Published:Updated:

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

லாபம் கொடுக்கும் குளிர்பதனக் கிடங்குகள்..! படங்கள்: வீ. சக்தி அருணகிரி முனைவர். க. அழகுசுந்தரம்

பிரீமியம் ஸ்டோரி

கூடுதல்

 லாபத்தைப் பெருக்கும் லட்டு தொடர்!

##~##

பழங்கள் மற்றும் காய்கறிகளின் வாழ்நாளை அதிகரிப்பதோடு, பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கக்கூடியதுமான மெழுகு பூசும் தொழில்நுட்பம்; எளிய முறையில் பழங்கள், காய்கறிகளின் தரத்தைத் தக்க வைப்பது; போக்குவரத்தின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இதுவரை பார்த்தோம்.

காய்கறி, பழங்களுக்கு லாபகரமான விலையைப் பெற்றுத் தர மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடிய குளிர்பதனக் கிடங்குகள் பற்றி இப்போது பார்ப்போம்.

'அறுவடை செய்த காய்கறி, பழங்களை உடனடியாக விற்பனை செய்தாக வேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. சில நாட்களோ, சில வாரங்களோ... வைத்திருந்து விற்கும் நிலை இருந்தால், லாபகரமான விலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதுவரைக்குமான பொறுமையைத் தகர்த்து விடுகிறது, விவசாயிகளின் பொருளாதாரச் சூழல்.

தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் முருங்கைகாய் அதிகமாக விளையும். ஆனால், அப்போது ஒரு முருங்கைக்காயின் விலை, ஒரு ரூபாய் அளவில்தான் இருக்கும். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே விளைச்சல் கொஞ்சம் குறைந்ததும், 'கிடுகிடு’வென விலை உயர்ந்து... ஒரு காயின் விலை 10 ரூபாயைக்கூட தொட்டுவிடும். அனைத்து வகையான காய்கறிகள், பழங்களுக்கும் இதே நிலைதான்.

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

அறுவடை செய்தவுடன் விற்பனை செய்யாமல், விளைச்சல் இல்லாத தட்டுப்பாடான காலங்களில் விற்பனை செய்தால் பல மடங்கு கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், அதுவரை பழங்கள், காய்கறிகள் அதே தரத்துடன் காத்திருக்குமா..? என்ற யோசனையில்தானே உடனே விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

இந்த இக்கட்டானச் சூழலில் இருந்து, உங்களை மீட்டெடுக்கக்கூடிய உற்றத் தோழர்கள்தான், குளிர்பதனக் கிடங்குகள். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட காய்கறியையோ அல்லது பழத்தையோ... அதன் தன்மைக்கேற்றவாறு, தேவையான வெப்பநிலையையும், ஈரப்பதத்தையும் உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

ஒரே குளிர்பதனக் கிடங்குக்குள் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் பாதுகாக்க முடியும். ஆனால், அனைத்தையும் ஒன்றாக வைக்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான வெப்பநிலை, ஈரப்பதம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு காய்க்கும், பிரத்யேகமான மணம் இருப்பதால்... ஒரே இடத்தில் பல வகையான காய்கறி, பழங்களை வைத்தால், ஒன்றின் மணம் மற்றொன்றில் கலந்து தரத்தைக் குறைத்துவிடும். அதனால், தனித்தனி அறைகளை உருவாக்கி, தேவையான அளவுக்கு பிரத்யேகமான வெப்பநிலை, ஈரப்பதத்தை ஏற்படுத்துவதற்கான வசதிகள், குளிர்பதனக் கிடங்குக்குள் உண்டு.

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுமுயற்சியாக, தங்கள் பகுதியிலே ஒரு குளிர்பதனக் கிடங்கை உருவாக்கிக் கொள்ளலாம். 100 டன் இருப்பு வைக்கக்கூடிய ஒரு குளிர்பதனக் கிடங்கை உருவாக்க இடத்துக்கான மதிப்பு இல்லாமல், 60 லட்ச ரூபாய் செலவாகும். கிடங்குக்கு 150 சதுர மீட்டர்; அலுவலகம் மற்றும் இதர உபயோகங்களுக்காக 250 சதுர மீட்டர் என மொத்தம் 400 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். குளிர்பதனக் கிடங்குக்கு 45 கிலோவாட் மின் திறன் தேவை. நாள் ஒன்றுக்கு 700 முதல் 750 லிட்டர் தண்ணீர் தேவை. இதை நிர்வகிக்க 4 ஆட்கள் தேவை. இதனை இயக்குவதும் மிக எளிது.

