Published:Updated:

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

சந்தோஷ வருமானம் தரும் சண்டைக்கோழி! ஜி. பழனிச்சாமி படங்கள்: க. ரமேஷ்

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

சந்தோஷ வருமானம் தரும் சண்டைக்கோழி! ஜி. பழனிச்சாமி படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:

சேவல் வளர்ப்பு

##~##

பொங்கல் விழாவின்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போல, சேவல் சண்டையும் படுபிரபலம் தமிழகத்தில். பொங்கலின்போது மட்டுமல்லாமல், கோயில் விழா சமயங்களிலும் சேவல் சண்டை தொன்றுதொட்டு நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டுஇருந்தாலும், சண்டைக்கோழி வளர்ப்பு என்பது தமிழகத்தில் தொடர்கிறது. அதாவது... பந்தயத்தில் ஜெயித்த குதிரை, ஜல்லிக்கட்டில் யார் கையிலும் சிக்காத காளைகள்... போன்றவற்றை பெருமையாக, கௌரவத்துக்கு வீட்டில் வளர்ப்பது போல இந்தக் கோழிகளை வளர்க்கிறார்கள்.

பயிற்சி பெற்ற சண்டைக் கோழிகளுக்கு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேவை அதிகம் இருப்பதும், இத்தகையக் கோழி வளர்ப்புக்குக் கூடுதல் காரணமாக இருக்கிறது!

ஈரோடு, தர்மபுரி, நாமக்கல்... போன்ற பகுதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்போடு சண்டைக்கோழிகளையும் வளர்த்து வருகிறார்கள் விவசாயிகள் பலரும்! அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் சண்டைக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சீனு என்கிற ஆறுமுகம் மற்றும் அரசு  என்கிற திருநாவுக்கரசு இருவரும் இப்பகுதிகளில் படு பிரபலம். சண்டைக்கோழியில் ஆர்வமுள்ள பெரும்பாலானோருக்கு இவர்களைத் தெரிந்திருக்கிறது. அந்தளவுக்கு இவர்களது சேவல்கள் புகழ்பெற்றவையாம்.

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

சிவகிரி கிராமத்தில், சீனுவின் தோட்டத்தில் சின்னச்சின்ன வீடுகள் போன்ற கூண்டுகளில் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன, பல வண்ணச்சேவல்கள்.

அவற்றின் 'கொக்கக்’ சத்தம்... குஞ்சுகளுடன் பவனி வரும் தாய்க்கோழிகள்... என தோட்டமே பரபரப்பாக இருந்தது.

இரண்டு சேவல்களை மோதவிட்டு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த சீனு, அவற்றைக் கட்டிவிட்டு, கொடுக்கு மீசையை நீவியபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

தமிழ்நாட்டுச் சேவலுக்கு மவுசு அதிகம்!

''பூர்விகமான விவசாயக் குடும்பம் நாங்க. கிட்டத்தட்ட முப்பது வருஷமா சண்டைச் சேவல் வளர்த்துட்டுருக்கேன். இந்த ஏரியாவுல எல்லா வீட்டுலயும் கண்டிப்பா ஒண்ணு, ரெண்டு சேவல் இருக்கும்.

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

நான் இதை வியாபாரமா செய்றதால... முப்பது, நாப்பது சேவல்களை வெச்சுருக்கேன். தமிழ்நாட்டுல சேவல் சண்டைக்கு அனுமதி கிடையாது. அதனால, என்னோட வாடிக்கையாளர்கள் ஆந்திரா, கர்நாடகாதான். அங்க சேவல் சண்டைக்குத் தடையில்ல. குறிப்பா, கர்நாடகாவோட மங்களூர்ல அடிக்கடி பெரிய அளவுல சேவல் சண்டை நடக்கும். அதுல தமிழ்நாட்டுச் சேவல்கள்தான் அதிகமா களத்துல இருக்கும்.

நம்ம ஊரு சேவல்கள் ஆக்ரோஷமா சண்டை போட்டு ஜெயிக்கறதால, இதுக்கு மவுசு அதிகம்'' என்று முன்னுரை கொடுத்த சீனு, தொடர்ந்தார்.

பத்து மாதத்தில் சண்டைப் பயிற்சி!

''மயில், கீரி, செங்கருப்பு, கோழிக்கருப்பு, பச்சைக்கால், வெள்ளை, காகம், வல்லூறு, ஆந்தை, மயில், பொன்னிறம்னு சேவல்கள்ல பல ரகங்கள் இருக்குது.

இங்கிருக்குற எல்லா சேவல்களுமே என் பண்ணையில பொரிச்சதுதான். நல்ல ஆரோக்கியமான பெட்டைக்கோழியோட, கம்பீரமான சண்டைச் சேவலை இணைச்சு கூண்டுக்குள்ள ஒண்ணா அடைச்சு வெச்சுடுவோம்.

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

இனச்சேர்க்கை முடிந்ததும், பெட்டைக்கோழியை சேவல்கிட்ட இருந்து தனியா பிரிச்சு, கூண்டுல அடைச்சுடுவோம். அந்தக் கோழி 14 முட்டை வரை போடும். அதை அப்படியே எடுத்து வெச்சு, அந்தக் கோழி மூலமாவே அடை வெப்போம். எப்படியும் ஏழு சேவல் குஞ்சுகள் வரை கிடைக்கும்.

80 நாள் வரைக்கும் தாய்க்கோழியோட மேயும். அதுக்கப்பறம் தாய்க்கோழி, குஞ்சுகளை தனியா விரட்டி விட்டுடும். அந்தக் குஞ்சுகளை ஒண்ணா மேய விட்டோம்னா... கொஞ்ச நாளையில அதுக ஒண்ணுகொண்ணு சண்டை போட ஆரம்பிக்கும்.

அந்த சமயத்துல அதுகள பிரிச்சு, ஒண்ணுக்கொண்ணு முகம் பார்க்க முடியாதபடி, தனித்தனி கூண்டுல அடைச்சு வெச்சுடணும். அப்பதான் திடீர்னு அடுத்த சேவலை நேருக்கு நேரா பாத்ததும் ஆக்ரோஷமா சண்டை போடும்.

பொரிஞ்சு 10 மாசம் முடிஞ்ச பிறகுதான் சண்டைப் பயிற்சி கொடுக்கணும். கால்ல கத்தி கட்டறதெல்லாம் கூடாது. நாங்க சண்டைச்சேவல்களை வளர்த்து விற்பனை பண்றதோட சரி. சேவல் சண்டையில கலந்துக்கறது இல்லை'' என்ற சீனு, சண்டைக்கோழிப் பராமரிப்பு மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார்.

சிறுதானியம்தான் உணவு !

''கம்பு, சோளம் ரெண்டையும் கலந்து ஒரு சேவலுக்கு தினமும் 150 கிராம் அளவுக்கு கொடுப்போம். எப்பவும் குடிக்கறதுக்கு கூண்டுக்குள்ளாற தண்ணி இருக்குற மாதிரி பாத்துக்குவோம்.

சேவலை 7 கிலோவுக்கு மேல எடை கூட விடக்கூடாது. எடை அதிகமானா... உயரப் பறந்து சண்டை போட முடியாது. ஏதாவது நோய் அறிகுறி தெரிஞ்சா... உடனே வைத்தியம் பாத்துடணும். அதேமாதிரி தடுப்பூசிகளை சரியா போடணும். நம்ம கோழிகள் கிட்டத்தட்ட பத்து வயசு வரைக்கும் சண்டை போடும்.

விற்பனைக்கு பஞ்சமில்லை !

பெரும்பாலும் கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிங்க இங்க வந்து வாங்கிக்கிறாங்க. நாங்களும் கொண்டு போய் வித்துட்டு வருவோம். சேவலோட நிறம், கால் குறி, வடிவம், எடை, ஆக்ரோஷம் மாதிரியான விஷயங்களைப் பாத்து தேர்ந்தெடுத்து... பிடிச்ச சேவலை இன்னொரு சேவலோட மோதவிட்டு, அதுல திருப்தி அடைஞ்ச பிறகுதான் வாங்கிட்டு போவாங்க. அதுக்கேத்த மாதிரிதான் விலையும் வெப்பாங்க.

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

ஒரு சேவல் 5 ஆயிரம் ரூபாயில இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். நான் வருஷத்துக்கு 60 சேவல்களை விக்கிறேன். அது மூலமா விவசாயம் இல்லாமலே வருஷத்துக்கு மூணு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது'' என்றார், மகிழ்ச்சியாக.

படித்தது பொறியியல்... தொழில் சண்டைக்கோழி வளர்ப்பு...

சிவகிரியை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்தான்,  அரசு என்கிற திருநாவுக்கரசு. தொழில்நுட்பப் பொறியியல் படிப்பை முடித்து, விப்ரோ நிறுவனத்தில் சிலகாலம் வேலை பார்த்தவர், அதை உதறிவிட்டு... கரும்பு விவசாயத்தையும், கட்டுச்சேவல் வளர்ப்பையும் தற்போது ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறார்.

''சண்டைச்சேவல் வளர்ப்புல சொந்த ஊர்ல இருந்துகிட்டே மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். அப்பாவுக்கு நாட்டுகோழி வளக்குறதுல ஆர்வம் அதிகம். அவர், ஒண்ணு, ரெண்டு சேவல்களையும் வளர்த்துட்டிருந்தார். அவரைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம். இப்ப மாசத்துக்கு பத்து சேவல்களை வித்துகிட்டுருக்கேன். கையில 40 சேவல் இருக்கு. அதில்லாம அடையில கொஞ்சம் கோழிகள் இருக்கு. குஞ்சுகளா கொஞ்சம் இருக்கு. நானே சேவல்களை உற்பத்தி செஞ்சுக்குறதால வளர்ப்பு செலவு பெருசா இருக்காது.

பத்து மாசம் வரைக்கும் ஒரு சேவல் 60 கிலோ தீனியை சாப்பிடும். அதுக்கு ஆயிரத்து

600 ரூபாய் செலவாகும். தடுப்பூசி, பராமரிப்புனு 2 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆரம்பகட்ட செலவா... கூண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதுவரை 5 ஆயிரம் ரூபாய்க்கு கம்மியா ஒரு சேவலைக்கூட நான் விற்பனை செய்ததில்லை. சிலசமயங்கள்ல பத்தாயிரம் ரூபாய்க்கு மேலகூட விலைபோகும். ஆக... சேவல் கூவும் ஒவ்வொரு விடியலும், எனக்கு வருமான விடியல்தான்'' என்றார், திருநாவுக்கரசு முகம் கொள்ளாத சந்தோஷத்துடன்.

 தொடர்புக்கு,
சீனு, செல்போன்: 90258-77660
திருநாவுக்கரசு, செல்போன்: 97509-51177

சண்டைச் சேவல்களுக்கு தனிச்சந்தை...

சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம், ஈரோடு அருகில் உள்ள குன்னத்தூர்,  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம்...  போன்ற ஊர்களில் வாரந்தோறும் சேவல் சந்தை கூடுகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சேவல் வளர்ப்போர், இங்கு வந்து அவற்றை வாங்கிச் செல்கின்றனர். சண்டைகளில் அதிகம் ஜெயித்த சேவல்களுக்குத்தான் இந்தச் சந்தைகளில் படு கிராக்கி. எட்டு போட்டிகளில் ஜெயித்த சேவலின் காதில் வெள்ளி அரச இலைத் தோடு அணிவிப்பார்கள். 12 போட்டிகளில் ஜெயித்த சேவல் காதில் தங்க அரச இலைத் தோடு அணிவிப்பார்கள். அப்படிப்பட்ட சேவல்களை 25 ஆயிரம் ரூபாய் வரைகூட விலை கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்.

''வண்டி கட்டி வருவாங்க..!''

ஒரு சேவல், 10 ஆயிரம் ரூபாய்...

நாம், திருநாவுக்கரசின் பண்ணையில் பேசிக் கொண்டிருந்தபோது, சேவல்களைப் பார்வையிட தன் நண்பர் ராஜகாளியப்பன் என்பவருடன் அங்கே வந்து சேர்ந்தார், பொள்ளாச்சி வட்டம், புரவிபாளையம் ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த 'பிரபாகர கோப்பண்ண மன்றாடியார்’. பரம்பரைப் பரம்பரையாக சேவல் வளர்ப்பில் ஆர்வமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது, ''புரவிப்பாளையம் ஜமீன்ல கிட்டத்தட்ட 300 வருஷத்துக்கு முன்னயே சேவல் வளர்ப்பும், சேவல் சண்டையும் நடந்துருக்கு. வருஷா வருஷம், தை மாசம் எங்க அரண்மனையில அஞ்சு நாள் நடக்குற சேவல் சண்டை ரொம்ப பிரபலம். தமிழ்நாடு, கேரளா முழுக்க பல இடங்கள்ல இருந்து வண்டிகட்டி சேவலைக் கூட்டிக்கிட்டு வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு தங்க இடம், சாப்பாடு எல்லாமே நாங்க கொடுத்துடுவோம். முன்ன எங்க அரண்மனையில 2,000 சேவல்களுக்கு மேல இருந்துச்சு. இப்போ ஞாபகார்த்தத்துக்காக கொஞ்சம் சேவல்களை வெச்சுருக்கேன்'' என்று சொன்னார்.

அவரைத் தொடர்ந்த ராஜகாளியப்பன், ''தமிழர்களின் வீர விளையாட்டுகள்ல சேவல் சண்டையும் ஒண்ணு. அதை தமிழக அரசு தடை செஞ்சிருக்கு. பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சில விதிமுறைகளோட அனுமதிக்கறது மாதிரி, சில கட்டுப்பாடுகளை விதிச்சு... சேவல் சண்டையையும் அனுமதிக்கணும்'' என்று கோரிக்கையை வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism