Published:Updated:

சூரியசக்தி கண்காட்சி!

படங்கள்: வி. ராஜேஷ், தி. விஜய் பசுமைக் குழு

சூரியசக்தி கண்காட்சி!

படங்கள்: வி. ராஜேஷ், தி. விஜய் பசுமைக் குழு

Published:Updated:

கண்காட்சி

##~##

ஆண்டுதோறும் கோயம்புத்தூர் கொடீசியா அரங்கில், 'அக்ரி-இன்டெக்ஸ்’ வேளாண் கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஜூலை 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, கண்காட்சி நடைபெற்றது. வழக்கமாக, வேளாண் துறை சார்ந்த இயந்திரங்கள் குவியும் இக்கண்காட்சியில்... இந்த ஆண்டு, சூரிய மின்சக்தி மோட்டார்கள் அதிகளவு இடம் பெற்றிருந்தன. வரலாறு காணாத வறட்சியிலும், தங்களுக்கே உரித்தான மாறாத நம்பிக்கையின் காரணமாக... கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 200 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் துவக்கி வைத்த தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் செ. தாமோதரன், ''இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த முப்பது கோடி மக்கள்தொகை, இப்போது 120 கோடியைத் தொட்டு விட்டது. ஆனால், விளைநிலங்களின் அளவு முன்னர் இருந்ததைவிட சுருங்கி விட்டது. விவசாயம் செய்வதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. இதைச் சமாளிக்க இயந்திரங்களின் பயன்பாடு முக்கியமாக உள்ளது. விஞ்ஞானிகள், விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான கருவிகளையும், தொழில் நுட்பங்களையும் உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகள் நமது நிலத்துக்கு உகந்ததாக இல்லை'' என்று பேசினார்.

கவர்ந்து இழுத்த சூரியசக்தி!

கண்காட்சியில் விவசாயிகளைப் பெருமளவு ஈர்த்தவை, மின் பற்றாக்குறைக்கு விடை சொல்லும் விதமான சூரிய மின்சக்தி மோட்டார்கள்தான். 400 அடி போர்வெல்லில் இருந்து சூரிய மின்சக்தி மோட்டார் மூலமாக தண்ணீரை இறைத்துக் காட்டி நேரடி செய்முறை விளக்கம் கொடுத்த சம்பந்தபட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் பொறுப்பான பதில்களையும் தரத் தவறவில்லை!

சூரியசக்தி கண்காட்சி!

மின்சாரப் பற்றாகுறை உள்ள நேரங்களில் உடனடியாக மோட்டார்களை இயக்குவதற்காக, டிராக்டர் மூலமாக இயங்கும் 'மொபைல்’ ஜெனேரேட்டரும் கண்காட்சியில் இடம் பிடித்திருந்தது. இந்த ஜெனேட்டர் மூலம் 5 ஹெச்.பி. முதல் 10 ஹெச்.பி. வரையிலான மோட்டார்களை இயக்கலாம். இது,

சூரியசக்தி கண்காட்சி!

1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் சார்பில், அலங்கார மீன்கள், கலப்பு மீன்கள், அவற்றை வளர்க்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்திருந்தனர்.

தென்னை மட்டைகளைத் தூளாக்கும் இயந்திரம், தேங்காய் உரிக்கும் இயந்திரம், டிராக்டர், நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், கதிர் அறுவடை இயந்திரம், நவீன பால் கறவை இயந்திரங்கள், புல் வெட்டும் இயந்திரங்கள், சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள்... என வழக்கம்போல அனைத்து அரங்குகளுக்கும் இடம் பிடித்திருந்தன.

கவனம் ஈர்க்காத கருத்தரங்கு!

பல்கலைக்கழகம் சார்பில் திறந்தவெளி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த 'ஒருங்கிணைந்த பண்ணையம் மாதிரி செயல் திட்டத் திடல்’ ஒரு நல்ல முயற்சி. அதேபோல நெல்லுக்கு சொட்டுநீர், விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் முறைகள், விதைகளை நிறம் ஏற்றும் தொழில்நுட்பங்கள்... என பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பல அரங்குகள் பாராட்டப்பட வேண்டியவை.

அதேநேரத்தில் புதிய கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் பல்கலைக்கழக அரங்குகளில் இடம் பெறாதது, வருத்தப்பட வேண்டிய விஷயம். 'குளுகுளு’ அரங்கில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த கருத்தரங்குகள், வழக்கம்போல 'ஆளே

சூரியசக்தி கண்காட்சி!

இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறாங்க?' என்பதாகவே இருந்தன!

அலட்சியமான அரசுத் துறைகள்!

தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, வேளாண்மைத் துறை, பொறியியல் துறை, மற்றும் நபார்டு வங்கி என அரசுத் துறைகள் சார்பில், வேறு துறைகள் எதுவும் அரங்குகளை அமைக்காதது, வருத்தமான விஷயம்! இதனால், அரசு மானியங்கள், வங்கிக் கடன்கள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடியாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

விவசாயிகளிகளுக்கு வழிகாட்டிய வல்லுநர்கள்!

'பசுமை விகடன்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில், தினமும் ஒரு வல்லுநர் மூலமாக விவசாயிகளுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முதல் நாள் முன்னோடி மலர் விவசாயிகளான 'திண்டுக்கல்’ மருதமுத்து-வாசுகி தம்பதி; இரண்டாவது நாள், கன்னியாகுமரியைச் சேர்ந்த 'ஜீரோ பட்ஜெட்’ முன்னோடி விவசாயி விசாககுமார்; மூன்றாவது நாள், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'இயற்கை வேளாண் நிபுணர்’ அன்பு சுந்தரானந்தா; நான்காவது நாள். 'பூச்சியியல் வல்லுநர்’ நீ. செல்வம் ஆகியோர், நமது அரங்கத்துக்கு வந்த விவசாயிகளுக்கு ஆலோசனைகளைத் தந்தததோடு, சந்தேகங்களுக்கும் விடையளித்து உற்சாகப்படுத்தினர்!

சிறிய கருவிகள் இல்லை!

திருச்சி பிரேமானந்தா ஆசிரமத்திலிருந்து வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஸ்சாவேல் என்கிற வள்ளி, ''நான் இந்தியாவில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்கள் ஆசிரமத்தில், 200 ஏக்கர் நிலத்தில் மா, சப்போட்டா, தென்னை, மலர்கள், காய்கறிகளை சாகுபடி செய்கிறோம். கடந்த ஐந்து வருடங்களாக 'பசுமை விகடன்’ படிக்கிறேன்.

சூரியசக்தி கண்காட்சி!

அதில் எழுதப்படும் எளிமையான தொழில்நுட்பங்கள் எங்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. புத்தகத்தில் படித்துவிட்டுத்தான் கண்காட்சிக்கு வந்தோம். கண்காட்சியில், பெரிய கருவிகள் அதிகமாக வந்திருக்கின்றன. சிறிய கருவிகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இயற்கை விவசாயம், பயோ-டையனமிக் மாதிரியான விவசாய முறைகளை விளக்கம் கொடுக்கும் ஸ்டால்கள் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்'' என்று சொன்னார்.

திருப்பூரைச் சேர்ந்த வேல்சாமி, ''எனக்கு 75 வயசாகுது. எனக்கு சொந்தமா இருந்த 12 ஏக்கர் நிலத்தை பிள்ளைங்களுக்கு பிரிச்சுக் கொடுத்துட்டு திருப்பூர்ல கடை வைச்சிருக்கேன்.

5 வருஷமா பசுமை விகடன் படிக்கிறேன். படிக்கிறதை செய்து பார்க்க, சீக்கிரத்துல நிலம் வாங்க முடிவு செஞ்சிருக்கேன். இந்தக் கண்காட்சியில சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நிறுவனங்கள், ரெயின்கன் மாதிரியான கருவிகள் பற்றிய தகவல்கள் பயனுள்ளதா இருந்துச்சு'' என்றார்.

MAAX இன்ஜினீரிங் மற்றும் STIHL வழங்கிய பரிசுகள்!

பசுமை விகடன் அரங்குக்கு வந்த விவசாயிகளிடம், 'பதில் சொல்லுங்கள்... பரிசு வெல்லுங்கள்!’ என்றபடி... பஞ்சகவ்யா தயாரிப்பு, ஜீவாமிர்தத்தின் நன்மைகள் என்பது போன்ற எளிதான கேள்விகளைக் கேட்டு, தினம் 100 பேருக்கு விகடன் பிரசுரத்தின் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. அரங்குக்கு வந்த விவசாயிகள் அனைவருக்கும் 'சிறப்புப் பரிசு’ கூப்பன்கள் வழங்கப்பட்டு, தினமும் மாலையில் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு, தெளிப்பான் இயந்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

MAAX இன்ஜினீரிங் மற்றும் STIHL ஆகிய நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சிறப்புப் பரிசுகளைப் பெற்ற விவசாயிகள் இதோ பேசுகிறார்கள்...

டாக்டர். சங்கரநாராயணன் (ஆராய்ச்சியாளர், மத்திய அரசு பருத்தி ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்): ''என்னுடைய ஆராய்ச்சியை விவசாயிகளுக்கு நேரடி விளக்கமாகக் காட்டுவதற்கு, சிறப்புப் பரிசாகக் கிடைத்த இந்த ஸ்பிரேயர் உதவியாக இருக்கும்!''

சூரியசக்தி கண்காட்சி!

ஜெயகோபி (லிங்காரெட்டிபாளையம், விழுப்புரம் மாவட்டம்): ''வர்ற வழியில விபத்தில் சிக்கி, அடிபட்டு, ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சு படாதபாடு பட்டுத்தான் கண்காட்சிக்கு வந்தேன். இங்க, இன்ப அதிர்ச்சியா பரிசு கொடுத்து நெகிழ வெச்சுட்டீங்க!''

எஸ். குணசேகரன் (வையப்பன்மலை, நாமக்கல் மாவட்டம்): ''நிலக்கடலை, வெங்காயம் விவசாயம் பார்க்கிறேன். எங்கிட்ட இருக்கிற ஸ்பிரேயரை வாங்கி 5 வருஷமாகுது. புதுசா வாங்கணும்னு நினைச்சுட்டுருந்தேன். 'பசுமை விகடன்’ புண்ணியத்துல பரிசாவே வந்து சேர்ந்துடுச்சு!''

விஜயகுமார் (கலங்கல், கோயம்புத்தூர் மாவட்டம்): ''குத்தகைக்கு நிலம் பிடிச்சு, தக்காளி பயிர் பண்றேன். அந்த நிலத்துக்கு பூச்சிக்கொல்லி தெளிக்க 'ஸ்பிரேயர்’ வாங்கணும்னு நினைச்சேன். பசுமை விகடன் ஸ்டாலுக்கு வந்ததால, அது பரிசாவே கிடைச்சுடுச்சு''