Published:Updated:

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

படங்கள்: தி. விஜய், எம். விஜயகுமார், கே. குணசீலன், ர. அருண்பாண்டியன்

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

படங்கள்: தி. விஜய், எம். விஜயகுமார், கே. குணசீலன், ர. அருண்பாண்டியன்

Published:Updated:

பிரச்னை
பசுமைக்குழு

##~##

''இந்த ஆண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பது இயலாத காரியம். காவிரி நீர் வருவதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. மேலும், 'தமிழகம் முழுக்கவே சராசரி மழை அளவைவிட பருவமழை குறைவாக இருக்கும்’ என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்முடைய பஞ்சாங்கத்திலும் 'மழை குறைவாகத்தான் இருக்கும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, 55 நாட்களில் விளையும் பாசிப்பயறு போன்ற பயறு வகைகளையும், சிறுதானியங்களையும் சாகுபடி செய்யுங்கள்''

-இப்படியரு ஆலோசனையை சமீபத்தில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சொல்லியிருந்தார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி.

இதையடுத்து, 'இது எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்..?', 'டெல்டா களிமண் பூமிக்கு சிறுதானியங்களா...?' என்றெல்லாம் பலவாறாக ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டனர் டெல்டா விவசாயிகள்.

ஆக்கப்பூர்வமான வழிகள் தேவை!

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் 'சுவாமிமலை’ சுந்தரவிமலநாதன், ''கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியினால், ஒரு போகம்கூட நெல் சாகுபடி செய்ய முடியாமல் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இந்நிலையில் குறுவை சாகுபடியையும் விடச் சொல்வது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். மாற்று வழிகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால், அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

காவிரி டெல்டாவில் பெரும்பாலான, பகுதிகள், தண்ணீர் தேங்கக்கூடிய பள்ளமான பகுதிகள். அதுவும் களிமண் பூமி. ஒருநாள் அடைமழை பெய்தாலே உளுந்து, எள், கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்கள் அழிந்து போகும். நெல் மட்டும்தான் கனமழைக்குத் தாக்குப் பிடிக்கும்.

மாற்றுப்பயிர் சாகுபடியை வலியுறுத்துவது, கர்நாடகாவுக்குச் சாதகமாகிவிடும். நீதிமன்றத்தில் இதையே வாதமாக, அவர்கள் முன் வைப்பார்கள். காவிரி ஒரேயடியாக நம் கை விட்டுப் போகும். 'மாற்றுப்பயிர் சாகுபடி செய்யுங்கள்’ எனச் சொல்வது, 'விவசாயத்தையே கை விடுங்கள்’ என்பதற்குச் சமமானது. 'வறட்சியான நேரத்தில் நெல் சாகுபடி சாத்தியமில்லை’ என்பது உண்மைதான். அதேசமயம், 'டெல்டா மாவட்டத்தில் மாற்றுப்பயிர் சாகுபடியும் சாத்தியமில்லை’ என்பதும் உண்மை... கசப்பான உண்மை'' என்றார்.

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

தோல்விதான் கிடைக்கும்!

திருவையாறு வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் சுகுமாரன், ''நெல்லுக்கு மட்டும்தான் ஏற்ற இறக்கம் இல்லாத உத்தரவாதமான விலை கிடைக்கும். விற்பனை செய்வதும் எளிது.

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட, விலை வீழ்ச்சி ஏற்படாது. ஆனால், எள், உளுந்து, கம்பு உள்ளிட்ட பயிர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் உற்பத்தியானால்... கடுமையான விலை வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியிருக்கும். சம்பாவைவிட, கோடை, குறுவை சாகுபடியில்தான் நோய், பூச்சித்தாக்குதல் மிகவும் குறைவாக இருக்கும். நெல் தரமாக இருக்கும். குறைந்த செலவில் அதிக மகசூலும் கிடைக்கும்.

2002-ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியபோது, இதேபோல் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தை அ.தி.மு.க அரசு முன் வைத்தது. ஆர்வத்தோடு முயற்சி செய்து பார்த்தவர்களுக்குத் தோல்விதான் ஏற்பட்டது. விளைச்சலே இல்லை'' என்று பழைய அனுபவத்தை எடுத்து வைத்தார்.

சோதனை முயற்சியாக களமிறங்கலாம்!

கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன், ''துணைவேந்தரின் கருத்துக்களை முழுமையாக செயல்படுத்துவது எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்று தெரியவில்லை. விவசாயிகள், சோதனைமுயற்சியாக வேண்டுமானால், குறைந்த பகுதியில் செய்து பார்க்கலாம். இதற்கு ஏற்ற வகையில், குறுவைக்கு மாற்றுப்பயிர் திட்டம் தீட்டி, விவசாயிகளுக்கு விதை மற்றும் உழவு உள்ளிட்ட செலவுத் தொகையையும் அரசாங்கம் வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்!

மழையால் பாதிப்பில்லை!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சோழன் பேசும்போது, ''டெல்டா மாவட்டங்களில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், பருவமழையைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

டெல்டாவைப் பொறுத்தவரை, சம்பா பருவத்தின் போதுதான், தொடர்ச்சியாக மழை பொழியும். அப்போது, மாற்றுப்பயிர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால், குறுவைப் பருவத்தின் போது உருவாகும் தென்மேற்குப் பருவமழை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பொழியும்.

ஒரு நாள் மழை பெய்தால், அடுத்த நாள் சுள்ளென வெயில் அடிக்கும். எனவே, நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்பு குறைவு. எள், உளுந்து, மக்காச்சோளம், சூரியகாந்தி, பாசிப்பயறு, சிறுதானியங்கள் ஆகியவற்றை தாராளமாகப் பயிரிடலாம்'' என்று தெம்பு தரும் கருத்துக்களை முன் வைத்தார்.

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

பாதுகாக்க பல்கலைக்கழகம் தயார்!

விவசாயிகளின் கருத்துக்களை துணைவேந்தர் கு. ராமசாமியிடம் வைத்தபோது... ''மாற்றுப்பயிர் திட்டம் என்பது டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல... ஒட்டுமொத்த தமிழகத்துக்குமேயானதுதான்.

இந்த ஆண்டு குறுவையில் நெல் சாகுபடி செய்யத் தேவையான தண்ணீர் அணைகளில் இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. இந்நிலையில், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி சாகுபடி செய்தால்... கடலோரப் பகுதிகளில், கடல் நீர் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி வரும் நீரில் இருக்கும் உப்பைக் கரைத்து வெளியேற்ற குறைந்தபட்சம் 10

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

ஆண்டுகள் பிடிக்கும். குறைந்த வயதுடைய, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களைப் பயிரிட்டாலும், விவசாயிகள் விரும்பும் அளவுக்கு மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை.

அதேநேரத்தில், 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும், மழைநீரை வைத்து, மாற்றுப்பயிராக 55 நாட்களில் விளையும் பயறு வகைகள், 60 நாட்களில் விளையும் சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்ய பரிந்துரை செய்கிறோம். 'பாசிப்பயறு அல்லது உளுந்து சாகுபடி மூலம் ஒரு ஹெக்டேருக்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கிறது’ என்கிற முன்மாதிரிகளைப் பார்த்து விட்டுத்தான், மாற்றுப்பயிரைப் பரிந்துரை செய்கிறோம்.

சாகுபடிக்கு முன்வரும் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்க பல்கலைக்கழகம் தயாராக இருக்கிறது. தேவையான விதைகள் அந்தந்த மாவட்டங்களிலேயே கிடைக்கின்றன. அப்படிக் கிடைக்காதவர்கள் பல்கலைக்கழகத்தை அணுகலாம்'' என்று அழைப்பு வைத்தார்.

அம்மா அறிவிப்பார்!

இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் தாமோதரனிடம் கேட்டபோது... ''டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்யத் தேவையான திட்டங்களை ஆலோசனை செய்து, முதல்வர் அம்மாவிடம் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறோம். கூடிய விரைவில் அம்மா, திட்டங்களை அறிவிப்பார்'' என்று மட்டும் சொன்னார்.

பார்ப்போம்... என்ன மாதிரியான திட்டங்கள் வரப்போகின்றனவென்று!

 கவலையைப் போக்கும் குதிரைவாலி... தண்ணீர் இல்லாவிட்டாலும், பரவாயில்லை...

மழை கொட்டினாலும், மருளத் தேவையில்லை!

தமிழக விவசாயிகள், தற்போதைய வறட்சி சூழலில், சிறுதானிய சாகுபடியில் ஈடுபடவேண்டும் என்று கூறியிருக்கிறார் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர். இந்நிலையில், சிறுதானிய விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் மதுரை, எழுமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சடையாண்டியின் கருத்துக்களைக் கேட்டோம். அவர் நம்மிடம், ''குதிரைவாலிக்கு அதிகம் தண்ணி தேவையில்லை. அதேநேரத்துல மழை பெய்ஞ்சிகிட்டே இருந்தாலும், விளைச்சல் பாதிக்காது. அதனாலதான், 'மூக்குத் தண்ணி ஒழுகினாலே குதிரைவாலி விளைஞ்சுடும்’னு கிராமத்துல சொலவடை சொல்லுவாங்க. தண்ணீர், சாகுபடி செலவு, பராமரிப்புனு எல்லாமே மிதமா தேவைப்படுற குதிரைவாலி, வறட்சிக்கு ஏத்த மாற்றுப்பயிர்.

