Published:Updated:

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

சரியான பராமரிப்பு... நிறைவான லாபம்...காசி. வேம்பையன், படங்கள்: பா.கந்தகுமார்கால்நடை

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

சரியான பராமரிப்பு... நிறைவான லாபம்...காசி. வேம்பையன், படங்கள்: பா.கந்தகுமார்கால்நடை

Published:Updated:
கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!
##~##

'வீட்டுக்கு ஒரு எருமை மாடும், முருங்கை மரமும் இருந்தால்... மோசமான வறட்சியையும் சமாளிக்கலாம்’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால், காலப்போக்கில் மேய்ச்சல் நிலங்களின் அழிவும், தீவனங்களின் விலையேற்றமும் கால்நடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகச் செய்து கொண்டிருப்பதுதான் சோகம்!

இத்தகையச் சூழலிலும் கால்நடை வளர்ப்பை விடாமல் செய்து வரும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அவர்களில் ஒருவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனி தீவனத்தில் லாபமில்லை!

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

பால் கறவையை மேற்கொண்டிருந்த வேளையில்தான் செல்வராஜை சந்தித்தோம். கை வேலையை முடித்துவிட்டு நம்மிடம் வந்தவர், ''எங்கிட்ட நாலரை ஏக்கர் நிலமிருக்கு. அதுல, 20 சென்ட்ல வீடு, கொட்டகை, சாலை இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல மாடுகளுக்கான பசுந்தீவனம்; 35 சென்ட் நிலத்துல மல்லாட்ட (நிலக்கடலை); 15 சென்ட்ல காய்கறி; 50 சென்ட்ல சம்பங்கி; 1 ஏக்கர் 80 சென்ட்ல நெல்லு எல்லாமும் இருக்கு.

எல்லா விவசாயக் குடும்பத்துலயும் சொல்ற மாதிரிதான் எங்க வீட்டுலயும், 'படிச்சிட்டு வேலைக்குப் போ'னு சொன்னாங்க. அதனால, ஐ.டி.ஐ. முடிச்சுட்டு, லாரிக்கு பாடி கட்டுற கம்பெனிக்கு வேலைக்கு போனேன். அது எனக்கு சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு, நகைகளை அடகு வெச்சு 16 மாட்டை வாங்கி, பால் பண்ணையை ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்துல கம்பெனி தீவனம்தான் வாங்கிப் போட்டேன். ரெண்டு வருஷம் கழிச்சு, கணக்கு பார்த்தப்ப... வரவுக்கும், செலவுக்கும் சரியா இருந்துச்சு. லாபமில்லாத தொழிலை எதுக்குக் கஷ்டப்பட்டு செய்யணும்னு, வீட்டுத்தேவைக்காக ரெண்டு மாட்டை மட்டும் வெச்சுகிட்டு, மிச்சத்தை வித்துட்டு, விவசாயத்துல இறங்கினேன்.

பலவித பசுந்தீவனம்!

ஆரம்பத்துல ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சேன். அதுல, தார்பாய் தைக்கறதுக்கு உரச்சாக்கு மட்டும்தான் மிச்சமாச்சு. லாபம் ஒண்ணுமில்லை. அப்பறம்தான், நிறைய கருத்தரங்கம், பயிற்சிகள்னு போக ஆரம்பிச்சு, நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

குறிப்பா, கால்நடைகளைத் தாக்குற நோய்களுக்கு மூலிகை வைத்திய முறைகள்; கறவை மாடுகளுக்கான அடர் தீவனங்கள் பத்தின விஷயங்களை நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம், கோ-1, கோ-3, கோ-4, கினியாபுல், வேலி மசால், மல்பெரி...னு பல வகையான பசுந்தீவனங்களை வளக்க ஆரம்பிச்சேன். அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன். இப்போ என்கிட்ட 10 கறவை மாடுகள் இருக்கு.

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

நானே சொந்தமா தீவனம் தயாரிச்சுக்கறதால... இப்ப கறவை மாடு வளர்ப்பு லாபகரமா இருக்கு'' என்ற செல்வராஜ்,

10 மாடு... மாதம்

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

32 ஆயிரம்!

''10 மாடுகள், கொட்டகைக்குனு மொத்தமா மூணரை லட்ச ரூபாய் செலவாச்சு. தினமும் சராசரியா 80 லிட்டர் பால் கிடைக்குது. லிட்டர் 20 ரூபாய்னு விக்குறேன். இதன் மூலமா, தினமும் 1,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனத்துக்கான செலவு 500 ரூபாய் போக 1,100 ரூபாய் லாபம். எப்படியும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன்.

மாட்டுச்சாணத்துல 'பயோ-கேஸ்’ எடுக்குறேன். அது, எங்க குடும்பத்துல நாலு பேருக்கு போதுமானதா இருக்கு. பயோ கேஸ் பிளாண்ட் கழிவுகளை, மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்துறேன். தினம் 45 கிலோ அளவுக்கு மண்புழு உரம் உற்பத்தியாகுது. இதை விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கிறேன்’ என்று சொன்னதோடு...  

மாடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கை வைத்தியம் ஆகியவற்றையும் பகிர்ந்தார். அவற்றை பாடமாக கீழே தொகுத்திருக்கிறோம்.

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

பருவம் வரவைக்கும் கற்றாழை!

'கண்ணில் தண்ணீர் வடிகிற மாடு; தள்ளாடுகிற மாடு; காதுக்கு அருகில், தண்டு வடத்தை ஒட்டி ரோமம் பெரிதாக இருக்கிற மாடுகளை வாங்கக் கூடாது. வால் பெரிதாக, பால் நரம்புகள் நன்றாகத் தெரியும் மாடுகளை வாங்கலாம். மாட்டை வாங்கி வந்ததும், முதலில் அகத்திக்கீரையைக் கொடுக்க வேண்டும். அது மாட்டின் சூட்டைத் தணிக்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு மாட்டைத் தனியாக  கட்டி வைத்து, ஏதாவது நோய் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் மற்ற மாடுகளோடு சேர்க்க வேண்டும்.

பெரிய மாடாக வாங்காமல், கன்றாக வாங்கி வந்தால், விலை குறைவாக இருக்கும். ஒன்றரை வயதில் இருந்து ரெண்டு வயதுக்குள் மாடுகள் பருவத்துக்கு வந்துவிடும். அதைக் கடந்த பிறகும் பருவத்துக்கு வரவில்லை என்றால், ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை முள் இல்லாமல் சீவி, மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து சாப்பிடக் கொடுத்தால் சீக்கிரம் பருவத்துக்கு வந்து விடும்.

மடி நோயை விரட்டும் சாக்பீஸ்!

'மாட்டின் கொம்பு உடைந்தால், ஒட்டடை (சிலந்தி வலை) -50 கிராம், சுண்ணாம்பு-10 கிராம், வெல்லம்-25 கிராம் ஆகிவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, கட்டுத்துணி வைத்து கட்டிவிட வேண்டும். சரியான பிறகு கட்டுத்துணியைப் பிரித்து விடலாம். மடிநோய் தாக்கிய காம்பு, கோழிக்குண்டு மாதிரி வீங்கி இருக்கும்.

காம்பை ஐந்தாறு தடவை வெறும் தண்ணீரை அடித்து நன்றாகக் கழுவி விட்டு... இரண்டு 'சாக்பீஸை’ எலுமிச்சைப் பழச்சாற்றில் குழைத்துத் தடவினால் சரியாகி விடும். அப்படியும் சரியாகாத பட்சத்தில்... அமுக்காரா கிழங்கு-50 கிராம், சுக்கு-10 கிராம் ஆகியவற்றைப் பொடித்து, சுடுதண்ணீரில் கலந்து காம்பில் பூச வேண்டும்.

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!

கோமாரி நோய் தென்பட்டால், தினம் ஒன்று வீதம் மூன்று நாட்களுக்கு நாட்டுக்கோழி முட்டையை உள்ளுக்குக் கொடுப்பதோடு... எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் மேல் புள்ளி வைத்துவிட வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிறை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணையில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நான்கு நாட்களுக்குக் கொடுத்தால் கோமாரி சரியாகி விடும்.

சாணத்துடன் மஞ்சள்தூள் கலந்து கட்டுத்தரையை மெழுகிவிட வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றினைப் பால் குடிக்க விடக்கூடாது. அப்படிப்பட்ட கன்றுக்கு, 200 மில்லி, ஒரு கரண்டி விளக்கெண்ணெய், ஒரு நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து... புட்டிப்பாலாகக் கொடுக்கலாம்.

உப்புசம் வந்த மாடுகளுக்கு 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்துக் கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராக சுண்ட வைத்துக் கொடுத்தால் சரியாகிவிடும். கால் புண், அடிபட்ட புண் ஆகியவற்றுக்கு வேப்பெண்ணெயைத் தடவி விட்டாலே சரியாகிவிடும்’

நிறைவாகப் பேசிய செல்வராஜ், ''ஆரம்பத்துல 16 மாடுகளை வெச்சுருந்தும் என்னால இந்தளவுக்கு சம்பாதிக்க முடியலை. இப்போ 10 மாடுகளை வெச்சே... நல்லா சம்பாதிக்கிறேன். அதுக்குக் காரணம் கை வைத்தியம், தீவன முறைனு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து நான் செய்றதுதான். மாடு வளர்க்கற ஒவ்வொருத்தருமே இதையெல்லாம் சரிவர கடைபிடிச்சா... கறவை மாடுகள் மூலமா எல்லாருமே லாபத்தை அள்ள முடியும்'’ என்று நம்பிக்கையூட்டினார்!

தொடர்புக்கு, செல்வராஜ், செல்போன்: 95669-07377.

அடர் தீவனம் அவசியம்!

அரிசி நொய்-50%, கேழ்வரகு-25%, மக்காச்சோளம்-25% ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில், 3 கிலோ எடுத்து கஞ்சியாக காய்ச்சி, 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த மூன்று கிலோ கடலைப் பிண்ணாக்குடன் கலந்து, மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். இது 10 மாடுகளுக்கு போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ தவிட்டைக் கலந்து கொடுக்க வேண்டும். மதியவேளையில், ஒவ்வொரு மாட்டுக்கும் பலவிதமான புல் வகைகள் கலந்த 15 கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாட்டுக்கும் இரவில், 3 கிலோ உலர் தீவனம் கொடுக்க வேண்டும். காலையில் இளம்வெயிலில் இரண்டு மணி நேரம் மாடுகளை நிறுத்தி வைத்து, வாரம் ஒரு முறை குளிப்பாட்டி விடவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism