Published:Updated:

தேனீ வளர்ப்பு... நபார்டு வங்கியால் முன்னுக்கு வந்த முதலூர் பெண்கள்..!

என். சுவாமிநாதன் படங்கள்: இ. சிதம்பரம்

தேனீ வளர்ப்பு... நபார்டு வங்கியால் முன்னுக்கு வந்த முதலூர் பெண்கள்..!

என். சுவாமிநாதன் படங்கள்: இ. சிதம்பரம்

Published:Updated:

ஆச்சர்யம்

##~##

வேளாண் பெருமக்களை ஏற்றம் பெற வைக்க ஆயிரமாயிரம் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இருக்கின்றன. பெரும்பாலும் மூடி வைத்த புத்தகங்களாகவே இருக்கும் அவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு, முறையாக முயற்சிகளை முன்னெடுத்தால்... நிச்சயம் பலன் பெறமுடியும். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், முதலூர் கிராம மக்கள் நபார்டு வங்கியின் திட்டத்தை முறையாகப் பயன்படுத்தி, தற்போது வெற்றிக்கொடி பறக்கவிட்டுக் கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழை செல்லும் வழியில், ஆறாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முதலூர். ஊருக்குள் நுழைந்ததுமே அல்வா வாசனை நாசியை நிறைக்கிறது. திருநெல்வேலிக்கு எப்படி கோதுமை அல்வா புகழ் தருகிறதோ.. அதேபோல் இந்தப் பகுதியில் 'மஸ்கோத் அல்வா' மிகவும் பிரபலம். அந்த வாசனையை நுகர்ந்து கொண்டே, 'வீட்ஸ்' தொண்டு நிறுவனத்தை அடைந்தோம்.

தேனீ வளர்ப்புக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்... தேன் பதப்படுத்தும் பணியில் சுழன்று கொண்டிருப்பவர்கள்... அதை பாட்டிலில் நிரப்புவதில் மும்முரமாக இருப்பவர்கள்... எங்கு திரும்பினாலும் கூட்டம் கூட்டமாக பெண்கள்தான். பாட்டிலில் தேன் நிரப்பிக் கொண்டிருந்த பெண்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, 'விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு' செயலாளர், வேதா நம்மிடம் பேசினார்.

தேனீ வளர்ப்பு... நபார்டு வங்கியால் முன்னுக்கு வந்த முதலூர் பெண்கள்..!

''எங்க கிராமம் பொருளாதாரத்தில் ரொம்பவும் பின்தங்கிய கிராமம். வீட்ஸ் நிறுவனத்திடம் எங்க நிலைமையைச் சொன்னதும், நபார்டு வங்கிக்கு கூட்டிட்டு போனாங்க. வங்கியோட தூத்துக்குடி மாவட்ட மேலாளர் நடராஜன், எங்க பகுதிகளைப் பார்வையிட்டு, நீர்வடிப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்துல பண்ணைக் குட்டைகள் அமைக்க நிதி கொடுத்தார். இதை நாங்க நல்லபடியா செஞ்சு நிறைய மரங்கள் நட்டு வளர்க்க ஆரம்பிச்சோம். அதனால நபார்டு வங்கிக்கு எங்க மேல நம்பிக்கை வந்துச்சு.

சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் முருங்கை, பனை மரங்கள் அதிகமா நிக்கும். முழுக்க காடு மாதிரி இருக்கறதால, கருவேல மரங்களும் அதுல பூவும் நிக்கும். இது, தேன் சாகுபடிக்கு ஏத்ததா இருக்கறதால... நபார்டு வங்கி அதிகாரிகள் எங்க பகுதியை ஆய்வு செஞ்சு 'தேனீ வளர்ப்புப் பயிற்சி’க்குனு நிதி ஒதுக்குனாங்க. தொடர்ந்து பத்து நாள் பயிற்சி கொடுத்தாங்க. பயிற்சியில கலந்துக்கிட்டவங்களுக்கு தினப்படி கூலியும் கொடுத்ததால நிறைய பெண்கள் ஆர்வமா வந்து கலந்துகிட்டாங்க. இப்போ எங்க பகுதியில நிறைய பேர் பயிற்சி எடுத்துட்டு, தேன் உற்பத்தி பண்றாங்க. அதை விற்பனை செய்றதுக்காகவே, 'விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்’னு ஆரம்பிச்சுருக்கோம்'' என்று சொன்ன வேதாவின் முகத்தில் ஏகத்துக்கும் பெருமிதம்!

தேனீ வளர்ப்பு... நபார்டு வங்கியால் முன்னுக்கு வந்த முதலூர் பெண்கள்..!

தொடர்ந்தவர், ''எங்க சங்கத்துல 170 உறுப்பினர்கள் இருக்கோம். இதுல சேர்றதுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கட்டணம். அதை வங்கிக் கணக்குல போட்டுடுவோம். உறுப்பினராகும் பெண்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள தேனீ வளர்ப்புப் பெட்டிகள கடனா கொடுப்போம். இதுக்கான தவணையை பணமா வாங்காம, தேனா வாங்கிக்குவோம். குழு சார்பிலேயே தேன் எடுக்கும் இயந்திரம், தேன் வளர்ப்புக்குத் தேவையான கருவி எல்லாம் வெச்சுருக்கோம்.எங்க குழு தயாரிக்கற தேனுக்கு 'சாரல் தேன்’னு பேரு வெச்சுருக்கோம். தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ் குமார்தான் இதை அறிமுகப்படுத்தி வெச்சாரு. 2011-ம் வருஷம் ஆரம்பிச்ச பயிற்சி, இப்ப வரைக்கும் போயிட்டு இருக்கு. நிறைய பெண்கள் ஆர்வமா வந்து கலந்துக்கறாங்க'' என்று சொன்னார் வேதா.

