Published:Updated:

விருது வாங்கிக் கொடுத்த விதைகள்!

பிரமிக்க வைக்கும் பெண்கள்! காசி. வேம்பையன்,படங்கள்: பா. கந்தகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விருது

##~##

நெல், உளுந்து, கரும்பு, வெண்டை, கத்திரி... எனப் பல வகையான பயிர்களிலும் வீரிய ஒட்டு விதைகளை உருவாக்க முடிந்த விஞ்ஞானிகளால்கூட சிறுதானியங்களில் பெரிய அளவில் ஒட்டு விதைகளை உருவாக்க முடியவில்லை. அந்தளவுக்கு வீரியமானவை, சிறுதானிய விதைகள். அப்படிப்பட்ட பல வகையான சிறுதானியங்களை வாழையடி வாழையாகப் பயிரிட்டு பாதுகாத்து வருகிறார்கள், மலைவாழ் மக்கள். அவர்களில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள புதுப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 'தீப ஒளி மகளிர் சுய உதவிக் குழு'வினர் குறிப்பிடத்தக்கவர்கள்!

பாரம்பரிய சாமை ரகங்களைத் தொடர்ச்சியாக சாகுபடி செய்து, பாதுகாத்து வருவதற்காக... மத்திய அரசின் 'பாரம்பரிய விதை பாதுகாப்பு விருது’ மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை சமீபத்தில் வென்றுள்ளனர் இந்தக் குழுவினர்!

மேடுபள்ளமான நிலங்கள், குடை பிடித்து நிற்கும் புளிய மரங்கள், தென்றல் காற்றில் அசைந்தாடும் மரங்கள்... என அழகாகக் காட்சியளித்த மலைப்பகுதியில் தீப ஒளி குழுவினரைச் சந்தித்தோம்.

''ஜவ்வாது மலையில இருக்குற எல்லோருமே காலங்காலமா மழையை நம்பி மானாவாரியா, சாமை, பனி வரகு, பேய் எள், கேழ்வரகுனு பயிர் வெக்கிறோம். இதுதான் எங்க சாப்பாடு. தானியம் விதைக்கும்போது மொச்சைப்பயிர் போட்டு பருப்புக்கு எடுத்துக்குவோம்.

விருது வாங்கிக் கொடுத்த விதைகள்!

ஆனா, இப்ப இங்கயும் கொஞ்சம் வசதியானவங்க சிறுதானியங்களைக் குறைச்சுக்கிட்டு, கிணறு தோண்டி நெல், மக்காச்சோளம், பருத்தினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்சமா நிலம் வெச்சிருக்குற எங்கள மாதிரியான ஆளுங்கதான் வழக்கம்போல சிறுதானியங்களை விதைக்கறது, தேன் எடுக்குறது, புளிய மரம், பலா மரங்கள்ல இருந்து பழங்களை சேகரிச்சு விற்பனை செய்யுறதுனு பாரம்பரியமான வேலைகளைத் தொடர்ந்துட்டிருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த குழுவின் தலைவர் வெண்ணிலா,

விருது வாங்கிக் கொடுத்த விதைகள்!
விருது வாங்கிக் கொடுத்த விதைகள்!

''மூணு வருஷத்துக்கு முன்ன 'புது வாழ்வுத் திட்டம்’ மூலமா 12 உறுப்பினர்களோட தீப ஒளி மகளிர் சுய உதவிக்குழுவை ஆரம்பிச்சோம். இந்தக் குழு மூலமா, மாசம் 50 ரூபாய் சேமிக்கிறோம். பல திட்டங்கள் மூலமா குழுவுக்கு கிடைக்குற சுழல் நிதியை, குழுவுல இருக்கறவங்களுக்கு ஒரு பைசா வட்டிக்கு கொடுத்து, பணப்பிரச்னை இல்லாமப் பாத்துக்குறோம். அதோட, சிறுதானிய வகைகளை விவசாயிகளை பயிர் செய்யச் சொல்லி, நாங்களே வாங்கி விற்பனை செய்றோம்'' என்று தங்களின் பணிகளையும் தொட்டுக் காட்டினார்.

அவரைத் தொடர்ந்த குழு உறுப்பினர் பத்மாவதி, ''குழு மூலமாவும் பாரம்பரிய தானியங்களைப் பயிர் செய்றோம். எங்க குழுவுல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் அரை

விருது வாங்கிக் கொடுத்த விதைகள்!

ஏக்கர்ல இருந்து 5 ஏக்கர் வரைக்கும் நிலமிருக்கு. அந்த நிலங்கள்ல பாரம்பரிய தானியத்தை சாகுபடி செய்யுறோம்.

பெரியவங்க (முன்னோர்கள்) காலத்துல இருந்து சாகுபடி செஞ்சுட்டு வந்த சிட்டஞ்சாமை, வெள்ளச்சாமை, வெள்ள சிட்டஞ்சாமை, பெருஞ்சாமை, கருஞ்சாமைனு மொத்தம் அஞ்சு ரக சாமைகளோட, காலேஜ்காரங்க (வேளாண்மைப் பல்கலைக்கழகம்) புதுசா கொடுத்த கோ-3, கோ-4 ரக சாமைகளையும் விதைக்குறோம். எல்லா ரகங்களுமே ஏக்கருக்கு 600 கிலோவுல இருந்து, 800 கிலோ வரைக்கும் மகசூல் கொடுக்கும்.

இதுல பெருஞ்சாமை மட்டும் விளையறதுக்கு ஆறு மாசமாகும். மத்த சாமை ரகங்க மூணு மாசத்துல விளைஞ்சுடும். சாமை, பனி வரகு, வெள்ளை வரகு, வரகு மாதிரியான தானியங்களை ஆனி, ஆடியில விதைப்போம். அது புரட்டாசி, ஐப்பசி மாசத்துல அறுவடையாகும். அதுக்குப் பிறகு உடனே நிலத்தை உழுது... அந்த மாசம் கிடைக்கற மழையில பேய் எள்ளு, கொள்ளுனு விதைச்சு விட்டுடுவோம்.  

விருது வாங்கிக் கொடுத்த விதைகள்!

நாங்க விதைகளை வெளியில வாங்குறதில்ல. எங்களுக்குள்ளயே கொடுத்து மாத்திக்குவோம். காலேஜ்ல இருந்து ஒரு வருஷத்துக்கு முன்ன எங்க பகுதிக்கு வந்திருந்தவங்கதான் (பல்கலைக்கழக சிறுதானியத் துறையினர்), நாங்க பாரம்பரிய விதைகளை சாகுபடி செய்யுறதைப் பார்த்துட்டு, மத்திய அரசு விருதுக்குப் பரிந்துரை செஞ்சாங்க. அதுக்கப்புறம்தான், எங்க குழுவுக்கு பாரம்பரிய விதை பாதுகாப்புக்கான விருதும், 10 லட்ச ரூபாய் ரொக்கமும் கிடைச்சுது. டெல்லியில வெச்சு, மத்திய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் இதையெல்லாம் எங்களுக்குக் கொடுத்தார்' என்ற பத்மாவதி,

''விளையற சாமையில வீட்டுத் தேவைக்கு போக மத்ததை வித்துடுவோம். ஒரு கிலோ 25 ரூபாயில இருந்து 30 ரூபாய் வரைக்கும் விலை போகும். விருது மூலம் கிடைச்ச பணத்துல 3 லட்சம் ரூபாய்க்கு சாமையை அரிசியாக்குற மெஷினை வாங்கி, மதிப்புக்கூட்டி விக்கப்போறோம். சாமை மூலமா நல்ல வருமானம் கிடைச்சா... எங்களோட பாரம்பரியமான விதைகளை அழியாமப் பாதுகாக்க முடியும்'' என்றார், மகிழ்ச்சியாக!

 தொடர்புக்கு,
பத்மாவதி, செல்போன்: 91596-25365,
சிறுதானியத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்:
தொலைபேசி: 0422-2450507.

 ஜவ்வாது மலையில் 25 சாமை ரகங்கள்!

இக்குழுவினரை விருதுக்குப் பரிந்துரை செய்த பல்கலைக்கழகத்தின் சிறுதானியங்கள் துறையைச் சேர்ந்த நிர்மலாகுமாரியிடம் பேசினோம்.

''எங்கள் துறையில் கண்டுபிடிக்கப்பட்ட உயர் விளைச்சல் ரகமான கோ-3 மற்றும் கோ-4 ரக விதைகளைக் கொடுப்பதற்காக ஜவ்வாது மலைக்குச் சென்றோம். பல்வேறு கிராமங்களில் பல்வேறு குழுவைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசினோம். சுமார் 25 வகையான சாமை ரகங்களை அவர்கள் பயிரிடுவதைப் பார்த்தோம். அவற்றில் அதிகமான ஆர்வத்தோடு, தீப ஒளி மகளிர் சுய உதவிக்குழு பாரம்பரியமான சாமை, கொள்ளு, பேய் எள்ளு மாதியான விதைகளை சேமித்து, சாகுபடி செய்து வந்ததைப் பார்த்து, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தோம். அவர்களும் நேரடியாக சாமை நிலங்களை ஆய்வு செய்து, சிறந்த முறையில் இருந்ததால், பாரம்பரிய விதை சேமிப்புக்கான விருதைக் கொடுத்திருக்கிறார்கள்'' என்றவர்,

''இந்த விருது, இந்த மலைமக்களிடம் இருக்கும் பாரம்பரியமான விதைகளை அழிய விடாமல், நிச்சயம் பாதுகாக்கும்'' என்று வாழ்த்தும் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு