Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

'சார்' என்று எதற்காக அழைக்க வேண்டும்?

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

'சார்' என்று எதற்காக அழைக்க வேண்டும்?

Published:Updated:

 நம்மாழ்வார்
ஓவியம்: ஹரன்

##~##

மோட்ராகியில் நாங்கள் சார்ந்திருந்த கிராம வளர்ச்சித் திட்டத்தில், ஊருக்கு இரண்டு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விழிப்பு உணர்வுப் பயிற்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. சேசுராசபுரம் கிராமத்தின் பங்காக, இரண்டு இளைஞர்களைத் தேர்வு செய்வதற்காக நான் மற்றும் ஆசி (ஆஸ்வால்டு) இருவரும் புறப்பட்டோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே ஆசியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பைச் சொல்லியாக வேண்டும். கல்லூரிப் படிப்பு முடித்ததும், மதகுரு பணிக்குச் சென்ற ஆசி, பாதியிலேயே அதைவிடுத்து, திரும்பி வந்துவிட்டார்.

பயிற்சிக் காலத்தில் கிராமப்புற சேவைக்காக சென்றபோது, ஒரு நாள் நல்ல மழை பொழிந்திருக்கிறது. இவரும், உடன் சென்றவரும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உணவருந்தி, அங்கேயே தங்கிவிட்டனர்.

பொழுது விடிந்து தேவாலயம் திரும்பியபோது, அங்கே நிர்வாகப் பொறுப்பிலிருந்த சாமியார், ''இரண்டு பேரும் ஏன் இரவே திரும்பவில்லை. களவொழுக்கத்தில் ஈடுபட்டீர்களா?'' என்று கேட்டிருக்கிறார். அதையடுத்து இவர்கள் கூறிய எந்த விளக்கத்தையும் கேட்க அவர் தயாராக இல்லாத நிலையில், 'இப்படிப்பட்ட அமைப்பில் ஒரு சாமியாராக ஆக வேண்டாம்’ என்று வெளியே வந்தவர்தான், ஆசி என்கிற ஆஸ்வால்டு!

சேசுராசபுரம், மோட்ராகியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கில் இருக்கிறது. அது கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம். நாங்கள் அங்கு சென்றபோது, பங்குத்தந்தை லூர்துசாமி வெளியூர் சென்றிருந்தார். இளைஞர்களை அருகில் அழைத்து, உட்கார்ந்து பேச முடிவு செய்தோம். நானும் ஆசியும் உட்காருவதற்கு கயிற்றுக் கட்டில் கொண்டு வந்து போட்டார்கள். அதில் உட்கார மறுத்து, மணலில் உட்கார்ந்தோம். பயிற்சி பற்றி கலந்துரையாடுவதற்கு மாறாக, பெரியவர், சிறியவர் குறித்த விவாதம் ஆரம்பித்தது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

அந்தகிராமத்தினர், எங்களை 'சார்’ என்று அழைப்பதை மறுத்தோம். 'பின் எப்படி அழைப்பது?’ என்று இளைஞர்கள் குழம்பினார்கள். 'எங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுங்கள்’ என்று உறுதியாகச் சொன்னோம். உடனே தையல்காரர் ஆரோக்கியம், 'எங்கள் பங்குத்தந்தையை, லூர்துசாமி என்று அழைக்கலாமா?’ என்று கேட்டார்.

அந்த இளைஞர்களுக்கு தைமூர் கதையைச் சொன்னேன். தைமூர், வட இந்தியாவை ஆண்ட மன்னர்களில் முக்கியமானவர். ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாக மூன்று முறை தோல்வியை சந்தித்ததால், அவரது படை சிதறிப் போயிருந்தது. வடமேற்கு மூலையில் ஒரு கிராமத்தில் பிச்சைக்காரனைப் போல திரிந்து கொண்டிருந்தார் தைமூர். உணவுக்காக ஒரு வீட்டுக் கதவைத் தட்டியபோது கதவைத் திறந்த மூதாட்டி, உணவு தயாரித்து, உணவின் மீது குழம்பை ஊற்றி, தைமூருக்கு முன் வைத்தாள். பசியோடு இருந்த தைமூர், ஐந்து விரலையும் நடுச்சோற்றில் திணித்தார். கஞ்சியோடு இருந்த உணவு தீயாகச் சுட்டது. ஒவ்வொரு விரலாக வாயில் வைத்து சூப்பினார்.

அப்பொழுது உணவு கொடுத்த மூதாட்டி... 'அந்த முட்டாள் தைமூர் மாதிரி செய்து விட்டாயே’ என்று சொல்ல... சட்டென அதிர்ந்தாலும், கோபத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. 'தாயே, அந்த தைமூர் என்ன முட்டாள்தனம் செய்தான்?’ எனக் கேட்டார். 'அதைப் பேச இது நேரமில்லை. உணவை, ஒரு ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி, சிறுகச் சிறுக வாயிலிட்டு உண்’ என்றாள். தைமூர் அப்படி செய்தபோது உணவும் ஆறியது. பசியும் ஆறியது. தனது தவறும் புரிந்தது. உணவிட்டவளுக்கு நன்றி கூறி வெளியேறிய தைமூர், ஓரத்தில் இருந்த ஊர்களை மெள்ள கைப்பற்றி, படை பலத்தை அதிகரித்துக் கொண்டு, இறுதிப் போரில் சுலபமாக வென்று ஆட்சியைப் பிடித்தார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

பிறகு, பொழுதுபோக்காக பேசிக் கொண்டிருந்தபோது ஒரு வீரன், 'மன்னரின் வெற்றிக்கு யார் காரணம்..?’ என்று தைமூரிடம் கேட்டான். 'வடகிழக்கு மூலையில் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஒரு குடிசையில் வசிக்கும் மூதாட்டிதான் காரணம்’ என்று சொன்னார். 'நாடு பிடிப்பதில் மன்னருக்குக் கிட்டிய வெற்றிக்கு, மூதாட்டி எப்படி காரணமாக முடியும்?’ என்று போர் வீரன் சிரித்தான். அப்பொழுது தைமூர் நடந்தவற்றை விளக்கினார்.

தையல்காரர் ஆரோக்கியத்துக்கு இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகு, நாட்டின் முன்னாள் மன்னராக இருந்தாலும், தன்னை பெயர் சொல்லி அழைத்த மூதாட்டிக்கு, தண்டனை கொடுக்கவில்லை. மாறாக, அவள் சொன்ன வெற்றி நுணுக்கத்தைப் பின்பற்றி வெற்றிவாகை சூடினார் தைமூர். எனவே, 'பெயர் சொல்லி அழைப்பதை தவறாக நினைக்காமல், சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களை மட்டும் பெயரைச் சொல்லி அழையுங்கள்’ என்றேன். அனைவரும் சம்மதித்தனர்.

பயிற்சிக்கு இரண்டு இளைஞர்களைத் தேர்வு செய்துவிட்டு, ஆசியும் நானும் ஊர் திரும்பினோம். அன்று மாலை பங்குத்தந்தை எங்களைத் தேடி வந்தார். ஆசியும் அவரும் வெளியில் அமர்ந்தார்கள். உள்ளே சட்னிக்கு வெங்காயம் உரித்தபடி காதை மட்டும் வெளியில் வைத்திருந்தேன். அவர் பேச்சின் முன்பகுதியிலிருந்து நான் புரிந்துகொண்டது இதுதான் -

எல்லா பங்குகளிலும் தந்தைக்கு வேண்டியவர், வேண்டாதவர் என இரண்டு குழுக்கள் இருக்கும். பெரும்பாலும் கோதுமை, மொச்சைக் கொட்டை என்று அதிகம் சலுகை பெறுபவர்கள், பங்குத்தந்தைக்கு நெருக்கமாக இருப்பார்கள். தவறுகளை விமர்சிப்பவர்கள் விலகியிருப்பார்கள். சேசுராசபுரம் பங்கும் இதற்கு விதிவிலக்கல்ல.

பங்குத்தந்தை ஊர் திரும்பியதும் ஓடிச்சென்ற தாமஸ், 'ஃபாதர் உங்களை லூர்துசாமி என்றழைக்க வேண்டும் என ஆரோக்கியசாமி சொல்கிறான்' என்று வத்தி வைத்திருக்கிறான்.

கோபமாகிவிட்ட பங்குத்தந்தை, 'ஆரோக்கியசாமியை அழைத்து வா!' என்று உத்தரவிட்டார்.

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism