Published:Updated:

அசத்தலான அலங்கார மீன் வளர்ப்பு...

தென்னைகளுக்கு நடுவே தெம்பான வருமானம்..! என். சுவாமிநாதன் படங்கள்: ரா. ராம்குமார்

அசத்தலான அலங்கார மீன் வளர்ப்பு...

தென்னைகளுக்கு நடுவே தெம்பான வருமானம்..! என். சுவாமிநாதன் படங்கள்: ரா. ராம்குமார்

Published:Updated:

மீன்வளம்

##~##

எந்தப் பயிரை நடவு செய்தாலும், கூடவே ஊடுபயிரை சாகுபடி செய்யும் விழிப்பு உணர்வு சமீபகாலமாகப் பெருகி வருகிறது. இந்நிலையில், ''இடை சாகுபடியை, பயிராகத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உயிராகவும் செய்யலாம்'' என்கிறார், தென்னை மரங்களுக்கு இடையில் தொட்டிகளை அமைத்து, அலங்கார மீன்களை வளர்த்துவரும் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், டாக்டர். மகேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகர்கோவில்-கீழ மணக்குடி சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, மேலமணக்குடி. இங்கிருந்து பள்ளம் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் உள்ள தெற்கு புத்தளம் கிராமத்தில்தான், அடர்ந்தத் தென்னைந் தோப்பில் 'ஜே.ஜே. கலர் மீன்பண்ணை’யை அமைத்திருக்கிறார், டாக்டர். மகேஷ்.

மருத்துவப்பணிக்கு இடையில் விவசாயம்!

தென்னை மரங்களுக்கு இடையே நடந்துகொண்டே நம்மிடம் பேசிய மகேஷ், ''எங்க தோட்டத்துல இருந்து பார்த்தாலே கடற்கரை தெரியும். தோட்டத்துக்கும், கடற்கரைக்கும் 300 அடிதான் இடைவெளி.

எங்க குடும்பம் பூர்வீகமாகவே டாக்டர் குடும்பம். என் இரண்டு வாரிசுகளும்கூட டாக்டர்கள்தான். ஆனாலும், சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துலயும் ஆர்வம் அதிகம். 1982-ம் வருஷம்தான் 'தென்னந்தோப்புல அலங்கார மீன் வளர்க்கலாம்’னு முடிவு செய்தேன். தூத்துக்குடி மீன் வள ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியரா இருந்த ஜேம்சன் ரொம்பவும் உதவி பண்ணுனாரு.

அசத்தலான அலங்கார மீன் வளர்ப்பு...

1983-ம் வருஷம் 'கனரா பேங்க்' அதிகாரிகள், பண்ணையைப் பார்வையிட்டுட்டு மூணு லட்ச ரூபாயை தொழிற்கடனா கொடுத்தாங்க. ஆரம்பத்துல, மீன்களை சந்தைப்படுத்த தெரியாம, பண்ணையிலேயே வெச்சு வித்திட்டு இருந்தேன்.

சுருட்டிய சுனாமி... கை கொடுத்த கனரா வங்கி!

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அலங்கார மீன் வளர்ப்புத் தொழிலைக் கத்துக்கிட்டு நல்ல வருமானம் எடுத்துக்கிட்டிருந்த நேரத்துல சுனாமி வந்து அவ்வளவையும் காலி பண்ணிடுச்சு. தோப்புக்குள்ள தண்ணி புகுந்து, அவ்வளவு மீனையும் அடிச்சுட்டுப் போயிடுச்சு. அதோட என் தோட்டத்து மண்ணோட தன்மை, நீர்வளம் எல்லாம் மாறிப் போச்சு.

திரும்பவும் பழையபடி மாத்துறதுக்கு ஒன்பது மாசம் ஆகிடுச்சு. மறுபடியும் கனரா வங்கியில் உதவி கேட்டுப் போய் நின்னேன். மறுப்பே சொல்லாம, அவுங்க கொடுத்த கடன் உதவியால இன்னிக்கு அலங்கார மீன் வளர்ப்புல நல்ல வருமானம் வந்துட்டு இருக்கு.

இந்த பத்து ஏக்கர் தோப்புல, இருபது அடி இடைவெளியில ஆயிரத்து நூறு தென்னை மரங்கள் நிக்குது. அதுல ரெண்டரை ஏக்கர்லதான் தென்னைகளுக்கு நடுவுல ஏழு அடி சுற்றளவு, ஒரு அடி உயரத் தொட்டிகள் கட்டி, அலங்கார மீன்களை வளர்க்கறேன்'' என்று முன்னுரை கொடுத்த மகேஷ், மீன் வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பத் தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

அசத்தலான அலங்கார மீன் வளர்ப்பு...

கார அமிலத் தன்மை முக்கியம்!

'அலங்கார மீன் வளர்ப்புக்கு தண்ணீரின் தன்மை ரொம்ப முக்கியம். கார, அமிலத் தன்மையின் அளவீடு 6.5 முதல் 7.5 வரை இருந்தால், ஏஞ்சல், ஜீப்ரா, கொளரா, டைகர் பார்ப், ரோஷி பார்ப் மீன்களை வளர்க்கலாம். 7.5 முதல் 8.5 வரை இருந்தால், கோல்டு, கொய்கார்ப், மாலி ரக மீன்களை வளர்க்கலாம்.

நாம் வளர்க்க விரும்பும் மீன்களுக்கு ஏற்றவாறு, தண்ணீரில் கார அமிலத் தன்மையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இதற்காகவே பண்ணையில் கார, அமில அளவுமானி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வளர்ச்சிக்கேற்ற விலை!

அசத்தலான அலங்கார மீன் வளர்ப்பு...

கப்பி, மாலி மாதிரியான மீன்கள், நேரடியாகக் குஞ்சுகளைப் பிரசவிக்கும் தன்மை கொண்டவை. 5 பெண் மாலிக்கு, ஒரு ஆண் மாலி என்ற விகிதத்தில்... 500 பெண் மாலி மீன்களையும், 100 ஆண் மாலி மீன்களையும் தொட்டியில் விடுவோம். இவை, 28 நாட்களுக்கு ஒரு முறை குஞ்சுகளைப் பிரசவிக்கும். ஒரு பெண் மாலி, 50 முதல் 150 குஞ்சுகள் வரை பிரசவிக்கும்.

இக்குஞ்சுகளைப் பெற்ற மீன்களே, அவற்றைச் சாப்பிட்டுவிடும் என்பதால், தென்னை ஓலைகளை வெட்டி தொட்டிக்குள் போடுவோம். குஞ்சுகள் அவற்றுக்கடியில் ஒளிந்து உயிர் பிழைத்துக் கொள்ளும். குஞ்சுகள் பிறந்த 4-ம் நாளில் அவற்றை தனித் தொட்டிக்கு மாற்றி விடுவோம். இதற்கான தொட்டியை 20 அடி நீளம், 5 அடி அகலம், ஒன்றரை அடி ஆழத்தில் அமைத்துள்ளோம்.

இரண்டு மாதங்கள் வரை இவற்றை வளர்த்து, ஒரு குஞ்சு... ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறோம். அதிக நாட்கள் வளர்த்தால், வளர்ச்சிக்கேற்ற கூடுதல் விலை கிடைக்கும்.          

இரண்டு வயது மீன் 100 ரூபாய்!

தங்க மீன், கொய்கார்ப் ஆகிய ரகங்கள் ஒட்டும் தன்மையுள்ள முட்டைகளை இடும் மீன்கள். இவற்றில், 4 மாதங்கள் முதல்

அசத்தலான அலங்கார மீன் வளர்ப்பு...

6 மாதங்கள் வரை வயதுள்ள மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏற்றவை. ஒரு பெண் மீனுக்கு, ரெண்டு ஆண் மீன்கள் என்ற விகிதத்தில் சேர்த்து தொட்டிக்குள் விட்டு... முட்டைகள் ஒட்டிக்கொள்ள வசதியாக, நைலான் வலை, நைலான் நூல், சங்கிலிப் பாசி... போன்றவற்றில் எதையாவது தொட்டிக்குள் போடுவோம்.அதிகாலை நேரத்தில், ஆண் மீன், பெண் மீனை விரட்டத் துவங்கும்போது, பெண் மீன்கள் ஜவ்வரிசி வடிவிலான முட்டைகளை இடும். முட்டைகள், நைலான் வலையில் ஒட்டிக்கொள்ளும். இவை, 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் பொரிந்து விடும். குஞ்சுகள் பொரியத் துவங்கியவுடன், பெற்றோரை வேறு தொட்டிக்கு மாற்றி விடுவோம். காரணம், இந்த பெற்றோர் மீன்கள், குஞ்சுகளைப் பிடித்து உண்ணும் தன்மை கொண்டவை. ஆகையால், இப்படி செய்வது அவசியம். பொரிந்த குஞ்சுகளை 30-ம் நாளுக்கு மேல் விற்கலாம். இந்த வயதில் ஒரு குஞ்சு, ஒரு ரூபாய் என விலை போகிறது. இரண்டு மாத வயதில், 5 ரூபாய் வரை விற்கலாம்.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட தங்க மீன், கொய்கார்ப் ரக மீன்களை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விலை வைத்து விற்கலாம்.    

ரோஸி பார்ப், டைகர் போன்ற அலங்கார மீன்கள் ஒட்டாதத் தன்மையுள்ள முட்டையிடக் கூடியவை. சினை முதிர்ச்சியடைந்த நான்கு மாதம் நிரம்பிய பெண் டைகர் மீன் ஒன்றுக்கு, இரண்டு ஆண் மீன்கள் என்கிற விகிதத்தில் தொட்டிக்குள் விட்டு, நிறைய பாசி, நைலான் வலைகளையும் போட்டு விடுவோம். முட்டையிட்ட 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்தில் குஞ்சுகள் பொரிந்து விடும். உடனே, பெற்றோரை வேறு தொட்டிக்கு மாற்றி விடுவோம். இந்த பெற்றோர் மீன்களுக்கும், தனது குஞ்சுகளை உண்ணும் பழக்கம் உண்டு.  

கூடு கட்டும் மீன்கள்!

கொளரா, ஃபைட்டர் ஆகிய ரக மீன்கள் நுரையாலேயே கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையவை.

இரண்டு மாத வயதான ஆண்-பெண் ஃபைட்டர் மீன்களை, ஒரு கண்ணாடி ஜாடியில் விட்டு, ஒரு துண்டு வாழை இலையைப் போட்டு விடுவோம். ஆண் மீன், கண்ணாடி ஜாடியின் மேல் பகுதியில் நுரை போல எச்சிலை உமிழ்ந்து, கூடு கட்டி... பெண் மீனை வளைத்துப் பிடித்து இறுக்கி, வயிற்றிலிருந்து முட்டைகளைப் பிதுக்கி நுரையில் ஒட்டி வைக்கும்.

ஓரளவுக்கு முட்டைகள் வெளியேறியவுடன், பெண் மீனை வெளியில் எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், ஆண் மீன் தொடர்ந்து இறுக்கி தொல்லை கொடுக்கும். முட்டையிட்ட 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்தில் முட்டைகள் பொரியும். ஒரு மாத வயதான ஃபைட்டர் மீன் குஞ்சு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விலை போகிறது. அதற்கு மேல் வளர்ச்சியைப் பொருத்து விலை கிடைக்கும்.'

தொழில்நுட்பத் தகவல்களைப் பகிர்ந்த மகேஷ்,  

உயிர் உணவுதான் சிறந்தது!

''பொதுவா, அலங்கார மீன்களுக்கு இயற்கை உணவு, உயிருள்ள உணவுதான் நல்லது. அப்போதான் வளர்ச்சி வேகமா இருக்கும். ஒரு நாளைக்கு காலை, மத்தியானம், ராத்திரினு மூணுவேளை உணவு கொடுக்கணும். குளக்கரைகள்ல கிடைக்கிற டாபினியா, மொய்னா, ரோட்டிபர்... மாதிரியான மிதவை நுண்ணியிரிகள்தான் உயிருள்ள உணவு.

தாய் மீன்களுக்கு கொத்துப்புழு, மண்புழு மாதிரியான புழுக்களைத் துண்டு துண்டா வெட்டிக் கொடுக்கலாம்.  எங்க பகுதி குளங்கள்ல அதிக அளவு மீன்கள் இருக்கறதால, இந்த மிதவை நுண்ணுயிரிகள் கிடைக்கறதில்லை. அதனால, காலையிலயும் ராத்திரியும் 10 மீன்களுக்கு 2 கிராம்ங்கிற அளவுல குச்சித்தீவனம்தான் கொடுக்கிறோம். மதியம் களி செஞ்சு கொடுக்கிறோம்.

வாரம் ஒரு தடவை தண்ணியை மாத்திடுவோம். இந்த தண்ணியை தென்னை மரங்களுக்கு விட்டுடுவோம். இது நல்ல இயற்கை உரமா இருக்கறதால, மகசூலும் அதிகமா கிடைக்குது.

நாமளே பாத்தா கூடுதல் லாபம்!

மீன் விற்பனையில பிரச்னையே இல்ல. வியாபாரிங்க நேரடியா பண்ணைக்கே வந்து வாங்கிட்டு போயிடுறாங்க. தோட்டத்தில நாலு பேர் வேலை பார்க்குறாங்க. மீன் பண்ணையையும் அந்த நாலுபேர்தான் பாத்துக்கிறாங்க. அவங்களுக்கான சம்பளம், கரன்ட் செலவு எல்லாம் போக, மீன் பண்ணையில இருந்து மட்டும் மாசம் 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுட்டு இருக்கு.

நான் டாக்டர் வேலைக்கு இடையில பொழுது போக்குக்காகத்தான் இதைப் பண்றேன். ஒரு விவசாயி முழுநேரமா மெனக்கெட்டு, அவரே பராமரிச்சா... இன்னும் அதிக லாபம் பார்க்க முடியும்'' என்று உறுதியான குரலில் சொன்னார்.

 தொடர்புக்கு,
டாக்டர். மகேஷ்,

செல்போன்: 99443-38752.

 இப்படித்தான் கிண்டணும், களி !

நாட்டுச்சோளம்-5 கிலோ, கம்பு-5 கிலோ, சோயா பிண்ணாக்கு-5 கிலோ, உளுந்துபொடி-3 கிலோ, கருவாட்டுத்தூள்-2 கிலோ, மரவள்ளிக்கிழங்கு மாவு-5 கிலோ... இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, மாவரைக்கும் இயந்திரத்தில் அரைத்துப் பொடியாக்க வேண்டும். இதில், வைட்டமின்-சி (100 மில்லி கிராம்) மாத்திரை-50, பி-காம்ப்ளக்ஸ் மாத்திரை-50 ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்கலவையில், ஒரு கிலோ எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி களியாகக் கிண்டி, மீன்களுக்குக் கொடுக்கலாம். பத்து மீன்களுக்கு 50 கிராம் களி என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism