Published:Updated:

விளைநிலங்களில் முளைக்கும் அணை... போராட்டக் களமான மூன்று கிராமங்கள்..!

சி. ஆனந்தகுமார் படங்கள்: மு. ராமசாமி

விளைநிலங்களில் முளைக்கும் அணை... போராட்டக் களமான மூன்று கிராமங்கள்..!

சி. ஆனந்தகுமார் படங்கள்: மு. ராமசாமி

Published:Updated:

பிரச்னை

##~##

''பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொட்டரை, ஆதனூர், குரும்பாபாளையம் கிராமங்களுக்கு இடையில், மருதையாற்றின் குறுக்கே 108 கோடி ரூபாய் மதிப்பில், 650 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்'’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஏப்ரல் 4 அன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, இப்படியரு அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து தூக்கத்தைத் தொலைத்துவிட்ட இப்பகுதி விவசாயிகள்... தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

''எங்களோட நீண்ட காலக்கோரிக்கையை ஏற்று அணை கட்டப் போறதா முதல்வர் சொல்லியிருக்காங்க. ஆனா, எங்கள் கிராமத்துல இருந்து யாரும் 'அணை வேணும்’னு கேக்கவே இல்லை. 'ஆத்துல ஒரு மேம்பாலம் கட்டிக்கொடுங்க’னுதான் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்கோம். அதை விட்டுட்டு, எங்க நிலங்களைப் பறிச்சி, அணை கட்டுறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை. அணையைத் தடுக்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனா, எங்க ஊரை அழிச்சிட்டு, சுத்தி இருக்குற ஊர்களை வாழவைப்போம்னு சொல்றதுதான் வேதனையா இருக்கு.

அறிவிப்பு வந்ததுல இருந்து மூணு கிராம விவசாயிகளும் உண்ணாவிரதம், மனு கொடுக்குறதுனு அடுத்தடுத்தப் போராட்டங்களை நடத்திக்கிட்டிருக்கோம். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் எங்கள சந்திக்கலை. அந்த இடத்துல அணை கட்டுனா... கிட்டத்தட்ட 1,000 விவசாயிகள், சுமார் 450 ஏக்கர் விளைநிலங்களை இழப்பாங்க.

விளைநிலங்களில் முளைக்கும் அணை... போராட்டக் களமான மூன்று கிராமங்கள்..!

இந்த அதிகாரிகள், அதையெல்லாம் மறைச்சு தப்பான விவரங்களை அரசுக்குக் கொடுத்திருக்காங்க'' என்று சோகம் பொங்கச் சொன்னார் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி,

அதே ஊரைச் சேந்த மணி, ''எங்களுக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். வீட்டுக்காரருக்கு கை, கால் விளங்காமப் போய் படுத்தப் படுக்கையா கிடக்கறார்.   அங்க இங்க கடன் வாங்கி, பொண்ணுங்களைக் கட்டிக் கொடுத்தேன். இருக்கற காட்டுல உழைச்சி, அதுல கிடைக்கறதை வெச்சுதான் கொஞ்சங் கொஞ்சமா கடனை அடைச்சுட்டுருக்கேன். அதுலயும் நெருப்ப வாரிப் போட்டுட்டாங்க. நிலத்தை எடுத்துக்கிட்டு வாரிசுகளுக்கு வேலை தர்றாங்களாம்.

எட்டாவதுகூட படிக்காத என் மகனுக்கு என்ன வேலை தருவாங்க? எங்களுக்கு விவசாயத்தை விட்டா வேற எந்த வேலையும் தெரியாது. எங்க நிலத்தைப் பறிச்சிக்கிட்டா, உசுரை விடுறதைத் தவிர வேற வழியில்லை'' என்று கண்கலங்கினார்.

விளைநிலங்களில் முளைக்கும் அணை... போராட்டக் களமான மூன்று கிராமங்கள்..!

கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி, ''இதுவரை வாழ்ந்த இடத்தை விட்டுட்டு வேற ஊருக்கு போகணும்னு நினைச்சா தூக்கமே வரமாட்டேங்குது. எங்க குடும்பத்துக்குச் சொந்தமா பத்து ஏக்கர் நிலம் இருக்கு. அணைக்காக இந்த நிலம் பறிபோகப் போகுது. நிலத்தைக் கையகப்படுத்த நினைக்கற அதிகாரிங்க... அண்ணன், நான், தம்பினு தனித்தனி குடும்பமா இருக்கற எங்க மூணு குடும்பத்தையும் இந்த நிலத்துக்காக 'ஒரே குடும்பம்’னு கணக்கு காட்டுறாங்க. கல்யாணம் ஆகி, புள்ளக்குட்டிகள்னு ஆனபிறகும் ஒரே குடும்பம்னு பொய் கணக்குக் காட்டுறது எந்தவிதத்துல நியாயம்'' என்றார், பரிதாபமாக.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம், ''விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி, நிலங்களைக் கையகப்படுத்தினால்... இன்றைய நில மதிப்பைப்போல நான்கு மடங்கு விலை அதிகமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று நிலம், குடியிருப்பு, பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும்'' என்று கோரிக்கைகளைச் சொன்னார்.

மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றபோது, ''மருதையாற்றுத் தண்ணீர் வீணாகக் கொள்ளிடத்தில் கலக்கிறது. இங்கு அணை கட்டினால், சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கூடலூர், சாத்தனூர், தொண்டப்பாடி உள்ளிட்ட 10 கிராமங்களிலுள்ள 5

விளைநிலங்களில் முளைக்கும் அணை... போராட்டக் களமான மூன்று கிராமங்கள்..!

ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும். நிலத்தடி நீர்மட்டம் மேம்படும்.

கடந்த 1989-ம் ஆண்டு 19 கோடியில் அங்கு அணை கட்டுவதாகத் திட்டம் அறிவிக்கப்பட்டு, சிலரின் இடையூறால் கை விடப்பட்டது. அந்த நல்ல திட்டத்தை முதல்வர் மீண்டும் அறிவித்துள்ளார். நிலங்களைக் கையகப்படுத்த 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைக் கொண்டு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், மாற்றுநிலங்கள், வாரிசுகளுக்கு வேலை, வீடு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்'' என்ற ஆட்சியர்,

''எது எப்படி என்றாலும், பொதுமக்களின் கருத்தைக் கேட்ட பிறகே திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்'' என்றார்.

அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே இதைச் செய்திருக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism