Published:Updated:

குறைவான செலவில் நிறைவான லாபம்...

சக்கைப்போடு போடும் சவுக்கு..! த. ஜெயகுமார் படங்கள்: த. ருபேந்தர்

##~##

'மாற்றுப் பயிர்கள்' என்றாலே, பெரும்பாலான விவசாயிகளுக்கு நினைவுக்கு வருவது... மரப்பயிர்கள்தான். ஏனென்றால், தண்ணீர் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என்று தவிக்கும் விவசாயிகளுக்குக் கை கொடுப்பவை, மரப்பயிர்கள்தான். அவற்றில் குறைந்த காலத்திலேயே வருமானம் கொடுக்கக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது... சவுக்கு!

பராமரிப்புச் செலவும் குறைவு என்பதால், பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக சவுக்குதான் இருக்கிறது. அதனால்தான் பலரும் சவுக்கு சாகுபடியில் ஈடுபட்டு, நிறைவான வருமானம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், ஜமீன் எண்டத்தூர் குருநாதன்.

மதுராந்தகம்-பாண்டிச்சேரி சாலையில் ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முதுகரை. அங்கிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, ஜமீன் எண்டத்தூர். சவுக்கு, வேர்க்கடலை ஆகியவைதான் இப்பகுதியின் முக்கியப் பயிர்கள். தனது சவுக்குத் தோப்பில் நடைபோட்டபடியே நம்மிடம் பேசினார், குருநாதன்.

குறைவான செலவில் நிறைவான லாபம்...

''எனக்கு 60 ஏக்கர் நிலம் இருக்கு. முன்ன நெல், வேர்க்கடலை, கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம்னு பயிர் பண்ணிட்டு இருந்தோம். 25 வருஷத்துக்கு முன்னயெல்லாம் விவசாய வேலைக்கு தாராளமா ஆளுங்க கிடைச்சாங்க. இப்போல்லாம் அப்படி கிடையாது. அதில்லாம இப்போ தண்ணியும் பத்தாக்குறையா இருக்கு. விவசாயத்துக்கு ஆதாரமான ரெண்டு விஷயமுமே பிரச்னையான பிறகு... எப்படி விவசாயம் பண்ண முடியும்? அதனால கொஞ்சம் கொஞ்சமா சுருக்கிக்கிட்டோம். அதோட, இங்க அதிகமா விளையுற நெல், வேர்க்கடலை ரெண்டுக்கும் சரியான விலையும் கிடைக்கறதில்லை. கூட்டிக்கழிச்சுப் பாத்தா செலவுதான் அதிகமா இருக்கே தவிர, லாபமே இல்லை. அப்படிப்பட்ட நிலையில, சுத்தமா விவசாயத்தையே நிறுத்திட்டோம்.

குறைவான செலவில் நிறைவான லாபம்...

ஆனாலும், 'நிலம் சும்மா இருக்குதே’னு கவலையா இருந்துச்சு. அதனால, ஆட்கள், தண்ணீர் பத்தாக்குறைய சமாளிக்கிற மாதிரியான பயிர்கள தேடுனப்ப கிடைச்சதுதான் சவுக்கு. உடனே, 25 ஏக்கர்ல சவுக்கு நடவு செஞ்சேன்.

நடவு செஞ்சு ஒரு வருஷம் வரைக்கும் பராமரிச்சா போதும். அப்பறம் அஞ்சு வருஷத்துக்கு பிரச்னையே இல்லை. மத்த வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுடலாம். தண்ணி கட்டுறது மட்டும்தான் வேலை. உரம் வெக்கிறது, பூச்சிக்கொல்லி தெளிக்கிறதுனு எந்த வேலையும் கிடையாது. சவுக்கு நட்ட பிறகு, அதைப் பார்க்கறதுக்காக அப்பப்ப தோட்டத்துக்கு வந்து போக ஆரம்பிச்சேன். அதனால, திரும்பவும் மீதி நிலத்துல நெல், வேர்க்கடலை சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன்.

இந்த மண், சுண்ணாம்பு கலந்த மண். ஆனாலும், சவுக்கு தாக்குப் பிடிச்சு வளர்ந்து நிக்குது. செம்மண், களிமண், மணலடி நிலங்களா இருந்தா, இன்னும் நல்லா வளரும். கொஞ்சம் மெனக்கெட்டுப் பாத்தாலே போதும், நாலு வருஷத்துல நல்ல சைஸுக்கு வந்துடும். சில பேரு சைஸ் வர்றதுக்காக யூரியா, டி.ஏ.பி. எல்லாம் போடறாங்க. அப்படிப் போட்டா மரத்துல நல்லா நீர் ஏறும். ஆனா, வெட்டுன கொஞ்ச நாள்லயே எடை குறைஞ்சு போயிடும். இயற்கையா தண்ணி கட்டி வளர்க்கற கட்டைங்கதான் நல்லா இருக்கும்... எடையும் கொடுக்கும்'' என்ற குருநாதன் நிறைவாக,

''வளமான மண்ணா இருந்தா... ஏக்கருக்கு 60 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். சுண்ணாம்பு மண்ணுங்கறதால 45 டன் கிடைக்குது. முன்ன கட்டடம் கட்டுறதுக்கு, முட்டு கொடுக்கிறதுக்கு, விறகுக்குனு சவுக்கு வாங்கிட்டுருந்தாங்க. இப்போ பேப்பர் கம்பெனிக்காரங்களும் சவுக்கு மரங்கள வாங்கிக்கறாங்க. அதனால, ஓரளவுக்கு விலை கூடியிருக்கு.

குறைவான செலவில் நிறைவான லாபம்...

ஒரு டன் சவுக்குக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் வரை விலை கிடைக்குது. உழவு, நடவு, களை, கூலியாட்கள், பராமரிப்பு...னு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். மீதியெல்லாம் லாபம்தான்'' என்றார் மகிழ்ச்சி பொங்க!

சவுக்கு சாகுபடி எப்படி?

சவுக்கு சாகுபடிக்கு குருநாதன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் இவைதான்- சவுக்கு சாகுபடி செய்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஏக்கருக்கு மேல் நடவு செய்தால்தான் ஓரளவுக்கு லாபம் பாக்க முடியும். சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து, மண்ணைக் காயப் போடவேண்டும். பிறகு, 3 அடி முதல் 5 அடி வரை அவரவர் இடங்களுக்கு ஏற்ற வகையில் இடைவெளி கொடுத்து இரண்டு அங்குல ஆழத்துக்கு குழியெடுத்து நாற்றுகளை நடவு செய்யவேண்டும் (இவர் மூன்றே கால் அடி இடைவெளியில் நடவு செய்திருக்கிறார்). இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 நாற்றுகள் வரை தேவைப்படும். நாற்றுகளில் உள்ள பிளாஸ்டிக் பையை எடுத்துவிட்டு, மண்ணோடு குழியில் வைக்க வேண்டும். நடவு செய்த பிறகு பாசனம் செய்ய வசதியாக, வாய்க்கால் அமைக்க வேண்டும்.  

5 ஆண்டில் அறுவடை!

ஓராண்டு வயதுக்குள் இருக்கும் செடிகளுக்கு மாதம் மூன்று முறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு, 10-15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினால் போதுமானது. ஏரித்தண்ணீராக இருந்தால்,

20 நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் கட்டலாம். கிணற்றுத்தண்ணீரை விட ஏரித் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதால், பாசனத்தில் இடைவெளி அதிகமாக இருக்கலாம். களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும். குறிப்பாக, முதல் ஆண்டு களைகளை மண்ட விடக்கூடாது. வேர்க்கடலை, உளுந்து, காராமணி... போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து கொள்ளலாம். ஓராண்டில், 8-10 அடி வரை வளர்ந்து விடும். 5-ம் ஆண்டில் 50 அடி வரைகூட வளர்ந்து விடும். அந்த சமயத்தில் நிலத்தை ஈரமாக்கி அறுவடை செய்யலாம்.

தொடர்புக்கு,  குருநாதன்,
செல்போன்: 99404-49597 / 94439-60268.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு