Published:Updated:

''அரிசி போடும் 'அம்மா'வே... நெல்லு விலை என்னாச்சு?''

முதல்வருக்கு கோவணாண்டி சூடான கேள்வி!

பிரீமியம் ஸ்டோரி

முறையீடு

##~##

'விலையில்லா பொருட்களை வாரி வழங்கும் விண்ணரசி’, 'கால்நடைகளுக்கு 110 கொடுத்த காமதேனு’, 'அம்மா உணவகம் திறந்து, ஏழைங்களோட பசியைப் போக்கிய அட்சய பாத்திரம்’... தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு, ரொம்ப நாளைக்கு பொறவு வணக்கம் சொல்லிக்கறான், உங்க பாசக்கார கோவணாண்டி!

'யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை’ங்கற மாதிரி, 'இருண்டு போன நாட்டுல, நாம மட்டும் கத்தி என்ன பிரயோஜனம்?'னு 'நான் உண்டு, என் உழவு உண்டு'னு கொஞ்ச நாளா ஒதுங்கி கெடந்தேன். ஆனா, மறுபடியும் என்னைக் கடுதாசி எழுத வெச்சிட்டீங்க... உங்களோட அதிரடி அரிசித் திட்டத்தால!

சும்மா சொல்லக் கூடாது... எப்படி இருந்த நீங்க, இப்படி ஆகிட்டீங்க. நம்பவே முடியலைங்கம்மா. விவசாயிங்க மேல பாசமழை பொழியறீங்க, மழையில்லாம மாண்டு போன பயிருகளுக்காக எல்லா விவசாயிக்கும் நிவாரணம் கொடுக்குறீங்க, மத்திய அரசோட சிண்டை பிடிச்சு சிக்கெடுக்கறீங்க, காவிரி விஷயத்துல கர்நாடகாவை கலங்க வெக்குறீங்க, முல்லை-பெரியாறு கேஸ்ல கேரளாவை கிழிகிழினு கிழிக்குறீங்க; விவசாயிங்க நிலத்துல 'கெயில் கேஸ்' கம்பெனி பள்ளம் தோண்டினதும் பொங்கி எழுந்து பொடணியில அடிச்சு விரட்டுறீங்க!

அத்தனைக்கும் பின்னால, அடுத்த வருஷம் வரப்போற 'நாடாளுமன்ற தேர்தல்' ஒளிஞ்சு கிடந்தாலும்... ஆகக்கூடி எங்களுக்காகத்தான் செய்யறீங்கனு நினைக்கும்போது, ஓரளவுக்கு மரியாதை கூடத்தான் செய்யது. ஆனா... 'தலை வாழை இலை போட்டு, வகைவகையா விருந்து வெச்சு, ஓரத்துல கொஞ்சம் வேற எதையோ வெச்ச கதை'யா, நீங்க எம்புட்டு நல்லது செஞ்சாலும்... அதை அனுபவிக்க முடியாம செஞ்சுட்டு இருக்கே இந்த நெல்லோட விலை... அதைப் பத்திதான் சொல்றேன்.

''அரிசி போடும் 'அம்மா'வே... நெல்லு விலை என்னாச்சு?''

எல்லா பொருளுங்களோட விலையும் ராக்கெட்ல பறக்குது. ஆனா, விவசாய விளைபொருள்களோட விலை மட்டும்... உங்கள பார்த்தா பம்முற உங்க மந்திரிங்க கணக்கா தலை தொங்கிக் கெடக்கே. 'ஓணான் வேலிக்கு இழுக்குது... தவளை தண்ணிக்கு இழுக்குது’ என்ன பண்றதுனு தெரியாம தத்தளிச்சுகிட்டு இருக்கோம்.

அம்மா, விவசாயிங்களோட கஷ்டம், நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்ல. ஏன்னா, நீங்களும் திராட்சை தோட்டம், தேயிலைத் தோட்டம்னு வெச்சுருக்கற விவசாயிதானே. ஆனா, எல்லா அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்ற தப்பையே நீங்களும் செய்யறீங்களே! 'பொதுமக்கள் வேற, விவசாயிகள் வேற'ங்கிற எண்ணத்தை முதல்ல மாத்திக்குங்க. விவசாயியும், பொதுமக்கள்ல ஒருத்தன்தான். ஆனா, ஒட்டுமொத்த மக்களுக்கு நல்லது பண்றேனு நினைச்சுக்கிட்டு, அப்பப்ப விவசாயிங்க பொழப்புல பெட்ரோல் குண்டு போட்டுட்டு போயிடறீங்களே!

ஊரு அடுப்புலயெல்லாம் அரிசியை வேக வெக்கறேன்னு சொல்லிக்கிட்டே... நெல் விவசாயிங்களோட வயித்துல தீ மூட்டலாமா? வெளிச்சந்தையில அரிசி விலை கூடிடுச்சு. அதக் குறைக்கணும்னு நீங்க நினைக்கறது நல்ல விஷயம்தான். அதுக்காக மேற்கு வங்கத்திலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செஞ்சு, கிலோ 20 ரூபாய்க்கு கொடுக்கறீங்க. இதனால, நெல்லு விலையில்ல இப்ப சரிஞ்சு போய் கிடக்கு. உங்க ஆட்சியில கரன்ட் எந்த லட்சணத்துல கிடைக்குதுனு நான் சொல்ல வேண்டியதில்ல. மழை, மாரி எப்படி பெய்ஞ்சதுணும் உங்களுக்குத் தெரியும். கரன்ட் இல்லாம, தண்ணியில்லாம, வேலைக்கு ஆள் இல்லாம... இப்படி பலதும் இல்லாம, உசுரை கொடுத்து விளைய வெச்ச நெல்லை சந்தைக்கு கொண்டுபோனா... செலவான காசுக்குக்கூட விலை போக மாட்டேங்குது.

'ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்றதுக்கு 1,500 ரூபாய்க்கு மேல செலவாகுது'னு விவசாய பல்கலைக்கழகங்களே கணக்குப் போட்டு சொல்லுதுங்க. ஆனா, 'குடோன்ல இடமில்ல... கோணிச்சாக்குல இடமில்ல'னு கண்ட கண்ட காரணத்தையும் சொல்லி, குவிண்டால் 700 ரூபாய்க்கும் 800 ரூபாய்க்கும் கேட்கறாங்க நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்ல. கமிஷனுக்கு ஆசைப்படுற உங்க அதிகாரிங்க, குடோன் முழுக்க வியாபாரிங்களோட நெல்லை போட்டு வெச்சுக்கறாங்க. இந்தமாதிரி அதிகாரிங்க மேல, உடனடியா சவுக்கு எடுத்து சுழற்றுங்க!

ஏழைங்களுக்கு உங்க 20 ரூபாய் அரிசி அமிர்தம் மாதிரி. ஆனா, நெல்லு விவசாயிகள நெனச்சா துக்கம் தொண்டைய அடைக்குது. கிலோ அரிசியை 20 ரூபாய்க்கு போடுங்க, 2 ரூபாய்க்கு போடுங்க... இல்ல, இலவசமாகூட போடுங்க... வேணாமுங்கள. ஆனா, எங்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கனுதான் கேக்குறோம்.

மத்திய அரசுதான் வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செஞ்சு இந்திய விவசாயிகளை காலி செய்யுது. நீங்க என்னடான்னா மேற்கு வங்கத்திலிருந்து அரிசியை வாங்கி, தமிழ்நாட்டு நெல் விவசாயிகளை காலி செய்யறீங்க! கேட்டா... 'அரிசி விலை உயர்ந்துடுச்சே. மக்களை காப்பாத்துணுமே'னு காரணம் சொல்வீங்க. அரிசி விலை மட்டும்தானா... சிமென்ட், செங்கல், சினிமா டிக்கெட், உரம், பூச்சிமருந்து, கூலி, பஸ்- ரயில் டிக்கெட்டு, டீசல் விலைனு எல்லாந்தான் உசந்திருக்கு. கேவலம், வெளியில பத்து ரூபாய்க்கு விக்கற பாப்கார்னை, 80 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கும் விக்கறானுங்க தியேட்டர்ல. ஆனா, அந்த பாப்கார்னுக்கு தேவையான சோளத்தை உற்பத்தி பண்ற விவசாயிக்கு ஒரு ரூபாயும் ரெண்டு

''அரிசி போடும் 'அம்மா'வே... நெல்லு விலை என்னாச்சு?''

ரூபாயும்தான் அதிகபட்சமா கிடைக்குது. அதனால... விவசாயிகளோட உற்பத்தி பொருளுக்கும் விலையை ஏத்தி வெச்சு, விவசாயிக வயித்துல பால் வார்ப்பீங்கனு நம்புறேன் தாயீ.

அப்புறம்... இந்த விலையில்லா ஆடு, மாடு கொடுத்தீங்க. ஆனா, அதுங்களுக்கு தீவனமில்லாம பல இடங்கள்ல குத்துயிரும், கொலை உயிருமா கெடக்குதுங்க. மாடுகளோட 'ஸ்டெம்செல்’ எடுத்து வைத்தியம் பாப்போம்னு சொல்லியிருக்கீங்க சந்தோஷம். முதல்ல மாடுங்க இருந்தாத்தானே அதையெல்லாம் செய்ய முடியும். அதனால மாட்டுத் தீவனத்தை மானிய விலையில கிடைக்க ஏற்பாடு செய்யுங்க. யானைகளுக்கு முகாம் நடத்துற மாதிரி... கால்நடைகளுக்கும் முகாம் நடத்துங்க.

'சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியத்துல சொட்டுநீர் அமைச்சு கொடுப்போம்'னு சொன்னீங்க. உழவனெல்லாம் உச்சிக் குளிர்ந்துபோயி, சொட்டுநீர் கம்பெனிகளுக்குப் போனா...

'10 ஆயிரம் கட்டு, 15 ஆயிரம் கட்டு'னு கந்துவட்டிக்காரன் மாதிரி கேக்கறாங்க. 'என்னய்யா...

100% மானியம்னு சொன்னாங்க’னு கேட்டா, 'மானிய திட்டத்துல இருக்கற குழாயை வேணும்னா அமைச்சுக் கொடுக்குறோம் ஆனா, தண்ணி வரலைனா எங்களை கேட்கக் கூடாது. உருப்படியா பாசனம் செய்யணும்னா... எக்ஸ்ட்ரா கொடுத்துதான் ஆகணும்’னு சொல்றாங்க. அதனால, இந்தத் திட்டத்தையே விவசாயிங்க பெரும்பாலும் புறக்கணிச்சுட்டாங்க. இப்ப என்னடான்னா... 'பரதேசி' படத்துல ஆள்பிடிக்குற கங்காணி கணக்கா, பயனாளிகள் பட்டியல் தயார் செய்றதுக்காக ஊர், ஊரா ஆள் தேடிட்டு அலையறாங்க அதிகாரிங்க. இந்த கொடுமையையும் கொஞ்சம் கவனிங்க.

இப்படி ஆரம்பிச்சா... ஒவ்வொண்ணுத்துலயும் நான் நொட்ட, நொட சொல்லிட்டேதான் இருப்பேனுங்க. அதனால, இப்போதைக்கு இந்த மட்டும் முடிச்சுக்கறேனுங்க. நீங்க பார்த்து செய்ய வேண்டியதை செஞ்சு முடிச்சுடுங்க!

இப்படிக்கு,
கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு