Published:Updated:

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

ஜி. பழனிச்சாமி,படங்கள்: வீ. ராஜேஷ்

ஏக்கருக்கு 4,800 செடிகள்.
25 ஆண்டுகள் தொடர் வருமானம்.
ஆண்டுக்கு

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

70 ஆயிரம் லாபம்.

##~##

பாரம்பரிய சமையலாக இருந்தாலும் சரி... ஃபாஸ்ட் ஃபுட் சமையலானாலும் சரி... அவற்றில் கண்டிப்பாக இடம்பெறும் முக்கியப் பொருள்... கறிவேப்பிலை. உணவுக்கு நறுமணம் ஊட்டுவதற்காகப் பயன்படும் கறிவேப்பிலை, சாப்பிடும்போது இலையில் ஓரங்கட்டப்பட்டாலும்... தன்னை விளைவிப்பவர்களை ஒருபோதும் ஒதுக்குவதில்லை. ஆம். நிலையான வருமானம் ஈட்டித்தரும் தோட்டக்கலைப் பயிர்களில், கறிவேப்பிலையும் ஒன்று. அதனால்தான், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் பல விவசாயிகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கறிவேப்பிலையை சாகுபடி செய்து வருகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டுரக செங்காம்பு கறிவேப்பிலையைப் பயிர் செய்துவரும் காரமடை அருகேஉள்ள கண்ணார்பாளையம் விவேகானந்தனை, 'ஜிலுஜிலு’ என்று பன்னீர் போல தெளித்து விழும் தென்மேற்குப் பருவக்காற்றுச் சாரல்... 'தளதள’ என வளர்ந்து நின்று தலையாட்டும் கறிவேப்பிலைச் செடிகள்... என ரம்யமான சூழலில், அவருடைய தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் சந்தித்தோம்.

''விவசாயம்தான் பூர்வீகத்தொழில். ஏற்றுமதி சம்பந்தமான படிப்பை முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறேன். மனைவி பூர்ணிமா, லெக்சரரா வேலை பாக்கறாங்க. பண்ணை வீட்டுலேயே குடியிருக்கறதால,  ரெண்டு பேருமே ஓய்வு நேரத்துல விவசாயத்தைப் பாக்குறோம். அப்பா, அம்மாவுக்கு முழுநேரத் தொழிலே விவசாயம்தான். எங்க பகுதியில கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு மேல கறிவேப்பிலை சாகுபடி நடக்குது. என்ன பயிர் வெள்ளாமை வெச்சாலும், கொஞ்ச இடத்துலயாவது கறிவேப்பிலையைப் போட்டுருவாங்க.

எங்களுக்கு மொத்தம் நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. மணல் கலந்த வண்டல் பூமி. கிணத்துப் பாசனம்தான். ரெண்டரை ஏக்கர்ல கறிவேப்பிலை... மீதி நிலத்துல மக்காச்சோளம், முல்லைப் பூ இதெல்லாம் இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த விவேகானந்தன், கறிவேப்பிலை சாகுபடி செய்யும் விதம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

அதை அப்படியே பாடமாக இங்கு தொகுத்திருக்கிறோம்.

வடிகால் வசதி அவசியம் !

'கறிவேப்பிலை எல்லா மண்ணிலும் நன்கு வளர்ந்தாலும், செம்மண் பூமியில் மிகவும் நன்றாக வளரும். ஆனால், எந்த மண்ணாக இருந்தாலும், வடிகால் வசதி அவசியம். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கக் கூடாது. பருவமழை துவங்கும் காலங்களில் இதை நடவு செய்யலாம்.

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

தேர்வு செய்த நிலத்தை நன்றாக இரண்டு உழவு ஓட்டி, கட்டிகள் இல்லாமல் மண்ணை 'பொலபொல’ப்பாக்க வேண்டும் (ஆடிப் பட்டத்தில் விதைப்பவர்கள், கோடை உழவு செய்து வைத்துக் கொள்வது நல்லது). தொடர்ந்து, ஏக்கருக்கு 15 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி நிரவ வேண்டும்.

மூன்றடி இடைவெளி !

வரிசைக்கு வரிசை, பக்கத்துக்குப் பக்கம் மூன்றடி இடைவெளிவிட்டு, ஒரு கன அடி அளவில் குழிகள் எடுத்து, 15 நாட்கள் ஆறப்போட வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் 4 ஆயிரத்து 800 குழிகள் வரை எடுக்க முடியும். நிலத்தின் அமைப்பைப் பொருத்து குழிகளின் எண்ணிக்கை மாறுபடும். குழிகளில் சூடு அடங்கிய பிறகு, ஒவ்வொரு குழியிலும் தலா, 5 கிலோ தொழுவுரம்,

250 கிராம் உயிர் உரம், கொஞ்சம் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து, குழியில் பாதி அளவுக்கு நிரப்பி... 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை வளர்த்த நாற்றுகளை குழிக்கு ஒன்று வீதம் நடவு செய்து, மண்ணைக் கொண்டு மூடி செடியின் தூரில் மண் அணைத்து பாசனம் செய்ய வேண்டும். வாய்க்கால் பாசனம் என்றால், வாரம் ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டுநீர் என்றால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்ய வேண்டும். ஒரு கறிவேப்பிலை நாற்று மூன்று ரூபாய் என தனியார் நர்சரிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. செங்காம்பு ரக கறிவேப்பிலை அதிக மகசூல் கொடுக்கக்கூடிய நாட்டு ரகம். இதுபோன்ற ரகங்களைத் தேர்ந்தெடுத்தால் நல்ல விளைச்சல் இருக்கும்.

மூன்று மாதங்களுக்கு ஓர் அறுவடை !

நடவு செய்த 8-ம் மாதத்தில் இருந்து, இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இந்தக்கணக்கில் ஓர் ஆண்டுக்கு நான்கு முறை அறுவடை செய்யலாம். கறிவேப்பிலைச் செடிகளைச் சுற்றிலும் வளரும் களைகளை மாதந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும். களைகள் எடுக்கும்போதே கறிவேப்பிலைச் செடிகளின் அடிப்பகுதியில் மண் அணைத்துவிட வேண்டும். இதனால், எப்போதும் செடிகளின் வேர் பகுதிகளில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். அடியுரமாக தொழுவுரம் மற்றும் உயிர் உரங்கள் இடுவதால், போதிய தழைச்சத்து, செடிகளுக்குக் கிடைத்துவிடும். அதனால், முதல் அறுவடை வரை உரம் இடத் தேவை இருக்காது.

ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் 15 நாட்கள் கழித்து... செடிகளைச் சுற்றி மண் அணைத்து, ஏக்கருக்கு 200 கிலோ என்ற கணக்கில், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய ஆர்கானிக் கலப்பு உரத்தை செடிகளின் வேர்ப் பகுதியில் தூவி பாசனம் செய்ய வேண்டும். கறிவேப்பிலைச் செடிகளை அதிகமாக இலையுதிர்வு நோய் தாக்கும். செம்பேன், பச்சைப்புழு போன்றவையும் தாக்கக்கூடும். அவற்றை பயோ ஆர்கானிக் மருந்துகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.’

சாகுபடிப் பாடம் முடித்த விவேகானந்தன் மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார்.

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

ஏக்கருக்கு

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

70 ஆயிரம் !

''ஒரு தடவை செங்காம்பு ரகத்தை நட்டுட்டா... 25 வருஷத்துக்கு அறுவடை செஞ்சுட்டே இருக்கலாம். ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு சராசரியா 12 டன்ல இருந்து 15 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ கறிவேப்பிலை 3 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை போகும். சராசரியா கிலோவுக்கு 7 ரூபாய் கிடைச்சுடும். அந்த கணக்குப்படி, ஒரு ஏக்கர்ல சராசரியா 14 டன் மகசூல்னு வெச்சுக்கிட்டா... வருஷத்துக்கு 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவுபோக, 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்'' என்ற விவேகானந்தன் நிறைவாக,

செழிப்பான லாபம் தரும் செங்காம்பு..!

''கறிவேப்பிலை பவுடருக்கு வெளிநாட்டுல நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. எதிர்காலத்துல அதைத் தயாரிச்சு ஏற்றுமதி பண்ற ஐடியாவும் என்கிட்ட இருக்கு. இப்போதைக்கு அது சம்பந்தமான தொழிற்சாலையை அரசாங்கம் இந்தப்பகுதியில கொண்டு வந்தா, கறிவேப்பிலைக்கு நிரந்தரமான விலையும் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபமும் கிடைக்கும்'' என்று எதிர்பார்ப்பையும் வெளியிட்டார்!

 சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை!

கறிவேப்பிலைக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. பெரும்பாலான சித்த மருந்துகளில் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ குணங்கள் பற்றி, இயற்கை வாழ்வியல் ஆர்வலர் சுவாமி சுந்தரானந்தாவிடம் பேசினோம். ''இதை நாம நறுமணத்துக்காக பயன்படுத்துறதா நினைக்கிறோம். ஆனா, கறிவேப்பிலைக்கு உணவுல இருக்குற நச்சுப்பொருட்களை நீக்குற தன்மை இருக்கு. அதனாலதான், இதை நம் முன்னோர் சமையல்ல பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.

சர்க்கரை வியாதி இருக்கறவங்க, தினமும் காலையில 8 கறிவேப்பிலை இலைகளை வெறும் வயித்துல சாப்பிட்டு வெது வெதுப்பான தண்ணீரை குடிச்சு வந்தா... வியாதி கட்டுப்படும். கறிவேப்பிலைச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ரெண்டையும் கலந்து சர்க்கரை சேர்த்து குடிச்சா, தலைச் சுற்றல், வாந்தி, ஒவ்வாமைனு பல் நோய்கள் நீங்குறதோட, நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்'' என்றார், சுந்தரானந்தா.

ஊட்டம் தரும் கிராமின்!

விவேகானந்தன் 'கிராமின்’ என்கிற உரத்தைப் பயன்படுத்தி வருகிறார். அதுபற்றி பேசியவர், ''சர்க்கரை ஆலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஊட்டமேற்றப்பட்ட உரம்தான் 'கிராமின்’. இது ஒரு கிலோ 4 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த உரம், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. மண்புழுக்களை அழியாமல் காப்பாற்றுகிறது. தொடர்ந்து, ஒரு ஏக்கருக்கு ஒரு டன் என்ற கணக்கில் கிராமின் உரத்தை இட்டு வந்தால், வெகு விரைவில் மண் வளமாகி விடும்'' என்கிறார்.

 தொடர்புக்கு, ஜெ. விவேகானந்தன்,
செல்போன்: 98945-06066.

அடுத்த கட்டுரைக்கு