Published:Updated:

கேந்தி + கம்பு...

வறட்சியிலும் வருமானம் தரும் வளமான கூட்டணி!

கேந்தி + கம்பு...
##~##

டந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி தாண்டவமாடுவதால், ஆண்டுக்கணக்கில் வற்றாத கிணறுகள்கூட, வற்றிப்போய் கிடக்கின்றன. இந்நிலையில், குறைவான தண்ணீரில் விளையும் பயிர்களைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள், விவசாயிகள் பலரும். அவர்களில் ஒருவராக, குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி, கேந்தி (செண்டுமல்லி), கம்பு ஆகியவற்றை ஒன்றாக சாகுபடி செய்திருக்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி, சி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கிடையில், செழுமை கட்டி நிற்கிறது, செண்டுமல்லித் தோட்டம்!

''விவசாயம்தான் எங்க குடும்பத்தொழில். சின்ன வயசா இருக்குறப்போ அப்பாகூட தோட்டத்துக்குப் போவேன். கடன் வாங்கி கிணறு வெட்டிதான் விவசாயம் பாத்துட்டுருந் தார். ஒரு கட்டத்துல கடனைக் கட்ட முடியல. நான் பன்னெண்டாவதோட படிப்பை நிறுத்திட்டு, அப்பாவுக்கு உதவியா வயல் வேலைகள பார்த்துட்டே 'டெய்லரிங்’கும் கத்துக்கிட்டேன். அப்பறம் விவசாயத்தை விட்டுட்டு தையல் கடை வெச்சேன்.

கேந்தி + கம்பு...

அப்பா இறந்ததுக்கு அப்பறம், தம்பி பூமிநாதனோட சேர்ந்து விவசாயத்துக்குள்ள வந்தேன். புதுமையா ஏதாவது சாகுபடி செய்யலாம்னு, முலாம்பழம், தர்பூசணி எல்லாம் சாகுபடி செஞ்சோம்.

தர்பூசணி வியாபாரி ஒருத்தர் மூலமா 'மல்ச்சிங் ஷீட்’ போட்டு, தர்பூசணி சாகுபடி பண்ற விஷயத்தைக் கேள்விப்பட்டோம். உடனே, அந்தத் தொழில்நுட்பத்தைக் கத்துட்டு வந்து, தர்பூசணி போட்டோம். அதுல கிடைச்ச வருமானம், செலவுக்குதான் சரியா இருந்துச்சு. அதனால, எங்க பகுதியில வழக்கமா செய்ற மணிலா (நிலக்கடலை), நெல் சாகுபடியையே ஆரம்பிச்சேன்'' என்று முன்னுரை கொடுத்த சுரேஷ§க்கு, அடுத்த அடி எடுத்த வைக்க பாதை காட்டியிருக்கிறது... பசுமை விகடன்!

பசுமையே பாடப் புத்தகம்!

''2010-ம் வருஷம் எங்க பகுதிக்கான நிவாரணம் பத்தி விசாரிக்கறதுக்காக இன்ஸ¨ரன்ஸ் ஆபீஸுக்கு எங்க மாமாவோட போயிருந்தேன். அப்ப அங்க இருந்த அதிகாரி ஒருத்தர் மூலமா 'பசுமை விகடன்’ எனக்கு கிடைச்சுது. பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கற முறைகள், விவசாயத் தொழில்நுட்பங்களை எல்லாம் படிச்சதும்... எனக்கு சந்தோஷம் தாங்கல. தொடர்ந்து 'பசுமை விகடன்’ படிச்சு... இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். அதுதான் எங்களுக்கு விவசாயப் பாடப் புத்தகமா இருக்கு. 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்ட நான், எங்கிட்ட இருக்கற நாட்டு மாட்டோ  சாணம், கோமியத்தை இடுபொருளா பயன்படுத்துறேன்.

கேந்தி + கம்பு...

பூவைக் காப்பாற்ற கம்பு!

எங்ககிட்ட நாலு ஏக்கர் நிலமிருக்கு. மொத்த நிலத்துலயும் வாழை, மணிலா, நெல், காய்கறி சாகுபடி செய்வேன். இப்ப தண்ணி இல்லாததால, 20 சென்ட்ல கோலியாஸ், 10 சென்ட்ல மாட்டுத்தீவனம், 70 சென்ட்ல கேந்தி (செண்டு மல்லி), அதுக்கு ஊடுபயிரா கம்புனு சாகுபடி செஞ்சுருக்கேன். மீதி மூணு ஏக்கர் நிலம் சும்மாதான் கிடக்கு. 'கொஞ்சமா கேந்தி போடுங்க... நானே வாங்கிக்குறேன்’னு பூக்கடைக்காரர் ஒருத்தர் சொன்னார். அதனால, கேந்தி நாத்து வாங்கறதுக்காக ஓசூர் போனப்ப... தக்காளி நாத்தும் வாங்கிட்டு வந்தேன். ரெண்டையும் நட்டப்போ, வெயில் தாங்காம தக்காளி செத்துடுச்சு. கேந்தியில மட்டும் கொஞ்சம் பச்சை இருந்துச்சு. அதைக் காப்பாத்த யோசிச்சப்போதான், பாலேக்கர் சொல்லிக் கொடுத்த ஊடுபயிர் முறை ஞாபகத்துக்கு வந்துச்சு. அதனால, கம்பை விதைச்சு விட்டேன். கம்போட நிழல்லயே கேந்தி நல்ல வளர்ந்துடுச்சு. ரெண்டுக்கும் அதிக தண்ணியும் தேவைப்படல'' என்ற சுரேஷ், 70 சென்ட் நிலத்தில் கேந்தி, கம்பு சாகுபடி பாடம் சொன்னார்.

2,500 கேந்தி நாற்று... 500 கிராம் கம்பு விதை!

கேந்தி மற்றும் கம்பு இரண்டும் அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றவை. இரண்டின் வயதும் 100 நாட்கள். வடிகால் வசதியுள்ள அனைத்து வகை நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். 70 சென்ட் நிலத்தில், டிப்பர் லாரியில் இரண்டு லோடு எருவைக் கொட்டி கலைத்து, மண் 'பொலபொல’வென மாறும் அளவுக்கு உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை ஐந்து அடி இடைவெளி, செடிக்குச் செடி இரண்டு அடி இடைவெளியில் சொட்டுவது போல சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். அரைமணி நேரம் பாசனம் செய்தால்... ஒவ்வொரு துளைக்கு அருகிலும், அரை அடி விட்டத்தில் வட்ட வடிவில் நிலம், ஈரமாகி இருக்கும்.

நீர் சொட்டும் இடத்துக்கு நேராக விரலால் பள்ளம் எடுத்து, 20 நாட்கள் வயதுள்ள கேந்தி நாற்றுகளை நடவு செய்து (2 ஆயிரத்து 500 நாற்றுகள் தேவைப்படும்), இரண்டு மணி நேரம் பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 8-ம் நாளில் கேந்தி செடிகள் வேர் பிடித்து, துளிர்க்க ஆரம்பிக்கும். 10-ம் நாளில் கேந்தி செடிகளுக்கு எதிர் திசையில் ஒரு அடிக்கு ஒரு கம்பு விதை வீதம் நடவு செய்ய வேண்டும் (அரை கிலோ கம்பு விதைகள் தேவைப்படும்).

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம், குணபம்!

கம்பு, நடவு செய்த 4-ம் நாளில் முளைத்து விடும். கேந்தி நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஆமணக்குப் பிண்ணாக்கு

50 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, தேங்காய் பிண்ணாக்கு 20 கிலோ, மண்புழு உரம் 50 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒவ்வொரு கேந்தி செடிக்கும் கையளவு வைத்து மண் அணைக்க வேண்டும். களைகளைக் கொத்திவிட வேண்டும்.

மண்ணின் ஈரத்தைப் பொருத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. 10 நாட்களுக்கு ஒருமுறை... 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 9 லிட்டர் நீரில், 50 மில்லி வராக குணபம், ஒரு லிட்டர் பழக்கரைசல்,

50 மில்லி காதி சோப் கரைசல் ஆகியவற்றைக் கலந்து செழிம்பாகத் தெளிக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால்... பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். நடவு செய்த 45-ம் நாளில் கேந்தியில் பூ வெடுக்க ஆரம்பித்து, 60-ம் நாளில் அறுவடைக்கு வரும். நான்கு நாட்களுக்கு ஓர் அறுவடை என, 10 அறுவடை.'

70 சென்ட்...

கேந்தி + கம்பு...

16 ஆயிரம்!

சாகுபடிப் பாடம் முடித்த சுரேஷ், ''அறுவடைக்கு 50 கிலோ பூ கிடைக்கும். 10 அறுவடைக்கும் சேர்த்து 500 கிலோ. ஒரு கிலோ கேந்தி 15 ரூபாய்ல இருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. சராசரியா 20 ரூபாய்னு வெச்சுக்கிட்டா... 500 கிலோ பூவுல 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

கேந்தி அறுவடை முடியுற சமயத்துல, கம்பு அறுவடைக்குத் தயாராயிடும். அறுவடை செஞ்சு மெஷின்ல அடிச்சு சுத்தப்படுத்துறப்போ மூணு மூட்டை (100 கிலோ மூட்டை) அளவுக்கு கம்பு கிடைக்கும். ஒரு மூட்டை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுது. கேந்தி, கம்பு ரெண்டுலயும் இருந்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, 10 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்றவரை... நாம் ஆழமாகப் பார்க்க...

''இந்தப் பணம் குறைச்சலா தெரிஞ்சாலும்,  கடுமையான வறட்சியில ஒண்ணுமே செய்ய முடியாம கையைப் பிசைஞ்சுகிட்டு நிக்காம... குறைஞ்ச தண்ணியிலயே கைச்செலவுக்கு இந்த காசு கிடைக்கிறது, பெரிய விஷயம்தானே!'' என்று சொல்லி தெம்பான பார்வையை வீசினார் சுரேஷ்!

தொடர்புக்கு,

சுரேஷ், செல்போன்: 98434-45814. தேவையான பொருட்கள்

கேந்தி + கம்பு...

வராக குணபம்!

பன்றி இறைச்சி-3 கிலோ, தேன்-200 மில்லி, நெய்-500 மில்லி, பால்-2 லிட்டர், தயிர்-2 லிட்டர், பசுவின் சிறுநீர்-5 லிட்டர், சாணம்-3 கிலோ, பப்பாளிப்பழம்-3 கிலோ, வாழைப்பழம்-3 கிலோ, திராட்சைப்பழம்-3 கிலோ, இளநீர்-2 லிட்டர், ஆட்டு உதப்பை-2 கிலோ, கருப்பு உளுந்து-2 கிலோ, கருப்பு எள்-500 கிராம், அதிமதுரம், வெண்கடுகு, வாலிவிடங்கன் ஆகியவை தலா 200 கிராம்.

தயாரிப்பு முறை

6 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ பன்றி இறைச்சியை வேக வைத்து, அதில் தேன், நெய் இரண்டையும் கலந்து ஆற வைக்க வேண்டும். பிறகு, அதை, 'பிளாஸ்டிக் டிரம்’மில் இட்டு, பால், தயிர், பசுவின் சிறுநீர், சாணம், இளநீர், ஆட்டு உதப்பை, பிசைந்த வாழைப்பழம், பப்பாளி, திராட்சை, பொடித்த வெண்கடுகு, அதிமதுரம், வாய்விடங்கன், முளை கட்ட வைத்து, அரைத்த உளுந்து மற்றும் எள் ஆகியவற்றை இட்டு 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி தினமும் காலை, மாலை கலக்கி வந்தால்... 21 நாட்களில் கரைசல் தயாராகி விடும். இதை, 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.

10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கரைசலைக் கலந்து பயன்படுத்தலாம். இது, வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் பயன்படுவதோடு, பயிர்களில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு