தொடர்

##~##

பழங்கள் மற்றும் காய்கறிகளின் வாழ்நாட்களை அதிகரிக்கும் வழிமுறைகள் பற்றி இதுவரை பார்த்தோம். நவீனக் கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் அளித்து வரும் உதவிகள் குறித்து, இப்போது பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் குளிர்பதனக் கிடங்குகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. சமீபகாலமாக, இதனுடைய நன்மைகள் குறித்து விவசாயிகள் ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்தாலும்கூட... இவற்றை உருவாக்குவதில் யாரும் பெரிதளவில் முனைப்பு காட்டுவதில்லை.

'குளிர்பதனக் கிடங்குகளுக்கான நவீனக் கருவிகளை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்தாக வேண்டும். இவற்றில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் இங்கு கிடைக்க மாட்டார்கள்’ என்கிற எண்ணமும் தயக்கத்துக்கு ஒரு காரணம்.

உண்மையில்... குளிர்பதனக் கிடங்குகளை அன்னியமாகப் பார்க்க வேண்டியதில்லை. நம்நாட்டிலேயே புனே, பெங்களூரு, சென்னை... உள்ளிட்ட பெருநகரங்களில் இதற்கான அனைத்து நவீனக் கருவிகளும் மிக எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றை நிறுவவதற்கென்றே சில தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. தொழில்நுட்ப வல்லுநர்களும் எளிதாகக் கிடைக்கிறார்கள். இதற்கான கட்டுமானங்களை சிக்கமானச் செலவில் அமைக்கும் வழிமுறைகள், நியாயமான விலையில், தரமான சாதனங்கள் கிடைக்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதலுக்கும் எங்களுடைய 'இந்தியப் பயிர்பதனத் தொழில் நுட்பக் கழக'த்தை விவசாயிகள் அணுகலாம். எங்களுடைய வல்லுநர்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்க, மத்திய அரசு மிக அதிக அளவில் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. தேவைக்கேற்ப குளிர்பதனக் கிடங்கை உருவாக்கிக் கொள்ள, மொத்த மதிப்பீட்டில் 50 சதவிகிதத்தை மானியமாகப் பெற முடியும். ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை மானியம் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்கக் கூடியவர், மொத்த மதிப்பீட்டில் ஒன்றரை சதவிகிதம் சொத்து உடையவராக இருந்தாலே போதுமானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை அணுகினாலும், இதுபற்றிய விவரங்கள் கிடைக்கும். இதற்கான மானியத்தைப் பெற, அங்கே தான் விண்ணப்பிக்க வேண்டும்.

கொட்டிக் கிடக்கும் மானியங்கள்..!

உணவுப் பதப்படுத்தும் தொழில்களின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு, உணவுப் பதப்படுத்தும் அமைச்சகத்தின் மூலமாக, இன்னும் ஏராளமான உதவிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, 11 மற்றும் 12-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்கென சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது செயல்பாட்டில் உள்ள சில திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

உணவுப் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை உருவாக்குதல், மேம்படுத்துதல், நவீனமயமாக்குதல் திட்டம்!

அதிகமான உணவைப் பதப்படுத்துவது, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை குறைப்பது, வேளாண் விளைப்பொருட்களின் மதிப்பை அதிகப்படுத்துவது... இவற்றின் மூலமாக விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது, இவைதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

நம் நாட்டில் விளையும் விளைபொருட்களிலிருந்து மதிப்புக்கூட்டியப் பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இத்திட்டம் ஊக்கமளிக்கிறது. உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான புதியத் தொழிற்கூடங்களை உருவாக்கவும், ஏற்கெனவே அமைந்துள்ள தொழிற்கூடத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும், இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறலாம்.

பழங்கள், காய்கறிகள் மட்டுமல்லாமல்... எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், நெல், பால், மீன், இறைச்சி, காளான், தேங்காய், வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான பதப்படுத்தும் தொழிற்கூடத்தை உருவாக்கவும் மானியம் பெறலாம். நெல் அரைக்கும் ஆலை, மாவு அரைக்கும் ஆலைகளை உருவாக்கவும் மானியம் பெறலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை, இத்திட்டத்தின் மூலம், ஒரு தொழிற்சாலையின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவிகிதம் (அதிகபட்சமாக 50 லட்ச ரூபாய்) வரை மானியம் பெற முடியும்.

மதிப்புக் கூட்டுதல், பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டம்!

கொட்டிக் கிடக்கும் மானியங்கள்..!

பண்ணைகளிலேயே குறைந்தப்பட்சம் பதப்படுத்தும் மையம், எடை போடும் இயந்திரம், தரம் பிரிக்கும் இயந்திரம், நடமாடும் முன் குளிர்வித்தல் கருவி, விளைபொருட்களை குளிர்ந்த நிலையிலேயே தொலை தூரத்துக்கு எடுத்துச் செல்லும் வாகனம், குளிர்பதனக் கிடங்கு, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொள்ள இத்திட்டத்தின் கீழ் 50 சதவிகிதம் மானியம் கிடைக்கிறது.

தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டம்!

கிராமப்புற இளைஞர்களையும் விவசாயிகளையும் உணவுப் பதப்படுத்தும் தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்காகவே இத்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 25 முதல் 30 நபர்களுக்கு 6 வாரம் பயிற்சி அளிக்க, சுமார் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 20 நபர்களுக்கு

10 நாட்கள் பயிற்சிகள் அளிக்க, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுபோல் இன்னும் ஏராளமானத் திட்டங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை அணுகினால், இன்னும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். www.mofpi.nic.in என்ற இணையதளத்தில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்கள் தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டுக்கென்றே பிரத்யேகமான விளைபொருட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் முறையாகப் பாதுகாத்து, மதிப்புக்கூட்டி, சந்தைப் படுத்தும்போது, நிச்சயமாக அது லாபத்துக்கு உத்தரவாதம் தருவதாக இருக்கும். அவற்றுக்கான வழிமுறைகளைப் பற்றி இனி பார்ப்போம்!

-மதிப்புக் கூடும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism