Published:Updated:

மண்புழு மன்னாரு!

மண்புழு மன்னாரு!

##~##

பால் கறக்குற மாட்டுக்கு 'மேய்ப்பு பாதி, தேய்ப்பு பாதி’னு சொல்லுவாங்க. அதாவது, என்னதான் பசுமையானப் புல்வெளியில மேய்ச்சாலும், பல வகையான தீவனம் கொடுத்தாலும்... மாடுகளுக்கு முழுமையான சத்து போய் சேராது. அதனால, மாடுகளுக்கு தினமும் 'வைக்கோல் பிரி’ய வெச்சு உடம்பு முழுக்க தேய்ச்சி விடணும். இதன் மூலமா, மாடுங்க உடம்புல ரத்த ஓட்டம் அதிகரிச்சி, மாடுங்க குஷியாயிடும். மாடுங்க சந்தோஷமா இருந்தாதானே படிபடியா பால் கறக்கும்!

வயல்ல உழவு ஓட்டும்போது, வெள்ளைக் கொக்குங்க, ஏராளமா வந்து சேரும். நிலத்துல இருக்குற தாய் அந்துப்பூச்சிகளோட முட்டைங்கதான், இந்த கொக்குங்களுக்கு சுவையான விருந்து. அந்த வகையில பார்த்தா, கொக்குகூட நம்மளோட நண்பன்தான். உழவு ஓட்டும்போது, அடிக்கிற மண்வாசனைய வெச்சுதான், கொக்குங்க நம்ம வயல் பக்கம் வரும். ஆனா, சமீபகாலமா கொக்குங்க வர்றதில்ல. ஏன்னா, சிலர் கொக்குங்கள சுட்டு, சுக்கா வறுவல் செஞ்சு தின்னுடுறாங்க. சட்டப்படி இது தப்புனாலும்... இந்த வேலை தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. அதனால, கொக்கு சுடறதை விவசாயிங்க நினைச்சாதான் தடுக்க முடியும். நமக்கு உதவி செய்ற நண்பனை குண்டுக்கு பலியாக விடலாமா?

மண்புழு மன்னாரு!

நாம பயிர் செய்ற உணவுப் பயிர்களுக்கு சமமா, இயற்கையாவே காய்கறி, கீரைனு நம்ம தோட்டத்துல வளர்ந்து கிடக்கும். அதை தரம் பிரிச்சி, சாப்பிட கத்துக்கணும். அந்தக் காலத்துல களையெடுக்க, கதிர் அறுக்கப் போறவங்க... மடி நிறைய கீரையைக் கட்டிக்கிட்டு வருவாங்க. அதுல இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, முடக்கத்தான், நுனிப்பிரண்டைனு என சகலவிதமான கீரைகளும் இருக்கும். இதைத்தான் 'பண்ணைக்கீரை’, 'பல கீரை’னு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பேர்ல சொல்லுவாங்க. இந்தக் கீரைகளை சமைச்சி சாப்பிட்டா, நோய் நொடிங்க கிட்டவே வராது. இப்பவும், இந்த மாதிரி கீரைங்க தோட்டத்துல வளர்ந்து இருக்கு. ஆனா, அந்தச் சத்துள்ள கீரைங்கள களைனு நினைச்சு, தூர தூக்கிப் போட்டுட்டு... பணம் கொடுத்து, கீரைக்கட்டு

மண்புழு மன்னாரு!

வாங்கி சாப்பிடறத என்னன்னு சொல்றது?

'என்ன செஞ்சாலும், அருகம்புல்லைக் கட்டுப்படுத்த முடியலீங்க’னு ஆதங்கப்படற விவசாயிங்களுக்கு இந்த சங்கதி உதவும். முட்டைக்கோஸு சாகுபடி செஞ்சா, 'அருகம்புல் வளர்ச்சி கட்டுப்படும்’னு விஞ்ஞானிங்க கண்டுபிடிச்சுருக்காங்க. இதே விஷயத்துக்கு நம்ம பெரியவங்க பன்றி எருவை அந்த நாள்லயே பரிந்துரை செஞ்சுருக்காங்க. அருகம்புல் அதிகமா இருக்கற நிலத்துல, பன்றி எரு போட்டா, அருகு, கோரை எல்லாம் கட்டுக்குள்ள வந்துடும்.

ரயில் பயணம் போகும்போது, ரெண்டு பக்கமும் பெரிய, பெரிய கத்தாழைங்க வளர்ந்து நிக்கும். ரயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல வளர்ந்து கிடக்கறதால.... 'ரயில் கத்தாழை’னு இதுக்கு பேரு வெச்சுட்டாங்க. இதோட உண்மையான பேரு 'யானைக் கத்தாழை’. யானைக் காது மாதிரி பெரிய, பெரிய மடலா இருக்கும்.  இப்பயெல்லாம் அவ்வளவா பார்க்க முடியறதில்ல. ஆனா, உயிர்வேலி போட, இதைவிட சிறந்த ஒண்ணு இருக்க முடியாது. இந்தக் கத்தாழையோட நார் மூலமா கயிறு திரிச்சி, ஆடு, மாடுங்களுக்குக் கட்டலாம். கட்டிலுக்கு கயிறு பின்னி போடலாம். ஒரு முறை நடவு செஞ்சா, வாழை மாதிரி, வாழையடி வாழையா வளந்துகிட்டே இருக்கும்.

'எலுமிச்சம்பழம்’னு ஏன் பேரு வந்துச்சுனு... காரணம் தேடி போனப்ப, சுவாரசியமான தகவல் ஒண்ணு கிடைச்சுது. மா, வாழை, பலானு எல்லா பழத்தையும் எலிங்க 'ஸ்வாகா’ பண்ணிடும். ஆனா, எலுமிச்சம் பழத்தை மட்டும் எந்த எலியும் தீண்டாதாம். அதனாலதான் 'எலி’ மிச்சம் வைச்ச பழத்தை, எலுமிச்சம்பழம்னு சொல்றோம்னு ஒரு சங்கதி, பழையப் புத்தகங்கள்ல இருக்கு. இது எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. ஆனா, எலுமிச்சம் பழத்தை எலிங்க கடிக்காதுங்கறது உண்மை. எலுமிச்சை மரங்களுக்கு இன்னொரு குணாதிசயமும் இருக்கு. வாரம் ஒரு முறை தண்ணி கிடைச்சா மட்டும்தான், குறையில்லாம காய்க்கும். இல்லைனா, மரம் மட்டும்தான் நிக்கும்!

அடுத்த கட்டுரைக்கு