குளிர்பதனக் கிடங்கு அமைப்பதற்கான, இடத்தைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நன்கு நிழல் தரக்கூடிய மரங்கள் நிறைந்த, தண்ணீர் தேங்காத இடமாக இருக்க வேண்டும். பயன்பெறப் போகும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு அருகில் இருக்க வேண்டும். சந்தைக்கு வெகு தூரத்தில் இருக்கக் கூடாது. குளிர்பதனக் கிடங்கினை நீள் வடிவில், தெற்கு-வடக்காக அமைத்தால், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.

கிடங்கின் வெளிப்புறத்திலும், மேற்கூரையிலும் வெள்ளை நிறத்தை பூசுவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து மின்சாரச் செலவும் குறையும். குளிர்பதனக் கிடங்கின் வாசற்கதவு, உட்புற அறைகளின் கதவு, பின்புறக்கதவுகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில், நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாத வகையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக, வெவ்வேறு பகுதிகளில் இருக்க வேண்டும்.

இயன்றவரை கதவுகள் அதிகம் இல்லாமல் இருப்பதுதான் மிகவும் நல்லது. ஜன்னல்களே இல்லாதவாறு குளிர்பதனக் கிடங்கை வடிவமைக்க வேண்டும். கிடங்கின் உட்புறத்தில் சரியான அளவில் வெப்பம் மற்றும் ஈரத் தடுப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு தென்னை நார் பித்துகளை பயன்படுத்தலாம். குளிர்பதனக் கிடங்கின் உள்ளே மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் மின்விளக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவை, அதிகம் வெளிச்சம் இல்லாதவையாக இருக்க வேண்டும்.

கிடங்கின் கதவுகளை அடிக்கடி திறந்து மூடக்கூடாது. குளிரூட்டும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வாயு, மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதேசமயம் குளிர்விக்கும் திறன் அதிகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு, அமோனியாதான் எல்லா வகையிலும் ஏற்றது.

காய்கறி, பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் சேமிக்கும் போது, அதற்கென்றே பிரத்யேகமாக உள்ள பிளாஸ்டிக் பெட்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். அனைத்துப் பெட்டிகளின் உள்ளேயும், குளிர்காற்று மிக எளிதாகவும், சீராகவும் பயணம் செய்ய ஏற்றவாறு, ஒவ்வொரு அடுக்குக்கும் இடையேயும் 4 முதல் 6 அங்குலம் இடைவெளி இருக்குமாறு அமைக்க வேண்டும். சுவரை ஒட்டியவாறு பெட்டிகளை அடுக்கக்கூடாது.

குளிர்பதனக் கிடங்கை முறையாகக் கையாள்வதன் மூலமாகத்தான் உரிய பலன் கிடைக்கும். குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கும் முயற்சிகளில் கண்டிப்பாக விவசாயிகள் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாட்டில் வியாபாரிகளால் இயக்கப்பட்டு வரும் குளிர்பதனக் கிடங்குகள் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. புளி, மிளகாய், வாழைத்தார் போன்றவற்றை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்து, விளைச்சல் இல்லாத காலங்களில் விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்கள்.

விவசாயிகளும் உறுதியான நம்பிக்கையோடு கூட்டு சேர்ந்து, குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்க வேண்டும். இதற்காக யாரை அணுகுவது... அதற்கான இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்..? மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் உண்டா.?... போன்ற கேள்விகளுக்கான விடை...

அடுத்த இதழில்.

கோழித் தீவனத்தில் தோல் கழிவு!

எங்கெங்கும் கலப்படம் என்பதுதான் இந்தியாவின் பொதுவிதி. இதற்கு கோழித் தீவனமும் விதிவிலக்கல்ல என்கிற அதிர்ச்சிச் செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

மதிப்புக்கூட்டும் மந்திரம் !

''கோழிகளுக்கான தீவனத்தில் பொதுவாக 10 சதவிகிதம் வரை மீன் தூள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீன் தூளுக்கு பதிலாக, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் தோல் கழிவுப் பொருள்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. விலை மலிவாகக் கிடைக்கும், இந்தத் தோல் கழிவுப்பொருட்களை மீன் தூளுடன் கலப்படம் செய்வதால்... முட்டை உற்பத்தி 2 முதல் 3 சதவிகிதம் குறையும். தீவனத்தில் மீன்தூள் பயன்படுத்தும் பண்ணையாளர்கள் மற்றும் தீவன ஆலை உரிமையாளர்கள், மீன் தூளில் கலப்படம் உள்ளதா என்பதை உறுதி செய்தபின் தீவனத்தில் பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் உற்பத்தித் திறன் கூடுவதோடு லாபமும் அதிகரிக்கும்'' என்று நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உள்ள கால்நடை உணவியல் துறை எச்சரித்திருக்கிறது!

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266491

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு