Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

ரத்தம் சிந்த வைத்த கபடி!

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

ரத்தம் சிந்த வைத்த கபடி!

Published:Updated:

வரலாறு
நம்மாழ்வார்
ஓவியம்: ஹரன்

##~##

'ஃபாதர் உங்களை லூர்துசாமி என்றழைக்க வேண்டும் என ஆரோக்கியசாமி சொல்கிறான்' என்று தாமஸ் சொன்னதைக் கேட்டு, கோபமாகிவிட்ட பங்குத்தந்தை, 'ஆரோக்கியசாமியை அழைத்து வா!' என்று உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்படியே அவர் வந்து நிற்க, 'நீ என்னை பெயர் சொல்லி அழைக்க வேண்டுமென்று சொன்னாயா?’ என்று கேட்டார் பங்குத்தந்தை. 'இல்லை சாமி, நான் அப்படிச் சொல்லவில்லை’ என்று ஆரோக்கியசாமி மறுத்தார். 'நீ சொல்லியிருப்பாயடா’ என்று பங்குத்தந்தை குற்றம்சாட்ட...

மறுத்த ஆரோக்கியசாமி... நடந்ததையெல்லாம் விவரித்த பிறகுதான், வண்டியை எடுத்துக் கொண்டு, ஆசியைப் பார்க்க வந்தார் பங்குத்தந்தை.

ஆசியைப் பார்த்து, 'நீங்கள்தான் பெயர் சொல்லி அழைக்கச் சொன்னீர்களா?’ என்றார். அதற்கு ஆசி, 'உங்களை அழைக்கச் சொல்லவில்லை. என்னைத்தான் அப்படி அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்’ என்று முகமலர்ச்சியுடனும், நிதானத்துடனும் பேசினார்.

பங்குத்தந்தை, 'உங்களை 'சார்’ என்று அழைப்பதில் என்ன தவறு?’ என்று கேட்டார். 'அவரவருக்கு ஒரு பெயர் இருக்கும்போது அதைச் சொல்லி அழைப்பதில் என்ன தவறு?’ என்று ஆசி கேட்டார். இதைக் கேட்ட தந்தை, 'டிக்ஷனரியில், சார் என்று போடப்பட்டுள்ளதே. டிக்ஷனரி தயாரித்தவன் முட்டாளா..?’ என்றார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

'டிக்ஷனரி எந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்டது? மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மட்டும்தான் கல்வி பெறவும், கல்வியில் புலமை பெறவும், வாய்ப்பு இருந்தது. அவர்கள், தங்களை மற்றவர்கள் 'சார்’ என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆதலால், அகராதியில் 'சார்’ என்ற வார்த்தையைப் புகுத்தினார்கள். நீங்களும் நானும் அதையே பின்பற்ற வேண்டுமா?’ என்று கேட்டார், ஆசி.

திணறிப்போன பங்குத்தந்தை, 'நான், பிஷப்பை மைக்கேல் என்று கூப்பிடலாமா?’ என்று கேட்டார்.

'கூப்பிடுங்களேன்’ என்று ஆசி பதில் கொடுத்தார்.

பங்குத்தந்தை, மனக்கலக்கத்தோடு ஊர் திரும்பினார். வாதத்தில் ஆசி, வெற்றி பெற்றாலும்... நாங்கள் சேசுராசபுரம் செல்வது அதோடு நின்று போனது.

நினைப்பது போலவே நடந்து விட்டால், வாழ்வில் துன்பங்களே இருக்காது. ஆனால், அப்படியே நடப்பதில்லைதானே. உகாதி விழா (தெலுங்கு வருடப் பிறப்பு) மோட்ராகி முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மாலையில் கபடி விளையாட்டு ஆரம்பமானது. ஒரு குழுவில் என்னை இணைத்துக் கொண்டார்கள். ஆட்டம் கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்த போது ஒரு விபத்து. நான் பாடிக்கொண்டே போய், கோட்டை தொட்டுத் திரும்பும்போது... பெரியய்யா எதிர் வந்து மறித்தார். அவர் தலையை என் நெஞ்சில் கொடுக்க நினைத்தார். அது மூக்கில் மோதியதில், எனது இண்டி மூக்கு (சில் மூக்கு) உடைந்து ரத்தம் வழிந்தது. ஆட்டம் பாதியில் கலைந்தது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

கிராமத்தில் வழக்கமாகச் செய்வதுபோல காய்ந்த சாணியைப் பொடி செய்து மூக்கிலிட்டார்கள். கொஞ்ச நேரத்தில் ரத்தம் வழிவது குறைந்தது. பிறகு, செருமல் வந்தபோது மறுபடியும் ரத்தம் பெருகியது. எங்களிடம் 'டாக்டர்' வேலை பார்த்தவர், ராணுவத்திலிருந்து திரும்பியிருந்த 'கம்பவுண்டர்’, அவர் இரண்டு முறை கையில் ஊசி ஏற்றினார். ரத்தம் நின்றபாடில்லை.

மனைவியும், மகளும் அதிகமாகக் கவலைப்பட்டார்கள். சரக்கு லாரியின் முகப்புக்கு மேற்பகுதியில் அமர்ந்து, பென்னாகரம் வழியாக தர்மபுரி வந்து சேர்ந்தோம். நண்பர் வீட்டில் ஓய்வெடுத்து, காலையில் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.

'நான் கபடி விளையாடினேன்’ என்பதை அங்கிருந்த மருத்துவர் நம்பவே இல்லை. இடுப்பில் கைலி, மார்பில் ரத்தம் தோய்ந்த பனியன், பல நாட்களாக மழிக்காத தாடி, எண்ணெய் தடவி சீவாத தலை, நாற்பது வயதுக்கு மேல் ஆகிப் போன உடம்பு... யார்தான் நம்புவார்கள் 'கபடி விளையாட்டில் விபத்து’ என்று!

நனைந்த பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டார். பஞ்சின் உதவியோடு மூக்குக்கு சிகிச்சை தந்தவர், ஊசியைப் போட்டுவிட்டு வெளியேறினார். அங்கிருந்த சூழலும் நாற்றமும் தும்மலை வரவழைத்தது. உடனே ரத்தம் பெருக்கெடுத்தது. பிறகு,

'தஞ்சாவூருக்குத் தூக்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என முடிவு செய்தார்கள்.

என் பெரியப்பாவின் பேரன் ராமையா, தஞ்சாவூரில் சிறந்த கண் மருத்துவர். என்னைவிட மூன்று வயது இளையவர். இளமையில் நாங்கள் ஒன்றாக உண்டு, படித்து எழுந்தவர்கள். தஞ்சாவூர் மருத்துவமனைக்குப் போய் சேர்த்த நேரத்தில் அவருடைய டாக்டர் நண்பரும் வந்தார். மூக்கில் திணித்திருந்த பஞ்சை வெளியே எடுத்து, மருந்து போட்டு, ஊசியும் போட்டு படுக்க வைத்தார்.

மறுநாள் காலை டாக்டர் பஞ்சை எடுத்தபோது, ரத்தம் வெளியேறி அவர் வெள்ளைக் கோட்டை நனைத்தது. மறுபடியும் மருந்தில் நனைத்த பஞ்சை எடுத்து மூக்கில் திணித்தார். மறுநாள் காலை வரை ரத்தம் நிற்காவிட்டால், 'அறுவை சிகிச்சை செய்வது’ என முடிவு செய்தார்.

என்னைப் பார்க்க வந்தவர்களில் இரண்டு, மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ராமநாதன். அவர், 'ரத்தம் உறைவதில் பிரச்னை இருக்கலாம். அதனால், வேறொருவர் ரத்தத்தை ஏற்றிப் பார்க்கலாம்’ என்றார். கபடி விளையாட்டில் தலையால் என் மூக்கில் முட்டிய பெரியய்யாவின் ரத்தமே (ஓ குரூப்) எனக்கு ஒத்ததாக இருந்தது. நேரங்கடத்தாமல் ரத்தத்தை எடுத்து, எனக்கு ஏற்றினார்கள்.

மூக்கிலிருந்த பஞ்சை மறுநாள் வெளியே எடுத்தபோது ரத்தம் உறைந்திருந்தது. அறுவை சிகிச்சையிலிருந்து தப்பினேன். இரண்டு வாரம் ஒய்வுக்குப் பின், மோட்ராகி திரும்பினேன். நிறைய பேர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

மாதையனுடைய அம்மா மட்டும் ஒரு கோரிக்கையை வைத்தார். ''உங்களுக்கு குணமாக வேண்டுமென்று சாமியிடம் வேண்டிக் கொண்டேன். அதற்கு ஒரு கோழி அறுக்க வேண்டும். பத்து ரூபாய் பணம் கொடுங்கள்'' என்று கேட்டார். உணர்வுகளின் சங்கமத்துக்கு முன்பு... பகுத்தறிவு இடம் விட்டு ஒதுங்கி நின்றது. பத்து ரூபாய் நோட்டை மடக்கி நீட்டினேன். மாதையனுடைய தாயின் உணர்வுக்கு நான் செலுத்திய மரியாதை அது.

மோட்ராகி வாழ்க்கை மீண்டும் தொடர்ந்தது. கிராமத்தில் பெய்யும் மழை நீர், அறுத்தோடிகள் வழியாகச் சென்று புலிக்குன்று பகுதியில் காவிரியில் கலக்கிறது.

'இந்த நீர், உள்ளூர் மக்களுக்குப் பயன்பட்ட பிறகு, காவிரியில் கலக்க வேண்டும்’ என்று முடிவு செய்தோம். குறுகலாகச் சென்ற ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டுவதில் ஆசி ஈடுபட்டார். அது வெற்றிகரமாகவும் முடிந்தது.

தண்ணீர் ஒரு 'பர்லாங்’ தூரத்துக்கு தேங்கி நின்றது. இருபக்கங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆங்காங்கே ஊற்று தோண்டியபோது... தண்ணீர் தென்பட்டது. மக்கள் ஆரவாரம் செய்தார்கள். தேக்கத்தில் இருந்த நீரில் நீந்திக் குளித்தார்கள். மாடுகள் குடித்தன... குளித்தன. பக்கத்திலிருந்த ஆரோக்கியபுரத்தில் பெரியதொரு தடுப்பணை உட்பட மேலும் மேலும் அணைகளைக் கட்டியதும்... நிலத்தில் பசுமையும், மக்கள் முகத்தில் புன்னகையும் மேலிட்டன!

-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism