அனைத்தையும் அள்ளித்தரும் முருங்கை!
##~##

மதிப்புக்கூட்டும் மந்திரம்!

லாபத்தைப் பெருக்கும் லட்டு தொடர்!

முருங்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி... முருங்கைப் பூ தேநீர், முருங்கை எண்ணெய், முருங்கை இலைத்தூள், முருங்கை இலைத் தேநீர் போன்றவற்றைத் தயாரிப்பது பற்றி இதுவரை பார்த்தோம். அத்தோடு முடிந்து விடவில்லை முருங்கை நமக்கு அளிக்கும் வாய்ப்புகள். முருங்கைக்காயை உலர வைத்தும் விற்பனை செய்ய முடியும்!

தரமான காய்களைத் தேர்ந்தெடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவி, ஒரே அளவிலான சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். இவற்றை, துணிப்பையில் கட்டி, 6 நிமிடங்களிருந்து 8 நிமிடங்கள் வரை நீராவியில் வேகவைத்து எடுத்து, குளிர்விக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, முருங்கைக்காய் மிருதுவாவதுடன், நிறம் மற்றும் சத்துக்கள் அப்படியே தக்க வைக்கப்படும். பிறகு, மின் வெப்ப உலர்த்தி அல்லது சூரிய வெப்ப உலர்த்தி மூலம் 50 டிகிரி முதல் 55 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் உலர்த்த வேண்டும். இதன் மூலம் முருங்கைக்காய் துண்டுகளின் ஈரப்பதம்

அனைத்தையும் அள்ளித்தரும் முருங்கை!

10 சதவிகிதத்துக்கு கீழ் குறைக்கப்படும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட முருங்கைக்காய் துண்டுகளை, பிரத்யேகமான 'பாலிதீன்’ பைகள் அல்லது காற்றுப் புகாத 'டின்’களில் அடைத்து, தேவைப்படும்போது சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட நாட்கள் வரை கெட்டுப் போகாமல், அதனுடைய இயல்பான சுவை, மணம் மற்றும் நிறத்துடன் இருக்கும்.  

புரதச்சத்து நிறைந்த தீவனம் தயாரிக்க, முருங்கை இலை பயன்படுகிறது. இதுமட்டுமில்லாமல் பன்றி, முயல், மீன்களின் உடல் எடையை அதிகரிக்க, அவற்றுக்கான உணவில் முருங்கை இலை அதிகளவு சேர்க்கப்படுகிறது. உரங்களில் புரதச்சத்தை அதிகரிக்க... விழுதாக அரைத்து உலர வைக்கப்பட்ட முருங்கை விதை சேர்க்கப்படுகிறது. பருத்தித் துணிகளில் ஓவியம் வரைய முருங்கைப் பசை பயன்படுத்தப்படுகிறது. மிருதுவான முருங்கை மரங்களை மூலப்பொருளாக கொண்டு, காகிதம் தயாரிக்கப்படுகிறது.

முருங்கை பயோ-கேஸ்!

நடுத்தர வயதுடைய முருங்கை மரத்தை, சிறுசிறு துணடுகளாக்கி, நன்கு வெயிலில் காய வைத்து அரைத்து... தண்ணீரில் கலந்து, வாயு உற்பத்தி செய்யும் இயந்திரத்திலிட்டு, பயோ கேஸ் தயாரிக்கப்படுகிறது. முருங்கை பயோ-கேஸில் 81 சதவிகிதம் மீத்தேன் வாயு உள்ளது.

முருங்கை விதையை மூலப்பொருளாகக் கொண்டு பயோ-டீச லும் தயாரிக்கலாம். இதற்கு, ஆவியாகும் தன்மை குறைவு என்பது தனிச் சிறப்பு. ஒரு ஹெக்டேர் முருங்கை சாகுபடியின் மூலமாக 8.75 டன் முருங்கை விதை கிடைக்கும். இதிலிருந்து 3.2 டன் பயோ-டீசலும், 3.2 டன் முருங்கை எண்ணெயும் தயாரிக்கலாம்.

முருங்கையில் மதிப்புக்கூட்டும் பொருட்களுக்கான வாய்ப்புகளையும், அடிப்படையான அம்சங்களையும்தான் உங்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன். எங்களுடைய இந்தியப் பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்துக்கு நேரில் வந்து பயிற்சி பெற்றால்தான் இவற்றுக்கான தொழில்நுட்பங்களை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.

அடுத்ததாக வாழை பற்றிப் பார்ப்போம்.

- மதிப்புக் கூடும்