''வீட்டுக்கு பின்னாடி ஒரு ஏக்கர் நிலமிருக்கு. அதில் செடிமுருங்கை மரங்கள் நிக்குது. பயிற்சி எடுத்த கையோட பத்து தேனீப் பெட்டிகளை அங்க வெச்சுட்டேன். இப்போ மாசம் 15 லிட்டருக்குக் குறையாம தேன் கிடைக்குது. முருங்கையிலும் மகசூல் கூடிடுச்சு. பயிர்கள்ல பூ பூக்குற காலத்துலதான் தேன் மகசூல் நிறைய கிடைக்கும். பூ பூக்காத காலங்கள்ல தேனீப் பெட்டிக்குள்ள சீனியைக் கரைச்சு வைப்பாங்க. இந்த சீனிதான், தேனீக்களுக்கு தற்காலிக உணவு. இது மூலமாவும் தேன் கிடைக்கும். ஆனா, இது ஒரு வகையில கலப்படம்தான். செயற்கை தேன்னுகூட சொல்லலாம். இது சில பகுதிகள்ல நடக்குது. அந்த மாதிரியெல்லாம் நாங்க செய்றதில்லை.

சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல தேன் இல்லாத காலங்கள்ல, தேனீப் பெட்டியைக் கழட்டிட்டு போய், கேரள மாநிலம் நெலம்பூர் பகுதியில இருக்கற தோட்டங்கள்ல வெச்சுடுவோம். அதுக்கு, வீட்ஸ் நிறுவனத்துக்காரங்களே உதவி பண்றாங்க. அந்தப் பகுதிகள்லயும் எங்களுக்கு தேன் உற்பத்தி நடக்கறதால... வருஷம் முழுக்க வருமானம் கிடைச்சுட்டே இருக்குது. போன வருஷம் சென்னையில நபார்டு வங்கி நடத்தின கண்காட்சியில் ஆயிரம் லிட்டர் தேன் விற்பனை செய்திருக்கோம்'' என்று பூரிப்போடு சொல்கிறார், தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அடையல் கிராமத்தை சேர்ந்த சாந்தி.  

வீட்ஸ் நிறுவன இயக்குநர் சார்லஸ், ''எங்களது நிறுவனம் பெண்களின் வளர்ச்சியில் தனிகவனம் செலுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்ஸ் நிறுவனமும், நபார்டு வங்கியும் சேர்ந்து உடன்குடி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்தில் ஆய்வு செய்தோம். அப்போதுதான் இந்தப் பகுதியில் முருங்கை, பனை, வேம்பு என நிறைய பயிர்களில் பூ பூத்து தேன் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதைப் பார்த்தோம். உடனே நபார்டு வங்கியும் தேன் வளர்ப்பு பயிற்சிக்கான நிதியை ஒதுக்கியது. இன்றைக்கு இந்தப் பகுதி பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்து வருவதற்கு நபார்டு வங்கிதான் காரணம்'' என்றார்.

குட்டி மார்த்தாண்டம்... இதுதான் லட்சியம்!

மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மெலட்டூர். இரா.நடராஜனிடம் பேசியபோது, ''நபார்டு வங்கியின் குறுந்தொழில்கள் முன்னேற்றத்துக்கான பயிற்சித் திட்டத்தின் (எம்.இ.டி.பி.) கீழ், கிராம மக்களுக்கு உதவ எண்ணியிருந்தோம். அப்போதான் உடன்குடி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் தேனீ வளர்ப்புக்குச் சாதகமான சூழல் இருப்பது தெரிந்தது. அதனால், தேனீ வளர்ப்புக்கு முதலூரைத் தேர்ந்தெடுத்தோம். இந்தப் பயிற்சியை, பெயருக்காக நடத்தாமல், உண்மையான பலன் அளிக்கும் பயிற்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து... மார்த்தாண்டத்தில் இருந்து ஒரு பயிற்றுநரையும் வரவழைத்து, சம்பளம் கொடுத்து, இப்பகுதி மக்களுக்கு தேனீ வளர்ப்புப் பயிற்சியைக் கொடுத்தோம்.

அடுத்தபடியாக, வங்கிக் கடனுக்கு வழி வகை செய்து, மார்த்தாண்டம் பகுதியில் இருந்து தேனீப் பெட்டிகள் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தோம். சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். இத்தகைய உதவிகளின் மூலமாக, நாங்கள் வெறும் கோடுகள்தான் போட்டோம். முதலூர் மக்களின் விடாமுயற்சிதான் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது!'’ என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்!

தொடர்புக்கு,
சார்லஸ், செல்போன்: 94435-83458
வேதா, செல்போன்: 98421-84881
மெலட்டூர். இரா. நடராஜன், செல்போன்: 94433-80627.