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

சிறுதானியங்களை ஒரு காலத்துல சீண்டக்கூட ஆள் இருக்காது. 72 கிலோ நெல்லு மூட்டை, 120 ரூபாய்க்கு வித்தப்போ... குதிரைவாலி 30 ரூபாய்ல இருந்து 40 ரூபாய் வரைக்கும்தான் வித்துச்சு. இப்போ நெல்லு 1,000 ரூபாய்ல இருந்து 1,200 ரூபாய் வரை விக்குது. குதிரைவாலி, குவிண்டால் 1,600 ரூபாய்ல இருந்து 1,800 ரூபாய் வரைக்கும் விலைபோகுது'' என்று, சிறுதானியப் பெருமை பேசிய சடையாண்டி, அதன்  சாகுபடிப் பாடம் நடத்தினார்.

'குதிரைவாலியின் வயது 90-100 நாட்கள். அனைத்து வகையான மண்ணிலும் வளரும். அதிக தண்ணீர் தேவையில்லை. மானாவாரி நிலங்களுக்கும் ஏற்றது. ஆடி 18-ம் நாளுக்குப் பிறகு விதைத்தால்... ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மூன்று மாதங்களில் அவ்வப்போது கிடைக்கும் மழையில் பயிர் வளர்ந்து விடும். நிலத்தை ஐந்து முறையாவது உழவு செய்து கொண்டால், களைகள் வளராது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதையை வயலில் தூவி விதைக்க வேண்டும். 'சால்’ பயிராக துவரை, மொச்சை, தட்டைப்பயறு, கல்லுப்பயறு ஆகியவற்றை விதைத்துக் கொள்ளலாம்.

குதிரைவாலியில் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. அதனால், பூச்சிக்கொல்லிச் செலவு இல்லை. விதைத்த பிறகு, 45-ம் நாள் ஏக்கருக்கு 100 கிலோ மண்புழு உரத்தைத் தூவிவிட வேண்டும். அதன் பிறகு வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. நேரடியாக அறுவடை செய்து விடலாம். தட்டையை நிலத்திலேயே விட்டுவிட்டு கதிரை மட்டும் அறுத்து எடுத்து, வெயிலில் காய வைத்து டிராக்டர் மூலம் நசுக்கி எடுத்து, தூற்றிக் கொள்ள வேண்டும். ஏக்கருக்கு சராசரியாக 8 குவிண்டால் மகசூல் கிடைக்கும்’

சாகுபடிப் பாடம் முடித்த சடையாண்டி, ''குதிரைவாலிக்கு செய்ற அதே சாகுபடி முறைதான் கம்புக்கும். அதுவும் 100 நாள் பயிர்தான். ஏக்கருக்கு 5 கிலோ விதையைத் தூவணும். ஏக்கருக்கு

10 குவிண்டாலுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும். குவிண்டால் ஆயிரம் ரூபாய் வரை விலைபோகுது. அதனால, விவசாயிகள் தாராளமா சிறுதானியங்களைப் பயிரிடலாம்'' என்று சிபாரிசு செய்தார்.

தொடர்புக்கு, சடையாண்டி, செல்போன்: 94434-60833

மாற்றுப்பயிர் காலத்தின் கட்டாயம்!

நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்கள் !

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் இதைப்பற்றி பேசும்போது, ''நானும்கூட துணைவேந்தர் மாதிரியேதான் சொல்லியிருப்பேன். நிலத்தை, சும்மா போட்டு வெச்சிருக்கறதுக்குப் பதிலா, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, உளுந்து... மாதிரியான பயறுகளையும், சிறுதானியங்களையும் விதைக்குறது நல்லதுதானே. அதனால, மாட்டுக்கும் தீவனம் கிடைக்கும். நமக்கும் உணவு கிடைக்கும். மத்த பகுதிகளைவிட டெல்டா பகுதிக்குதான் இப்போதைக்கு மாற்றுப்பயிர் சாகுபடி முக்கியமான தேவை. 'இடையில மழை வந்தா பயிர் வீணாகிடும்’னு கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பருவத்துல வர்ற மழை கனமா பெய்யாதுங்கறதுதான் உண்மை'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism