Published:Updated:

மறைந்து போன பாரம்பரிய நெல் ரகங்கள்...

மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் ஆசிரியர்! காசி. வேம்பையன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 பாரம்பரியம்

##~##

வித்தவரைக்கும் லாபம்னு நினைக்கறவனும் விளங்க மாட்டான்... விதைநெல்லை வேக வெச்சு திங்கறவனும் விளங்க மாட்டான்...' என்று கிராமங்களில் சொல்வார்கள். அது அப்படியே இன்று நெல் சாகுபடிக்குப் பொருத்தமாக இருக்கிறது. விற்ற வரை லாபம் என பல நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக விளைச்சல் கொடுக்கும் மலட்டு ரகங்களை சந்தைப்படுத்துகின்றன. பெரும்பாலான விவசாயிகளுக்கும் விதைநெல்லை சேமித்து வைக்கும் பழக்கம் ஒழிந்து விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், மண்ணுக்கு ஏற்ற பாரம்பரிய ரகங்களைத் தேடிப் பிடித்து சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களின் முயற்சியால், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 பாரம்பரிய நெல் ரகங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.

இப்படிப்பட்ட தேடல் குணம் உள்ள விவசாயிகளில் ஒருவர், ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் உள்ள நரிசு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர், நட்வர் சாரங்கி. இவர், 360 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்து வருகிறார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது அவருக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றிய தனது அனுபவத்தைச் சொல்லும் நட்வர் சாரங்கி, ''ஆரம்பக் காலங்களில் ரசாயன உரங்களையும், உயர் விளைச்சல் நெல் ரகங்களையும்தான் பயிர் செய்தேன். ஒரு முறை என்னுடைய நிலத்தில், 'கார்போ பியூரான்’ பூச்சிக்கொல்லியைத் தூவிய வேலையாள்... மூச்சுத் திணறி, மயங்கி விட்டார். உடனே அந்தப் பூச்சிக்கொல்லியை நிலத்தில் புதைத்தபோது, நிலத்திலிருந்த உயிரினங்கள் இறந்து போனதை கவனித்தேன். 'நத்தை போன்ற உயிரினங்களே இறக்கும்போது, நிலத்துக்கு நன்மை செய்யக்கூடிய மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கண்டிப்பாக இறந்து போகும்’ என எனக்கு உறைத்தது. உடனே, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இயற்கை முறை சாகுபடிக்கு மாறி, உயர் விளைச்சல் நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்து வந்தேன்.

மறைந்து போன பாரம்பரிய நெல் ரகங்கள்...

சுற்றுச்சூழல் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த என் மகன் ராஜேந்திராவும், அவனுடைய நண்பர் ஜுப்ராஜ் ஸ்வானும் ஒடிசா மாநிலம் முழுக்க பயணம் செய்து, அழிவு நிலையில் இருந்த பல பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்து வரும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த சமயத்தில் என் மகன் சில பாரம்பரிய ரகங்களைக் கொடுத்து, சோதனை முயற்சியாக சாகுபடி செய்து பார்க்கச் சொன்னான். அதை விதைத்து, பண்புகள், வளர்ச்சி, விளைச்சல் திறன் அனைத்தையும் குறித்து வைத்தேன். ஆனால், அறுவடை செய்யும் முன்பாகவே, 'மூளை மலேரியா’ தாக்கி என் மகன் ராஜேந்திரா இறந்து விட்டான்.

அவன் இறப்புக்குப் பிறகு, ஜுப்ராஜ் ஸ்வானுடன் இணைந்து மகனின் பணியை நான் தொடர ஆரம்பித்தேன். மாநிலம் முழுக்கச் சுற்றி 360 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்தோம். தற்போது, அவற்றை சாகுபடி செய்து விவசாயிகளுக்கு விதைநெல்லாகக் கொடுத்து வருகிறோம்.

மறைந்து போன பாரம்பரிய நெல் ரகங்கள்...

என்னிடம் இரண்டு கிலோ விதைநெல் வாங்கும் விவசாயிகள், நான்கு கிலோவாக திருப்பித் தருகிறார்கள். இதன் மூலம் பாரம்பரிய ரகங்கள் மீண்டும் பரவலாகி வருகின்றன'' என்று சொல்லும் சாரங்கி,

''இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் மூலமாக, எல்லோருக்கும் உணவளிக்க முடியுமா? என்று பலரும் கேட்கிறார்கள். வீரிய ரகங்களை ரசாயனம் போட்டு சாகுபடி செய்யும்போது கிடைக்கும் விளைச்சலைவிட, அதிகமாக விளைச்சல் கொடுக்கும் பாரம்பரிய ரகங்கள்கூட இங்கே இருக்கின்றன என்பதுதான் உண்மை. என்னிடம், ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ அளவுக்கு விளைச்சலைக் கொடுக்கும் ரகங்கள்கூட உள்ளன. விளைநிலங்களை தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கும், புகையிலை போன்ற பணப்பயிர் சாகுபடிக்கும் மாற்றாமல் இருந்தால், கண்டிப்பாக இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் ரகங்கள் மூலம் எல்லோருக்கும் உணவளிக்க முடியும்'' என்றார் உறுதியானக் குரலில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு