Published:Updated:

ஒப்பில்லா வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

ஆடு... மாடு... சவுக்கு... மல்லிகை... நெல்...கு.ராமகிருஷ்ணன், படங்கள்: மு.ராமசாமிபண்ணை

ஒப்பில்லா வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

ஆடு... மாடு... சவுக்கு... மல்லிகை... நெல்...கு.ராமகிருஷ்ணன், படங்கள்: மு.ராமசாமிபண்ணை

Published:Updated:
##~##

'ஒரு கை ஓசை எழுப்பாது’ என்பதுபோல, ஒரே பயிரை மட்டும் சாகுபடி செய்வதால்தான் பல நேரங்களில் பாரம் சுமக்கிறார்கள், விவசாயிகள். ஆனால், விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் ஒருங்கிணைக்கும்போது ஒன்றில் வருமானம் குறைந்தாலும், இன்னொன்று சமன் செய்து விடும். இதை அனுபவப்பூர்வமாக பல விவசாயிகள் உணர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி.

சவுக்குத்தோப்பு, அதனுள்ளே மேயும் ஆடுகள், மல்லிகைப் பூ, நெல் வயல், வயலோரம் மேயும் மாடுகள்... என ஒரு பண்ணைக்குரிய அனைத்து அம்சங்களோடும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, பார்த்தசாரதியின் பண்ணை. மல்லிகைத் தோட்டத்தில் இருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சி பொங்க பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விவசாயம் எனக்கு புதுசில்ல. பரம்பரைத் தொழிலே இதுதான். இடைநிலை ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஓய்வு நேரங்கள்ல விவசாயத்தையும் பாத்துக்கிறேன். இது, தவிட்டு மணல் நிலம். 8 ஏக்கர்ல சவுக்கு, 5 ஏக்கர்ல நெல், 40 சென்ட்ல மல்லிகை,

ஒப்பில்லா வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

33 சென்ட்ல கோ-4 தீவனப்  புல்னு சாகுபடி பண்ணிட்டிருக்கேன். வேலி ஓரத்துல 47 வேம்பு, 3 அரசு, 4 ஆல், 5 புங்கன், 2 கொன்னை மரங்கள் இருக்கு. அதோட 25 நாட்டு ஆடு, 5 கலப்பின மாடுகளையும் வளர்க்கிறேன். நாலு வருஷமா இயற்கை விவசாயம்தான்.

இந்தப் பகுதியில ஆத்துத் தண்ணிக்கு வாய்ப்பில்ல. என்னோட சேர்த்து கொஞ்சபேர்கிட்டதான் கிணறும் இருக்கு. பத்து, பதினஞ்சு அடி ஆழத்துல கிடைக்கிற தண்ணியைத்தான் பயன்படுத்த முடியும். அதுக்கு கீழ உப்புத் தண்ணிதான். அதனால 'போர்’ போடறதுக்கு வழி கிடையாது.

கிணத்துல கிடைக்கிற தண்ணியையும் மழையையும் நம்பித்தான் விவசாயம். அதனாலதான் எல்லாரும் பெரும்பாலும் சவுக்கு நட்டுடுவாங்க'' என்று முன்னுரை கொடுத்த பார்த்தசாரதி, தொடர்ந்தார்.

இயற்கையின் மகத்துவம்!

''எங்க பகுதிக்கு ஏத்த மாதிரி 'மானாவாரி சவுக்கு’னு தனியா ஒரு ரகமே இருக்கு. மழைக் காலங்கள்ல கிடைக்கிற தண்ணியிலயே செழிப்பா வளர்ந்துடும். கோடைக் காலத்துல வறட்சியையும் தாங்கிக்கும்.

இந்த வருஷம் சுத்தமா மழையே இல்லாம போய், கோடையில வெப்பமும் கடுமையா இருக்கறதால, ரசாயன உரம் போட்ட சவுக்கு மரங்கள் எல்லாம், பட்டுப்போக ஆரம்பிச்சுடுச்சு. ஆனா, என் தோட்டத்துல இயற்கை முறையில சாகுபடி செய்றதால சவுக்கு 'தளதள’னு நிக்குது. இதை வெச்சுதான் இயற்கை விவசாயத்தோட மகத்துவத்தை எல்லாரும் புரிஞ்சுக்கணும்'' என்று சொல்லிக்கொண்டே சவுக்கு மரங்களைக் காட்டினார். செழிப்பாக நின்றிருக்கும் அந்த மரங்கள், தலையசைத்து அதை ஆமோதித்தன.

தொடர்ந்து பேசிய பார்த்தசாரதி, ''சவுக்கு மரத்தோட நுனிப்பகுதியில, ஒட்டடை மாதிரி வெள்ளை நிறத்துல பஞ்சு புடிச்சு பாதிப்பு வரும். இது ஒரு வகையான பூச்சித் தாக்குதல். இயற்கை முறையில சாகுபடி செய்யறப்போ இந்தப் பூச்சியும் வர்றதில்லை.

ஒப்பில்லா வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

இயற்கை சாகுபடிங்கறதுக்காக பெருசா மெனக்கெடவும் வேண்டியதில்லை. என்னோட ஆடுகள்தான் இங்க இருக்குற சவுக்கு மரங்களுக்கு உரம் போடுதுங்க'' என்றவர், ஆடுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''சவுக்குத் தோப்புல குறிப்பிட்ட இடத்துக்கு வலையைக் கட்டி, அதுக்குள்ள ஆடுகளை விட்டு காலையில 9 மணியில இருந்து சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் மேய விடுவோம். சவுக்குல கவாத்து பண்றப்போ கிடைக்கற இலைகளையும் அப்படியே போட்டுட்டா... அதுகளையும் ஆடுகள் சாப்பிட்டுக்கும்.

ஒவ்வொரு நாளும் வலையை இடம் மாத்திக் கட்டி மேய விடுவோம். அதனால வயல் முழுக்க செழிம்பா ஆட்டு மூத்திரமும், புழுக்கையும் கிடைச்சுடும். களை எடுக்குற செலவும் மிச்சம். அதனாலதான் மண் நல்ல வளமா இருக்கு. சவுக்கும் நல்லா வளருது. மேய்ச்சல் இல்லாம, ஆடுகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை வேப்பந்தழை, அரச இலை, ஆல இலை, புங்கன் இலை, கொன்னை இலைகளையும் சாப்பிடக் கொடுப்போம்.

சவுக்கு நடவு செஞ்சு, ரெண்டு வருஷம் கழிச்சுதான் ஆடுகளை சவுக்குத் தோப்புக்குள்ள விடணும். ரெண்டு வருஷத்துல, இருபதுல இருந்து இருபத்தஞ்சு அடி உயரத்துக்கு சவுக்கு வளர்ந்துடும். அதனால, ஆடுகளால பாதிப்பு வராது. ராத்திரி நேரங்கள்ல ஆடு கட்டுற இடத்துல கிடைக்கிற கழிவுகளை, நெல், தீவனப்புல், மல்லிகைச் செடிகளுக்குப் போட்டுடுவோம். மழைக் காலத்துல எங்க சவுக்குத் தோப்புல தண்ணி தேங்கும். அந்த சமயத்துல ஆடுகளை மேய்க்க மாட்டோம்.

ஆட்டில் அவ்வளவும் லாபம்!

ஆடுகளுக்குப் புண்ணு வந்தா, வேப்பெண்ணெய்தான் மருந்து. நல்ல மேய்ச்சல் இருக்கறதால ஆடுகள் ஆரோக்கியமா இருக்குது. அதனால, சினை பிடிக்கிறதுல, குட்டி போடுறதுல பிரச்னையே இல்லை.

நாட்டு வெள்ளாடுங்கிறதால, ஒவ்வொரு ஈத்துலயும் ரெண்டுல இருந்து நாலு குட்டிகள் வரைக்கும் கிடைக்கும். ஆனா, நான் குட்டிகளா விக்கிறதில்லை. நாலு வருஷம் வளர்த்துதான் விற்பனை பண்றேன். இந்த நாலு வருஷத்துல மொத்தம் ஆறு ஈத்து மூலமா, ஒவ்வொரு ஆடும் குறைந்தபட்சம் 16 குட்டிகள் வரை போடும். ஆட்டு எருவும் அதிகளவுல கிடைக்கும்.

வருஷத்துக்கு சராசரியா நாப்பது ஆடுகளை விற்பனை பண்றோம். ஒரு ஆடு சராசரியா 5 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். ஆடுகள் மூலமா, வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுடும். ஆடுகளுக்காக தனியா எந்தச் செலவும் செய்யாததால இது முழுக்கவே லாபம்தான்'' என்ற பார்த்தசாரதி, மற்ற பயிர்கள் மற்றும் வருமானம் பற்றி சொன்னார்.

ஒப்பில்லா வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

சக்கைப் போடு போடும் சவுக்கு!

''அஞ்சு வருஷத்துல சவுக்கு அறுவடை செய்றோம். ஒரு ஏக்கர்ல குறைஞ்சபட்சம் 40 டன் மகசூல் கிடைக்குது. ஒரு டன் மூவாயிரம் ரூபாய்க்கு விலை போகுது. இது மூலமா ஏக்கருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம். செலவு போக, 90 ஆயிரம் ரூபாய் லாபம். 8 ஏக்கர் சவுக்கு மூலமா, வருஷத்துக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.

5 ஏக்கர்...

ஒப்பில்லா வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

85 ஆயிரம்!

வருஷத்துல ஒரு போகம் மட்டும் நேரடி விதைப்பா நெல் சாகுபடி செய்றோம். மாட்டு எரு, ஆட்டு எருதான் உரம். வேப்பங்கொட்டைத் தூள், மாட்டு மூத்திரம்தான் பூச்சிவிரட்டி. ஒரு ஏக்கருக்கு சராசரியா 30 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்குது.

ஒரு மூட்டை சராசரியா 900 ரூபாய்க்கு விலை போகுது. 5 ஏக்கர் நெல் மூலமா, வருஷத்துக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக, எப்படியும் 85 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும். வைக்கோல், மாடுகளுக்குத் தீவனமாயிடும்.  

தீவனச்செலவு இல்லை!

என்கிட்ட ரெண்டு கலப்பினக் கன்னுகுட்டி, மூணு பெரிய மாடுகள் இருக்கு. எப்பவும், ரெண்டு மாடுகள் கறவையில இருக்கும். தினமும் 12 லிட்டர் பால் கிடைக்குது. லிட்டர் 22 ரூபாய்னு ஊத்துறதுல, தினமும் 264 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாடுகளையும் சவுக்குத் தோப்புக்குள்ள மேய விடுவோம். சவுக்குத் தழைகளை மாடு திங்காது. களைகளையும் வரப்பு ஓரங்கள்ல உள்ள இலை, தழைகளைத்தான் மேயும். தனியா தீவனமும் சாகுபடி பண்றதால, மாடுகளுக்கு தீவனத்துக்காக தனியா செலவழிக்கிறதில்லை.

மல்லிகைக்கு நாலு வயசு ஆகுது. இதுக்கும் வேப்பங்கொட்டைத் தூள்தான் பூச்சிவிரட்டி. வருசத்துல 10 மாசம் பூ கிடைக்கும். தினமும் சராசரியா, 2 கிலோ கிடைக்குது. ஒரு கிலோ 100 ரூபாய்ல இருந்து 600 ரூபாய் வரைக்கும்கூட விலை போகும். சராசரியா 150 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், தினமும் 300 ரூபாய் வருமானம். இதுல பறிப்புக்கூலி, போக்குவரத்து செலவெல்லாம் போக, தினமும் 150 ரூபாய் லாபமா மிஞ்சும். எப்படிப்பாத்தாலும், வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம மல்லிகையில லாபம் கிடைக்கும்.

மல்லிகைக்கு கவாத்து செய்றப்போ கிடைக்கிற கிளைகளும் ஆடுகளுக்குத் தீவனமாயிடும். ஆடு தின்னு கழிக்கிற குச்சிகளை சவுக்குத் தோப்புல போட்டு  மிதிச்சிடுவோம். இதுவும் நல்ல உரமாயிடும்'' என்று ஒவ்வொன்றையும் அழகாக விவரித்த பார்த்தசாரதி,

''என்னைப் பொருத்தவரை பண்ணையில ஆடு, மாடு, கலப்பு பயிர்கள்னு சேர்த்து வெச்சுருக்கறதால, ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்தாசையா இருந்து, செலவைக் குறைக்குது. குறைஞ்ச உழைப்புல, நிறைவான லாபம் கிடைச்சுடுது. ஏதாவது ஒண்ணை மட்டும் செஞ்சா... நட்டந்தான் மிஞ்சும்'’ என்று சொல்லி, விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பார்த்தசாரதி, செல்போன்: 94423-45745.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism