Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

அறியா நிலைக்குச் சென்றால்தான் அறிய முடியும் !ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

அறியா நிலைக்குச் சென்றால்தான் அறிய முடியும் !ஓவியம்: ஹரன்

Published:Updated:

நம்மாழ்வார்

வரலாறு

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலைப்பயிர்கள் சாகுபடிக்காக, மாடுகளைக் கொண்டு நிலத்தை உழுது சமப்படுத்திக் கொண்டிருந்தோம் நானும் மாதையனும். இப்படிச் செய்வதால், மழை நீர் பரவலாக நிலத்தினுள் இறங்குவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படும். இந்த வேலையில் மும்முரமாக இருந்தபோதுதான்... ''நீங்கள் மாதையன் நிலத்தில் மட்டும்தான் உழைப்பீர்களா... எங்களுடன் வேலைக்கு வருவீர்களா?'' என்று கேட்டார்கள், அந்த வழியாக வயல் வேலைக்குச் சென்ற பெண்கள்.

''வருகிறேன், இன்று என்ன வேலைக்குப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.

''ஆரியம் (கேழ்வரகு) அறுவடைக்குப் போகிறோம்.''  

''என்னிடம் அரிவாள் இல்லையே...''

''நாங்கள் தருகிறோம்!''

அவர்களுடன் அறுவடை வயலுக்குச் சென்றேன். கங்காணி, கையிலிருந்த கோலால் ஒவ்வொருவருக்கும் அறுவடை செய்ய வேண்டிய இடத்தைப் பிரித்துக் கொடுத்தார். எனக்கு ஒரு கூறு கிடைத்தது. அது, நன்கு விளைந்திருந்த நிலம். என்னால் முடிந்த அளவு அறுத்தேன். இருந்தாலும், பெண்களுடன் போட்டி போட முடியவில்லை. நான் பின்தங்கிய போதெல்லாம் பக்கத்துக் கூறில் அறுவடை செய்த பெண் நான் பாக்கி வைத்திருந்த இடத்தையும் அறுத்து உதவினார். இடைவேளை நேரத்தில் மக்கள் கம்பங்கூழ் குடித்தபோது, எனக்கும் கூழ் கிடைத்தது. மொச்சைக் கொட்டை குழம்போடு சாப்பிட்ட கூழ், சுவையாகவே இருந்தது. அன்று உடல் வலி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், பொழுது கலகலப்பாகவே சென்றது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

தொடர்ந்து அவர்களுடன் வேலைக்குச் செல்லும்போது, நிறைய கதைகளையும் தகவல்களையும் பரிமாறினார்கள். கொஞ்ச நாட்களிலேயே மழை ஆரம்பித்து விட்டதால், நாங்கள் அமைத்துக் கொண்டிருந்த மாதிரி தோட்டத்தில் வேலை அதிகமாகி விட்டது. அதனால், வெளிவேலைக்குப் போக முடியவில்லை. நிலத் தயாரிப்பின்போது ஒரு சதுரத்தில் நான்கு பெரிய கற்களைப் புரட்ட வேண்டியிருந்தது. கீழே மணல் பரப்பு... அதன் மீதிருந்த கற்களோ மிகப்பெரியவை. கடப்பாரைதான் வளைந்ததே தவிர, கற்களை நகர்த்த முடியவில்லை. இறுதியாக கல் உடைப்போரிடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவானபோது... நெடுநேரம் பேசிய பிறகும், 400 ரூபாய்க்கு குறைவாக கூலியைக் குறைத்துக் கொள்ள அவர்கள் சம்மதிக்கவில்லை. 'பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று கலைந்தோம்.

காலையில் காட்டுக்குப் போனபோது மாதையன் ஒரு யோசனை சொன்னார். ஒவ்வொரு கல்லுக்குப் பக்கத்திலும் பெரிதாக ஒரு குழி தோண்டி, பாறாங்கல்லை பள்ளத்தில் தள்ளி மூடி விடுவது என்பதுதான் அந்த யோசனை. அப்படியே செய்தோம். மாதையன் சொன்ன இந்த யோசனை... 'அறிவு எங்கும் பரவிக் கிடக்கிறது’ என்கிற சிந்தனையை மீண்டும் வலுப்படுத்தியது.

நாட்டார்பாளையம் ஊராட்சியில் அதிக ஓய்வு கிடைத்தது. அந்த நாட்களில் நான் படித்த மூன்று கட்டுரைகள் எனது சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று 'பங்கெடுக்கும் கல்வியும் வளர்ச்சியும்'. அந்தக் கட்டுரை சொல்வது இதுதான்... படித்த ஒருவர், 'சமூக சேவை செய்யப் போகிறேன்’ என்று கிராமத்துக்குச் செல்கிறார். அவருக்கு உலகியல் அறிவு கிராமத்தாரைவிட ஒப்பீட்டளவில் கூடுதலாகவே தெரியும். ஆனால், அந்த ஊர் நிலவரம் அங்கு வாழும் மக்களுக்குத்தான் கூடுதலாகத் தெரியும். அந்த வட்டாரத்தில் நிலவும் சமூக உறவுகள் எப்படிப்பட்டவை; தட்பவெப்ப நிலை என்ன; வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளன; கல்வித் தரம் எப்படிப்பட்டது; காட்டு விலங்குகள் என்ன மாதிரி தொந்தரவு தருகின்றன? என்பது போன்ற விவரங்கள், வெளியிலிருந்து போனவரைவிட, அங்கேயே வளர்ந்தவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். ஆதலால், சேவை செய்யச் செல்பவர் முதலில் உள்ளூர் நிலைமையைக் கற்றறியும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

ஊரைப் பற்றி கற்றறிவது அவ்வளவு எளிதல்ல. ஒன்றை அறிய முற்படுபவர், முதலில் அறியா நிலைக்குச் செல்ல வேண்டும். முழுக்கால் சட்டை, மேல் சட்டை, கையில் ஆங்கிலப் பத்திரிகை, வாயில் ஆங்கில வார்த்தைகள்... இவற்றுடன் ஊருக்குள் நுழையும்போதே ஒருவரை 'சார்’ என்று மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அதற்கு பிறகு, 'காற்றும் மேகமும் மழையாக மாறுமா மாறாதா..?’ என்ற கேள்விக்குக்கூட 'சாரி'டமே பதிலை எதிர்பார்க்கிறார்கள். ஆதலால், ஊர் நிலைமையைக் கற்க முற்படுபவர், அறியா நிலைக்குப் போனால் மட்டும் போதாது. அவர்களில் ஒருவராக மாற வேண்டும்... என்று அந்தக் கட்டுரை தெள்ளத்தெளிவாகச் சொன்னது!

மாதையன் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து, நிலத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்த பிறகு, 'முழுவதும் நான் கிராமத்தானாக மாறி விட்டேன்’ என்று சொல்ல முடியவில்லை. என்னை 'சார்’ என்றே இளைஞர்கள் அழைத்தார்கள். ஒரு நாள் மாலை இளைஞர்களுடன் பேச்சை இப்படி ஆரம்பித்தேன். ''நமது ஊரில் 'சார்’ இருக்கிறார்களா?'' என்று கேட்டேன். ''இல்லை அஞ்சட்டியில்தான் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு சார் இருக்கிறார்'' என்று சொன்னார்கள். ''நான் அந்த போலீஸ்காரர் போலவா இருக்கிறேன்'' என்று கேட்டேன். ''நீங்க பெரியவங்க. அதனால உங்களை 'சார்' என்றுதான் கூப்பிடணும்'' என்றனர்.

'வால்கா சிந்து முதல் கங்கை வரை’ என்ற புத்தகத்தில் ராகுல சாங்கிருத்தியாயன் சொல்லியிருந்த நிகழ்வை அவர்களுக்கு விவரித்தேன். ஒரு தலையாரி, குத்தகை விவசாயி வீட்டுக்கு வருகிறான். வீட்டில் ஆடவன் இல்லை. 'நாளை ஜமீன்தார் ஊருக்கு வருகிறார், பால் வேண்டும்' என்று தலையாரி கேட்கிறான். வீட்டுக்காரி, 'எங்கள் வீட்டில் மாடு ஏது... நாங்கள் எப்படி பால் கொடுக்க முடியும்?' என்று கேட்கிறாள். கூரை மேலிருந்த அவரைக்காயைப் பறிப்பதற்கு தலையாரி தாவுகிறான். '’ஒரே ஒரு காய்தான் காய்த்திருக்கிறது. நாங்கள் அதில் ஒன்றையாவது கறி செய்து சாப்பிட வேண்டும். விட்டுவிட்டு போ’ என்று கெஞ்சுகிறாள். அவள் குழந்தை பெற்றுக் கொஞ்ச நாள் மட்டுமே ஆகிறது. வெளுத்துப்போய் நைந்த உடம்பு. அதை கவனித்த தலையாரி 'ஜமீன்தாருக்கு பால் கொடுக்க முடியுமா முடியாதா?’ என்று கேட்டான். 'மாடு இல்லை என்று முன்பே சொன்னேனே’ என்று வீட்டுக்காரி பதில் சொல்கிறாள். 'வருகிறேன்’ என்று போனவன், இன்னும் ஒரு ஆளுடன் வருகிறான். வீட்டுக்காரியை மரத்தடியில் கயிற்றால் கட்டி, அவள் மார்பிலிருந்து பால் கறந்து கொண்டு செல்கிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி, ''அவர்கள்தான் 'சார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர்கள். வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளையர்கள் கொள்ளை கொண்டு போவதற்கு துணை நின்றவர்களுக்கு 'சார்’ பட்டம் வழங்கப்பட்டது. என்னையும் 'சார்’ என்று அழைப்பீர்களா?'’ என்று கேட்டேன்.

''இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டார்கள். ''நடந்து போனதைப் பற்றி கவலைப்படக் கூடாது'' என்றேன்.

'ஐயா என்று கூப்பிடலாமா?’ என்றார்கள். ''இங்கிலீஸ் 'சார்', தமிழில் 'ஐயா'தானே. பிறகு எப்படி அழைப்பது?'' என்று குழம்பினார்கள். ''எனக்கு அம்மா, அப்பா வைத்த பெயர் நம்மாழ்வார். அப்படியே அழைக்கலாம்'' என்றேன். மூச்சு திணறிய இளைஞர்கள், '’நீங்களும் நானும் சமமாக முடியுமா?'' என்று கேட்டார்கள். ''உங்கள் சட்டையை எங்களுக்குக் கொடுத்து விடுவீர்களா?'' என்று கேட்டார்கள். அப்போதே கழற்றி மாட்டினேன். ''கை கடிகாரத்தை மாற்றிக் கொள்ளலாமா?'' என்று கேட்டார்கள். அதையும் கழற்றி மாட்டினேன். வீட்டிலிருந்த சட்டைகளையெல்லாம் மாற்றினோம். அவர்களுடைய சட்டை எனக்குப் பொருத்தமானதாக இல்லை. சற்றே சிறியதாக இருந்ததால், பனியனோடு வாழப் பழகிக் கொண்டேன். இப்பொழுது பல நண்பர்களும், இயல்பாகப் பழகவும் பேசவும் முன்வந்தார்கள்.

பெரியநாயக சாமி, கிறிஸ்துவ அமைப்பில் குரு பயிற்சிக்காக சேர்ந்திருந்தவர். நெருக்கடி காலகட்டத்தின் போது அரசியல் விழிப்பு உணர்ச்சிக்காக செயல்பட்ட மாணவர் அமைப்பில் தீவிர பங்காற்றியவர். மிகவும் சுலபமாக மக்களுடன் கலந்து பழகுவது, அவருக்குக் கை வந்த கலை. ஞாயிற்றுக்கிழமைகளில் பக்கத்திலிருந்த சேசுராசபுர பங்குக்கு அழைத்துச் செல்வார். அங்கிருந்த இளைஞர் மன்றத்துடன் வியர்த்துப் போகும் அளவுக்கு கைப்பந்து விளையாட்டு நடைபெறும். பங்குத் தந்தை லூர்துசாமி இயல்பாகப் பழகக்கூடியவர். நான், ஆசி, பெரியா மூவருக்கும் சமையல்காரர் நல்ல காலை உணவு கொடுப்பார்.

ஒரு நாள் சமையல்காரரின் காலை பார்த்தபோது என் மனம் நெகிழ்ந்தது. கணுக்காலுக்கு கீழே பெரிதாக வீங்கிப் புண் வெடித்து நீர் வடிந்து கொண்டிருந்தது. ''காலை இப்படி வைத்திருக்காதே. பப்பாளிக் காயின் தோலை எடுத்துவிட்டு, மாம்பழத்தை செதுக்குவதைப் போல் செதுக்கி வைத்து கட்டு'' என்றேன். அடுத்த வாரம் சென்றபோது சமையல்காரரின் கால் வீக்கம் குறைந்து, புண் ஆறி இருந்தது. ''நான் சொன்னதை செய்தாயா?'' என்று கேட்டேன். ''செய்ததால்தான் வேலைக்கு வந்திருக்கிறேன்'' என்றார். ஒரு சிகிச்சையை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டதில் எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது. சேசுராசபுரம் பயணங்கள் அதிக நாள் நீடிக்கவில்லை. அதற்கும் ஓர் காரணம் இருந்தது.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism