Published:Updated:

விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...

காவிரி படுகையைக் காவு வாங்கும் மீத்தேன்..!கரு.முத்து, கு. ராமகிருஷ்ணன் படங்கள்: சீ. குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

##~##

 ரோம் நகர் பற்றி எரிந்தபோது... பிடில் வாசித்த நீரோ மன்னன் மனநிலையில்தான் நம் நாட்டை ஆள்பவர்களும் இருக்கிறார்களோ... என்னவோ? வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரில், அவர்களின் செய்கைகள்தான், நமக்கு இந்த அளவு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. புதிதாக ஒரு வளத்தை உருவாக்குவதுதான் வளர்ச்சி. அதுதான் சரியும்கூட. இது அறிவில்லாதவன்கூட அறிந்து வைத்திருக்கும் உண்மை. ஆனால், ஒன்றை அழித்து... இன்னொன்றை உருவாக்குவதைத்தான் வளர்ச்சி' என்று எந்த அடிப்படையில் அரசாங்கம் நினைக்கிறது என்று புரியவில்லை.

பசுமை விமான நிலையம், சாலை விரிவாக்கம், புதிய பேருந்துநிலையம், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்... என வளமான விவசாயப் பகுதிகளுக்கு வேட்டு வைத்த பல திட்டங்களைப் பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ள 'காவிரி படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்’, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தில், வெடிகுண்டை வீசியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதி தொடங்கி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயம்கொண்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம் வரையிலான வளமான பகுதிகளில் நிலத்தடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க உரிமை பெற்றிருக்கிறது, 'கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்கிற நிறுவனம். இப்பகுதியில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்காமல், எந்தவிதமான தகவல்களையும் தெரிவிக்காமல் இத்திட்டத்துக்கு, அனுமதி வழங்கிஇருக்கிறது, மத்திய அரசு.

விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...

'இங்கு கிடைக்கும் மீத்தேன் வாயு, விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படும்’ என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அதைக் கண்டித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கைவிட்ட பிறகுதான், இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப் போவதே இப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

இதைப்பற்றிப் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 'சுவாமிமலை’ சுந்தர.விமலநாதன், ''காவிரியில் தண்ணீரின்றி டெல்டா பகுதிகள் பாலைவனமாகப் போய்விட்டன. இதற்கிடையில் ஓஎன்ஜிசி என்கிற பெயரில் ஆங்காங்கே பெட்ரோல் எடுக்க ஆரம்பித்து, நிலத்தடி நீராதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிவிட்டனர். இப்போது, மீத்தேன் எடுக்க அனுமதி கொடுத்து இதை பூகம்பப் பகுதியாகவும் ஆக்க முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இப்போது உள்ள நிலவரப்படி,

விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...

கிழக்கு கடற்கரையிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் நிலத்துக்குள் ஊடுருவி இருக்கிறது, என்கிறார்கள் வல்லுனர்கள். இந்நிலையில், நன்கு விளையக்கூடிய வளமான பகுதியை... மீத்தேன் வாயு நிறைந்த பகுதி என்று கண்டறிந்துள்ளனர். என்னாளும் பொன் விளையும் அந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்க, முதலில் மேல் மண்ணை அகற்றிவிட்டு, பிறகு அடியில் உள்ள நிலத்தடி நீரை வெளியேற்றுவார்கள். இந்த இரண்டையும் அப்புறப்படுத்திய பிறகுதான் உள்ளே இருக்கும் நிலக்கரியையோ மீத்தேன் வாயுவையோ எடுக்க முடியும். விவசாயத்துக்கு ஆதாரமான மண்ணையும் நீரையும் அகற்றி விட்டால் விவசாயம் என்னவாகும்?'' என்று கோபம் பொங்கக் கேட்டார்.

''மீத்தேன் வாயு எடுக்கப்படும் நிலங்கள் மட்டுமல்லாது, அது குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வழியெங்குமே விவசாயம் முழுக்க பாதிக்கப்படும். காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர திராணியற்ற அரசுகள், இப்படி பெட்ரோல், மீத்தேன் என்றெல்லாம் எடுத்து, ஒரேயடியாக நிலங்களை தரிசாக்கி... விவசாயிகளை வெளியேற்றத் தீர்மானித்துவிட்டன என்றுதான் தெரிகிறது. 'கெயில்' நிறுவனத்துக்கு எதிராக மேற்கு மண்டல விவசாயிகள் போராடியதை போல பல மடங்கு அதிக எதிர்ப்பைக் காட்டி இத்திட்டத்தை விரட்டியடிப்போம்'' என்று சொன்னார் வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன்.

இந்நிலையில், இத்திட்டத்தைக் கண்டித்து, 'காவிரி படுகையை விழுங்க வரும் மீத்தேன் எடுக்கும் திட்டம்’ என்கிற தலைப்பில் கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. 'பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உரையாற்றினார்கள்.

'இயற்கை வேளாண் விஞ்ஞானி'

கோ. நம்மாழ்வார் பேசும்போது, ''காவிரி படுகையில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மீத்தேன் வாயு

விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...

எடுக்கும் திட்டம் வரப்போகிறது. 500 அடி முதல் 1,500 அடிக்கும் அதிகமான ஆழத்தில் குழி தோண்டி, தண்ணீரை வெளியேற்றிவிட்டு, மீத்தேன் எடுப்பார்கள். இதனால் பூமியில் மிகப்பெரிய அளவில் வெற்றிடம் உருவாகி, நில நடுக்கம் ஏற்படும். ஈராக் போன்ற நாடுகளில் பெட்ரோலுக்காக குழி தோண்டியதால்தான், அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிறது. தமிழகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திப் பகுதியான காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணவு உத்தரவாதமும் கேள்விக்குறியாகும். கடல்நீர் உள்ளே புகுந்து, விளைநிலங்கள் அனைத்தும் உப்பளங்களாக மாறும். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய  வாழ்வாதாரங்களை இழந்து அநாதைகளாக அலையக்கூடிய அவலநிலை உருவாகும்.

நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக, விளைநிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியபோது, 'விவசாயிகளுக்கு மாற்று நிலம் தருவோம், வீடு தருவோம், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை தருவோம்’ என உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், அவற்றில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. நிலங்களை இழந்த விவசாயிகள், அநாதைகளாக திரிகிறார்கள். அதேநிலைதான் காவிரி படுகை விவசாயிகளுக்கும் ஏற்படும்.

2010-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் கழித்துதான் நமக்கு தெரியவந்துள்ளது. மக்களிடம் ஒப்புதல் வாங்கித்தான் எந்த ஒரு பெரிய தொழில் நிறுவனத்தையும் தொடங்க வேண்டும். மீத்தேன் எடுப்பதற்காக, முதல்கட்டமாக 50 இடங்களில் கிணறு தோண்டப் போகிறார்கள். இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களிலேயே நேரடியாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தடுத்து நிறுத்துவோம்'' என்றார், ஆவேசமாக.  

பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தைச் சேர்ந்த லெனின், திருநாவுக்கரசு, அரங்க குணசேகரன், காவிரி பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.என்.எஸ். தனபாலன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பொன்னையன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இனி, விவசாயம் செய்வதைவிட, வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போராடுவதற்குத்தான் விவசாயிகளுக்கு நேரம் சரியாக இருக்கும் போலிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு