Published:Updated:

''பண முதலைங்க பந்தியில... விவசாயிங்க சந்தியில...''

நிலப்பறிப்புச் சட்டமும் கோவணாண்டியின் எச்சரிக்கையும்! ஓவியம்: ஹரன் படங்கள்: க. ரமேஷ்

''பண முதலைங்க பந்தியில... விவசாயிங்க சந்தியில...''

நிலப்பறிப்புச் சட்டமும் கோவணாண்டியின் எச்சரிக்கையும்! ஓவியம்: ஹரன் படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:

 முறையீடு

##~##

உறவுக்கார உழவர்களுக்கும், குட்டக்குட்ட குனிஞ்சுக்கிட்டே இருக்குற சின்ன, பெரியக் கோவணாண்டிகளுக்கும்... கோவத்தோட வணக்கம் சொல்லிக்கறான், உங்க பாசக்காரக் கோவணாண்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஊரே பத்தி எரியுறப்ப... உடுக்கை அடிச்சுட்டு இருந்தாராம் உள்ளூர் பூசாரி'ங்கற கதையாத்தான் நம்ம கதையும் இருக்குது. ஏற்கெனவே ஏகப்பட்ட நிலங்களை அரசாங்கமும்.. உள்நாட்டு, பன்னாட்டு பண முதலைங்களும் வளைச்சுப் போட்டுட்ட நிலையில... மிச்சமிருக்கற கொஞ்ச, நஞ்ச நிலத்தை வெச்சுக்கிட்டு வயித்தைக் கழுவிக்கிட்டிருக்கறான் சம்சாரி. அவனுக்கும் இப்ப ஆப்பு தயாராகிட்டிருக்கு. அதாவது, மிச்சம் மீதி இருக்குற கையகல நிலத்தையும் களவாடுறதுக்கு கன்னக்கோல் வெச்சுட்டானுங்க.

மொத்தத்துல நம்மள விவசாயத்தைவிட்டு வெளியில விரட்டி அடிச்சு, சோத்துக்கு சிங்கி அடிக்க வெக்கறதுக்கு, என்னென்ன பண்ணனுமோ... அத்தனையையும் பண்ணிட்டுருக்காங்க. ஆனா, நம்மாளுகள்ல பலரும்... எந்தக் கவலையும் இல்லாம, வெள்ளையுஞ் சொள்ளையுமா உடுத்திக்கிட்டு 'டாஸ்மாக்’ மயக்கத்துல, 'அம்மா வாழ்க... அய்யா வாழ்க... அன்னை வாழ்க... கேப்டன் வாழ்க...’னு ஆளாளுக்குக் கொடி பிடிச்சுக்குட்டு கிடக்கறாங்க. இதை என்னத்தனு சொல்றது?

'அப்பன் கோவணத்த, செம்பருந்து தூக்கிட்டுப் போயிடுச்சாம்... பிள்ளை மேகவர்ணப் பட்டு கேட்டானாம்’னு கிராமத்துல சொல்வாங்க. அந்தக் கதையா, இருக்குற ஒட்டுக் கோவணத்தையும் பறிகொடுக்கற நிலைக்கு நாம வந்துட்டோம். ஆனா, 'நாடு வளருது, நகரம் வளருது, தொழில் வளருது’னு சொல்லிச் சொல்லி, நம்மளை உசுப்பேத்திக்கிட்டே இருக்காங்க இந்த உருப்படாத அரசியல்வாதிங்க. ஆனா, அதுல இருக்குற சூட்சமத்தைப் புரிஞ்சுக்காம... இந்த வில்லங்க அரசியல்வாதிங்க பின்னாடியே கொடியைத் தூக்கிட்டு ஓடிட்டிருக்கோம்.

''பண முதலைங்க பந்தியில... விவசாயிங்க சந்தியில...''

'இந்தத் தொழிற்சாலை இந்தியாவோட இதயம்.... ஜப்பான்காரனையும், அமெரிக்காக்காரனையும் பொருளாதார ரீதியில மிஞ்சுறதுக்கு இதுதான் வழி'னு இப்படியெல்லாம் அறுபது, எழுபது வருஷமா சொல்லிச் சொல்லியே... இந்தியா முழுக்க ஏகப்பட்ட நிலங்களை வளைச்சாங்க. ஆனா, இந்தியாவுல இருக்கற அம்பானி, டாடா, வேதாந்தானு தொழிலதிபருங்களும்... பத்து, இருபது அரசியல்வாதிங்களும் முன்னேறியிருக்காங்களே தவிர, இதுவரைக்கும் அமெரிக்காவையோ... ஜப்பானையோ மிஞ்ச முடிஞ்சுதுதா? இல்ல... நீங்களும் நானும்தான் முன்னேற முடிஞ்சுதா?

இன்னிக்கு நம்மகிட்ட இருக்குற நெலம், நாளைக்கு இருக்குமானு தெரியல. காலையில எந்திருச்சு பாத்தா... தோட்டத்துல இருக்கற தென்னை மரங்களை யாரோ புல்டோசர் வெச்சு பிடுங்கிட்டு இருக்கான். கேட்டா... 'எங்க கம்பெனி பேரு கெயில். எங்களைத் தடுத்தா உனக்கு ஜெயில். நிச்சயம் கிடைக்காது பெயில்’னு நம்ம தாடிக்கார இயக்குநர் டி.ஆர். மாதிரி வசனம் பேசுறான்.

'கரன்ட் போறதுக்கு டவர் போடணும்’னு சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் வந்து தோட்டத்தை தொம்சம் பண்ணுது. கேட்டா, 'நாங்க கவர்மென்ட் ஆளுங்க. எங்கள ஏன்னு கேட்டாக்கா... தோட்டம் மட்டும் இல்ல, ஆளே காணாம போயிடுவீங்க’னு கலவரப்படுத்துறாங்க.

'பஸ் ஸ்டாண்டு கட்டுறோம்; ஏரோப்பிளேன் ஷெட் (ஏர்போர்ட்) போடுறோம்; ரோடு போடுறோம்; பன்னாட்டு கம்பெனி ஆரம்பிக்கப் போறோம்’னு ஆளாளுக்கு வந்து விளைநிலத்தை, கொத்து புரோட்டா போடுறாங்க.

'பொது காரியத்துக்காக எந்த நிலத்தை வேணும்னாலும், அரசாங்கம் எடுத்துக்கலாம்’னு 1894-ம் வருஷம் வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தை வெச்சுகிட்டு... இன்னிக்குவரைக்கும் அழிச்சாட்டியம் பண்றாங்க ஆள்றவங்க. 'அந்த சட்டம் அரதப் பழசு.

இன்னிக்கி நிலமைக்கு சரிப்பட்டு வராது. அதனால, சட்டத்தை மாத்துங்க’னு இந்தியாவுல இருக்குற விவசாய சங்கங்கள் பலதும் திரண்டு போராடுன பெறகு, 'சட்டத் திருத்தம் செஞ்சுடலாம்’னு சொல்லிச்சு, மத்திய அரசு. 'இனி பயமில்ல’னு சந்தோஷப்பட்டாங்க, சம்சாரிங்க. ஆனா, அந்த ஆனந்தத்துல ஆசிட்டை ஊத்துற மாதிரி, புதுசா ஒரு சட்டத்தை இப்ப தயாரா வெச்சுருக்காங்க.

இதைப்பத்தி நம்ம இங்கிலிபீசு வாத்தியாரு, கோணவாய்க்கா கரையில உக்கார வெச்சு, கதை கதையா சொன்னதைக் கேட்டு கலங்கிட்டேன் நானு.

''பழைய மொந்தையில புது கள்னு ஒரு பழமொழி இருக்குல்ல... அதுதான்வே இந்த புதுச் சட்டம். 'நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு, மறுகுடி அமர்வுச் சட்டம்'னு (Land Acquisition and Rehabilitation and Resett-lement) செயல்பாட்டுக்கு தயாரா இருக்கு. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டுமே ஏத்துக்கிட்டாங்களாம். இருக்காதா பின்னே... கொள்ளையடிக்கிறதுல எப்பவுமே கூட்டணிதானே! வெள்ளைக்காரனாவது 'பொது காரியத்துக்காக நிலத்தை எடுக்கலாம்’னுதான் சொன்னான். இவங்க, 'பொதுச் சேவை'ங்கற போர்வையில உள்நாட்டு, பன்னாட்டு தனியார் கம்பெனிகளுக்கு புரோக்கர் வேலை பாக்கறதுக்கு ஏத்த மாதிரி சட்டத்தை மாத்தியிருக்காங்க.

''பண முதலைங்க பந்தியில... விவசாயிங்க சந்தியில...''

இந்தச் சட்டத்தைப் வெச்சு, கம்பெனிகதான் நம்ம நாட்டுல நாட்டாமை பண்ணப் போகுது. உள்ளூர்காரனுக்குக் குடிக்கத் தண்ணி இருக்காது. ஆனா, கம்பெனிக்காரன் ஆயிரம் அடியில போர் போட்டு தண்ணியை உறிஞ்சுவான். அதுக்கு சகல வசதிகளையும் செஞ்சுக் கொடுக்கும் சர்க்காரு. ஆலைகளை அமைச்சு, கழிவுகளைக் கொட்டி ஆத்தையும், காத்தையும் மாசுபடுத்துவான். எதுத்து யாரும் கேள்வி கேக்க முடியாது.

இப்படித்தான் போபால்ல ஒரு கம்பெனியைக் கொண்டு வந்து வெச்சாங்க. அவன் விஷ வாயுவைக் கசிய விட்டு, கொத்துக் கொத்தா கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேரை சாகடிச்சுட்டுப் போயிட்டான். இன்னிவரைக்கும் அவன்கிட்ட இருந்து ஒரு பைசா நஷ்டஈடு வாங்க முடியல.

இருந்தும் வெளிநாட்டுகாரங்க கால்லயே விழுந்து நம்ம அரசியல்வாதிங்க விழுந்து கிடக்கறதுலயும் ஒரு சூட்சமம் இருக்கு. இந்தியாவுல இருக்கற பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு, 90% சொத்து, வெளிநாட்டுல இருக்குதாம்.

பிள்ளைக, பேரனுங்கனு பெரும்பாலானவங்க இப்பவே அங்கதான் வாழ்க்கையை உருட்டறாங்க. அதனாலதான்... 'தொழில் வளர்ச்சி... நாட்டோட வளர்ச்சி'னு சொல்லிக்கிட்டே விளைநிலங்கள தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கத் துடிக்கறாங்க.

இதுல 99% தனியார் பங்கு. 1% மட்டும்தான் அரசாங்கத்தோட பங்கு. இதுக்குப் பேரு 'பொது-தனியார் துறை' (Public-Private Partnership). யப்பா... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. சும்மாவா, உள்ளூர்காரன் போட்டுத்தர்ற ரூம்ல உக்கார்ந்துகிட்டே நம்ம கவுன்சிலருங்க மாவட்ட அளவுல யோசிக்கறப்ப... உலகக்காரன் போட்டுத்தர்ற ரூம்ல உக்கார்ந்து சின்னதாவா யோசிக்க முடியும்?

தனியார் கம்பெனிக கடையைத் தொறந்தாலும், அவங்களுக்கும் நிலம் பிடுங்கி தருமாம் இந்தச் சட்டம். ஏன்னா அவுங்க நம்ம நாட்டு வளர்ச்சிக்காக தொழில் செய்றாங்களாம். அப்ப விவசாயிங்கல்லாம்... பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளோட வளர்ச்சிக்காகவா விவசாயம் செய்துட்டு இருக்காங்க?

இதுல கொடுமை என்னன்னா... இம்புட்டு வசதிகளை செஞ்சுக் கொடுத்தும், 'நிலத்தைக் கொடுத்த விவசாயிகளுக்கான மறுகுடி அமர்வு, மறுவாழ்வு எல்லாம் எங்க வேலை இல்லை... பணத்த கொடுத்ததும் பூமி கைக்கு வந்துடணும். அத்தோடு உறவு முறிஞ்சது’னு முறுக்கிட்டு நிக்கறாங்களாம் முதலாளிங்க. இந்த லட்சணத்துல, 'கார்ப்பரேட் கம்பெனிக, மக்கள் சேவையில பங்கு எடுக்கணும்’னு மன்மோகன் சிங், அப்பப்ப காமெடி பண்ணுறாரு.''

-இப்படி நம்ம இங்கிலீபீஸு வாத்தியார் வண்டி வண்டியா எடுத்துவிட்டதைக் கேட்டு, எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போச்சுங்க.  

நாட்டோட உண்மையான வளர்ச்சிக்கு நிலத்தை எடுக்க வேண்டாம்னு சொல்லல. தாராளமா எடுத்துக்கட்டும். ஆனா, அது நியாயமான வளர்ச்சிக்காகத்தான்னு யாரு முடிவு பண்றது? அரசியல்வாதியும்... அவங்களுக்கு சகல சௌகரியங்களையும் செய்து கொடுக்கற கம்பெனிக்காரனுமா? நம்ம வூட்டு நிலத்தை, கண்டவனுக்கும் பட்டா போடறதுக்கு இவங்க யாரு?

இதுக்காகத்தான், 'நிலம் கையகப்படுத்துறது தொடர்பா ஒரு குழுவை அமைங்க. அதுல விவசாயப் பிரதிநிதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்க'னு கேட்டுட்டே இருக்கோம். முதல்ல இப்படி ஒரு குழுவை அமைக்கட்டும்... அது, வெளிப்படையா உக்கார்ந்து பேசி, முடிவெடுக்கட்டும்.

அடிமாட்டு விலையை கொடுக்காம... சந்தை விலையை சரியா கொடுத்துட்டு நியாயமான காரணத்துக்கு மட்டும் நிலத்தை எடுத்துக்கட்டும். அந்த நிலத்துல அமையற கம்பெனிகள்ல, விவசாயிக்கோ... வாரிசுக்கோ கட்டாயம் திறமை, படிப்புக்குத் தகுந்த வேலை; கம்பெனிகள்ல குறிப்பிட்ட பங்கு தரட்டும்.

இதுக்கெல்லாம் ஒப்புக்கிட்டா... நிலத்தைக் கொடுப்போம். 'அரசுங்கறது மக்களுக்காகத்தான்... அரசுக்காக மக்கள் இல்ல’னு புரிய வைப்போம். இதுக்காக எல்லாரும் ஒண்ணா கைகோப்போம். ஆரம்பத்துலயே நாம முழிச்சுக்கலானா... நாளைக்கு நம்ம சந்ததிக்கு, குண்டுமணி நிலம்கூட மிஞ்சாது... ஜாக்கிரதை!  

இப்படிக்கு,
கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism