Published:Updated:

செலவுக்குக் கை கொடுக்கும் சிறப்பான ஊடுபயிர்கள்!

மரங்களுக்கு நடுவே... நிலக்கடலை, துவரை... வாழைக்கு நடுவே... வெண்டை, மிளகாய்... படங்கள்: ச.வெங்கடேசன் காசி. வேம்பையன்

##~##

இன்றைக்குக் கை நிறைய சம்பளம் வாங்கும் வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் பலரும், வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவதும்... வீட்டுமனைகளை வாங்கிப் போடுவதும் வாடிக்கையாகிப் போன விஷயம். விவசாய நிலங்களின் விலை உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், அப்படி வாங்கிய நிலத்திலும்கூட, சிறப்பான முறையில் விவசாயத்தை சிலர் மேற்கொண்டு வருவது... ஆச்சரியப்பட வைக்கிறது. இப்படிப்பட்ட இளைஞர்கள் மத்தியில், இயற்கை உணவு பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாக இருப்பதால்... சுற்றுச்சூழலுக்கும், வாழ்வுக்கும் இசைந்த இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வெற்றி விவசாயிகளாக மாறியிருக்கிறார்கள்!

இந்த வரிசையில், தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பவர்... சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார். வேலூர் மாவட்டம், ஆற்காடு நகரிலிருந்து கலவை செல்லும் பாதையில் பதினாறாவது கிலோ மீட்டரில் வருகிறது, ஒழலை கிராமம். இங்குதான் இருக்கிறது செந்தில்குமாரின் பண்ணை. சுற்றியுள்ள நிலங்கள் எல்லாம் தரிசாகக் கிடக்கும் நிலையில், செந்தில்குமாரின் தோட்டம் சோலையாகக் காட்சியளிக்கிறது.

ஆர்வமூட்டிய அமெரிக்கா!

''என்னோட பூர்விகம் சென்னைதான். எம்.எஸ்சி. எம்.ஃபில் (இன்ஃபர்மேசன் டெக்னாலஜி) முடிச்சுட்டு, தனியார் ஐ.டி. கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். சின்ன வயசுல இருந்தே பாரம்பர்யமான பழக்க வழக்கங்கள்ல அதிக நம்பிக்கை. அதனால யோகா, வர்மம், தியானம்னு பலதையும் கத்துக்கிட்டேன். வேலைக்குச் சேர்ந்த ஒரு வருஷத்துலயே, அந்த கம்பெனியோட அமெரிக்க கிளைக்கு ஒரு வருஷ ஒப்பந்தம்போட்டு என்னை அனுப்பிட்டாங்க. அந்த நாட்டுக்காரங்க, நம்ம பாரம்பர்ய விஷயங்களை மதிக்கிறதையும், அதைப்பத்தி தெரிஞ்சுக்குறதுல ஆர்வம் காட்டுறதையும் பாத்தப்போ... எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அதனால, நம்மோட பாரம்பர்யம் சார்ந்த தகவல்களைத் தேட ஆரம்பிச்சேன். அமெரிக்க கான்ட்ராக்ட் முடிஞ்சு சென்னைக்கு வந்த நான், என்னோட தேடல்களைத் தொடர்ந்தேன்.

ரெண்டு வருஷத்துக்கு முன்ன, திருத்துறைப்பூண்டியில நடந்த 'நெல் திருவிழா’வுல கலந்துக்கிட்டபோது, நம்மாழ்வார் ஐயாவைப் பார்த்தேன். தொடர்ந்து அவரோட பயிற்சிகள்லயும் கலந்துக்கிட்டேன். அதோட, 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியையும் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான் விவசாயம் செய்ற ஆசையும் நம்பிக்கையும் வந்துச்சு. மாசுபடாத நிலமா இருக்கணும்னு தேடி அலைஞ்சு, நகரத்தை விட்டு விலகி இருக்கற இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை வாங்கினேன்'' முன்னுரை கொடுத்த செந்தில்குமார், தொடர்ந்தார்.

செலவுக்குக் கை கொடுக்கும் சிறப்பான ஊடுபயிர்கள்!

ஊடுபயிராக, துவரை, கடலை, வெண்டை!

''கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா எந்த விவசாயமும் செய்யாம சும்மாதான் போட்டு வெச்சுருந்தாங்க இந்த நிலத்தை. அதை, சுத்தப்படுத்தி உழவு ஓட்டி, பலதானியங்களை விதைச்சு வளமா மாத்தினேன். முதல்ல நெல் போட்டேன். அதுக்கப்பறம் ஒரு தார்பார்க்கர் பசு மாடு வாங்கினேன்.

அந்த மாடு போடுற சாணத்தை வெச்சுதான் இப்ப முழுமையான இயற்கை விவசாயம் செய்றேன். தனிப்பயிரா விவசாயம் செஞ்சா லாபகரமாக இருக்காதுனு பல அடுக்கு முறையில சாகுபடி செய்றேன். ஒரு ஏக்கர்ல மரங்கள், ஒரு ஏக்கர்ல வாழை, ஒண்ணரை ஏக்கர்ல நெல், அரை ஏக்கர்ல பண்ணைக்குட்டை, ஒரு ஏக்கர்ல தீவனப்புல் எல்லாம் இருக்கு. இதுக்குள்ளேயே வீடும், களமும் இருக்கு.

ஏக்கருக்கு நாப்பது கிலோங்கிற கணக்குல பல தானிய விதைகளை விதைச்சு பூவெடுக்கும்போது மடக்கி உழுதேன். அப்பறம், நிலத்தோட நீள வாக்குல 12 அடி இடைவெளியிலயும், குறுக்கு வாக்குல 6 அடி இடைவெளியிலும் 3 கன அடி அளவுக்கு குழி எடுத்து... மா, சீதா, சப்போட்டா, நாவல் கன்னுகளை நட்டேன். நீளவாக்குல இருக்கற பழமரங்களுக்கு இடையில் தேக்கு, மலைவேம்பு மாதிரியான  மரக்கன்னுகளை நட்டிருக்கேன். மரங்களுக்கு இடையில... அரை ஏக்கர்ல நிலக்கடலையும், அரை ஏக்கர்ல துவரையையும் ஊடுபயிரா போட்டேன்.

வாழைக்கு இடையில... அரை ஏக்கர்ல வெண்டையும், அரை ஏக்கர்ல மிளகாயும் போட்டிருக்கேன்'' என்ற செந்தில்குமார், ஊடுபயிர் சாகுபடி முறைகளைப் பற்றிச் சொன்னார். அது அப்படியே இங்கே பாடமாகத் தொடர்கிறது...

செலவுக்குக் கை கொடுக்கும் சிறப்பான ஊடுபயிர்கள்!

பூச்சி நோய் தாக்குவதில்லை!

'மரக்கன்றுகளை நட்டு ஒரு மாதம் கழித்து ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். இடைவெளிப் பகுதிகளில், இரண்டு சால் மாட்டு உழவு செய்து, பார் ஓட்டி தனித்தனியாக நிலக்கடலையையும், துவரையையும் விதைக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 20 கிலோ கடலை விதைப் பருப்பு தேவைப்படும். அதேபோல அரை ஏக்கருக்கு 4 கிலோ துவரை விதை தேவைப்படும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து பாசனம் செய்தால் போதுமானது. 15 நாட்களுக்கு ஒரு முறை, பாசனத் தண்ணீரோடு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை கலந்து பாய்ச்சினால், பூச்சி, நோய்த் தாக்குதல் பெரிய அளவில் இருக்காது. நடவு செய்த 7-ம் நாளில் இவை முளைத்து வரும். 20 மற்றும் 45-ம் நாட்களில், ஏக்கருக்கு 100 கிலோ அளவுக்கு தொழுவுரத்தைத் தூவி களை எடுக்க வேண்டும். 120 நாட்களில் கடலை மற்றும் துவரை ஆகியவற்றை அறுவடை செய்து விடலாம்.

வளர்ச்சியைக் கூட்டும் ஜீவாமிர்தம்!

6 அடிக்கு 6 அடி இடைவெளியில் நடவு செய்த வாழைக்கு இடையில் காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இரண்டு அடிக்கு இரண்டு அடி இடைவெளியில்,

30 நாட்கள் வயதுடைய மிளகாய் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். மற்றொரு வரிசையில், வெண்டை விதைகளை இரண்டு அடிக்கு ஒன்று வீதம் ஊன்றி விட வேண்டும். வெண்டை விதை 4-ம்

செலவுக்குக் கை கொடுக்கும் சிறப்பான ஊடுபயிர்கள்!

நாளில் முளைப்பு எடுக்கும்.

வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை வாரத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். இவற்றை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுத்து, 100 கிலோ தொழுவுரத்தைத் தூவிவிட வேண்டும்.

வெண்டை 35-ம் நாளில் பூவெடுத்து, 45-ம் நாளில் இருந்து காய்க்கத் துவங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு அறுவடை வீதம்,

20 அறுவடை வரை செய்யலாம். மிளகாய் 60-ம் நாளில் பூவெடுத்து, 75-ம் நாளுக்கு மேல், காய்ப்புக்கு வரும். வற்றலுக்குப் பயன்படுத்துவதாக இருந்தால், 90-ம் நாளுக்கு மேல் பறிக்க ஆரம்பிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம், 10 பறிப்புகள் வரை பறிக்கலாம்.’

ஆண்டுக்கு

செலவுக்குக் கை கொடுக்கும் சிறப்பான ஊடுபயிர்கள்!

60 ஆயிரம்!

நிறைவாகப் பேசிய செந்தில்குமார், ''அரை ஏக்கர்ல இருந்து 7 மூட்டை (40 கிலோ மூட்டை) நிலக்கடலை விளைஞ்சுது. அதை உடைச்சப்போ, 180 கிலோ பருப்பு கிடைக்க... கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 18 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. அரை ஏக்கர்ல கிடைச்ச 100 கிலோ துவரையை உடைச்சதுல, 60 கிலோ பருப்பு கிடைச்சுது. கிலோ 120 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 7 ஆயிரத்து 200 ரூபாய் கிடைச்சுது. அரை ஏக்கர்ல அறுவடை செஞ்ச 500 கிலோ வெண்டைக்காயை, கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது.

மிளகாய், இன்னும் அறுவடைக்கு வரல. அறுவடை செஞ்சு காய வெச்சா... எப்படியும் 200 கிலோ மிளகாய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். கிலோவுக்கு 100 ரூபாய் விலை கிடைச்சாலும், 20 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். எல்லாம் சேர்த்து மொத்தம், 60 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல 20 ஆயிரம் ரூபாய் செலவு போனாலும், 40 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று சொன்னவர்,

''இதெல்லாமே இடையில செலவுக்காக கிடைக்கற பாக்கெட் மணி மாதிரி. இன்னும் சில வருஷங்கள் போச்சுதுனா... மரப்பயிர்கள் மூலம் மொத்தமா வருமானம் வர ஆரம்பிக்கும். அது... ஃபிக்ஸட் டெபாஸிட் மாதிரி'' என்று சந்தோஷமாக விடைகொடுத்தார்.

 தொடர்புக்கு, செந்தில்குமார்,
செல்போன்: 99400-28160.

அடுத்த கட்டுரைக்கு