Published:Updated:

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

Published:Updated:
பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...
##~##

'பசும்பால்தான் ஆரோக்கியம், தாய்ப்பாலுக்கு மாற்று பசும்பால்தான்...' என்று பசும்பாலுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் நிலவினாலும், பட்டி, தொட்டி தொடங்கி... பெருநகரம் வரை தேநீர் கடைக்காரர்கள், உணவுவிடுதிகள் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எருமைப்பால்தான். காரணம், பசும்பாலைவிட அடர்த்தியாக இருப்பதோடு... அதிகக் கொழுப்புச் சத்தையும் கொண்டிருப்பதும்தான்! அதனால்தான், பலரும் பண்ணை மற்றும் மேய்ச்சல் முறையில் பாலுக்காக எருமைகளை வளர்த்து வருகிறார்கள். பெரும்பாலும், எருமைகளை வளர்ப்பவர்கள், அதற்கென்று மெனக்கெடுவதில்லை. 'வெறுமனே மேய்ச்சலுக்கு மட்டும் விட்டாலே போதும்’ என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அவற்றையும் கொஞ்சம் மெனக்கெட்டுப் பராமரித்தால், கூடுதலாக பால் உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பார்க்க முடியும் என்பதுதான் உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விஷயங்களை மேற்கோள் காட்டி, ''மேய்ச்சல் முறையில் எருமை வளர்ப்பவர்களுக்கு 'பசுமை விகடன்’ சார்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தலாமே...'' என மேட்டூர் அணையைச் சேர்ந்த ஆர். பழனிசாமி என்ற வாசகர் கோரிக்கை வைக்க... உடனே அதை செயல்படுத்த நினைத்தோம்.

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

மேய்ச்சல் முறையில் எருமை மாடுகளை அதிகளவில் வளர்த்து வரும் விவசாயிகள் நிறைந்திருக்கும் பகுதிகளில், வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியும் ஒன்று. கால்நடை வளர்ப்பில் நீண்ட அனுபவம் வாய்ந்த அதே பகுதியைச் சேர்ந்த கால்நடை ஆலோசகர் 'அரக்கோணம்’ ஜெகதீசனை அழைத்துக் கொண்டு... காவனூர் கிராமத்தில் எருமை மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வரும் பத்மாவின் தோட்டத்துக்குச் சென்றோம்.  

இனி, அவர்களின் உரையாடலிலிருந்து...

''20 வருஷமா மேய்ச்சல் முறையிலதான் எருமைகளை வளக்குறேன். என்கிட்ட முரா கலப்பு எருமைங்க ரெண்டும், நாட்டு எருமைங்க ஆறும் இருக்குதுங்க. இதுல நாலு எருமைங்க பால் கறந்துட்டு இருக்கு. மத்ததுங்க, சினையா இருக்குது.

இப்போ, கறக்குற மாடுகள்ல கறவை நின்னதும், அடுத்த நாலும் கறக்க ஆரம்பிச்சுடும். காலையில பாலைக் கறந்துட்டு ஒன்பது மணிக்கு மேய்க்கக் கூட்டிட்டுப் போவோம். ரெண்டு மணி வரை மேய்ச்சுட்டு, திரும்பி வருவோம். சாயங்காலம் பாலைக் கறந்துட்டு, நாலு மணியில இருந்து ஆறு மணி வரை மேய்ப்போம். கடைகள்ல கிடைக்கிற மாட்டுத் தீவனம், அரைச்ச ரேஷன் அரிசி எல்லாத்தையும் கலந்து கொடுப்போம். மொத்தமிருக்கற எட்டு மாட்டுக்கும் சேர்த்து மாசம் மூணு மூட்டை தீவனம் ஆகுது. கறவை கொடுக்கற நாலு மாடுங்க மூலமா தினமும் காலையில எட்டுல இருந்து ஒன்பது லிட்டர் வரை பால் கிடைக்கும். சாயங்காலம், நாலுல இருந்து அஞ்சு லிட்டர் வரை கிடைக்கும்.

சராசரியா நாலு எருமைங்க மூலமா ஒரு நாளைக்கு 13 லிட்டர். பால்காரங்களே கறந்துகிட்டு, லிட்டருக்கு 20 ரூபாய் கொடுத்து எடுத்துக்கிறாங்க. அந்த வகையில மாசத்துக்கு எப்படியும் எட்டாயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும். அரிசி, தீவனத்துக்கு ஆகுற செலவு போக, 5 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்றார், பத்மா.

பசுந்தீவனம் அவசியம்!

அதையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட ஜெகதீசன், ஆலோசனைகளைச் சொல்லத் தொடங்கினார்.

''கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுறது பாரம்பரிய முறை. மேயுறதுதான், கால்நடைகளுக்கும் நல்லது. ஆனா, மேய்ச்சலோட சேர்த்து, தேவையான சரிவிகிதச் சத்துக்களையும் கொடுத்தா... கூடுதலா பால் கொடுக்கும். மேய்ச்சல் புல்லுல புரதச்சத்து இருக்கும். மாவுச்சத்து இருக்காது. அதேநேரம் பசுந்தீவனங்களை வளர்த்து கொடுக்குறப்போ ரெண்டு சத்தும் சேர்த்துக் கிடைச்சுடும்.

எந்த கால்நடைகள வளர்த்தாலும் சரி, குறைஞ்ச இடத்திலயாவது பசுந்தீவனத்தைப் பயிர் செய்யணும். அது இல்லாம கால்நடைகளை வளர்க்கறது தப்பு. எருமைதானேனு அப்படியே விடக்கூடாது. எருமைகள் எவ்வளவு மழையை வேணாலும் தாங்கும். ஆனா, வெயிலை தாங்காது. வெயில்ல மேய விட்டா பால் சுண்டிப்போகும். அதனால, வெயில் நேரத்துல நிழல்ல கட்டிப் போட்டுடறதுதான் நல்லது.

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

கொட்டகைகளையும் கவனமா அமைக்கணும். எருமைக்கு வாலு சின்னதா இருக்கறதால உடம்புல உட்காருற பூச்சி, கொசுக்கள விரட்ட முடியாது. தினமும் மாடுகளை நல்லா கழுவிட்டு, வேப்பெண்ணெயையும், புங்க எண்ணெயையும் கலந்து பூசுனா, பூச்சிகள் தொல்லை இருக்காது. கொட்டகையில கொசு வராத அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்துடணும்'' என்ற ஜெகதீசன் கூடுதல் பால் கிடைப்பதற்கான வழிமுறைகளைச் சொன்னார்.

''சோளத்தட்டையைப் பொடிப்பொடியா நறுக்கி கொடுக்கலாம். சோளத்தோட கொள்ளு, காராமணி விதைங்களையும் கலந்து விதைச்சா, அதுகளோட கொடி சோளத்தட்டைய சுத்திகிட்டு வளரும். அத வெட்டிப் போடும்போது மாடுகளுக்கு ஊட்டமா இருக்கும். பாலும் கூடுதலா கிடைக்கும்.

தவிடு, பிண்ணாக்கையும் தண்ணியில ஊற வெச்சு கொடுக்கணும். கம்பு, பயறு, கேழ்வரகு, மக்காச்சோளம், கடலைப் பிண்ணாக்கு எல்லாத்தையும் அஞ்சு மணி நேரம் ஊற வெச்சு, அரைச்சுக் கொடுத்தா... பால்ல கொழுப்புச்சத்து கூடும். தீவனத்தை காலையில பால் கறக்குறதுக்கு அரை மணி நேரம் முன்னயே மாடுகளுக்கு வெச்சுடணும். அதேமாதிரி பால் கறக்கும்போது கொஞ்சம் பசுந்தீவனத்தைப் போட்டுட்டா... முரண்டு பிடிக்காம மாடுக அமைதியா நிக்கும்.

சாயங்காலம் மேய்ச்சல் முடிஞ்சு, மாடுகள் வந்ததும் தீவனம் வைக்கக் கூடாது. தண்ணி மட்டும் காட்டுனா போதும். ராத்திரி ஒன்பது மணிக்கு மேலதான் தீவனம் வைக்கணும். அதிகளவுல வைக்கோலை மட்டுமே கொடுக்காம பச்சைப்புல், பசுந்தீவனங்களையும் சேர்த்துக் கொடுக்கணும். இதுக்கெல்லாம் பெருசா செலவு பிடிக்காது. கொஞ்ச நிலம் இருந்தாகூட போதும். அதே மாதிரி தீவனப்புல்லை ஒரே தடவையில அறுத்துடணும். கொஞ்சம் கொஞ்சமா அறுக்கக்கூடாது.

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

இப்படியெல்லாம் செஞ்சா... ஒரு நாட்டுஎருமை மாடே, ஒரு நாளைக்கு ஆறு லிட்டர்ல இருந்து, பத்து லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கும். முரா கலப்பு இன மாடா இருந்தா... பதினஞ்சு லிட்டர் வரைக்கும்கூட கிடைக்கும்'' என்ற ஜெகதீசனை ஆச்சரியமாகப் பார்த்த பத்மா,  ''என்னது... ஒரு நாட்டுஎருமையே பத்து லிட்டர் கறக்குமா... முரா, பதினைஞ்சு லிட்டர் கறக்குமா...'' என்று வியப்பின் உச்சியில் நின்றவராக சொன்னதோடு...

''இந்த விஷயங்களையெல்லாம் உடனடியா செயல்படுத்திப் பாக்குறேன். பால் அதிகமா கிடைச்சா எனக்குத்தானே லாபம்'' என்று ஜெகதீசனுக்கு நன்றி சொன்னவர்,

''நான் கேக்காமலேயே தேடி வந்து ஆலோசனை கொடுத்த 'பசுமை விகடன்' குழுவுக்கு என்னோட நன்றிகள்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

தொடர்புக்கு, ஜெகதீசன், செல்போன்: 90430-61897.

18 லிட்டர் பால் கொடுக்கும் பண்ணை எருமை!

பால் உற்பத்தியைப் பெருக்கும் பலே யோசனைகள்...

எருமை மாடுகளை பண்ணை முறையில் வளர்த்து வரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ், அது தொடர்பாக சில விஷயங்களை இங்கே பகிர்கிறார். ''ஆந்திராவுல எருமைகளை 'பர்லு’ என்று சொல்கிறோம். அதிக பாலுக்காக நாட்டு எருமைகளுடன், முரா எருமைகளைக் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பு மாடுகள்தான் இங்கே நிறைய இருக்கின்றன. நான் 30 எருமைகள் வைத்துள்ளேன். நாட்டுச் சோளப்பயிரைத்தான் தீவனமாக கொடுக்கிறோம்.

தமிழ்நாட்டில் மாடுகளுக்கு புளிச்சதண்ணீர், அரிசி மாவு இதையெல்லாம் கொடுக்கிறார்கள். நாங்கள் அதையெல்லாம் கொடுக்க மாட்டோம். கன்று போட்ட இரண்டு மாதத்துக்கு... சோளம், காராமணி, கொள்ளு, கம்பு, கேழ்வரகு எல்லாவற்றையும் ஊறவைத்து அரைத்துக் கொடுப்போம். அரிசித் தவிடு, பிண்ணாக்கு (எள், கடலை, தேங்காய்) ஆகியவற்றையும் கலந்து கொடுப்போம். அதனால், பால் அடர்த்தியாக கிடைக்கும்.

கொசுவுக்காக புகை போட்டால்... மாடுகளுக்கு சரிப்பட்டு வருவதில்லை. அதனால் கொசு வலைகளைத்தான் கட்டுகிறோம். மாடுகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வோம். ஒரு மாடு மூலமாக 12 லிட்டர் முதல் 18 லிட்டர் வரை பால் கிடைக்கும் என்று தன் அனுபவங்களிலிருந்து சொன்னார் சுரேஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism