Published:Updated:

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

பயிர்வாரி சுழற்சி முறைதான் ஒரே தீர்வு! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

பயிர்வாரி சுழற்சி முறைதான் ஒரே தீர்வு! ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

Published:Updated:

நிலத்தடி நீர்

##~##

அது, 1917-ம் ஆண்டு... 'ராஜாஜி’ என அழைக்கப்பட்ட சி. ராஜகோபாலச்சாரியார், சேலம் நகரத் தந்தை (நகராட்சித் தலைவர்) பதவியில் இருந்த காலகட்டம். நகர மக்களுக்கு, மேட்டூரில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு... அதற்கென விழா நடந்தது. அப்போது பேசிய ராஜாஜி, ''தண்ணீர் தங்கம் போன்றது... அதை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் ராஜாஜி சொன்னதை இன்று வரையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாததுதான் பெரும்சோகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதனின் அதீத ஆசையால், நதிகளில் மணல் முற்றுப்பெற்று, ஆறுகளில் நீர் அற்றுவிட்ட நிலையில், மிகப்பெரிய அபாயத்தை மனித சமுதாயம் எதிர்கொள்ளப் போகிறது. அதலபாதளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீர்; நிலத்துக்குள் ஊடுருவும் கடல் நீர்; கழிவுநீர் கால்வாய்களாக மாற்றப்பட்டுவிட்ட ஆறுகள், வாய்க்கால்கள்; கழிவுநீர்த் தேக்கமாக மறுவடிவம் பெற்றுவரும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்... என ஒட்டுமொத்த நீராதாரங்களின் நிலையும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இதன் காரணமாக உயிரினங்கள் அனைத்தும்... அணு அயுதங்களைவிட மோசமானதொரு தாக்குதலை எந்நேரமும் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இவை அனைத்துக்கும் அடிப்படை... தொலைநோக்குப் பார்வையில்லாமல் நீராதாரங்களைச் சிதைத்தது/சிதைத்துக் கொண்டிருப்பதுதான்.

நீராதாரங்களின் சேதாரங்களால் வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி நம்மிடம் பேசிய ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி, ''நிலத்தடி நீர் என்பது நாளைய சந்ததியினருக்குச் சொந்தமானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப்புரிதல் அரசுக்கும் வேண்டும். குளம், குட்டை, ஆறு, ஏரி போன்ற நீராதாரங்களை முறையாகப் பராமரிக்காமல் விட்டதன் பலன், தற்போது தெரியத் தொடங்கியுள்ளது. வாட்டி வதைக்கும் வெப்பத்துக்கும், மழை பொய்த்துப் போவதற்கும், நிலத்தடி நீருக்கும் தொடர்புண்டு. பல்வேறு சூழலியல் மாற்றங்களுக்கு நிலத்தடி நீர் குறைவும் ஒரு காரணம்.

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் அளவுக்கு தமிழ்நாடு பாலைவனம் அல்ல. 'காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்கண்டதோர் வைகை, பொருணைநதி என மேவிய ஆறுபல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு’ என்று பாரதி பாடிய வளம் எங்கே போனது..?

குறிஞ்சி, முல்லை, மருதம் முதலான நிலவகை முறை நிலவிய அந்தக் காலங்களிலும் பருவமழை தவறி... விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்டது உண்டு. ஆனால், 'தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை’ என யாரும் தவித்தது இல்லை. 'பஞ்சம் முற்றியதால் நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டாள்’ என்றபோதும்கூட நீர் நிறைந்த கிணறுகள் எங்கும் இருந்ததாகவே வரலாற்றுக் கதைகள் பதிவு செய்திருக்கின்றன.

'ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகை ஊட்டிக் காக்கும்’ என்பது மாறி, ஆறுகளின் ஊற்றுகளும் அடங்கி விட்டன. காவிரி உட்பட, தமிழக ஆறுகள் யாவற்றிலும் சீமைக்கருவேல் மிகுந்து வருகின்றன. நிலம், காடு, மலை, கடலோரம் என்றில்லாமல் 500, 1,000, 1500 அடிகள் என பூமியை சல்லடைக் கண்களாகத் துளைத்து, அடியில் இருந்த நீரையும் மின் மோட்டார்களைக் கொண்டு வெளியேற்றி, கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் அறியாமையும், சுயநலம் மேலோங்கிய, தொலைநோக்கற்ற ஆட்சி நிர்வாகங்களின்

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

மெத்தனமுமே இன்றைய நிலைக்குக் காரணம்.

'அற்ற குளத்து அறுநீர்ப் பறவை’ போல வறண்ட வனங்களை விட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி தண்ணீர் தேடி மடிவதற்கான காரணங்களை ஆராய வேண்டாமா? தீர்வுகளைத் தேட வேண்டாமா? இலவச மின்சாரத்தால் ஏரி ஆயக்கட்டு நிலங்களில் குடிமராமத்துப் பணிகள் அடங்கிவிட்டன. மதகுகளிலிருந்து நீரை அனுப்பும் முதல் நிலை மற்றும் கிளை வாய்க்கால்கள் அனைத்துமே பராமரிப்பு இன்றி தூர்ந்து ஒற்றை வரப்புகளாக மாறியுள்ளன. பயிர்வாரி முறை முற்றிலுமாய் தகர்ந்து போனது. நாடு முழுக்க இல்லாவிட்டாலும், தமிழகத்தில் மட்டுமாவது பயிர்வாரி முறையை உடனடியாய் அமுல்படுத்த வேண்டும். மானாவாரி புஞ்சை நிலங்களில் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் குடிநீருக்கு மட்டுமே விவசாய பம்ப்செட்டுகளை இயக்க அனுமதிக்க வேண்டும்'' என்று யோசனைகளை முன் வைத்த வையாபுரி தொடர்ந்தார்.

''மழைநீரை சேமித்து மழையை ஈர்க்கும் காடுகளை அதன் மேனி குறையாமல், காக்க வேண்டிய அரசாங்கம், மேலும் மேலும் மலைச்சாலைகளை ஊக்கப்படுத்தி திட்டங்களையும் வகுத்து, நிலச்சரிவுகளுக்கு வித்திடுகிறது. அம்பானி போன்ற புதிய பணக்காரர்களுக்காக மலைச்சாலைகள் மெருகேற்றப்படுகின்றன. செல்வாக்கு உள்ளவர்களுக்காக மலைகளில் சாலைகள் அமைப்பது, தமிழகத்தைப் பாலைவனமாக்கும். இந்நிலையில் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா படுகைகளில் பூமியைத் துளைத்து மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. மக்களைத் தவிக்க வைக்கிற இந்த விபரீத முயற்சிகள், ஒட்டுமொத்த தண்ணீர் தாகத்தையும் உச்சத்தில் வைக்கும்.

மரங்களையும், வனவிலங்குகளையும் அழித்து வரும் மின்பாதைகளை அகற்ற வேண்டும். தேவைப்பட்டால், அங்கு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வானம் பார்த்த நிலங்களில் புஞ்சை தானியங்கள், பயறு, பருப்பு வகைகளை விளைவித்து, அவற்றை உண்ணும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அரசு சார்ந்த விருந்துகளிலும், மதிய உணவுத் திட்டத்திலும் ஊட்டச்சத்து கொண்ட புஞ்சை தானியப் பயன்பாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மனதை உறைய வைக்கும் வரலாறு காணாத பெருவெள்ள உயிர்ச்சேதம் ஒருபுறம்! தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடி அலைகின்ற நிலை மறுபுறம்! யாவற்றுக்கும் கண்மூடித்தனமான சுற்றுப்புறச்சூழல் கேடுகள்தான் காரணம். இந்நிலையில், நிலத்தடி நீரைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல... நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மழைநீர்ச் சேமிப்பை நம் ஒவ்வொருவரும் முறையாகச் செய்ய வேண்டும். வரத்து வாய்க்கால், குளம், குட்டை, ஆறுகள், ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, முறையாகப் பராமரிக்க வேண்டும். இவை இரண்டும் சரியாக நடந்தால், பாதி பிரச்னையைத் தீர்த்து விடலாம். ஆனால், இதையெல்லாம் மக்களாக முன்னெடுத்து செய்வது, என்பது முடியாத காரியம்.

ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான், நீராதாரங்களைக் காப்பாற்ற முடியும். நல்லெண்ணத்தோடு ஒன்றிரண்டு பேர், இந்த முயற்சியில் இறங்கினால், ஆக்கிரமிப்பாளர்களின் பின்னணியில் இருக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பலவித கட்சியினரும் தங்களுடைய பலத்தைக் காட்டி உருட்டல் மிரட்டல் விடுக்கின்றனர். இதன் காரணமாக, 'நமக்கு ஏன் வம்பு?' என்று அந்த ஒன்றிரண்டு பேரும் ஒதுங்கிவிடுகிறார்கள்'' என்று எதார்த்த நிலையை எடுத்து வைத்த வையாபுரி, நிறைவாக,

''அப்படியே நிலத்தடி நீராதாரங்களைக் காப்பாற்றி வைத்தால் மட்டும் போதாது. பயிர் வாரி சுழற்சி முறை என்பதையும் இங்கே நாம் வழக்கத்துக்குக் கொண்டு வந்தாக வேண்டும். அப்போதுதான் இருக்கிற நீரை வைத்து, நமக்கு அவசியமான பயிர்களை மட்டும் விளைவித்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக, நீர் கையிருப்பு குறைவாக இருக்கிற காலங்களில் அதிக நீர் தேவைப்படும் வாழை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நீர்த் தேவை குறைந்த சிறுதானியங்களை அதிகமாகப் பயிரிடலாம். குறைந்த தண்ணீர் தேவையிலேயே நம்முடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் சிறுதானியங்களை பெருமளவில் பயிரிடும்போது... தண்ணீர் பிரச்னையையும் நாம் எதிர்கொள்ள முடியும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

என்ன செய்யப் போகிறோம் நாம்?

-தொடரும்.