. எதுக்கு இந்த வேண்டாத வேலை?

மண்புழு மன்னாரு !

இனியாச்சும் தோட்டத்துக் குப்பைகளை அப்படி அப்படியே போட்டு வைங்க. அதையெல்லாம் கூட்டித் தள்றது... மரத்துக்கும் நஷ்டம், மனுஷனுக்கும் நஷ்டம்!

நிலமும் உயிர் உள்ள ஜீவன்தான். அதனாலதான், அதை 'பூமித் தாய்’னு சொல்றோம். அந்தத் தாய் மேல பசுமைப் போர்வை போர்த்தி இருக்கணுங்கறது அடிப்படை விதி. அந்தக் காலத்துல... நெல் அறுவடை முடிஞ்சவுடனே... உளுந்தும், கொழுஞ்சி விதையும் சேர்த்து விதைச்சி விடுவாங்க.

உளுந்தும், கொழுஞ்சியும், காத்துல இருக்கிற தழைச்சத்தை இழுத்து, மண்ணுக்குக் கொடுக்கும். ஆக, நெல்லு எடுத்துக்கிட்ட தழைச்சத்து, திரும்பவும் நிலத்துக்கு வந்து சேரும். உளுந்தை அறுவடை பண்ணி, சாப்பாட்டுக்கும், கைச்செலவுக்கும் வெச்சுப்பாங்க.

கொழுஞ்சி, நிலத்துலயே வளர்ந்து வரும். இதனால நிலத்துல எப்பவும் பசுமைப் போர்வை இருக்கும். இதைப் பயன்படுத்திக்கிட்டு, நன்மை செய்யுற நுண்ணியிரிங்களும் பெருகி வளரும். அடுத்து, பயிர் செய்யும்போது, கொழிஞ்சியை மடக்கி உழுதுடலாம். மண்ணும் கொழிக்கும், விளைச்சலும் செழிக்கும்.

நல்ல வெயில்ல வேலையை முடிச்சுட்டு வந்தா, ஜில்லுனு தண்ணி குடிக்கணும் போல தோணும். முன்னெல்லாம் வீட்டுக்கு வீடு மண்பானை இருந்துச்சு. அந்தத் தண்ணியைக் குடிச்சாலே பட்டுனு தாகம் அடங்கும். இப்போ, குக்கிராமத்துலகூட குளிர்சாதனப் பொட்டி வந்திடுச்சு.

இந்தப் பொட்டியில வெச்ச தண்ணியைக் குடிக்கத்தான் பெரும்பாலும் ஆசைப்படறாங்க. இப்படிபட்ட தண்ணியைக் குடிச்சா, உடம்பு கெட்டுபோகும்னு அந்தப் பொட்டியைக் கண்டுபிடிச்ச நாட்டை சேர்ந்த விஞ்ஞானிங்களே சொல்லியிருக்காங்க. அதனாலதான் அதை 'அசுத்தமானப் பெட்டி' (Contaminated box) அப்படினு அவங்களே பேரு வெச்சு கூப்பிடறாங்க. அதாவது, அதுல நாள் பட வைக்கற பண்டங்கள் மூலமா கெட்ட பாக்டீரியாவெல்லாம் பெருகி, பெட்டி உள்ளயே பரவி, பலவிதமான பிரச்னைகளுக்கு வழி வகுக்குதாம். ஆக... பணத்தைக் கொடுத்து, நோயை விலைக்கு வாங்கறோம். இது தேவையானு யோசிங்க!

கோடைக் காலத்துல தாகத்தைத் தணிக்க நிறைய சங்கதி நம்மகிட்ட இருக்கு. சித்திரை மாசத்துல, தேர்த் திருவிழா நிறைய நடக்கும். அப்போ, தேர் இழுத்துக்கிட்டு வர்றவங்களுக்கு, வீடுங்கதோறும் பானகம் தயார் பண்ணிக் கொடுப்பாங்க. இந்தப் பானகத்தைக் குடிச்சா... தாகமும் அடங்கும். நீர்க்கடுப்பும் வராது. தேர் இழுத்துக்கிட்டு வர்றவங்க உடம்பும் உற்சாகமா இருக்கும். புளியை நெல்லிக்காய் அளவு எடுத்துக்குங்க. வெல்லம் ஒரு கைப்பிடி, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை அளவுல எடுத்துக்கலாம். புளியையும், வெல்லத்தையும் தண்ணியில கரைச்சி, வடிகட்டி அடுப்புல ஒரு கொதிவிட்டு இறக்கிடலாம். அடுத்து, ஏலக்காய்த்தூள், சுக்குத்தூளையும் தூவி விட்டு, நல்லா கலக்கினா... பானகம் தயார். திருவிழா நேரம் மட்டுமில்லீங்க, மத்த நேரத்தலயும்கூட இந்தப் பானகத்தைக் குடிச்சி, உடம்பைத் தெம்பாக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு