Published:Updated:

கொட்டிக் கொடுக்கும் கேழ்வரகு...

குறைவான நீரில் நிறைவான மகசூல்..! த. ஜெயகுமார் படங்கள்: க. தனசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

தமிழ்நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கும், தமிழக மக்களின் வாழ்வியல் முறைக்கும் ஏற்ற உணவாகச் சொல்லப்படுவது கேழ்வரகுதான். சொல்லப் போனால்... நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இங்கே பெரும்பாலானவர்களின் உணவே... கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள்தான். குறிப்பாக, குடலைக் கெடுக்காத உணவுகளில் ஒன்று, கேழ்வரகு!

'நாகரிகம்' என்கிற பெயரில், அரிசி உள்ளிட்ட பலவிதமான உணவுகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கினாலும், கேழ்வரகு மகாத்மியம் தெரிந்தவர்கள் மட்டும், தொடர்ந்து உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சமீபகாலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறு

தானியங்களின் பெருமை மக்களிடையே பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால், சந்தையில் அதன் தேவை, ஓரளவுக்கு உயரத் தொடங்கிஉள்ளது.

இத்தகையச் சூழலில், பல காலமாகவே கேழ்வரகு சாகுபடியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேகுளி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், ராமமூர்த்தி.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிபட்டணம் நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலம்பட்டி அருகே மலைப்பகுதியை ஒட்டி இருக்கிறது பாளேகுளி. இங்குதான் இருக்கிறது ராமமூர்த்தியின் தோட்டம். சுற்றிலும் மல்லிகைச் செடிகள், தென்னை மரங்கள் அணிவகுக்க, ஒரு பகுதியில் பால் வியாபாரமும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது அவருடைய தோட்டத்தில்!

''எனக்கு ஒண்ணேகால் ஏக்கர் நிலம் இருக்கு. அதுல வருஷா வருஷம் நாட்டு ரக கேழ்வரகைத்தான் போடுவேன். இந்த முறை நாட்டு ரகம் கிடைக்கல. அதனால, காவிரிப்பட்டணம் உதவி வேளாண் அலுவலகத்துல ஜி.பி.யு.-28 ரகத்தை வாங்கி சாகுபடி செஞ்சேன். நாட்டு ரகம் போலவே குறைவான தண்ணியிலயே நல்லா விளைஞ்சுடுச்சு. ஏக்கருக்கு 4 மூட்டை (100 கிலோ மூட்டை) கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கு'' என்ற ராமமூர்த்தி ஒன்றே கால் ஏக்கர் நிலத்தில், கேழ்வரகு சாகுபடி செய்யும் விதத்தைச் சொன்னார். அதை அப்படியே தொகுத்திருக்கிறோம்.

கொட்டிக் கொடுக்கும் கேழ்வரகு...

'ஜி.பி.யு.-28 ரக கேழ்வரகு, 75 நாள் பயிர். ஒன்றே கால் ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். இதை சதுரப் பாத்திகளில் விதைத்து தண்ணீர் பாய்ச்சினால், 25 நாட்களில் நாற்று தயாராகிவிடும். அதற்குள் நடவு நிலத்தைத் தயார் செய்துவிட வேண்டும். கட்டிகள் இல்லாத அளவுக்கு நிலத்தை நன்றாக உழுது... 4 டன் மாட்டு எருவைத் தூவி உழவு செய்து, பாசனம் செய்ய வசதியாக பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தில் தண்ணீர் கட்டி ஈரப்படுத்திக் கொண்டு, நாற்றுகளைக் குத்துக்கு இரண்டாக நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களைக் கொடுத்து, தண்ணீர் பாய்ச்சினால், பயிர் நன்றாக வளரும்.

20-ம் நாளில் கொத்து மூலமாக களைகளைக் கொத்திவிட்டு, பயிரைக் கொஞ்சம் வாடவிட்டு, பரிந்துரை செய்யப்பட்ட உரம் கொடுத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு முறையும் பயிரை வாட விட்டுத்தான் பாசனம் செய்ய வேண்டும்.

அதிகமாக பாசனம் செய்தால், வேர்களில் ஈரம் தங்கி, பயிர் வெளுப்படைந்து, தாள் அடர்த்தி குறைவதுடன் தூர் பெருக்காது. பொதுவாக, கேழ்வரகில் பூச்சித் தாக்குதல் இருக்காது என்பதால், பூச்சிக்கொல்லிகள் தேவைப்படாது. நடவிலிருந்து 40 நாட்களுக்குப் பிறகு கதிர் தெரிய ஆரம்பிக்கும். 60 நாட்களுக்கு மேல் கதிர் முற்ற ஆரம்பிக்கும். கதிர் வெளிவந்த பிறகு, இரண்டு முறை பாசனம் செய்தால் போதும்.

கதிர் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறத் தொடங்கும் சமயத்தில், அறுவடை செய்யலாம். அறுவடை செய்த கதிரை, ஒரு நாள் மூடி வைத்து, மாடுகள் மூலமாக தாம்பு ஓட்டினால்... சிவப்பு நிற ராகி கிடைக்கும். ஒரு நாள் மூடி வைப்பதற்கு பதிலாக, இரண்டு நாட்கள் மூடி வைத்து தாம்பு

கொட்டிக் கொடுக்கும் கேழ்வரகு...

அடித்தால், கறுப்பு நிற ராகி கிடைக்கும். இதை புடைத்து, மூட்டை பிடித்து வைக்க வேண்டும்.’

சாகுபடி பாடம் முடித்த ராமமூர்த்தி, ''கறுப்பு ராகி மாவு, சமையலுக்குப் பயன்படும். கர்நாடகாவுல கறுப்பு ராகியைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துறாங்க. ஆரம்பத்துல மக்க வெச்சுதான் தாம்பு ஓட்டுவோம். இப்போ அப்படியே காய வெச்சு ஓட்டுறோம்.

ஒரு காலத்துல பைசா செலவில்லாம கேழ்வரகு பயிர் செஞ்சாங்க. இப்போ அந்த மாதிரி செய்ய முடியறதில்ல. வீட்டு ஆளுங்கள வெச்சு செய்யறவங்க கூடுதலா லாபம் பாக்க முடியும். வீட்ல நான் மட்டும்தான் நிலத்துக்கு வர்றேன். என்னால தண்ணி கட்டுற வேலைய மட்டும்தான் செய்ய முடியுது. மத்த வேலைகளை ஆட்கள வெச்சுதான் செய்யறேன்.

ஒண்ணேகால் ஏக்கர்ல கேழ்வரகைப் பயிர் செய்ய, 24 ஆயிரத்து 220 ரூபா செலவு செஞ்சுருக்கேன். இந்த முறை 17 மூட்டை கிடைச்சுருக்கு. ஒரு மூட்டை 2 ஆயிரத்து 200 ரூபானு வித்ததுல, 17 மூட்டைக்கும் சேர்த்து, 37 ஆயிரத்து 400 ரூபாய் கிடைச்சுது. கேழ்வரகுத் தாள், கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும்.

ஆனா, நான் அதை விலைக்குக் கொடுக்காம, சொந்தத்துக்கு வெச்சுக்கிட்டேன். அதையும் கணக்குல சேர்த்தா, ஒண்ணே கால் ஏக்கர்ல 52 ஆயிரத்து 400 ரூபா வருமானம். செலவெல்லாம் போக, 28 ஆயிரத்து 180 ரூபாய் லாபமா கையில நிக்குது'' என்று வரவு-செலவுக் கணக்குகளைத் எடுத்து வைத்தார் சந்தோஷம் பொங்க!  

 இயற்கை முறையில் கேழ்வரகு..!

கொட்டிக் கொடுக்கும் கேழ்வரகு...

கேழ்வரகை இயற்கை முறையில் பயிர் செய்வது பற்றி, இங்கு விளக்குகிறார், தர்மபுரி மாவட்டம், பொம்முடி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி அருண். இவர் பல வருடங்களாக கேழ்வரகு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.

''சாகுபடி நிலத்தில், பசுந்தாள், தானியப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், அவரை, கீரை ஆகியவற்றில், தலா 2 கிலோ விதைகளை நிலத்தில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவையெல்லாம் முளைத்து வந்து... பூ, காய் விடுகிற நேரத்தில், அப்படியே மடக்கி உழுது நிலத்தைக் காயவிட்டு, வழக்கம்போல சாகுபடி மேற்கொண்டால் போதுமானது.

இதற்கு ஏக்கருக்கு 2 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். இதைச் செய்ய முடியாதவர்கள், ஏக்கருக்கு 5 டன் எருவைக் கொட்டி வழக்கமான முறையில் சாகுபடி செய்யலாம். இப்படிச் செய்யும்போது எந்த உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவை இல்லை. களை எடுத்து, தண்ணீர் பாய்ச்சி வந்தால் மட்டும் போதுமானது. இன்னும் சில நுட்பங்களைக் கடைபிடிப்பதன் மூலம், அதிக மகசூல் எடுக்க முடியும்.

ஒவ்வொரு பாசனத்தின் போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து விட்டால், மண் வளமாகும். பஞ்சகவ்யா அல்லது மோர்க் கரைசலைத் தெளித்து வந்தால், கதிர்களின் சுவையும் எடையும் கூடும். பனம்பழம் கிடைக்கும் காலங்களில், அதை பாசனத் தண்ணீரில் பிசைந்து விடலாம். ஒரு குடுவையில் 2 லிட்டர் மோர் எடுத்துக் கொண்டு, அரைத்த ஒரு கிலோ துரிஞ்சல் இலையை அதில் சேர்த்து வேடு கட்டி, எருக்குழியில் புதைத்துவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து இதை எடுத்து, 1:10 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளித்தால் மகசூல் கூடும்'' என்றார்.

அருண் தந்த இயற்கை முறை விவசாயத் தொழில்நுட்பங்களை, ராமமூர்த்தியிடம் சேர்ப்பித்தபோது... ''செலவில்லாம இயற்கை முறையில பயிர் செய்ய முடியுதுனா, எனக்கு சந்தோஷம்தான். அடுத்த முறை இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கட்டாயம் பயன்படுத்துவேன்'' என்று சொன்னார். 

 எடை கூடுதலாகக் கிடைக்கும்!

ஜி.பி.யு.-28 ரக கேழ்வரகு விதையைப் பற்றி பேசிய காவிரிப்பட்டணம் உதவி வேளாண் அலுவலர் பரமசிவம், ''நாட்டு ரக கேழ்வரகுக் கதிர்கள் குண்டு குண்டாக இருக்கும். ஜி.பி.யு.-28 ரகத்தின் கதிர்கள், விரல் மாதிரி நீட்டிக்கொண்டு இருக்கும். வயது 110 நாட்கள். இது, கர்நாடக தோட்டக்கலைத்துறை உருவாக்கிய வீரிய ஒட்டு ரகம். இதை, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நாற்று விட்டு நடவு செயலாம். தவிர, மானாவாரிப் பயிராக மழைக் காலத்தில் விதைக்கலாம். நாட்டு ரகம் போலவே இது, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இதன் மணிகள் நாட்டு ரகத்தைவிட, பெரியதாக இருப்பதால், எடை கூடுதலாக இருக்கும்.

மற்ற ரகங்களைவிட 20 சதவிகிதம் கூடுதல் புரதச்சத்துக்களைக் கொண்டது. கிலோ, 22 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதில் கிடைக்கும் மணிகளையே அடுத்த விதைப்புக்கு விதையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். கேழ்வரகு மட்டுமல்லாது... நெல், துவரை, காராமணி, உளுந்து, சோளம் போன்ற விதைகளும் எங்களிடம் கிடைக்கிறது. தேவைப்படும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்'' என்று சொன்னார்.

 தொடர்புக்கு,

உதவி வேளாண் அலுவலகம்,
காவிரிப்பட்டணம்.
தொலைபேசி: 04343-252050
செல்போன்: 98656-57598  
ராமமூர்த்தி, செல்போன்: 97903-82629
அருண், செல்போன்: 98653-19772

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு