Published:Updated:

மாம்பழங்கள் பற்றிய கேள்விகளும்... பதில்களும்!

த. ஜெயகுமார் படங்கள்: க. தனசேகரன், ஜா. ஜாக்சன்,

மாம்பழங்கள் பற்றிய கேள்விகளும்... பதில்களும்!

த. ஜெயகுமார் படங்கள்: க. தனசேகரன், ஜா. ஜாக்சன்,

Published:Updated:

அலசல்

 சுவை குறைந்தது ஏன்..?
சுருக்கங்கள் அதிகமானது எப்படி..?
சீக்கிரமே அழுகுவது எதனால்..?

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாம்பழம்... இந்த ஆண்டும் வழக்கம்போல் களைகட்டி விட்டது. விதம்விதமான பழங்கள் சந்தைகளில் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தப் பழங்களை சந்தைக்கு அனுப்பிய விவசாயிகளும் சரி... வாங்கி சுவைத்துக் கொண்டிருக்கும் மாம்பழப் பிரியர்களும் சரி... 'இந்த வருஷம் மாம்பழம் அத்தனை சுவையா இல்லையே... தோல் சுருக்கம் அதிகமா இருக்கே... சீக்கிரம் சீக்கிரமே கெட்டுப் போகுதே....' என்று வருத்தக் குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர். குறிப்பாக, செந்தூரா மாம்பழங்களில் இந்த அறிகுறிகள் அதிகமாகவே இருக்கின்றன என்பது, இவர்களின் வருத்தம். சிலர் நம்மைத் தொடர்பு கொண்டும் இதைப் பகிர்ந்துகொள்ள... 'இதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்?' என்கிற தேடலில் இறங்கினோம்...

மாம்பழங்கள் பற்றிய கேள்விகளும்... பதில்களும்!

அரக்கோணம் அருகேயுள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் பல நூறு மாமரங்களை வைத்திருக்கும் 'முன்னோடி இயற்கை விவசாயி' பாரதி, ''இந்த வருஷம், வழக்கமான பருவத்தைக் கடந்து, தாமதமாத்தான் காய்கள் தரத்துக்கு வந்திருக்கு. இது தெரியாம, வழக்கம்போல பருவம் ஆரம்பிச்சதுமே, நிறைய பேர் அறுவடை பண்ணிட்டாங்க. அதனாலகூட பழத்துல பாதிப்பு வந்திருக்கலாம்னு தோணுது. ஆனா, உண்மையான காரணம் புரியமாட்டேங்குது. குறிப்பா... எங்ககிட்ட, 800 செந்தூரா செடிகள் இருக்கு. இப்பதான் நல்ல தரத்துக்கு வந்திருக்கு. ஆனாலும், பழங்கள் அழுகிட்டுத்தான் இருக்கு'' என்றார் குழப்பம் தெளியாதவராக.

மாம்பழங்களின் கோட்டையாக இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, ''மாம்பழங்களுக்கு பருவத்துக்கு ஏத்த நல்ல மழை வேணும். மாசி கடைசியிலயோ... பங்குனி ஆரம்பத்துலயோ மழை பெய்யணும். இந்த முறை அது கிடைக்கல. பிஞ்சிலிருந்து, காய் ஓட்டத்துக்கு வர்ற நேரத்துலயும்... காய் ஓட்டத்திலிருந்து பழமா மாறுற நேரத்துலயும் மழை வேணும். இதுவும் கிடைக்கல. இருக்கிற ஈரத்த வெச்சு, ஓரளவுக்குத்தான் மாமரங்கள் காய்ச்சு, காய்கள் தரத்துக்கு வந்திருக்கு.

சித்திரை மாச அறுப்பு நேரத்துல மழை பெய்யுது. அந்த மழையினால என்ன பிரயோஜனம்? பெங்களூரா, நீலம்னு லேட்டா பூ எடுத்த மரங்களுக்கு இது உதவும். முன்னாடியே அறுப்புக்கு வர்ற செந்தூரா, பீத்தர், அல்போன்சா பழங்களுக்கு உதவாது. அதனாலதான் இந்த முறை செந்தூரா எடை வரல. வழக்கமா 3-4 காய் போட்டாலே ஒரு கிலோ எடை வந்துடும். இந்த முறை 5-6 காய் போட வேண்டியிருக்குது. செந்தூரா, வெயிலுக்கு நல்லா கலர் ஏறிடுது. ஆனா, சதையில நீர் ஏறாம போயிடுச்சு.

அதேசமயம், தண்ணி கட்டி வளர்க்கற மரங்கள்ல, காய்கள் நல்லாவே எடை நிக்குது. அப்படியிருந்தாலும்கூட பழத்துல சுவையே இல்லைங்கறதுதான் சோகம். மொத்தத்துல இயற்கையா கிடைக்க வேண்டிய மழை கிடைச்சாதான் காய்கள்ல சுவையும்கூடி வரும். அது இல்லங்கறப்ப... யாரை நோகறது?'' என்று சோகமாகச் சொன்னார்.

மா கன்றுகளுக்கு பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மா செடி விற்பனையாளர் சாய்நாத், ''சில வியாபாரிங்க, சந்தையில நல்லா ரேட் இருந்தா... காய்கள் நல்ல தரத்துக்கு வராத நிலையிலயும் பறிச்சுடுவாங்க. அந்த மாதிரி பழங்கள்ல தோல் சுருங்கல் வர நிறையவே வாய்ப்பு இருக்கும். கல்லு வெச்சுப் பழுக்க வைக்கிறது... வெளியூர்களுக்கு அனுப்பறப்ப ரொம்ப நாளைக்கு பாக்ஸுக்குள்ளயே வெச்சுருக்கறது... இப்படிப்பட்ட காரணங்களாலயும் சீக்கிரம் கெட்டுப் போறதுக்கான வாய்ப்பு இருக்கு'' என்று தானறிந்த தகவல்களைத் தந்தார்.

இப்பிரச்னை பற்றி, கேட்டபோது, கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பழங்கள் துறை பேராசிரியர் சூரியநாத சுந்தரம் தந்த பதில்-

மாம்பழங்கள் பற்றிய கேள்விகளும்... பதில்களும்!

''காய்கள் வளர்ச்சி அடையற சமயத்துல, நிலத்துல போதுமான ஈரப்பதம் இல்லனா, இந்த மாதிரியான பிரச்னைகள் வரும். உரம் போட்டு, சொட்டுநீர்ப் பாசனம் மூலமா பயிர் செய்யற நிலங்கள்ல இந்த அறிகுறிகள் குறைவா இருக்க வாய்ப்பு இருக்கு. பழங்கள் சீக்கிரம் கெட்டுப் போறதுக்கு, அதை நாம கையாள்ற முறைகள்ல இருக்கற தவறுகளும் காரணமா இருக்கும். உதாரணமா... காய்கள ஒண்ணு மேல ஒண்ணா அடைச்சு வெச்சுதான் எடுத்துட்டுப் போறாங்க. இப்படி செய்றப்ப காய்களுக்குள்ள சுவாசம் பாதிக்கப்பட்டு வெப்பம் அதிகமாகும். இதனாலயும் பழங்கள் கெட்டுப்போகும். அதனால, தகுந்த முறையில பழங்களைக் கையாளறதும் முக்கியம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism