கூட்டம்
##~## |
தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடும் இவ்வேளையிலும், இயற்கை வேளாண் பண்ணைகள் பலவும் செழித்துக் காணப்படுகின்றன. இதற்குக் காரணமே... நம்முடைய பாரம்பரிய, எளிய விவசாயத் தொழில்நுட்பங்கள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையெல்லாம் அனைவருக்கும் சொல்லித்தரும் விதமாக... கடந்த 10-ம் தேதி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், சீதா கல்யாண மண்டபத்தில், 'வறட்சியிலும் வெற்றி தரும் இயற்கை வேளாண்மை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 'பசுமை விகடன்’ மற்றும் ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளை இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், 850-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பேசிய நம்மாழ்வார், ''ஒவ்வொரு விவசாயிக்கும், அவர் பெறும் வேளாண் அனுபவங்களே பாடம். அதில் உள்ள நிறை, குறைகளைக் கண்டறிந்து மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கிராமங்கள்தோறும், விவசாய அமைப்புகளை ஏற்படுத்தி, இயற்கை வழி வேளாண்மை, இடுபொருட்கள் தயாரிப்பு, சிக்கன நீர் மேலாண்மை மற்றும் விற்பனை வாய்ப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இயற்கை விவசாயிகளுக்குப் பசுமை விகடன் ஒரு பாடப் புத்தகமாக விளங்கி வருகிறது. இதை மட்டுமே படித்து, வேளாண் தொழில்நுட்பங்களைக் கையாள்வதாக நெகிழ்ச்சியோடு என்னிடம் பல விவசாயிகள் கூறியுள்ளார்கள்'' என்று பெருமையோடு குறிப்பிட்ட நம்மாழ்வார்,
''நாடு முழுவதும் 25 இயற்கை வேளாண்மை கல்லூரிகளைத் துவக்கி, அவற்றை இணைத்து இயற்கை வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒன்றை ஈரோடு மாவட்டத்தில் துவங்கஉள்ளோம்.

இயற்கை ஆர்வலர்கள் பலருடன் கைகோத்து அதற்கான வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்'' என்கிற இனிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
'வறட்சியில் வளம் தரும் பாரம்பரிய பயிர்கள்’ என்ற தலைப்பில் அறச்சலூர் செல்வம், 'கைகொடுக்கும் கால்நடை வளர்ப்பு’ என்ற தலைப்பில் மருத்துவர் காசிப்பிச்சை, 'குறைந்த நீரில் நிறைந்த மகசூல்’ என்ற தலைப்பில் முன்னோடி பெண் விவசாயி கலைவாணி, 'லாபம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்’ என்ற தலைப்பில் 'ஆட்டூட்டம்’ அருணாச்சலம் ஆகியோர், தங்களின் அனுபவப்பூர்வமான கருத்துகளை விரிவாகவே எடுத்து வைத்தனர்.
விவசாயிகளுக்கான மதிய உணவு ஏற்பாடுகளை தானே முன்வந்து செய்து கொடுத்த 'சாரதா கல்விக் குழும'த்தின் தாளாளர் ராமகிருஷ்ணன், ''நீண்டகாலமாக ரசாயனப் பயன்பாடு உள்ள மண்ணில் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தும்போது ஆரம்பத்தில் மகசூல் குறையலாம். ஆனால், காலப்போக்கில் மண் பழைய நிலைமைக்கு திரும்பி, தொடர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும்'' என்று ஒரு விவசாயியாக தன்னுடைய அனுபவத்திலிருந்து பல விஷயங்களை மேடையில் பகிர்ந்துகொண்டது... பாராட்டத்தக்கது!