Published:Updated:

பச்சைத் தொப்பி போடுங்கள்... பலன்களை அள்ளுங்கள்!

த. ஜெயகுமார், க. பிரபாகரன். படங்கள்: அ. முத்துகுமார், பீரகா வெங்கடேஷ்

பச்சைத் தொப்பி போடுங்கள்... பலன்களை அள்ளுங்கள்!

த. ஜெயகுமார், க. பிரபாகரன். படங்கள்: அ. முத்துகுமார், பீரகா வெங்கடேஷ்

Published:Updated:

வீட்டுத் தோட்டம்

##~##

வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு வழிகாட்டுவதற்காக, 'பசுமை விகடன்’, 'அவள் விகடன்’ மற்றும் போத்தீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து... கடந்த ஜூன் 23 அன்று, சென்னை, எத்திராஜ் கல்லூரியில், 'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க’ என்கிற தலைப்பில் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அந்நிகழ்வு பற்றி கடந்த இதழில், எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, மேடவாக்கம், மாலதி... வீட்டுத் தோட்ட அனுபவங்களிலிருந்து நடத்திய பாடத்தைத் தொடர்ந்து... மைக் பிடித்தார் 'ஹோம் எக்ஸ்னோரா’ அமைப்பின் தலைவர் 'பம்மல்’ இந்திரகுமார். வீட்டுத் தோட்டம் அமைப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவரும், பயிற்றுநருமான இவர் பேச வந்தது... கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் நேரத்தில்தான்.

''எனக்கு ஒதுக்கப்பட்டது... ஒண்ணரை மணி நேரம். ஆனா, இப்ப கிடைச்சுருக்கறதோ.. பதினைந்தே நிமிஷம்தான். ஆனாலும், வழக்கம்போல வகுப்பை ஆரம்பிக்கிறேன்...'' என்றபடியே மேடையேறியவர்,

''விளைச்சல் இல்லாததால, காய்கறிகளோட விலை விண்ணை முட்டி நிக்குது. மரங்கள் குறைஞ்சு போனதால பூமியோட உஷ்ணம் அதிகமாகிடுச்சு. இதுக்கு ஒரே தீர்வு, நம்ம வீட்டு மொட்டைமாடிக்கு 'பச்சைத் தொப்பி’ போடுறதுதான்.

இப்போ நாம வாழற இடம் சொர்க்கம். 'சொர்க்கத்தோட தலைவாசல் இந்தியா’னு சொன்னா... அதுக்கான நுழைவாயில்தான் தமிழ்நாடு. சுவிட்சர்லாந்துல சுவாசிக்கணும்னா... திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மரங்களை வளர்க்கணும். ஏன்னா, முத்துப்பேட்டை காத்துதான் சுவிட்சர்லாந்து வரைக்கும் வீசுது. அதனால, நாம ஒவ்வொருவரும் வீட்டை காடு மாதிரி ஆக்கணும். அதேமாதிரி, பாலிதீன் பொருட்கள் எதையும் எரிக்கக்கூடாது. அதையெல்லாம் எரிக்கறப்ப 'டையாக்ஸின்’ வாயு வெளியாகும். அது உடம்புக்கு கெடுதல் தரக்கூடியது. அதனாலயும் பூமி சூடாகும்.

பச்சைத் தொப்பி போடுங்கள்... பலன்களை அள்ளுங்கள்!

தண்ணீரை சுத்தப்படுத்துறதுக்காக... எதை எதையோ செய்றோம். 10 லிட்டர் தண்ணியில ஒரு தேத்தாங்கொட்டையைப் போட்டா... தண்ணி சுத்தமாயிடும். யுரேனியம் கலந்த தண்ணீரைக்கூட இது சுத்தப்படுத்திடும். செம்பு, நல்ல கிருமிநாசினி. அதனால, செம்புக் குடத்துல தண்ணீர் வெச்சு குடிச்சு பழகுங்க.

வீட்டுத் தோட்டத்துக்கு செப்டிக் டேங்க் தண்ணியைக்கூட பயன்படுத்தலாம். குதிரை சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் 'பேக்டிசெம்' என்ற உயிரியை, செப்டிக் டேங்கில் போட்டுவிட்டால், கழிவுகளை சிதைத்துவிடும். ஒரு மாதம் கழித்து பார்த்தால், செப்டிக் டேங்க் நீரில் துர்நாற்றம் அறவே இருக்காது. இந்த தண்ணியை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

கொட்டாங்குச்சியில நாத்து விட்டு, தொட்டிகள்ல நடவு போடலாம். என்னோட வீட்டு மாடியில நெல் விளைய வெச்சுருக்கேன். 'ட்ரே’ல பயிர்கள விளைய வைக்கிறேன். இதில்லாம முள்ளங்கி, வேர்க்கடலை, வெண்டை, புதினாவும் போடுறேன். உரிமாதிரி தொட்டிகள் கட்டி பாசிப்பயறு, காராமணினு வளர்க்குறேன். 'பி.வி.சி. பைப்’புல கூட செடிகள் வளர்க்க முடியும். வீடுகள்ல வேப்பம் மரம் வளர்த்தா குளுகுளுனு இருக்கும்.

வீட்டுத்தோட்டத்துல எருவுக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல. புறநகர் பகுதியா இருந்தா மாடுகள் வெளியில மேய்ஞ்சுட்டு இருக்கும். உங்க வீட்டுக்கு முன்ன தண்ணி வெச்சா... அது வந்து குடிச்சுட்டு சாணிய போட்டுட்டு போகும். அதை உரமா பயன்படுத்திக்கலாம். வீசியெறியற முட்டை ஓடுகளைத் தூள் பண்ணி செடிகளுக்குப் போடலாம். கெட்டுப்போற திட, திரவ உணவுகளையும் உரமா பயன்படுத்திக்கலாம்'' என்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தகவல்களைக் கொட்டிக் கொண்டே இருந்தார் இந்திரகுமார். நேரம் கடந்துவிட்டபோது... விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர, கூட்டத்திலிருந்த பெண்கள் அசையாமல் அமர்ந்திருந்தனர். அத்தோடு, கேள்விகளாகக் கேட்டு, நிகழ்ச்சியை மேலும் பலனுள்ளதாக மாற்றினர்!  

பிரமிட் பந்தல்!

நமக்குத் தேவையான அளவு உயரத்துக்கு கம்புகளை வைத்து, முக்கோண வடிவில் கட்டிக்கொள்ள வேண்டும். அதை தரையில் நிறுத்தி, கீழ்ப்பகுதியில் நெல், கீரை, வெண்டை நடலாம். கொடி வகை காய்கறிச் செடிகளை பிரமிடின் ஓரங்களிலோ, பக்கவாட்டிலோ நட்டால், கம்புகளில் படர்ந்து கொடிகள் மேலேறிவிடும். இதன் மூலம், குறுகிய இடத்தில் நிறைய செடிகளை வளர்க்க முடியும். மழை, காற்று பாதிப்பிலிருந்து செடிகளைக் காக்க முடியும். வீட்டுச் சுற்றுச்சுவர் ஓரங்களிலும் கொடிவகைப் பயிர்களை நடவு செய்யலாம். இதனால் வீட்டைச் சுற்றிலும் பசுமை படரும்.

வீட்டிலேயே தயாரிக்கலாம் உரம்!

நிகழ்ச்சியில், வீட்டுத் தோட்டம் பற்றி பேசிய 'சுற்றுச்சூழல் நிபுணர்' சுல்தான் அகமது இஸ்மாயில், வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி பற்றி சொன்ன விஷயங்கள் இங்கே...

''ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்... கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்... என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும். பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம். குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும். தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட

பச்சைத் தொப்பி போடுங்கள்... பலன்களை அள்ளுங்கள்!

குழிகளை அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும்.

செடிகள் வாடி, வெளுத்துப் போனது போலிருந்தால்... சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு, 10 முட்டைகளை உடைக்காமல் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 10 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்துவிட்டு, கூடவே 250 கிராம் வெல்லத்தையும் சேர்த்து, பதினைந்து நாட்களுக்கு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். இதுதான் முட்டைக் கரைசல். இதைச் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

ஆடு சாப்பிடாத இலை மற்றும் தழைகளை மொத்தமாக ஐந்து கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில், 9 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 16-ம் நாள் இதை பயிர்களுக்குத் தெளித்தால்... அதுதான், பூச்சிவிரட்டி.

அப்படியும் பூச்சிகள் கட்டுப்படவில்லையெனில், இஞ்சி-100 கிராம், பூண்டு-100 கிராம், பெருங்காயம்-10 கிராம் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து, அதை ஒரு லிட்டர் நாட்டுமாட்டு சிறுநீரில் கலந்து, 9 லிட்டர் தண்ணீர் ஊற்றி 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு, இதைத் தினமும் செடிகளின் மீது தெளிக்கலாம்.''