Published:Updated:

தடையற்ற வர்த்தகம்... விவசாயிகளை ஒழிக்கும் சர்வதேச சதி !

தூரன் நம்பி ஆர். குமரேசன் படம்: எஸ். சாய் தர்மராஜ்

தடையற்ற வர்த்தகம்... விவசாயிகளை ஒழிக்கும் சர்வதேச சதி !

தூரன் நம்பி ஆர். குமரேசன் படம்: எஸ். சாய் தர்மராஜ்

Published:Updated:

சாட்டை

##~##

கிணற்றிலேயே நீச்சலடிக்க முடியாத ஒருவன், 'என் நீச்சலை ஆற்றிலே வந்து பாருங்கள்... எப்படியெல்லாம் வித்தைக் காட்டுகிறேன்’ என்று சவடால் விட்ட கதையாகத்தான் இருக்கிறது, இந்தியப் பொருளாதாரம். 'இந்தியா ஒளிர்கிறது... இந்தியா மிளிர்கிறது' என்றெல்லாம் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டே இருக்கும், 'போலி பொருளாதாரப் புலி'களை நம்பி... நீச்சல் தெரியாதவன், தத்தளிக்கும் கதையாக தடுமாறிக் கொண்டிருக்கிறது இந்தியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே, 'உலகமயம்' , 'தாராளமயம்' என்கிற பெயர்களில் பல்வேறு பம்மாத்துக்களை வைத்து, 'பொருளாதார நாடகம்' ஒன்றை நடத்தி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் முட்டாள்களாக்கினார்... திருவாளர் மன்மோகன் சிங். அந்த வேஷம் மெள்ள களைய ஆரம்பித்திருக்கிறது. உலகமயம், தாராளமயம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே... ஊழலில் உலக சாதனை படைத்ததைத் தவிர, அதன் மூலமாக மக்களுக்கு எந்தப் பலனும் வந்து சேரவில்லை. பத்து, பதினைந்து தொழில் முதலைகளும்... நூற்றுக்கணக்கான அரசியல் முதலைகளும்தான் லாபம் அடைந்திருக்கின்றன.

இந்த விஷயத்தை, திருவாளர் மன்மோகன் சிங் அவர்களே... சில காலத்துக்கு முன்பு ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார். 'உலகமயம், தாராளமயம் ஆகியவற்றுக்காக நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இதெல்லாம் தவிர்க்க முடியாமல் நடந்துவிட்டது. அதன் பாதிப்பை தற்போது நாம் நன்றாகவே உணர்கிறோம்' என்று தொழிலதிபர்கள் நிறைந்த சபையன்றிலேயே இதைச் சொன்னார் சிங்.

தடையற்ற வர்த்தகம்... விவசாயிகளை ஒழிக்கும் சர்வதேச சதி !

உலகமயம் மற்றும் தாராளமயம் ஆகிய பெயர்களில் இங்கே செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், தற்போது எதிர்விளைவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்கிற கதையாகத் திரியும் மன்மோகன் சிங் அரசு, மொத்தத்தையும் மூடிமறைப்பதற்காக, 'தடையற்ற வர்த்தகம்' என்றொரு புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்து, ஐரோப்பிய நாடுகளுடன் பேச ஆரம்பித்துள்ளது!

உலகமயம் மற்றும் தாராளமயம் என்பவை... ஒரு நாடு மற்றொரு நாட்டுக்குள் புகுந்து, எதை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்பதற்கான அங்கீகாரம்தான். இதற்காக உலக வர்த்தக அமைப்பு உருவாக்கிய விதிமுறைகள், ஏழை எளிய நாடுகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டும் வகையில்தான் உருவாக்கப்பட்டன. ஆனபோதிலும், அதில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதாவது, அந்நிய நாடுகள் வியாபாரம் என்கிற பெயரில், இன்னொரு நாட்டை ஒரேயடியாக சூறையாடி விடக்கூடாது என்பதற்காக, குறிப்பிட்ட சில பொருட்கள் இறக்குமதியாகி, உள்நாட்டில் அதே பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில்... இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிவிதிக்கலாம் என்பதும் அதில் ஒரு விதி. இதை பாதுகாப்புக்கான விதி என்றே உலக வர்த்தக அமைப்பு வரையறுத்திருந்தது.

இதன்படி, பாமாயிலுக்கு 70% வரை வரி விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இறக்குமதியாகும் பாமாயிலுக்கு 2% வரி மட்டுமே விதிக்கப்பட்டது. அதேசமயம், ஃபிரான்சு நாட்டிலிருந்து வரும் பிராந்திக்கு 400 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டது. 'பாமாயிலுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டிருப்பதால், உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இறக்குமதி பாமாயிலுக்கு வரியை உயர்த்த வேண்டும்' என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கினர். அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதேசமயம், குறைந்த விலையில் வெளிநாட்டு பிராந்தி இந்தியாவுக்குள் வந்தால், உள்ளூர் சாராய வியாபாரத்தில் கோலோச்சும் விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக 400% வரியை விதித்து மத்திய அரசு. அதாவது, உயிர் வாழத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயி எக்கேடு கெட்டாலும், பரவாயில்லை... உயிரை எடுக்கும் சாராய அதிபர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற 'உயரியக் கொள்கை'யுடன் செயல்பட்டது மத்திய அரசு!

தடையற்ற வர்த்தகம்... விவசாயிகளை ஒழிக்கும் சர்வதேச சதி !

இத்தகையச் சூழலில், உலகமயம் என்பதைவிட மிகமோசமான 'தடையற்ற வர்த்தகம்' என்பதை இங்கே நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது மத்திய அரசு. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், எந்தப் பொருளையும் எப்படி வேண்டுமானாலும், விற்பனை செய்யலாம் என்பதுதான் 'தடையற்ற வர்த்தகம்' என்பதன் நோக்கமே! இது முதலில் நேரடியாகத் தாக்குதல் நடத்தப் போவது... விவசாயிகள் மீதுதான்!

ஐரோப்பாவின் விவசாய முறையும், இந்திய விவசாய முறையும் முற்றிலும் வேறுபட்டவை. அங்கு ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி விவசாயிகள் இருக்கிறார்கள். எல்லா விவசாயிகளுக்கும் கொழுத்த மானியம் உண்டு. உதாரணத்துக்கு அங்குள்ள பால் விவசாயி, எத்தனை மாடுகள் வைத்திருக்கிறார் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எத்தனை ஏக்கர் நிலம் அவருக்கு இருக்கிறதோ, அதைப் பொறுத்து குறிப்பிட்ட தொகையை மானியமாகக் கொடுக்கிறார்கள். இப்படி மானியத்தில் கொழுத்துக் கிடக்கும் அவர்களுடன், மானியமே இல்லாமல்... பருவமழையை மட்டுமே நம்பி பயிர் செய்யும் நமது விவசாயிகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கத் துடிக்கிறது, மன்மோகன் சிங் அரசு. இது, கிட்டத்தட்ட, 'விவசாயிகள் மீது தொடுக்கப்படும் போர்’!

இந்தக் கொடூரத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் விவசாயிகளைக் கொன்றுபோடக் காத்திருக்கிறது என்று எதிர்ப்புத் தெரிவித்துத்தான், கடந்த மார்ச் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் நாடு முழுக்கவிருந்து பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் திரண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். டெல்லி சுல்தான்களின் பிடரியைப் பிடித்து உலுக்கினோம். பயந்தது போல் நடித்த மத்திய அரசு... ஆறு மத்திய மந்திரிகள் மற்றும் துறை செயலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்ப... அடியேனும் ஒரு விவசாயியாக அதில் பங்கேற்றேன்.

'விவசாயிகளுக்குப் பாதகமாக இந்த அரசு எதையுமே செய்யாது. விவசாயிகளைக் கேட்காமல், இனி எந்த முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது' என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்த அமைச்சர்கள்... விவசாய விளைபொருட்கள் விலை நிர்ணயக் குழு, நிலம் கையகப்படுத்துதல் வரைமுறைப்படுத்தும் குழு, விவசாயத்தில் அன்னிய நேரடி முதலீடு மற்றும் தடையற்ற வர்த்தகத்தைக் கண்காணிக்கும் குழு... என அமைச்சர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறும் மூன்று குழுக்களையும் உருவாக்கினர்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில்... நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான குழு மட்டுமே அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. மற்ற குழுக்களைப் பற்றிய அறிவிப்பு இல்லை. இத்தகையச் சூழலில்... தடையற்ற வர்த்தகம் பற்றி, ஐரோப்பாவுடன் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர்.

கேட்டால், 'விவசாயத்துக்கு விதிவிலக்கு அளித்து விட்டுத்தான், தடையற்ற வர்த்தகம் பற்றி பேசுகிறோம்’ என்கிறார்கள். இதில், இந்திய விவசாயிகளை மட்டுமல்ல... ஒட்டுமொத்த மக்களையும் வீழ்த்தும் சர்வதேச சூழ்ச்சி அடங்கியிருக்கிறது. தடையற்ற வர்த்தகம் நடைமுறைக்கு வந்தால்... ஐரோப்பிய பால் நேரடியாக இந்தியக் கடைகளில் விற்பனைக்கு இருக்காது. ஆனால், ஐரோப்பிய பாலிலிருந்து மதிப்புக்கூட்டிய அனைத்துப் பொருட்களும், குறைந்த விலையில் இந்தியச் சந்தைகளில் வலம் வரும். அங்கே விளைந்த கோதுமை, மக்காச்சோளம், சோயா இதெல்லாம் அப்படியே இங்கு வந்து இறங்காது. ஆனால், அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் பாதையெங்கும் சல்லிசாக பந்தி விரிக்கும்.

ஏகப்பட்ட மானியங்களை வாங்கிக் கொண்டு, அந்த நாட்டு விவசாயி உற்பத்தி செய்து அனுப்பும் பொருட்களின் விலையுடன், ஒரு பைசா கூட மானியம் இல்லாமல் உற்பத்தி செய்யும் உள்நாட்டு விவசாயியின் விளைபொருள் விலை... எந்த வகையிலும் போட்டி போட முடியாத நிலையில், மக்களின் கவனம் அந்நியப் பொருட்கள் பக்கம்தான் திரும்பும்.

பிறகென்ன... உள்ளூர் விவசாயியின் வயிற்றில் மண்தான்! ஏற்கெனவே விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் அண்ட் கோவுக்கு கொண்டாட்டம்தான். அப்போதுதானே இங்கே இருக்கும் நிலங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்க முடியும்!

ஆனால், ஒருவிஷயத்தில் அனைவருமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைக்கு வேண்டுமானால், பன்னாட்டு விளைபொருட்கள், குறைந்த விலைக்குக் கிடைக்கலாம். ஆனால், இந்திய விவசாயிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில்... பன்னாட்டான் வைத்ததே விலை என்றாகும். அப்போது, உள்நாட்டு மக்கள் விழித்துக் கொண்டாலும், உள்ளூரில் விவசாயம் செய்ய விவசாயி இருக்கமாட்டான்.

ஆக, இந்த தடையற்ற வர்த்தகம் என்பது, தனிப்பட்ட விவசாயிகளை ஒழிக்கும் சதியல்ல... ஒட்டுமொத்தமாக இந்தியாவையே வளைக்கும் சர்வதேச சதி! முகமூடிகள்தான் வேறுவேறே தவிர... உலக வர்த்தகம், தடையற்ற வர்த்தகம், அன்னிய முதலீடு அத்தனையும் ஒரே குளத்தில் ஊறிய சாத்தான்களே! ஒன்றுகூடி இந்த சாத்தான்களை நாம் ஓடஓட விரட்டாவிட்டால்... நாளைக்கு இந்தியாவில் மட்டுமல்ல, வேறு எங்குமே  நாம் ஓடுவதற்கு இடமிருக்காது!

 வறட்சியைத் தாங்கும் தென்னை...100 ரூபாய் கன்று 30 ரூபாய்க்கு!

 தேசிய தென்னைசார் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை ரகத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தற்போது அதில் வெற்றி கண்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் தும்கூர் மற்றும் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட தென்னந்தோப்பு ஆகிய இடங்களில் இருந்த தென்னை மரங்களில், வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ரகத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த இரண்டு மரங்களின் மகரந்தங்களையும் இணைத்து, வறட்சியைத் தாங்கி வளரும் புதிய ரகத்தை உருவாக்கியுள்ளனர்.

தடையற்ற வர்த்தகம்... விவசாயிகளை ஒழிக்கும் சர்வதேச சதி !

தேசிய தென்னைசார் ஆராய்ச்சி நிலையம் மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் இணைந்து வெளியிட்டுள்ள அந்த புதிய ரக தென்னங்கன்றுகள், குன்றக்குடி ஆதீன மடத்தில் தற்போது விற்பனைக்கு உள்ளன.

''நடவு செய்த 7\ம் ஆண்டிலிருந்து பலன் கொடுக்கக்கூடிய இந்த நெட்டை ரக தென்னை, 100 ஆண்டுகளுக்கு மேலாக பலன் கொடுக்கக் கூடியது. 100 ரூபாய்க்கு மேல் விலையுள்ள இந்த ரகக் கன்றுகள், விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உற்பத்திச் செலவான

30 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது'' என்கிறார் ஆதீனத்தைச் சேர்ந்த ராஜா.

தொடர்புக்கு: ராஜா,
செல்போன்: 94425-31581, 99522-77350.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism