Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

 நம்மாழ்வார்

'ஓடி வருது ஒரு குருவி...
ஓடி வளைக்குது மறு குருவி...
மூக்கு சிவக்குது மூணாவது குருவி...
முந்நூறு முட்டையிடுது நாலாவது குருவி’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

கிருஷ்ணகிரி மாவட்டம், மோட்ராகியில் எங்கள் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பெங்களூரிலிருந்து பெரியநாயகசாமி என்ற நண்பரும் வந்து சேர்ந்து கொண்டார். பண்ணையாருடைய மாட்டுத்தொழுவம் வெள்ளையடிக்கப்பட்டு எங்களுக்கு அலுவலகமாக மாற்றப்பட்டது. அதுதான் எங்களுக்குத் தங்குமிடமும்கூட! கூட்டு வாழ்க்கை, கலந்துரையாடலுக்கும் இணைந்து வளர்வதற்கும் துணையாக அமைந்தது.

மோட்ராகி என்கிற பெயருக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த ஊர் மக்கள் சாகுபடி செய்யும் முக்கியமான பயிர் 'ஆரியம்’ என்று அவர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு (ராகி). முன்னொரு காலத்தில் கோடையில் பெய்த மழையில், அறுவடை செய்திருந்த ராகி பயிர்களின் மூட்டிலிருந்து புதிய தளிர்கள் வளர்ந்து தானியம் விளைந்ததாம். இதைப் பார்த்த மற்ற ஊர்காரர்கள் 'மூட்டு ராகி, மூட்டு ராகி’ என அழைத்திருக்கிறார்கள். இந்தப் பெயர், பின்னாளில் மோட்டுராகியாகி, பிறகு மோட்ராகி என்று ஆகிவிட்டது.

என்னைப் பொறுத்தவரையில் கேழ்வரகு அறுவடை செய்த வயலில், மறுதாம்பு பயிர் எடுக்க முடியும் என்பது புதிய தகவல். மிக்ஷிஞிறி இயக்குநர் பிரான்சிஸ், எங்களுக்கு உணவு சமைப்பதற்காக, அவரது சொந்த ஊரிலிருந்து ஓர் இளைஞனை அழைத்து வந்திருந்தார். இருபது வயதே ஆன அந்த இளைஞனின் முகம் நினைவில் நன்றாகவே பதிவாகியுள்ளது. ஆனால், பெயர் நினைவில் இல்லை. இந்த வயதுக்குள், 22 சாமியார்களுக்கு அவர் சமையல்காரராக பணிபுரிந்திருக்கிறார். அவருடன் சமையல் வேலைகளில் நாங்களும் கூடமாட உதவி செய்வோம். அப்போது அவர் கூறும் சாமியார் கதைகள் கேட்பதற்கு சுவையாக இருக்கும்.

அந்த இளைஞன் சமையல்காரனாக மட்டும் இல்லாமல், மோட்ராகி பிள்ளைகளுக்கான முன்னிரவுப் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். பொழுது சாய்ந்தவுடன் முகம், கைகால் கழுவி பவுடர் பூசி, சிகையலங்காரம் செய்து, பூட்ஸ் மாட்டி கழுத்தில் டை கட்டி ஊருக்குள் நுழைவதைப் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதைப் பார்த்து, 'இவன் என்னத்த சொல்லிக் கொடுக்கப் போறான்’ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. ஒரு நாள், நான் வகுப்பெடுக்கச் சென்றேன். நான் நினைத்தது மாதிரியே நிலைமை மோசமாக இருந்தது. உடனே, 'வாரத்தில் ஒரு நாள் உனக்கு பதிலாக நான் வகுப்பெடுக்கிறேன்’ என சமையல்காரனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டேன். ஒருநாள் விடுமுறை கிடைத்தது அவனுக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் வகுப்புக்குச் செல்லும்போது ஒரு வித்தியாசமான நடைமுறையைக் கையாள்வேன். முதலில் ஒரு குட்டிக்கதை சொல்வேன். கதை சொல்லிக் கொண்டே அதில் வரும் முக்கியமான வார்த்தைகளை கரும்பலகையில் எழுதுவேன். பிறகு, ஒரு குச்சியை கையிலெடுத்து வார்த்தைகளைத் தொட்டுத்தொட்டு கதையைத் திரும்பவும் சொல்லுவேன். பிறகு, 'உங்களில் யார் இப்படிச் சொல்ல முடியும்’ என்று கேட்பேன். முன்வரும் மாணவரிடம் கையிலுள்ள குச்சியை கொடுப்பேன். அவரும் குச்சியால் வார்த்தைகளைத் தொட்டுத்தொட்டு கதைச் சொல்வார். இதனால், அடுத்த மாணவருக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அவரும் கதை சொல்வார். இதுபோல நான்கு, ஐந்து மாணவர்கள் திரும்பத் திரும்பக் கதை சொல்லும்போது, எல்லா மாணவர்களுக்கும் கதை போய் சேர்ந்திருக்கும். எழுத்துக்களும் அறிமுகமாகியிருக்கும்!

இவ்வாறாக மோட்ராகி ஊர் பிள்ளைகளுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர்களில் ஒரு பையன் மாதையன். ஒரு நாள் மாலைப்பொழுதில் மாதையன் விளக்கு எடுத்துச் செல்ல வந்தான். தனிச்சுற்றுக்கு மட்டும் என்று வெளிவந்த பத்திரிகையில் இரண்டு விடுகதைகள் இருந்தன. மாதையனிடம் ''ஒரு விடுகதை போடவா?'' என்று கேட்டேன். ''போடு... ஆழ்வாரு'' என்றான். எனது விடுகதை இதுதான், ''மனிதன் இறங்காத கிணத்துக்குள்ளே மரம் இறங்கிக் கூத்தாடுது''.

மாதையன் தலையைச் சொறிந்தான். ''தெரியவில்லை ஆழ்வாரு, விடை சொல்லு'' என்றான்.

''எனக்கும் தெரியாதே'' என்று பதில் சொன்னேன்.

விளக்கை எடுக்காமலேயே ஊருக்குள் ஓடி, ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்த மாதையன், ''ஆழ்வாரு, இப்போ நான் ஒரு கதை போடுறேன்'' என்றான்.

''போடு'' என்றேன்.

''ஓடி வருது ஒரு குருவி, ஓடி வளைக்குது மறு குருவி, மூக்கு சிவக்குது மூணாவது குருவி, முந்நூறு முட்டையிடுது நாலாவது குருவி'' என்றான்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

இப்போது நான் தலையை சொறிந்து கொண்டிருந்தேன். 'தெரியலையே மாதையா... கதையை விடிய வை'' என்று கேட்டேன்.

அதற்கு அவன், ''உனக்கு ஒரு மாதம் வாய்தா தருகிறேன்'' என்றான்.

கிட்டத்தட்ட வெளியுலகத் தொடர்பே இல்லாத மம்பட்டியான் காட்டில், 'வாய்தா’ என்கிற வார்த்தையைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் இரவுப் பள்ளியில் 'அ’ னா 'ஆ’ வன்னா படிக்கிற மாதையன், ஒரு மாதமானாலும் என்னால் விடை காண முடியாது என்று தீர்மானித்ததைக் கண்டு வியப்படைந்தேன். இந்த நிகழ்வு எனக்கொரு பாடம் சொல்லித் தந்தது. 'நாமே எல்லா அறிவையும் சேமித்து வழங்கத் தேவையில்லை. அறிவு எங்கும் பரவலாகக் கிடக்கிறது. அறிவைத் திரட்டவும், சீரமைத்து பிறருக்கு வழங்கவும் கற்றுக்கொண்டால் போதுமானது’ என்கிற புரிதல் வந்தது.

மோட்ராகி கிராமத்தில் மக்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. மரங்களெல்லாம் வெட்டி கரியாக்கி கீழே அனுப்பப்பட்டு விட்ட பிறகு, மழை குறைந்தது ஒரு புறமிருக்க, பெய்த மழையில் மேல்மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. நிலம் கல்லும், கட்டியுமாக காணப்பட்டது. கற்களைப் பொறுக்கி வரப்பு போல் வைத்துவிட்டு, இருக்கிற மாட்டு எருவை நிலத்தில் பரப்பி, ஆனி மாதத்தில் உழுது விதைப்பது அவர்களது வழக்கம். கேழ்வரகு களியும், மொச்சைக் கொட்டை குழம்பும் அவர்களது வழக்கமான உணவு. உணவு எடுத்துக்கொண்டு, மாடுகளோடு குழந்தைகளும், பெரியவர்களுமாக காட்டுக்குச் செல்வார்கள். பொழுது சாயும்போது வீடு திரும்புவார்கள்.

ஓடைக் கரையிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள். மாடு கன்றுகளை 'பட்டி’யில் சேர்ப்பார்கள். மீண்டும் பாட்டுப் பாடியபடியே கேழ்வரகை மாவாகத் திரிப்பார்கள். அடுப்பை மூட்டி களியாகக் கிண்டுவார்கள். பிறகு, விளக்குக் கம்பத்தின் கீழே வளையமாக உட்காருவார்கள். அப்பொழுது ஆட்டம், பாட்டம், கதை, தகவல் எல்லாம் வெளிப்படும். பகல் நேரத்தில் வேலையின் நிமித்தம் இருந்த களைப்பு, மாலை நேரக் கலை நிகழ்ச்சியில் தீர்ந்து போகும்.

மாதையன் அனுபவத்துக்குப் பிறகு, முன்னிரவு கலைநிகழ்ச்சியில் விடுகதையையும் இணைத்தேன். அப்படித்தான் ஒரு நாள் 'அ’ னா 'ஆ’ வன்னா தெரியாத ஒரு பெண், விடுகதை ஒன்றை எடுத்துவிட்டாள். ''காய் ஆன பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?'' இதற்கும் என்னிடத்தில் விடை இல்லை.

-இன்னும் பேசுவேன்...