Published:Updated:

வறண்ட மாவட்டம்... இனி, வளமான மாவட்டம்!

ஆர். குமரேசன் படங்கள்: உ. பாண்டி

வறண்ட மாவட்டம்... இனி, வளமான மாவட்டம்!

ஆர். குமரேசன் படங்கள்: உ. பாண்டி

Published:Updated:
##~##

'வறண்ட மாவட்டம்' என்றே அறியப்பட்டிருக்கும் ராமநாதபுரத்தை, 'வளமான மாவட்டம் என்று மாற்றிக் காட்ட வேண்டும்' என்கிற முனைப்புடன் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் செயல்பட்டு வருவது... பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தன்னுடைய முயற்சிகளின் ஒரு கட்டமாக... ''ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளிக்க வேண்டும். அந்தப் பணியில் 'பசுமை விகடன்’ எங்களோடு கைகோக்க வேண்டும்’' என அழைப்பு விடுத்திருந்தார் ஆட்சியர். அதன்படி, ஜூலை 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பானதொரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் 'பசுமை விகடன்’ இணைந்து, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் தலைமையில் 'இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் நேரடி களப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எட்டிவயல் கிராமத்தில் உள்ள 'தரணி’ முருகேசன் என்பவரின் பண்ணையில் நடந்த இந்தப் பயிற்சியில், மாவட்ட வேளாண் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விவசாயிகளுடன், வேளாண் துறை அலுவலர்களும் ஆர்வமாகப் பங்கேற்றனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துவக்க உரையாற்றிய ஆட்சியர் நந்தகுமார், ''டெல்டா மாவட்டங்களில்கூட ஆறுகளில் தண்ணீர் வந்தால்தான் நெல் விளைய வைக்கிறார்கள். ஆனால், இந்த மாவட்ட விவசாயிகள் மானாவாரியில் புழுதி விதைப்பாக, ஆண்டுக்கு 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்கிறார்கள். ஆக நம்மிடம் இருக்கும் வசதிகளுக்கும், வாய்ப்புகளுக்கும் ஏற்ற தொழில்நுட்பங்களைக் கையாண்டு, விவசாயத்தில் சாதிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதற்கு இயற்கை வழி விவசாயம் நிச்சயம் கை கொடுக்கும்.

வறண்ட மாவட்டம்... இனி, வளமான மாவட்டம்!

முதல்கட்டமாக களப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முழுமையாக கற்றுக்கொண்டு, ராமநாதபுரத்தை தமிழகத்தின் வளமான மாவட்டங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும். அதற்கான அத்தனை உதவிகளையும் செய்துதர மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது'' என்று வார்த்தைகளில் நம்பிக்கை கலந்து பேசினார்.

நம்மாழ்வார் தன்னுடைய பேச்சில், ''விவசாயிகள் நினைத்தால், இந்த மாவட்டத்தை விரைவில் பசுமை போர்த்திய மாவட்டமாக மாற்றி விடலாம். இங்கே பெரும்பிரச்னையாக பார்க்கப்படுவது... கருவேல மரங்கள்தான். வைரம் பாய்ந்த கருவேல மரங்களில் இருந்து மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட மரச்சாமன்கள் செய்யும் தச்சுப் பயிற்சியை இப்பகுதி பெண்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும்.

பிறகு, அந்த மரங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தற்போது இயற்கை வேளாண்மைப் பயிற்சியின் மூலமாக, இங்கு ஊன்றப்பட்டிருக்கும் விதை, மாவட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நான் மற்றும் 'பசுமை விகடன்' இருவருமே தொடர்ந்து உங்களுடன் இருக்கிறோம். புறப்படுங்கள்... புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்'' என நம்பிக்கையூட்டினார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் வேளாண் இணை இயக்குநர் சக்திமோகன், தோட்டக்கலை துணை இயக்குநர் இளங்கோவன், 'செய்தா’ அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர். செய்தா ஆகியோர் பங்கேற்றனர்.

'பூச்சியியல் வல்லுநர்’ நீ. செல்வம், பூச்சிகளைப் பற்றி விவசாயிகளுக்கு புரிதலை உண்டாக்கினார். சேலம், அபிநவம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜெயராமன், ஒருங்கிணைந்த பண்ணையம்; காரைக்குடி எஸ்.எம்.எஸ் பள்ளி மாணவர்கள், அசோலா வளர்ப்பு; ஈரோடு மாவட்டம் சிவகிரி தண்டாயுதபாணி, தேனீ வளர்ப்பு; திண்டுக்கல் கவிதா மோகன்தாஸ், காளான் வளர்ப்பு; 'நல்லகீரை’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர். சிவக்குமார், கீரை சாகுபடி; வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் ஏகாம்பரம் குழுவினர், 'இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு’ என பல்வேறு பயிற்சிகளை அளித்தனர்.

பயிற்சி முடிவில் தோட்டக்கலை துணை இயக்குநர் இளங்கோவன், போகலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கண்ணன் ஆகியோர், தங்கள் செலவில், தலா இரண்டு விவசாயிகளுக்கு 'பசுமை விகடன்’ இதழுக்கான ஒரு வருட சந்தாவை அன்பளிப்பாக பெற்றுத் தந்தனர்.

நிறைவாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சௌந்தரராஜன், ''இங்க இருந்து கிளம்பும்போது, 'இனிமே கடையில யாரும் பூச்சிக்கொல்லி வாங்க மாட்டோம்’னு உறுதியெடுத்துக்கணும்' என்று சொல்லி பயிற்சியை நிறைவு செய்தார்.